Saturday, 9 September 2023

தமிழ் (மொழி) அறிவோம் கொடு, சுத்தமாவாய்.. சுகப்படுவாய். !!

 




தமிழ் (மொழி) அறிவோம்

கொடு, சுத்தமாவாய்.. சுகப்படுவாய். !!
10092023 ஞாயிறு
கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை வரிகள்:
“கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
கொடுப்பதற்கு நீ யார்?
நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?
உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
உனக்காக மட்டும் கொடுக்கப்பட்டதல்ல
உண்மையில் நீ கொடுக்கவில்லை
உன் வழியாகக் கொடுக்கப்படுகிறது
நீ ஒரு கருவியே
இசையைப் புல்லாங்குழல் கொடுப்பதில்லை
இசை வெளிப்படுவதற்கு அது ஒரு கருவியே
இயற்கையைப் பார் அது கொடுக்கிறோம் என்று நினைத்துக் கொடுப்பதில்லை
தேவையுள்ளவன் அதிலிருந்து
வேண்டியதை எடுத்துக்கொள்கிறான்
நீயும் இயற்கையின் ஓர் அங்கம்
என்பதை மறந்துவிடாதே
கொடுப்பதற்குரியது பணம் மட்டும்
என்று நினைக்காதே
உன் வார்த்தையும் ஒருவனுக்குத்
தாகம் தணிக்கலாம்
உன் புன்னகையும் ஒருவன் உள்ளத்தில்
விளக்கேற்றலாம்
ஒரு பூவைப் போல் சப்தமில்லாமல் கொடு
ஒரு விளக்கைப் போல பேதமில்லாமல் கொடு
உன்னிடம் உள்ளது நதியில் உள்ள
நீர்போல் இருக்கட்டும்
தாகமுடையவன் குடிக்கத்
தண்ணீரிடம் சம்மதம் கேட்பதில்லை
கொடு
நீ சுத்தமாவாய்..
கொடு
நீ சுகப்படுவாய்..!!
எளிய நடையில் இனிய தமிழில் ஒருகருத்தாழமிக்க சொற்சிலம்பம்
இனி இரண்டு மிக எளிய வினாக்கள்
1 இந்தக் கவிதையைப் படித்தவுடன் உங்கள் மனதில் கவிதையைப் பற்றி தோன்றிய எண்ணம் என்ன ?
அதிகம் சிந்திக்க வேண்டாம்
உங்கள் எண்ணத்தை எழுத்தாக்கி அனுப்புங்கள்
தவறான விடை என்று எதுவும் கிடையாது
எனவே தயக்கமின்றி எழுதலாம்
2. கவிக்கோவை
திரைப்படப் பாட்டெழுத அழைத்தார்கள்
அப்போது அவர் சொன்ன மறுமொழி என்ன ?
விடை
முதலில் இரண்டாவது வினா
“அம்மி கொத்த சிலை வடிக்கும் சிற்பி எதற்கு “
என்ற கருத்தை சொன்னார் கவிக்கோ
சற்று செருக்கான, கர்வமான மறுமொழிதான்
ஆனால் இது வித்யா கர்வம், ஞானச் செருக்கு ,
எனவே கவிஞர்களின் மரபு வழு அமைதிபோல் இதுவும்
ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதே
சில பல சர்ச்சைகள்,எழுந்தன இதைப்பற்றி
சரியான விடை எழுதி வாழ்த்து ,பாராட்டுப் பெறுவோர்
சகோ
பாடி பீர் – முதல் சரியான விடை
ஷேக் பீர்
வேலவன்
சிராஜுதீன்
ஷர்மதா
முதல் வினா
எல்லாமே சரியான விடைதான் எனவே பங்கு கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள் பாராட்டுகள்:
சகோ
பாடி பீர் (ஜக்காத் பற்றியது )
ஷேக் பீர் (Nothing belongs to us)
வேலவன்(கீதை எளிமையான கவிதை வடிவில்)
சிராஜுதீன் (ஜக்காத் பற்றி அழகிய கவிதை )
ஷர்மதா (ஜக்காத் )
ராஜாத்தி (உள்ளன்போடு நிறைய கொடுக்க வேண்டும் )
சிட்டு (கவிதை அருமை )
கவிதை, வினா அநுப்பிய சகோ இ ஷா பீர் , தல்லத் இருவருக்கும் மீண்டும் நன்றி
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
1௦௦௯௨௦௨௩
10092023 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment