நினைத்தாலே இனிக்கும்
26112022சனிக்கிழமை
சுவை ! அதிலும் சுவையான உணவு –பிடிக்காதவர்கள் யாரும் உண்டோ !!
Eat well, be well
என்றொரு சொல் வழக்கு
பெருகி வரும் உணவகங்கள் ,சாலை ஓரக்கடைகளிலிருந்து விலை உயர்வான உணவகங்கள் வரை – நாம் நன்றாகச் சாப்பிடுகிறோம் என்ற உணர்வை உண்டாக்குகின்றன
அதுவும் வலை ஒளியைத் திறந்தால் –
சிற்றுண்டி , மதிய உணவு, ரொட்டி, பிரியாணி நண்டு இட்டலி தோசை என திகட்டும் அலாவுக்குப் பதிவுகள்
இங்கிருந்து பிரியாணியை சுவைத்துப் பார்க்க டெல்லி வரை போகிறார்கள்
மிகத் தொலைவில் உள்ள வட கிழக்கு மாநிலங்கள் போய் அங்குள்ள சிறப்பு உணவுகளை சுவைபார்த்து வருகிறார்கள்
இந்த சுவைப் பயணங்கள் பற்றி விரிவாக வலை ஒளியில் பதிவு செய்து அதில் நல்ல வருமானம் வருவதாகவும் சொல்கிறார்கள்
இந்த மாதிரி சுவைப்பயணம் எல்லாம் நான் போனதில்ல
ஆனால் அத்தாவின் , பிறகு என் பணி நிமித்தம் மிகப்பல ஊர்களுக்கு சென்றதோடு அங்கங்குள்ள சிறப்பு உணவுகளை சுவைக்க வாய்ப்பு கிடைத்தது இறைவன் அருள்
சுவையை நான் உணரத் தொடங்கியது பள்ளிப் படிப்பு துவங்கியது இரண்டுமே ஆம்பூரில்தான்
உடனே பிரியாணி என்று கற்பனை எட்டிபார்க்கும்
ஆனால் என் தேர்வு அதுவல்ல
பிரியாணி பிடிக்காது என்று சொல்லவில்லை. ஆனால் மிகவும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது
கண்ணிலும் , கருத்திலும் நாசியிலும் நாவிலும் பரவி நிற்கும் இரண்டு உணவு வகைகள்
ஓன்று குலாப் ஜாமூன் – பல்வேறு வண்ணங்களில் ,கொஞ்சம் பெரிய அளவில் உருண்டையாக இல்லாமல் சற்று நீள வடிவில் இருக்கும்
அடுத்து அன்னாசிப்பழம் – அதை வட்ட வடிவில் துண்டாக்கி ஒரு குப்பி (பாட்டில் )யில் போட்டு ஒவ்வொரு துண்டுக்கும் மேல் சீனியைத் தூவி விடுவார்கள்
அன்னாசிச் சாறும் சீனியும் கலந்து ஊறி நல்ல மணம், சுவையாக இருக்கும்
நாள் முழுதும் நோன்பிருந்து நோன்பு திறக்கும் நேரத்தில் ஆம்பூர் திருவிழாக் கோலம் பூண்டு விடும்
நோன்பு திறக்க அவர்கள் பல வகையான உணவுகளை அழகாக விரிப்பு விரித்து அடுக்கி வைத்திருப்ப்தைப் பார்த்தாலே பசி தீர்ந்து விடும்
மனதில் நிற்கும் இன்னொன்று ஆம்பூரில் எதிர் வீட்டில் பூக்கும் மனோரஞ்சித மலர் – தினமும் அத்தாவுக்கு கொடுத்து விடுவார்கள்
ஆம்பூருக்கு அடுத்து மேட்டூர் –வெண்ணெய் உருக்கும் பாத்திரத்தில் சோறு போட்டு அதில் உள்ள நெய் முருங்கை இலை உப்பு ல்லாம் கலந்து கொடுக்கும் ஒரு சுவை
இறைவன் அருளால் இன்றும் அந்தச் சுவை தொடர்ந்து கிடைக்கிறது
விழுப்புரம் என்றால் உடன் நினைவில் வருவது வாசவி விஹாரின் இலந்தைப் பழ ஊறுகாய்
வாசவியும் இப்போது இல்லை , அந்த சுவையும் கிடைக்கவில்லை
இப்போது எங்கு பார்த்தாலும் பெருநகரங்கள் முதல் சிற்றூர்
வரை பரவிக்கிடப்பது புரோட்டா கடைகள்
புரோட்டா கெடுதல் ,மைதா கெடுதல் என்ற எச்சரிக்கைகளை மீறி புரோட்டா விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது
எங்கள் ஊரில்சுவையான ரொட்டி (பரோட்டா ) குழம்பு கிடைக்கும் இடங்கள் மாதவன் கடை, ராசக்கிலி கடை
ராசக்கிலி கடையில் நெய் புரோட்டா வேண்டும் என்று சொன்னபிறகுதான் நெய் வாங்க ஆள் அனுப்புவார்கள்
“பிச்சுப்போட்டு ஊற வைத்து “ புரோட்டா சாப்பிடுவது எங்கள் ஊரின் சிறப்பு
இன்றும் கடைகள் இருக்கின்றன பிச்சுப் போட்டும் தருகிறார்கள் ஆனால் பழைய சுவை ?
ரொட்டி குழம்பில் அடுத்து திருநெல்வேலி
சுல்தானியா உணவகத்தின் ரொட்டி குழம்பை சுவைக்க வெளியூரில் இருந்தெல்லாம் வருவார்கள்
சுள்தானியாவுக்கு அடுத்து காமாட்சி விலாஸ்
நெல்லை பேட்டையில் உள்ள சின்ன சின்னக் கடைகளில் கூட சுவையான ரொட்டி குருமா கிடைக்கும்
கேரளாவில் நான் அறிந்த புதிய சுவை ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள மீன் குழம்பு , மத்தி மீன் பொரியல் –நன்றாகத்தான் இருந்தது
கோதுமைப் புரோட்டா – சென்னை புஹாரியின் சிறப்பு உணவு
ஆம்பூர் வாணியம்பாடி பகுதியிலும் மதுரை மாநகரிலும் மிகக் குறைந்த விலையில் சுவையன ரொட்டி குழம்பு கிடைக்கும்
முட்டைப் புரோட்டா, கொத்துப் புரோட்டா , பன் புரோட்டா பொரிச்ச புரோட்டா, முர்தபா என பல பெயர்களில், பல சுவைகளில் புரோட்டா
இருந்தாலும் அம்மா செய்யும் ஒரு வகை கொத்துப்புரோட்டா இதுவரை நான் எங்கும் பார்க்கவில்லை
(சப்பாத்தியா புரோட்டாவா என்பது நினைவில்
இல்லை )
ரொட்டியை அழகாக டைமண்ட் வடிவில் சின்ன சின்ன துண்டுகளாக்கி பொரித்தெடுப்பது
பொதுவாக எங்கள் குடும்பத்தில் எல்லோருமே – அம்மா , உடன் பிறப்புகள் , துணைவி, துணைவியின் அம்மா , மகள் , மருமகள் என எல்லோரும் சமையலில் நளன்கள்தான்
எனவே எந்த சுவையையும் தேடிப்போக வேண்டிய தேவை இருந்ததில்லை –
இப்போதுதான் உணவு விடுதி வாழ்வின் ஒரு அங்கமாகி விட்டது
என் திருமணத்தை ஒட்டி வங்கிப் பணியாளர்களுக்கு எங்கள் வீட்டில் விருந்து
50 பேருக்குக் மேல் அம்மா தனியாக சுவையான பிரியாணி சமையல்
அரை நூற்றாண்டு கடந்தும் அன்று சாப்பிட்ட வங்கிப் பணியாளர்களின் நினைவில் நிலைத்து நிற்கும் சுவை
என் மகன் திருமண வரவேற்பில் சென்னை ஹயாத் பாயின் பிரியாணி சுவையை அனைவரும் மனமகிழ்ந்து பாராட்டினர்
உடன் பிறப்பின் திருமணத்துக்கு உற்றார் உறவினர்களை சென்னை அழைத்துச் செல்ல காரைக்குடியிலிருந்து இரண்டு பேருந்துகளை அத்தா ஏற்பாடு செய்திருந்தார்கள்
ஒரு பேருந்தில் செல்பவர்களுக்கு மதிய உணவு ஒரு அண்டா நிறைய தயிர் சோறு , தொட்டுக் கொள்ள மாங்காய்த் தொக்கு அம்மாவின் கை வண்ணத்தில்
நனிமா செய்த ஒறப்பு அல்வா நல்ல ருசி என்று ஒரு குழந்தை
நிறைய வாங்கிச் சாப்பிட்டது அப்படி ஒரு சுவை
ஊறுகாய் என்றாலே அப்போதெல்லாம் வீட்டில் செய்வதுதான் அதுவும் அம்மா ஊறுகாய் செய்யப் பயன் படுத்துவது விறகுக்குப் பதிலாக கொட்டாங்கச்சி எனும் சிரட்டைதான்
சமையல் எரிவாயு வாங்க அத்தா ஏற்பாடு செய்தும் அம்மா அதற்கு சம்மதிக்கவில்லை
என் வாழ்க்கைப் பயணக் கட்டுரைகளில் அந்த அந்த ஊர்களின் சுவை பற்றியும்
அம்மாவின் கைப்பக்குவம் பற்றியும் நிறையவே எழுதியிருக்கிறேன்
அதனால் என்ன !
நல்ல செய்திகளை நல்ல சுவைகளை நினைவு கொள்வது நல்லதுதானே
வாழ்க்கை என்பதே நினைவுகளின் தொகுப்புதானே
நிறைவு செய்யுமுன் இன்னும் சில சுவைச் செய்திகள்
டில்லிக்கு அருகில் பல்லப்கார்க் என்ற வங்கிக் கிளையில் ஆய்வுப்பணி
வங்கிக்கு அருகில் ஒரு சிறிய உணவகம் .ஒரே ஒரு ரூபாய்க்கு ஒரு தட்டு நிறைய காரட்டில் செய்த பக்க உணவு கொடுப்பார்கள்
அப்படி ஒரு சுவை
நாகை அருகில் ஒரு சிற்றூர் கிளையில் ஆய்வுப்பணிக்காக நாகப்பட்டினத்தில் தங்கியபோது சுவைத்த எறால் பொரியல்
நம்ப முடியாத விலையில் தரம் , அளவில்
சுவை பற்றிப்பேசும்போது அத்தாவைப் பற்றி சொல்லாமல் அது முழுமை அடையாது
எதிலும் ஒரு ரசிப்புத்தன்மை ,சுவைகளை ஆழ்ந்து உணரும் குணம்
எந்த நேரத்திலும் எந்த உணவையும்
இது எனக்கு ஆகாதது
என்று சொல்லி மறுத்த நினைவில்லை
என்மகனுக்கு ஐயாவின் வாரிசாக சுவைகளை நுணுக்கமாக உணரும் திறமை
அதற்கெலாம் மேல் என் பேரன்
கைக்குழந்தைப் பருவததில் ஊட்டிய முதல் திட உணவை உப்பில்லை என்பதால் துப்பியவன்
நினைவலைகள் நீண்டுகொண்டே போகின்றன
ஒரு அளவாக இதோடு நறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
26112022 சனிகிழமை
சர்புதீன் பீ
No comments:
Post a Comment