எளிய நல வாழ்வுக்குறிப்புகள் பகுதி 3
(நிறைவுப்பகுதி )
இந்த மூன்றாம் பகுதியோடு இந்தத் தொடரை நிறைவு செய்ய எண்ணுகிறேன் இறைவன்நாடினால். அதனால் முன்பு விரிவாக எழுதியவற்றை முடிந்த வரை புரியும்படி சுருக்கமாக எழுதுகிறேன்
பல் பராமரிப்பு
பற்கள் பாதுகாப்பு என்பது இப்போது மிகவும் செலவு பிடிக்கும் ஒரு மருத்துவமாகி விட்டது .ஆயிரங்களில் தொடங்கி லட்சங்கள் வரை போகிறது பல் மருத்துவச் செலவு
. இதற்கு மருத்துவக் காப்பீடும் கிடையாது .
இதை மனதில் வைத்துக்கொண்டு சில எளிய முறைகளைப் பழக்கப்படுத்தி பல்லைப் பாதுகாப்போம்
எது சாப்பிட்டாலும் , குடித்தாலும் சிறிது நேரத்தில் வாயை நன்றாகக் கொப்பளிக்க வேண்டும்
இரவில் மறக்காமல் பல் துலக்க வேண்டும்
தேவைப்பட்டால் வாரம் ஒருமுறை வெந்நீரில் உப்புக் கலந்து கொப்பளிக்கலாம்
வாய் கழுவி (மௌத் வாஷ்) எல்லாம் தேவை இல்லை
தலை முடி
தேங்காய் எண்ணெய் – இதைபோல தலை முடியைப் பாதுகாப்பது வேறொன்றும் இல்லை .
தலை முடி நீவல் குழம்பு (ஷாம்பூ) ,தைலங்கள் எதுவும் தேவை இல்லை
முடியின் அளவுக்கு ஏற்ப வாரம் ஒரு நாள் அல்லது மாதம் ஒரு நாள் சுத்தமான சிகைக்காய்த் தூள் தேய்த்துக் குளிக்கலாம் .
ஆழ்ந்த தூக்கத்திற்கு
இதற்கும் தேங்காய் எண்ணெய்தான் . இரவு படுக்குமுன் ஒரு சில துளிகள் – ஒரு சில துளிகள் மட்டும் இரண்டு உள்ளங்கால்களிலும் நன்றாகத் தேய்த்துக்கொள்ளவும்
மன அழுத்தம்
காரணம் எதுவாக இருந்தாலும் நாற்பது வயதில் வந்த அழுத்தம் இப்போது நாலு வயதிலேடே தொற்றிக் கொள்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை
சில எளிய தீர்வுகளை சுருக்கமாகப் பார்ப்போம்
ஊஞ்சலில் ஆடுதல், குளிர்ந்த நீரில் முகம் கை கால் கழுவுதல் ,குளித்தல், சாயிருக்கை (சோபா ) யில் தளர்வாக சாய்ந்து கொண்டு, கண்களை மூடி இனிமையான இசையைக் கேட்டு அப்படியே ஒரு உறக்கம் போட்டால் மன அழுத்தம் பெருமளவில் குறைந்து விடும் . காட்சி ஊடகம் எதுவும் வேண்டாம் வேண்டவே வேண்டாம்
மனம் விட்டுப்பேசுதல் – மனதில் உள்ளதைக் கொட்டித் தீர்த்து விடுங்கள் – கேட்பவர் உங்களுக்கு மூத்தவராகவோ, அறிவுரை சொல்பவராகவோ இருக்க வேண்டும் என்று கிடையாது .நீங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பவராய் இருந்தால் போதும்
தெரிந்தால் முடிந்தால் யோகா, தியானம் செய்யலாம் .தோட்ட வேலைகள் ,செடி கொடி பூக்களைப் பார்த்தாலும் மன மகிழ்வை உண்டாக்கி அழுத்தம் குறையும்
மத வழிபாட்டு முறைகள் “
உடல், மன நலத்தில் மத வழிபாடுகளின் பெரும்பங்கு வகிக்கின்றன. எல்லா மதங்களிலும் உணவைக் கட்டுபடுத்தும் ஒரு சடங்கு இருக்கிறது . – விரதம், லென்ட்(lent days), நோன்பு என பல பெயர்கள் – ஆனால் நோக்கம் ஒன்றே- வயிறு, செரிமாண உறுப்புகளுக்கு சிறிது ஒய்வு , மனதுக்குப் புலனடக்கப் பயிற்சி, பசி என்றால் என்ன என்பதை உணர வைக்கும் சமுதாயச் சிந்தனை
தியானமும் எல்லா மதங்களுக்கும் பொதுவானவை
தோப்புக்கரணம் , கோவிலை வலம் வருதல், வலம் புரளல் (அங்கப் பிரதட்சணம் ) ,கிறித்தவ ஆலயங்களில் மண்டி இட்டு அமர்தல் எல்லாமே உடலுக்கும் மனதுக்கும் நலம் தருபவை
இஸ்லாமிய இறைவணக்கம் ,யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி மூன்றும் இணைந்த மனதை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியாகும்
கைகால் விரல்களுக்கிடையே கழுவுதல், காது மடலின் பின்புறம் தூய்மை செய்தல், மூக்கில் நீரேற்றுதல் , பிடரியை தண்ணீர் தடவிக் கழுவுதல் , கைகளை கீழிருந்து மேலாகக் கழுவுதல் –இஸ்லாமியர்களின் உடல் சுத்தி முறையில் உள்ள இவையெல்லாம் உடல் நலம் காப்பதில் பெரிதும் உதவுகின்றன
நினைவுத்திறன்
மருந்து மாத்திரைகள், யோகா, தியானம் என பலவழிகள் சொல்லபடுகின்றன நினைவுத் திறனை பெருக்க.
