Saturday, 27 March 2021

நினைவெல்லாம் காவியம்

 நினைவெல்லாம் காவியம்

(புத்தகம் பையிலே யின் தொடர்ச்சி )
பொள்ளாச்சி ஆசிரியர்கள் பற்றி நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன் ,. நல்ல செய்திகளை திரும்பச் சொல்வதில் தவறில்லை . பள்ளியிலும் சரி கல்லூரியிலும் சரி மிகத் திறமையான ஆசிரியர்கள் . திறமைக்கு மேல் பணியில் ஈடுபாடு, அர்ப்பணிப்பு
பள்ளி கல்லூரி இரண்டிலும் படித்ததால் நிறைய நண்பர்கள் பெயர் நினைவில் நிற்கிறது அ.வற்றில் சில
ரத்னகுமார்,- அடுத்த வீடு , காவல் துறை அதிகாரி மகன் ,--ராக்கியப்பன் ,-- ராமதாஸ்-- கோபால், --பாலு, யேசுதாஸ் இளங்கோ ,-- அப்புசாமி --,சிக்கந்தர் – பள்ளி மாணவர் தலைவர் – இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன் நின்றவர் --,உமாநாத் --முத்துக் கிருஷ்ணன், அப்துல் மஜீத், அப்துல் முஜீப்
பொள்ளாச்சி ந ம க (NGM) கல்லூரி -இங்கு புகுமுக வகுப்பு (பீ யூ சி)) , பட்டப்படிப்பு முதல் ஆண்டு படித்தேன் . புகுமுக வகுப்பில் இயற்கை அறிவியல் குழுவில் படித்தேன் . மருத்துவராகும் கனவு . நல்ல மதிப்பெண் எடுத்திருந்தேன் . ஆனால் வயது மூன்று மாதங்கள் குறைவு . எனவே கனவு கைகூடவில்லை . பொறிஇயல் படிப்புக்கு 15 ½ ஆண்டுகள் நிறைவுற்றிருக்க வேண்டும். ஆனால் மருத்துவத்துக்கு 15 ¾ வேண்டுமாம் . அது ஏன் என்பது புரியவில்லை ..
பள்ளிப்படிப்பு முழுதும் தமிழ் வழி . புகுமுக வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி . நிறைய மாணவர்கள் திணறிப்போனார்கள் . இறைவன் அருளால் இது ஒன்றும் பெரிய சிரமமாகத் தெரியவில்லை எனக்கு .
மருத்துவம் விண்ணப்பிக்க வழியில்லை .வேதியல் பட்டப்படிப்பில் சேர்ந்தேன் . ஏற்கனவே சொன்னது போல் மிக நல்ல ஆசிரியர்கள் , நல்ல ஆர்வத்துடன்
படித்தேன் .அரை நூற்றாண்டு கடந்தும் பல ஆசிரியரகள் நினைவில் நிற்கிறார்கள்
திருவாளர்கள் ஆட்கொண்டான்- முதல்வர் ,(வேதியல் துறை) குண்டுராவ் , கதிரேசன் இயற்பியல் – ஏ கே ஜி நாயர் , நம்பிசன் (ஆங்கிலம்) – சிற்பி பாலசுப்பிரமணியன் .., கேசவன் (தமிழ்) ,பொன்னுராஜ் , வசந்தகுமார் (தாவரவியல்), நமசிவாயம் -துணை முதல்வர் (கணிதம் ) – அப்துல் வாஹித் (வணிகம், தேசிய மாணவர் படை )
ஏ கே ஜி நாயரின் குரலில் இன்னும் Twelfth Night காதில் ஒலித்து வயோலா , மல்வோலியொவை கண் முன் நிறுத்துகிறது .
பார் சிறுத்தலின் படை பெருத்ததோ , புலி சேர்ந்து போகிய கல்லளை போல் என்ற சங்க சங்க காலப்பாடல் காட்சிகள் கண் முன்னே விரிகின்ற்ன் .
ஆங்கில இலக்கணம் கற்பிக்க ஒரு ஆசிரியர் வருவார், மிகத் தெளிவாக சொல்லித்தருவார். சற்று முதியவர் என்பதால் மாணவர்கள் அவரைப் பாடாய்ப் படுத்துவார்கள் , பாடம் கேட்க விருப்பம் இல்லாதவர்கள் வெளியே போய் விடலாம் என்று சொல்வர் .உடனே பலபேர் வெளியேறி விட்டு இன்னொரு வாசல் வழியே நுழைந்து மீண்டும் தொந்தரவு செய்வார்கள்
கல்வி ஆண்டு இடையில் அத்தாவுக்கு இட மாற்றம் – வேலூர் , பின்பு நெல்லைக்கு .
முதலாம் ஆண்டு நிறைவுறும்வரை பொள்ளாச்சியில் படித்தேன் . தங்க அறைக்கும் உணவுக்கும் அத்தா ஏற்பாடு செய்திருந்ததால் பொழுது இனிமையாகக் கழிந்தது . பட்டபடிப்பு படிக்கையில் நாட்டில் மிகக் கடுமையான உணவுப்பற்றாக்குறை . அப்போது நாட்டின் தலைமை அமைச்சர் திரு லால் பகதூர் சாஸ்த்ரி அவர்கள் திங்கட் கிழமை இரவு உணவைத் தியாகம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார் .கல்லூரி விடுதி மாணவர்கள் இதை சிறிதும் விரும்பவில்லை . ஆனால் விடுதியில் அன்று இரவு உணவு கிடைக்காது .அதற்காகர ரொட்டி (பிரட் ) பிஸ்கட் பழம் வாங்கி வைத்துக்கொள்வார்கள் . ஒரு வேளை உணவைத் தவிர்ப்பது அவ்வளவு சிரமமா என்ற எண்ணம் தோன்றும்
