தமிழ் (மொழி) அறிவோம்
பொய்ய - பொய்கை
03092023 ஞாயிறு
இதன் பொருள் என்ன?
விடை
பொய்ய என்பது பொய்கை என்ற சொல்லின் பேச்சு வடிவம்
பொய்கை = இயுற்கை நீர் நிலை
(குளம்=மனிதன் உருவாக்கிய நீர்நிலை)
சரியான விடை அனுப்பிய
சகோ நெய்வேலி ராஜாவுக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்
அவரின் விளக்கத்துக்கு நன்றி :
"பொய்கை என்ற சொல்லே மருவி 'பொய்ய' ஆனது .
பொய்கை – (இயற்கை )குளம்.
அக்காலக் கட்டத்தில் குளத்துத் தண்ணீரே குடிநீராகப் பயன்படுத்தப் பட்டது. தேற்றான் கொட்டை ( Moringa seed ) கொண்டு தண்ணீர்க் குடத்தின் உட்பகுதியில் தேய்த்தல் , மற்றும் வடிகட்டுதல் மூலம் தண்ணீர் சுத்தம் செய்யப்படும்.
சரியாக சுத்தம் செய்யப்படாத தண்ணீர் மோரில் கலந்திருந்தால் பாசி மற்றும் நீர்த்தாவரங்களின் நாற்றம் வரும். இதையே 'பொய்ய வீசுது'என்று சொல்லியிருப்பார்கள் என் அத்தா வழி அத்தம்மாவும் அம்மா வழி பாட்டியும் ஆன உங்கள் அத்தம்மா !"
பொய்கை என்ற சொல்லை எங்கள் அத்தம்மா பேச்சில் பயன்படுத்தியதில் பெரிய வியப்பொன்றும் இல்லை
அவரின் ஞானம், புலமை ,திறமை பற்றி ஒரு தனி பதிவு வெளியிட்டிருக்கிறேன்
அந்த சொல் மோர் விற்கும் பெண்ணுக்கும் தெரிந்திருப்பது எங்கள் வட்டார மக்களின் தமிழறிவுக்கு சான்று என பெருமிதம் கொள்கிறேன்
அத்தம்மா சொன்ன பொய்ய,
இன்னும் சில சிறப்புகள் பற்றி
எனக்குத் தெரிவித்த சகோ
தல்லத்துக்கு நன்றி
அத்தம்மாவின் சிறப்பான குணம் ஓன்று
தன்னை யார் எவ்வளவு திட்டினாலும் திருப்பி அவர்களைத் திட்டமாட்டார்களாம்
மேற்கொண்டு
நல்லா இரு என்று வாழ்த்துவாராம்
எவ்வளவு அரிய பண்பு அது !
எல்லோரும் இதேபோல் இருந்தால் உலகமே வேறு மாதிரி இருக்கும்
என்னிடம் இல்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்
வாழ்வின் பெரும்பகுதி கடந்து போய் விட்டது
மிச்சமிருக்கும் நாட்களில் இதைக் கடைப்பிடிக்க இறைவன் அருள வேண்டும்
சொல்வது எளிது
இதை எழுதும்போதே நினைவில் வருகிறது
ஒரு துறவியின் பேச்சைக் கேட்டு கொத்துவதை விட்டு விட்ட பாம்பு அடிபட்டு அரை உயிராய் ஆனதும்
அதே துறவி கொத்த வேண்டாம் என்றுதானே சொன்னேன் சீறிஇருந்தால் உலகமே நடுங்குமே
என்று சொன்ன கதை
பொய்யவுக்கு விடை சொல்ல முயற்சித்த சகோ மெஹராஜ், ஜோதி , ஷிரீன் பாருக் மூவருக்கும் நன்றி
நிறைவாக மோர் பற்றி கவி காளமேகத்தின் பாடல்
“கார் என்று பேர் படைத்தாய் ககனத்துரும்போது
நீர் என்று பேர் படைத்தாய் நெடுந்தரையில் வீழ்ந்ததன் பின்
வார் சடை மென்கூந்தல் பால் ஆய்சியர்கை வந்ததன் பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே”
எளிய தமிழ்ப் பாடல் –விளக்கம் தேவையில்லை
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
௦௩௦௯௨௦௨௩
03092023 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment