Wednesday, 10 March 2021

தமிழ் -கவிதை சொல்லும் கண்கள்

 


கவிதை சொல்லும் கண்கள்

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் .ஆனால்  பண்டை   இலக்கியங்களும் திரைப்பாடல்களும் வர்ணிக்கும் வரிகளைப்   படித்தால் கண் இல்லாமல் காதலே இல்லை என்ற  எண்ணம் ஏற்படுகிறது  . இதில் கம்பன், வள்ளுவன் இளங்கோ என யாரும் விலக்கு இல்லை .

சுட்டும் விழிச் சுடர்தான் என்று ஒரு புதிய சொற்றொடரை உருவாக்கினான் பாட்டுக்கொரு புலவன் பாரதி . வட்டக்கரிய விழி வானத்துக் கருமை , அமுதூறித்ததும்பும் விழிகள் என்று மேலும் பல  புதிய உவமைகள் .

காதல் மட்டுமல்ல .- பாசம், வீரம் ,பகைமை என பலவிதமான உணர்ச்சிகளின் வெளிப்பாடு கண்கள் வழிதான்   

காலத்தால் அழியாத பாடல் மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே . கண்ணின் மணி போல மணியின் நிழல் போல என இதுவரை யாரும் சிந்திக்காத ஒரு ஒப்பீடு.

கண்களே கண்களே காதல் செய்வதை விட்டு விடுங்கள் என புலம்பும் காதலனுக்கு  மறுமொழி சொல்வது போல் “காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவமன்றோ” என்று காதலி பாடுகிறார் .” ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்களும் ரசிக்கட்டுமே என்பது அதே காதலியின் இன்னொரு பாடல்

விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே என தரையில் விழுந்த மீன் போல் துடிக்கும் காதலியின் மன வெளிப்பாடு

சந்தித்த மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து விளையாடும் காதலனும் காதலியும் விழியே விழியே உனக்கென்ன வேலை என வினா தொடுக்கிறார்கள்

காதல் திருவிழாவை கண்களில் கண்டு களிக்கிறார் ஒரு கவிஞர்

இன்னொரு மறக்க முடியாத் பிரிவுத் துயர் பாடல் கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ .

சின்னக் கண்ணனை அழைக்கும் கண்கள் சொல்லும் கவிதை ஒரு இனிமையான பாடல்

திரைப்பாடல்களைத் தாண்டி சற்று இலக்கியத்தை  எட்டிப்பார்ப்போம் ;ஒரு சிலவற்றை மட்டும் சுவைப்போம். புலவர்களின் கற்பனை சிறகு விரிததுப்பறந்து  வானை முட்டுகிறது கண் பற்றிப் பாடும்போது .அவற்றின் அடிப்படையில்தான் பெரும்பாலான் திரைப்பாடல்கள் அமைந்துள்ளன

காதல் நோயை உண்டாக்குவதும் அவள் கண் பார்வைதான் . அந்த நோய்க்கு மருந்தும் அதே பார்வைதான் என்று சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறான் வள்ளுவன்

.

என்னைக்களவாக இவள் பார்க்கும் சிறு பார்வை காதலில் சரிபாதிக்கும் மேல் என்கிறது இன்னொரு குறள்

கண் விதுப்பழிதல் என்று பத்துப்பாடல் கொண்ட ஒரு அதிகாரத்தையே படைத்து கண்ணின் சிறப்பை விளக்குகிறான் வள்ளுவன்

அழகான் தாமரை மலர் போல குளிர்ச்சியாக, அழகாக மென்மையாக இருக்கும் தலைவியின் தலைவனைப் பார்க்கும்போது மட்டும் கொடிய அம்பு போல் தாக்கி அவன் உடலெங்கும் பல மாற்றங்களை உண்டாக்கியது என்கிறது குறுந்தொகை

மலர் மொட்டோடும், கயல் மீனோடும், இன்னும் வில்லோடும் ஒப்பீட்டுப் பாடும் பாடல்கள் :

நீர்வார் கொழுமுகைச் செவ்வெரிந் உறழும் கொழுங்கடை மழைக் கண்

கயல் ஏர் உண்கண் கனங்குழை மகளிர்

களிறு கடைஇயதாட்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையாற்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து

நோக்கிய நோக்கு எனும் நுதி கொள்வேல்
என கண்களைக் கூர் வேலுக்கு ஒப்பிடுகிறான் கம்பன்

 செழு மணிக் கொடிகள் என்னும்
கைகளை நீட்டி அந்தக் கடி நகர், கமலச் செங் கண்
ஐயனை, 'ஒல்லை வா' என்று அழைப்பது போன்றது அம்மா! 

என ஒரு மாறுதலாக ஆணின் கண்ணையும் வர்ணிக்கும் சிறப்பு கம்பனுக்கு உரியது

  

சுடர் நெடுவேல் ஒன்றுநின் முகத்துச்
செங்கடை மழைக்கண் இரண்டா ஈத்தது? என்று கண்ணகியின் கண்களை வேலுக்கு ஒப்பிடுவது இளங்கோ அடிகள்

இலக்கியங்கள் , திரைப்பாடல்களில் இது போன்ற எண்ணற்ற வர்ணனைகளை காணலாம்

– கடல் நீரின் சில துளிகள் போல ஒரு சில எடுத்துக்காட்டுகளை தொட்டுக்காட்டியிருக்கிறேன்

 

 நேற்றைய பதிவு நிறைவு செய்யுமுன் ஒரு சிறிய வினா கேட்டிருந்தேன்

மற்ற எந்த உடல் உறுப்புக்கும் இல்லாத ஒரு சிறப்பு கண்ணுக்கு உண்டு என்கிறது நன்னெறி அது என்ன ?பாடல் எது ?

விடை

கண் எந்த அணிகலனையும் அணிவதில்லை இருந்தாலும் உடலின் பிற உறுப்புகள் நகைகள் அணியும்போது கண் அதைப்பார்த்து அழுக்காறு அடையாமல் மகிழ்கிறது .இந்தப்பெருந்தன்மை மனிதர்களிடமும் இருக்கவேண்டும் என்கிறார் சிவப்பிரகாசர்

“பொன் அணியும் வேந்தர் புனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞரைத் தாம் மற்று ஒவ்வார் - மின்னுமணி
பூணும் பிற உறுப்புப் பொன்னே அது புனையாக்
காணும் கண் ஒக்குமோ காண். “ -------சிவபிரகாசரின் நன்னெறி

இது வரை யாரும் விடை அனுப்பவில்லை .ஏன் என்று தெரியவில்லை

பதிவு பண்ணி அடுத்த நொடியே விடை அனுப்பும் அறிஞர்கள் நிறைந்த குழுவில் யாருக்கும் விடை தெரியவில்லை என்பதை என்னால்  நினைத்துப்பார்க்க முடியவில்லை

நான் வினா தொடுக்கும் பாணியில் ஏதேனும் மாற்றம் தேவையா  பிழை ஏதும் இருக்கிறதா என்பதைத் தெரிவித்தால் நன்றி உடையவனாக இருப்பேன்

ஞாயிற்றுக் கிழமை போட்ட ஆங்கில வினாவுக்கும் யாரும் விடை சொல்லவில்லை

உங்கள் கருத்துகளை எதிர் நோக்குகிறேன்

இறைவன் நாடினால் மீண்டும் தமிழில் சிந்திப்போம்

10032021wed

Sherfuddin P

No comments:

Post a Comment