பனங்கிழங்கு-
எல்லோருக்கும் தெரியும் என நினைக்கிறன்
மிகச்சுவையான ஒரு கிழங்கு
வினா பனங்கிழங்கு பற்றி அல்ல
பொதுவாக புலவர்கள் உவமைக்கு சொல்வது மான், தேன் மயில் குயில் முத்து பவளம் தங்கம் மலர்கள் நிலா இது போன்றவைதான் .
இதைத் தாண்டி பனங்கிழங்கை உவமையாக வைத்து ஒரு அருமையான பாடலை பாடியிருக்கிறார் பழந்தமிழ்ப் புலவர்
அது என்ன பாடல் ?
விடையைப் பார்ப்பதற்கு முன் என் எண்ணங்கள் சில
பள்ளியில் பாடமாக எண்ணி சிரமப்பட்டுப் படித்த பாடல்கள் எல்லாம் இப்போது இனிமையாகத் தெரிகின்றன . இலக்கிய நயம், எனக்குப் பிடிக்காத இலக்கண நயம் எல்லாம் தெரிந்து சுவைக்க முடிகிறது
அந்த வரிசையில் நாரை விடு தூது
நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடுபார்த் திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே
மிக எளிய நடையில் ஒரு பழந்தமிழ் பாடல்
பொருள்
சிவந்த கால்களை உடைய நாரையே , பழங்கள் நிறைந்த பனை மரக் கிழங்கை பிளந்தது போன்ற பவளம் போல் சிவந்த கூர்மையான அலகைக்கொண்ட நாரையே
நீயும் உன் துணையும் தெற்கில் உள்ள குமரி முனையில் நீராடி வட திசைக்கு திரும்பினால் எங்கள் ஊரில் உள்ள சத்திமுத்த குளத்தில் தங்கி நனைந்த சுவரையும் ஓசை எழுப்பும் பல்லிகளும் கொண்ட வீட்டில் என்னை எதிர்பார்த்திருக்கும் என் துணைவியிடம்
மதுரையில் குளிர்காலத்தில் சரியான ஆடை இல்லாமல் உடல் மெலிந்து கை கால்களால் உடம்பைப் போர்த்திக்கொண்டு பெட்டிக்குள் இருக்கும் பாம்புபோல் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைத்துனைவனைக் கண்டோம் என்று சொல்லுங்கள்
பாடல் முழுக்க விரவி நிறைந்து நிற்பது வறுமை ,வறுமை மட்டுமே . பசி, குளிர் ,ஆடை இல்லை , போர்வை இல்லை
இவ்வளவு வறுமையிலும் புலவர் பாடும் பாடலில், அழகிய உவமையில் புலமை வென்று வறுமையைத் துரத்தி விடுகிறது
சரியான விடை அனுப்பிய
சகோ.அசன் அலி மெகராஜ் , ஜோதி , பாடி பீர்முகமது ரவிராஜ்
நடராசன் அழகப்பன் , வழிக்கரை வடிவேலன், வசந்தா ,கரம்
தல்லத்
அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்
இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்
16122020wed
SherfuddinP
No comments:
Post a Comment