அத்தாவின் எழுத்துக்கள்
சொல்லும் செயலும்
இலட்சிய மனிதன் யார் ?
இவனுக்கு லட்சணங்கள் பலவாறாக வகுக்கப் படுகின்றன . மனிதன் எப்படி இலட்சிய வாழ்வு வாழ வேண்டும் எனபதைப் போதிப்பதே உண்மையான நூல்களின் பயன்; மாந்தர் மனக்கோட்டம் அகற்றும் நூல் என்று நூலுக்கு இலக்கணம் கூறுகிறார்கள் தமிழ் நூல்களில் வள்ளுவரின் குறள் மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது ..அறநூல்கள் யாவும் எப்படி வாழ வேண்டும் – மனதினுள் பேதாபேதம் வஞ்சம் ,பொய் களவு ,சூது இதனையும் இத்தனையும் தவிர்க்க வேண்டும் ;
தன்னடக்கம் வேண்டும் என்றெல்லாம் கூறுகின்றன
நிதர்சனமாக செய்து காட்டிய வாழ்க்கை வரலாறு நபி பெருமான் சரித்திரம்
,அத்தனை நூல்களும் இயம்பியுள்ள இலட்சிய வாழ்வை கடைப்பிடித்து ஒழுகிய சிறந்த வாழ்வு
.நூல்களைப் படியுங்கள் என்று மட்டும் கூறாமல் , என்னைப்பாருங்கள் , என் நடை முறையைப் பாருங்கள், நீங்கள் அதைப்பின்பற்றி ஈடேற்றம் அடையுங்கள் என்று கூறக்கூடிய சிறந்த வாழ்வு
ஒன்றிரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்
உனக்கு ஒருவன் தீங்கு செய்தால் நீ என்ன செய்ய வேண்டும் ; ஒருவன் உன்னைக் கல்லால் அடித்து விட்டால் நீ என்ன செய்ய வேண்டும்: திருப்பி அவனைக் கல்லால் அடித்தால் அவன் மறுபடியும் இரண்டு முறை அடிப்பான் .,இது வளர்ந்து கொண்டே போகும் .
அவன் உன்னைக் கல்லால் அடிப்பது பிசகு, கயவாளித்தனம் , போக்கிரித் தனம்தானே ! அதே போக்கிரித்தனத்தை நீ திருப்பிச் செய்தால் நீ எப்படி அவனைக் காட்டிலும் நல்லவனாவாய் ; அவன் தவறு செய்கிறான் என்று குற்றம் சாட்ட உனக்கு என்ன உரிமை இருக்கிறது ,சரி அவன் மேல் கல்லெறிந்தால் உன் புண் ஆறி விடுகிறதா ? அதுவும் இல்லை சற்று சிந்தித்துப்பார் .அதில் உனக்குப் பயனும் இல்லை ,பெருமையும் அளிக்காது .உன் எதிரி அதனால்அடங்குவதாகவும இல்லை .பின்னர் அவன் குற்றத்தை எப்படித்தான் தண்டிப்பது ?
அதோ உன்னை அடித்த வேகத்தில் கண் மண் தெரியாமல் ஓடுகிறான் .கால் தவறிக்கீழே விழுந்து விட்டான் . நீ இப்போது என்ன நினைக்கிறாய். -வேண்டும் அந்தப்போக்கிரிக்கு என்னைத் துன்புறுத்தினான் . ஆண்டவன் அவனுக்குகூலி கொடுத்து விட்டான் என்று சந்தோஷப்படுவாய் அல்லவா ! அதுதான் தவறு ; அதனால் அவனுக்கு உணர்ச்சி வராது
. நீ என்ன செய்ய வேண்டும் – விரைந்தோடி அவனைத் தூக்கி மண்ணைத் தட்டிவிட்டு இரத்தம் வந்தால் உன் கைக்குட்டையை தண்ணீரில் நனைத்து காயங்களுக்குக் கட்டுப்போட வேண்டும் .கை கால்களைத்தடவி பிடிப்புகள் இருந்தால் எடுத்து விட்டு “எங்கேயப்பா வலிக்குது ? நீ எங்கு போக வேண்டும் ? உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறேன் . அல்லது எழுந்திருக்க முடியாவிட்டால் இதோ ஒருநொடியில் போய் வண்டி கொண்டு வருகிறேன்” என்று கூறினால் ,அப்போது அந்தக் கல்லெறிந்த உள்ளம் என்ன பாடு படும் . அந்தத் தண்டனைக்கு வேறு எந்தத் தண்டனை நிகராகும் ? சிந்தித்துப்பார். அவன் அதற்குப் பின் உன் மேலல்ல ,வேறுயார் மீதாவது கல்லெறிய நினைப்பானா ! எவவளவு மகத்தான சமூக சேவை புரிகிறாய் என்பதை சற்று உணர்ந்து பார் !
இதைத்தான் வள்ளுவர் கூறுகிறார் :
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்
இதோடு நிறுத்தினார .”அவ்வாறு இனியவை செய்யாமல் இன்னாவே நீயும் செய்தால் நீ என்ன யோக்கியன்’ என்றார்
“ இன்னா செய்தார்க்கு இனியவை செய்யாக்கால்
என்னபயததாம் சால்பு “
நீ என்ன சால்புடையவன்”
என்றார்
குறள் நெறியை நேரில் பார்க்கும் விதமாக நம் நபி பெருமான் நடந்து காண்பித்ததை பார்ப்போம் இன்னும் ஒரு சில எடுதுக்காட்டுகள்
ஒரு முறை தன்னைக் கொல்ல வந்த எதிரிக்கு நபிகள் விருந்தளித்தார்கள் .அவன் “இந்த முகமதுக்கு ஒன்றும் மிச்சம் வைக்கக் கூடாது “ என்று விலாப்புடைகத் தின்றான் . உண்ட சோர்வில் உறங்கி விட்டான் . வேண்டும் என்றே தான் படுத்த இடத்திலேயே மலஜலம் கழித்துவிட்டான் அதிகாலையில் நாயகம் அவர்கள் தங்கள் திருக்கரத்தால் அந்த அசுத்தங்களை அப்புறப் படுத்தி தவறிக் கிடந்த உடைவாளையும் எடுத்து அவன் கையில் கொடுத்தார்கள் .
அவன் மன மாற்றத்தைக் கூறவா வேண்டும் !
நபி பெருமானவர்கள் ஒரு தெரு வழிச் செல்லும்போது ஒரு பெண் வழக்கமாக அவர்கள் மீது குப்பையைக் கொட்டிக்கொண்டிருந்தாள். அந்த வழக்கம் இரண்டொரு நாள் நிறுத்தப்பட்டது . பெருமான் அவர்கள் அப்பெண் என்ன ஆனாள் என்று விசாரித்தார்கள் . அவள் நோய்வாய்ப்பட்டாள் என்று தெரிந்து அவளுக்கு வேண்டிய மருந்துகள் வாங்கிக் கொடுத்து குணமாகும் வரை கவனித்து வந்தார்கள்.
தாயிபிற்கு பிரச்சாரத்துக்கு சென்ற இடத்தில் அவர்களை பயமுறுத்திக் கல்லால் எரிந்து துரத்தினார்கள் .”போயும் போயும் ஆண்டவனுக்குத்தூதராக நீதான கிடைத்தாய் “என்றான் ஒருவன் ;”உன்னைத்தூதராகக் கொண்ட ஆண்டவன்தான் எப்படியிருப்பானோ “ என்றான் மற்றொருவன் . பெருமானவர்கள் ஓடினார்கள் .திருப்பாதங்களெல்லாம் இரத்தம் ..ஓடிப்போய்த் தன்னைத் துன்புறுத்திய அக்க்கயவர்களை சபிக்கவில்லை .
உஹுது யுத்தத்த்தில் விஷமிகள் பெருமானவர்களின் பல்லை உடைத்தார்கள் .அப்போதும் பெருமானவர்கள் “இறைவனே இவர்கள் அறியாமல் செய்த பிழை பொருத்தருள் “என்று பகைவனுக்கு இரங்கினார்கள்
ஆனால் தவறு செய்பவனுக்கெல்லாம் எப்பொழுதும் இப்படி நன்மை செய்ய வேண்டுமா ?
ஒருவன் சமூகத்தில் காவலனாக ,கலிபாவாக அர்சனாகப் பொறுப்பேற்ற காலத்து சமூகத் துரோகம் செய்யும் எவரையும் நெல் வயலிலே களை எடுப்பது போல் வேரோடு பிடுங்கி எடுத்துவிட வேண்டும் என்று கூறுகிறார் வள்ளுவர் .
பொறுப்பில் உள்ளவன் இளகிய மனதைக்க்காட்டினால் அவன் கோழையாகவும் , அவனே சமூகத் துரோகியாகவும் ஆகிவிடுகிறான்
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களை கட்டுதற்கு நேர்
இக்கொள்கையை நபி பெருமானவர்கள் எப்படி நடத்திகாட்டினார்கள் என்பதற்கு
மதினாவில் வாழ்ந்த ஒரு கூட்டதினாரின் முடிவு ஒரு நல்ல எடுத்துக்காட்டு
இந்த மதீனா வாசிகள்-- .நபி அவர்களிடம் அவர்களுடன் சேர்ந்து போரில் ஒத்துழைப்பதாக உடன்படிக்கை செய்து கொண்டார்கள் . ஆனால் அகழ்போரில் ஒப்பந்தத்திற்கு மாறாக விரோதிகளுடன் சேர்ந்து கொண்டார்கள் . இது ஒரு பெரும் சமூகத் துரோகம் .எனவே அன்பும் அருளும் இரக்கமும் உருவான திருநபி அவர்கள் சமூகக் காவலர் என்ற பொறுப்பில் அத்துரோகிகளை ஒழித்துக்கட்டினார்கள்.
கருணா மூர்த்தியின் செயல் இதுவா என்று சிலர் கருதலாம் .ஆனால் சமூகத் தலைவன் என்ற முறையில் சமூகத் துரோகிகளை அவ்வாறு வள்ளுவர் கருத்துப்போல் களைஎடுக்காவிட்டால் இவர்களே பொறுப்பை தன் சுய இரக்கத்திற்காகத் தட்டிக்கழித்து சமூகத்துக்கு துரோகம் செய்தவர்கள் ஆகின்றார்கள்
இப்படி சொல்லை செயலாக்கிக் காட்டிய பல சம்பவங்களை பெருமானார் வாழ்வில் காணலாம்
அரேபியாவில் பெண்கள் மலிந்து உயிருடன் புதைக்கட்டுப்படடுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தன் வயதுக்கு மூத்த விதவையை மணமுடித்து விதவை விவாகத்தின் அவசியத்தை ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் தானே நடத்திக் காட்டியுள்ள பெருமையை விதவா விவாகம் போற்றும் தற்கால சமூகத் தொண்டர்கள் நன்றாக உணர முடியும் .
எழுத்தாக்கம்
எங்கள் தந்தை ஹாஜி கா. பீர் முகமது பி .எஸ்சி
நகராட்சி ஆணையர் ஒய்வு
(சில சிறிய மாறுதல்கள் – பொருள் மாறாமல் செய்துள்ளேன்)
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
20032021sat
Sherfuddin P
No comments:
Post a Comment