இந்த நினைவுத்திறன் பற்றி விரிவாக பின்பு பார்ப்போம் இறைவன் நாடினால்
நான் இங்கு சொல்லப்போவது மிக எளிய நடைமுறைப பயிற்சிகள்
துவக்கப்பள்ளியில் பயின்ற அ, ஆ, ஆத்திச்சூடி, பெருக்கல் வாய்பாடு போன்றவை பெரும்பாலும் மறப்பதில்லை
பத்துப் பன்னிரண்டு வயதில் கேட்ட திரைப்பாடல்கள் இன்றும் இனிமையாக நினைவில் நிற்கின்றன
இசை யுடன் கூடிய பாடல் வடிவில் கேட்பவை, மிகவும் பிடித்த செய்திகள், திரும்பத் திரும்பப் படித்தவை இவையெல்லாம் மனதில் நிலைத்து நிற்கின்றன
ஆண்டுகள் போகப்போக நினைவுத்திறன் குறைந்து வருவது ஒரு இயல்பான நிகழ்வு
நினைவுத் திறன் எப்படி ஒரு வரமோ அதே போல் மறதியும் ஒரு வரம்தான் – மன அழுத்தம் குறைய
ஏந்த வயதிலும் நம் அன்றாட செயல்களான குளிப்பது ,போன்றவை மறப்பதில்லை காரணம் அவை பழக்கங்களாக மனதில் பதிந்து விடுகின்றன
இடையில் வரும் புதிய வேலைகள் எளிதில் மறந்து விடும் . எடுத்துக்காட்டாக நகம் வெட்டுதல் – இதை ஒரு குறிப்பிட்ட நாளில் கிழமையில் செய்வதாய் இருந்தால் அதை கைப்பேசியில் போட்டு வைத்துக்கொள்ளலாம் . இப்போதுதான் எல்லோர் கையிலும் கைப்பேசி உருவில் ஒரு கணினி இருக்கிறதே
இல்லை எனக்கு எப்போது எண்ணம் வருமோ அப்போதுதான் வெட்டுவேன் என்று இருந்தால் எண்ணம் வந்தவுடன் வெட்டி விடலாம் . அப்போது முடியவில்லை என்றால் நகம் வெட்டியை எடுத்து நம் கையில் அல்லது கண்ணில் படும்படி வைத்துக்கொள்ளலாம்
ஏதாவது ஒரு பொருளை எடுக்கவோ ஒரு பணியை செய்யவோ எண்ணி ஒரு அறையில் இருந்து அடுத்த அறைக்குப்போவோம் . ஆனால் போவதற்குள் அது என்ன பொருள், என்ன பணி என்பது மறந்து விடும்
இதற்கு ஒரு எளிய வழி அத்தடி பச்சா கொழுக்கட்டை கதை போல திருப்பித்திருப்பி அதை சொல்லிக்கொண்டே இருப்பதுதான்.
எடுத்த பொருளாய் எடுத்த இடத்தில் வைத்துப் பழகி விட்டால் மறதியின் தாக்கத்தையும் அதனால் ஏற்படும் கால விரயைததையும் ஓரளவு தவிர்க்கலாம்
இன்னொரு மூளையக் குடையும் மறதி நன்கு தெரிந்த ஒரு செய்தி மறந்து போவது, ஒரு திரைப்படக்காட்சி நினைவில் வரும் . நடிகரின் உருவமும் மனதில் தெரியும் . அவர் பெயர் மட்டும் நினைவில் வராது
இதற்கெல்லாம் மருந்து பயிற்சி எதவும் கிடையாது
குறுக்கெழுத்துப்புதிர், கணிதப்புதிர், சுடோக்கு போன்றவற்றை பழக்கப் படுத்திக்கொண்டால் நினைவுத்திறன் ஓரளவு அதிகரிக்கும் என்கிறார்கள்
ஒரு வழியாக் இந்த நலவாழ்வு எளிய குறிப்புகள் தொடரை இந்த மூன்றாம் பகுதியோடு நிறைவு செய்கிறேன்
இந்தப்பகுதியில் சொன்ன குறிப்புகள் பெரும்பாலும் என் சொந்த வாழ்வில் நடை முறைப்படுத்திப் பலன் கண்டவை
நிறைவு செய்யு முன் ஒரு சிறிய கதை – பல முறை சொன்னதுதான் –வேடிக்கைக் கதை போல தோன்றினாலும் வாழ்வின் உண்மை நிலையை விளக்கும் கதை
நூறாண்டு கடந்த ஒரு மூத்த குடிமகனுடன் தொலைகாட்சியினர் நேர்முகம் :
வழக்கமாகக் கேட்கும் வினா : இந்த வயதிலும் நீங்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பது எப்படி ?
நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு விடை சொல்கிறார் அந்த முதிய இளைஞர்
நான் குடிபதில்லை , புகைப்பதில்லை , அசைவம் உண்பதில்லை , துறவற வாழ்க்கை
தினமும் யோகா, நடைப்பயிற்சி , எட்டுமணி நேரம் இரவுத் தூக்கம்
சரி அதென்ன மாடியில் ஒரே சத்தம், நல்ல அசைவ உணவு மணம் ?
எங்கள் அப்பா- இரவு பகல் என்று பாராமல் குடியும் , கூத்துமாய் அலம்பல் பண்ணிக்கொண்டிருக்கிறார்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
22012022 சனி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment