அத்தாவின் எழுத்துக்கள்
இலக்கிய இன்பம்
நவ நாகரிக உடை அணிந்து கம்மென்று நறுமணம் பூசி கண்கவர் கலர் கண்ணாடிகள். பளபளப்பு மங்காத பூட்சுக்களுடன் இரயில் நிலையங்களிலும் , பெண்டிர் கூடும் அங்காடிகளிலும் , ஏதோ முக்கிய அலுவல் இருப்பது போல் அங்கும் இங்கும் உலவிக்கொண்டிருக்கும் வாலிபர் பலரைப் பார்க்கிறோம். இவர்களை மைனர்கள் என்று அழைப்பது உண்டு.
ஐந்பெருங்காப்பியங்களுள் ஒன்றாகிய சிலப்பதிகாரத்தில் இளங்கோ இவர்களுக்கு “ நகர நம்பியர் என்று பெயர் சூட்டியுள்ளார். பாவம்! இவர்கள் ஏன் அங்கும் இங்கும் அலைய வேண்டும் என்று?அக்காலத்தில் இவர்களுக்கென்று தனி இடம் அமைத்திருந்தனர் போலும். அந்த இடம் “ நகர நம்பியர்’ திருமருங்கு என்று கூறப்படுகிரது.
இந்த மருங்கிலேதான் மாதவியின் இள நலம் விலை கூறப்பட்டது; அவ் ஆடல் அழகி முறை ஒன்றுக்கு ஆயிர தெண் களஞ்சு பரிசமாக பெறத் தக்க தலைக்கோழி என்னும் பட்டம் பெற்றவன் அல்லவா?
இம்மருங்கில் திரிபவருள் ஒருவன் கோவலன் . மணமாகி “ மாசுறு பொன்னே; வளம்புரிமுத்தே;” என்றெல்லாம் தன மனைவியைப் புகழ்ந்து கொண்டிருக்கும் காலத்தேயும் இந்த மருங்கிற்கு விஜயம் செய்யத் தவறவில்லை போலும்
இந்த நம்பி! உயர்ந்த கணிகைக்கு ஒரு முறைத் தொகை கொடுத்து மாதவி மனமனை புகுந்தவன் மயங்கி வடுநீங்கிய சிறப்புடைய சொந்த மனையை மறந்து (வடு நீங்கு சிறப்பற்ற) மாதவி மனையிலேயே தங்கி விட்டான்.
இத்தகைய நம்பிகள் எளிதாக பெண்கள் பால் ஈடுபட்டு விடுகின்றனர். இவர்களை வசீகரிக்கும் வனப்பும் உடை உடல், அலங்காரங்களும் , தற்கால திரைப்படங்களின் வெற்றிக்கும் பெரும் அளவு காரணமாகின்றன. இன்னும் பெண்களை நிந்தித்து அறுவருக்கும் நிஷ்காமர் உள்ளங்களை உந்திச் சூழித்து இழுக்கும் உடை , உடல் அலங்காரம் அமைந்தால் அவற்றிற்கு முழு வெற்றியே;
இக் கலையில் கம்பன் தனது கைவரிசையைக் காட்டியுள்ளான் “இப் பிறவியில்” கரம் பற்றி மணந்த இல்லளையின்றிப் பிற மாதரைச் சிந்தையாலும் தொடேன்” என்று செவ்வறம் கூறிய அறத்தின் நாயகனுன இராமபிரானுடைய சித்தம் கலங்கச் செய்ய வேண்டுமெனத் திட்டம் தீட்டுகிறான்.
அதுவும் எத்தகைய பெண்ணைக் கொண்டு ;; கூந்தல் அழகு , சுவைத்த பன.ம் பழம் போன்றது; சீவிக் கண்கள் குடைந்த நொங்கு போன்ற முகம்; மாமிச மலை போன்ற உடலில் கழுத்தெனும் இணைப்பின்றி ஒட்டியதலை; கோரப்பற்கள் – இத்தகைய சிறப்புடைய சூர்ப்பனகை என்னும் அரக்கியைக் கொண்டு அந்த ஆடவர் திலகனை மயக்க வேண்டும்! இம்முயற்சியில் அவன் அடைந்த வெற்றியை அவனே கூறுகிறான்;
அந்த அலங்கோலச் சின்னத்தை அலங்கரித்து அண்ணல் இராமன் பால் அனுப்புகிறான்.
அலங்காரத்தில் ஆரவாரத்தாலேயே, “ஓர் அழகியல்லவா வருகிறாள்” என்று அதிசயித்து அவ்வழியே நோக்கி, வைத்த கண் வாங்காமல் விழிக்கிறான் இராமன்: என்ன ஆரவாரம் அவை?
“நூ புறம் என்னும் கால் சிலம்புகள் “கலீர் கலீர்” என ஒலிக்கின்றன .மேகலை என்னும் கவர்ச்சி அணியில் கட்டப்பட்ட மணிகள் “கிணு கிணு” என்று சத்தமிடுகின்றன. கழுத்தில்,மார்பில், கைகள் அணிந்த வடங்கள் சலசலக்கின்றன.
“நூ புறமும் , மேகலையும் நூலும்” என்று இவற்றைக் கம்பன் கூறுகிறான். இவை செய்யும் இந்தக் காதல் கீதத்துக்கு போட்டியாக மற்றொரு இசையும் ஒலிக்கிறது. கருமணல் போன்ற கூந்தலிலே அணிந்த பூக்களை மொய்க்கும் வண்டுகள் மதுர கீதம் பாடுகின்றன! “நூ புறமும்,மேகலையும் நூலும் அறல் ஓதிப்பூமுரலும் வண்டும் இவை பூசலிடும் ஓசையாகிய இந்தக் காதல் கீதங்கள்தான் ஒரு அழகிய தையல் வருகிறாள் என்று உறைத்தனவாம் . அதனால் கோமகனான இராமன் அவ்வழி மேல் விழி வைத்தான் என்று கவி கூறுகிறான்
தரமுறை செய்கின்றதொரு தையல் வருகென்னா கோமகனும் அத்திசை குறித்தெதிர் விழித்தான்
கருணை உளம் படைத்த அக்கண்ணன் ஏழைகளின் பாபங்களைத் துடைத்து ஞானக்கண் அருளும் வள்ளல் ! அவன் கண்களுக்கு அம்மாய சுந்தரி எப்படித் தெரிகிறாள் என்று கவி கூறுகிறான் !
தேவர்களைக் காத்த இனிய தேவார்மிதம் போல் அழகிய தனபாரங்களால் இடை துவள வருவதைப் பார்த்தான்
விண் அருள வந்தது ஒரு மெல் அமுதம் என்ன,
வண்ண முலை கொண்டு, இடை வணங்க வரு போழ்தத்து
எண் அருளி, ஏழைமை துடைத்து, எழு மெய்ஞ்ஞானக்
கண் அருள்சேய் கண்ணன் இரு கண்ணின் எதிர் கண்டான். 35
வஞ்சி என, நஞ்சம் என, வந்த வஞ்ச இந்த வஞ்ச மகளது பாதங்களைகண்டு செம்பஞ்சும் இளந்தளிரும் நாணி வருந்தின
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செந்தாமரை ஒத்த அந்த மென்மயான பாதங்களைப் பூப்பொதி அவிழ்த்தது போல் மெதுவாக எடுத்து வைக்கிறாள்
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி
இப்படி வருபவளின் உருவம் வனப்பு மிக்க மயில் போல் உள்ளது .மயில் பேசாதே! ! ஆனால் இது இனிய பேச்சுக்கள் பேசும் மயில்
தேர்ந்த மதன கலை செப்பும் கலாப மயில்
இத்தகைய அழகுடன் அன்னம்போல் நடந்து வருகிறாள் போலியாக மின்னும்
நஞ்சொத்த வஞ்சி
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர், சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள். 31
உடலெங்கும் புனுகு ஜவ்வாது பூசி பரிமணம் வீசுகிறது .கற்பகத்தின் பூங்கொம்பு போல் காமரசத்தை ஊட்டும் நறுமணத்துடன் உடல் அழகு பெற்று தேன் போல் இனிய மொழியும் ,மான் போல் மருண்ட விழியும் கொண்டு மயில் போல் வரும் அவளைக்கண்டு அயர்ந்து விடுகிறான் இராமன்
என்ன அழகு, என்ன அழகு, பூஉலகு , வான் உலகு ,நாகர் உலகு ஆகிய இம்மூன்று உலகிலும் தேடினாலும் இவ்வழகிக்கு நிகர் யாரேனும் இருக்க முடியமா என்று அதிசயிக்கிறான்
பேர் உழைய நாகர்-உலகில், பிறிது வானில்,
பாருழையின், இல்லது ஒரு மெல் உருவு பாரா,
'ஆருழை அடங்கும்? அழகிற்கு அவதி உண்டோ ?
நேரிழையர் யாவர், இவர் நேர்?' என நினைத்தான். 36
இராமனது இந்த மனோநிலையை உணர்ந்து கொண்டாள் நஞ்சென வந்த வஞ்சி மகள் .கண்ணால் ஒரு வெட்டு வெட்டி விட்டு வேறு திசையைப் பார்ப்பது போல் பாவனை செய்து மான்போல் மருண்டு இராமனுக்கு அஞ்சி நாணி நிற்பதுபோல் நடித்து ஒதுங்கி நிற்கிறாள்
வெவ்விய நெடுங் கண்-அயில் வீசி, அயல் பாரா,
நவ்வியின் ஒதுங்கி, இறை நாணி, அயல் நின்றாள். 37
இத்தகைய நடை உடை அலங்காரத்துடன் மருங்கினால் பால் யாவரோ மயங்காதவர் ?சொக்கிப்போன இராமன் தன்னை மறந்தான் .தனைப்போல் பிற மறந்தான்
“பேரழகியே ;இலக்குமி போன்றவளே ;தீதற்ற நின் வரவு நல்வரவாகுக .உன் போன்ற கட்டழகி எங்களிடையே வந்தது எங்களின் பெரும் புண்ணியமே “ என்று வாயார மனதார வரவேற்கிறான்
'தீது இல் வரவு ஆக, திரு! நின் வரவு; சேயோய்!
போத உளது, எம்முழை ஓர் புண்ணியம் அது அன்றோ?
என்றான்
இப்பொழுது கம்பன் தன் எண்ணத்தில் வெற்றி பெற்றானா இல்லையா என்று கூறுங்கள் ஆனால் எப்படி இந்த அவலட்சணம் அழகு பெற்றது என்றுதானே எண்ணுகிறீர்கள் ?
இப்பொழுதெல்லாம் அவயவங்கள் வைத்து வைத்து கவர்ச்சியாகத் தோன்றுவதை நாம் பார்க்கிறோம் அல்லவா ? அவ்வாறே அக்காலாத்தில் லட்சுமி, ரம்பை ,ஊர்வசி மேனகை , திலோத்தமை முதலியோர் முகங்களைத் தரத்தக்க முகமூடிகள் இருந்திருக்கலாம் .அவற்றை அணிந்து வேண்டிய அழகு பெற்றிருக்கலாம் .ஆனால் கம்பன் அப்படிக் கூறவில்லை
பங்கயச் செல்வியாகிய இலக்குமியின் உருவத்தை அரக்கி நினைத்துத் தன் கைவசமுள்ள மந்திரத்தை ஜெபித்தாளாம் உடனே இலக்குமி போல்சந்திர பிரகாசத்துடன் தோன்றுகிறாள் என்று கூறுகிறான்
பங்கயச் செல்வியை மனத்துப் பாவியா,
அங்கையின் ஆய மந்திரத்தை ஆய்ந்தனள்;
திங்களின் சிறந்து ஒளிர் முகத்தள், செவ்வியள்,
பொங்கு ஒளி விசும்பினில் பொலியத் தோன்றினாள். 30
@@@@@&&&&&@@@@@
எழுத்தாக்கம் எங்கள் தந்தை
ஹாஜி கா பீர் முகமது பி எஸ்சி
நகராட்சி ஆணையர் ஒய்வு
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
16012021sat
SherfuddinP
No comments:
Post a Comment