இனிய இஸ்லாம்
எளிய தமிழில்
இனிய இஸ்லாம்
18 , திருமறை 2
:
நேற்றைய பதிவின் நிறைவாக ஒரு மிக எளிய வினா
“குர்ஆனில் மக்கிய்யா சூராக்கள் மதனிய்யாசூராக்கள் என்பது என்ன?”
எளிய வினாவுக்கு எளிய விடை
மக்கமா நகரில் இறக்கி வைக்கப்பட்ட சூராக்கள் மக்கிய்யா சூராக்கள்
மதீனா நகரில் இறக்கி வைக்கப்பட்ட சூராக்கள் மதனிய்யாசூராக்கள்
இந்த எளிய விடைக்குப்பின் நீண்ட தொரு விளக்கமும் பல செய்திகளும் இருக்கின்றன
அவற்றைப் பின்னால் பார்ப்போம்
.
குரானின் அமைப்பு பற்றி ஓரளவு தெரிந்தால்தான் மக்கா மதினா சூராஹ் என்பதெல்லாம் எளிதில் விளங்கும்
குரான் முழுக்க முழுக்க இறைவன் படைப்பு,இதை குறை சொல்ல, மாற்ற , திருத்த யாருக்கும் உரிமை இல்லை
இது ஒரு இடத்தில் அமர்ந்து சிந்தித்து தொடர்ந்து எழுதப்பட்டது அல்ல
20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இடங்களில் – அது போர்க்களமாக இருக்கலாம், அடக்கத் தலமாக இருக்கலாம் இறை இல்லமாக இருக்கலாம் –
சிறு சிறு பகுதிகளாக வானவர் தலைவன் ஜிப்ர்ல் அலை மூலமாக இறைவன் வஹி வழியே நபி ஸல் அவர்களுக்கு அருளியது
வஹி வரும்போது நபி அவர்கள் ஒரு ஞான மயக்க நிலையில் ஆழ்ந்து விடுவார்கள் . வியர்வை ஆறாகப் பெருகும்
ஒட்டகத்தில் பயணிக்கும்போது வஹி வந்தால் ஒட்டகம் இறை செய்தியின் கனம் தாங்கமுடியாமல் கீழே உட்கார்ந்து விடுமாம்
இறை செய்தியை நபி பெருமான் வாய் முணுமுணுக்கும்
உடனே அருகில் இருக்கும் நபித் தோழர்கள் மனனம் செய்து கொண்டு கிடைத்த தோலிலோ மரப்பட்டையிலோ தாளிலோ எழுதி விடுவார்கள்
நபி அவர்களுக்கும் இறைவசனங்கள் மனப்பாடம் ஆகி விடும்
குரான் ஒரு உரைநடையா , கவிதையா இல்லை உரையாடலா – சொல்ல முடியாது
எந்த இலக்கியத்திலும் ,எந்த காவியத்திலும் எந்த அறவுரை நூலிலும் காண முடியாத ஒரு தனி நடை கொண்டது குரான்
ஒழுக்க நெறிகள், சமய விதிகள், சட்டங்கள், சத்திய அழைப்பு, நீதி நெறி, என பலப்பல செய்திகள் வருகின்றன
அறிவியல்,வரலாறு, சமூகவியல், பொருளாதாரம் வாழ்வியல் என இதில் இல்லாத செய்திகளே இல்லை எனலாம்
உடனே வாழ்வியல் என்றால் தலைப்பு , முகவுரை, விரிவுரை, நிறைவுரை என்ற அமைப்பை தேடாதீர்கள்
அப்படி எந்த அமைப்புக்கும் கட்டுப்படாத ஒரு மாறுபட்ட , அழகிய வடிவமைப்பு
ஒரே செய்தி பல இடங்களில் திரும்பத் திரும்ப வரும்
குரானை புதிதாக ஆழ்ந்து படிக்கும்போது மனதில் சில குழப்பங்கள் ஏற்படலாம் ஏன் இவ்வளவு தெளிவற்ற அமைப்பு என்று
திரும்பத் திரும்ப படிக்கும்போது வேறுபாடுகளைத் தாண்டி ஒரு அழகான ஒழுங்கான அமைப்பு இருப்பது புலப்படும்
இன்னும் சொல்லப்போனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் பலபுதுப்புது விளக்கங்கள் கிடைக்கும்
டிக்கும்போது புலப்படாத சில செய்திகள் அறிஞர்கள் உரையைக் கேட்கும்போது விளங்கும்
சுருக்கமாகச் சொல்வதென்றால் குரான் ஓதுவது ஒரு பரசமூட்டும் அனுபவம்
குரான் முழுதையும் அரபு மொழியில் ஒதி , தமிழிலும் ஓதுவதை ஒரு கடமையாகக் கருதி செயல்படுத்த வேண்டும்
ஒரு வாரத்தில் ,அல்லது ஒரு மாதத்தில் குரான் முழுதையும் ஓதி முடிக்கும் வல்லுனர்கள் நிறைய இருக்கிறார்கள்
அதெல்லாம் வேண்டாம் நமக்கு
வாழ்நாளில் ஒரு முறையேனும் முழுமையாக ஓதி பொருள் உணர முயற்சிப்போம்
கற்பதற்கு வயது ஒரு தடை இல்லை
இனி குரானின் அமைப்பு :
சிறிதும் பெரிதுமாக 114 சூராக்கள் கொண்டது குரான்
சூரா என்றால் ஒரு அத்தியாயம் chapter என்று வைத்துக்கொள்ளலாம்
சூராக்களின் தலைப்புகளுக்கும் அதில் சொல்லப்படும் செய்திகளுக்கும் பெரிய தொடர்பு ஒன்றும் இருக்காது
சுராஹ் 27 அன் நம்ள் (எறும்பு ) என்று பெயர்
இதில் உள்ள 95 வசனங்களில் 18 ஆவது வசனத்தில் எறும்பு என்ற சொல்லும் அது பற்றிய செய்தியும் வரும் அவ்வளவுதான்
இதவும் குரானின் தனிச் சிறப்பு
இதற்கு விலக்காக சுராஹ் 12 யூசுப் முழுதும் யூசுப்நபி பற்றியே சொல்லப்படுகிறது
இன்னும் யாசீன் (சுராஹ் 36) போன்ற பொருள் விளங்காத பெயர்களிலும் சூராக்கள் இருக்கின்றன
286 வசனங்கள் – மிகப்பெரிய சூராஹ்(2) அல் பக்றா
மிகச் சிறிய சூராஹ் (108 ) அல் கௌதர் மூனே மூன்று வசனங்கள்
குரான் முழுதும் ஒரு மாதத்தில் ஓதி முடிக்க ஏதுவாக 30 ஓரளவு சம பகுதிகளாக ஜூஸு க்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது
இன்னும் ஒரு வாரத்கில் ஓதும்படி 7 மன்ஜில்களாகவும் பிரிக்கபட்டுள்ளது
ஒரு சூராஹ் தொழுகையின் ஒவ்வொரு ரக் அத்திலும் ஓதும்படி
ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட ருக்கு / ஐன் களாகப் பிடிக்கப் படுகிறது
ஆயத் என்பது ஒரு வசனத்தைக் குறிக்கும்
வழக்கம் போல் இறைவன் மேல் பொறுப்பை சுமத்தி விட்டு
குரான் எனும் மிக உன்னதமான தலைப்பில் எழுதத் துவங்கினேன்
அது நீண்டு கொண்டே போகிறது
நேரம் ,காலம் கருதி இதோடு தொடரும் போட்டு விட்டு மீதமுள்ளவற்றை தொடர்ந்து அடுத்தடுத்த பகுதிகளில் சொல்ல எண்ணுகிறேன் இறைவன் நாடினால்
நிறைவு வினா
குரான் முழுதையும் எழுத்து வடிவில் ஆக்க முதல் முயற்சி செய்தது யார் ?
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
28 ச fபர் (2) 1445
15092023 வெள்ளி
சர்புதீன் பீ
No comments:
Post a Comment