நெல்லை பேட்டை ம தி தா கல்லூரியில் பட்டபடிப்பு இரண்டு, மூன்றாம் ஆண்டு . பொள்ளாச்சி கல்லூரி சென்னைப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தது . நெல்லை – மதுரை பல்கலைக்கழகம். நல்லவேளை அப்போதுதான் மதுரைப் பல்கலைக்கழகம் துவக்கபட்டிருந்ததால் பாடத்திட்டம் , பாட நூல்களில் மாறுதல் ஒன்றும் இல்லை . இருந்தாலும் பொள்ளாச்சி , நெல்லையை ஒப்பிட்டுப்பார்க்.காமல் இருகமுடியவில்லை குறிப்பாக பரிசோதனைக்கூடம் இருந்தாலும் முடிந்தவரை நன்றாகப் படித்து பட்டமும் பெற்று விட்டேன்
இன்னுமொரு சிறிய குழப்பம் . பொள்ளாச்சியில் வேதியலுக்கு துணைப்பாடமாக இயற்பியலும் தாவரவியலும் படித்தேன் . ஆனால் நெல்லையில் இயற்பியலும் கணிதமும் துணைப்பாடங்கள் . நல்லவேளை விலங்கியல் பட்டப்படிப்புக்கு. துணைப்பாடமாக தாவரவியல் இருந்தது எனவே அந்த வகுப்புக்கு விலங்கியல் மாணவர்களோடு சேர்ந்து கொள்ள கல்லூரி அனுமதி கொடுத்தது
அப்படி ஒருநாள் தாவரவியல் வகுப்பில் இருக்கும்போது கல்லூரி அலுவலகத்திலிருந்து என்னை அழைக்க வந்த பணியாளரிடம் அப்படி இங்கு யாரும் இல்லை என்று சொல்லிட்டார் ஆசிரியர். நான்தான் என்று நான் எழுந்து நிற்க ஆசிரியர் முகத்தில் குழப்பம் கலந்த வியப்பு .இப்படி ஒரு பெயர் வருகைப் பதிவேட்டில் இலலையே என்றார் .நான் ஒரு சிறிய விளக்கம் அளித்தேன் . அதன்பிறகு ஆசிரியர் தினமும் என் பெயரை எழுதுவார் . அலுவலகத்தில் அதை நீக்கி விடுவார்கள்
பல்கலைக்கழக பட்டச் சான்றிதழில் நான் படிக்காத கணிதம் படித்ததாகக் குறிப்பிட்டிருப்பது இந்தக் குழப்பத்தின் உச்சம் .
பேட்டை கல்லூரி ஆசிரியர்கள்
திருவாளர்கள் சோமசுந்தரம் (முதல்வர் – கணிதம் ) - அருணாச்சலம்.துணை முதல்வர் (தமிழ்) – ராமலிங்கம் (இயற்பியல் )-
எஸ் பாலசுப்ரமணியன் (சுருக்கமாக Sb – antimony ஆண்டிமணி என்ற செல்லப்பெயர்) வேதியல் ,இவர் என்னை பீர் என்றுதான் அழைப்பார் .வகுப்பில் வினாக்கள் என்னிடமே கேட்பார் .உடனே விடை சொல்லிவிடுவேன் , கல்யாண சுந்தரம் வேதியல் (முதல்வர் மகன் )
வகுப்பு, கல்லூரித் தோழர்கள்
ராமகோபால் –தொடரியில் வருவார் ,நன்றாகப் பாடுவார் .இவர் ராகம் தாளத்துடன் பாடிய- மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன “ இன்றும் காதில் ஒலிக்கிறது நன்றாகப் படிப்பார் . அடிக்கடி வகுப்பு நேரத்தில் திரைப்படம் பார்க்கப் போய்விடுவார் . ஒருமுறை அவரோடு சேர்ந்து வேறு சிலரும் சென்றார்கள் . சிலர் பலராகி வகுப்பே காலியாகி விட்டது . பாப்புலர் அரங்கில் சுபதினம் என்று நினைவு
தெய்வு இப்ராஹீம் , சாமிதுரை, வேலுசாமி, குத்தாலிங்கம் , குளத்து மணி , இசுமாயில் ,சித்திக் இவர்கள் என் வகுப்பு . சுந்தரம் என் வகுப்பு – பின் வங்கியிலும் நட்பு தொடர்ந்தது
கணிதம் படித்த கனகசபாபதி , அப்துல் காதர் இருவரும் நெருங்கிய நண்பர்கள் . அப்துல் காதர் – குடும்ப நண்பராகி வங்கியிலும் நட்பு தொடர்ந்தது . நாங்கள் புனித ஹஜ் பயணம் போகையில் வேறு குழுவில் அவரும் வந்திருந்தார்
என் பையன் திருமணம் தொடர்பாக பொள்ளாச்சி போனபோது படித்த கல்லூரிக்குப் போய் வந்தேன் . முதலவர் மிக அன்பாக வரவேற்றார் .
சில ஆண்டுகளுக்கு முன் உறவினர் வீட்டுத் திருமணத்தில் கலந்து கொள்ள நெல்லை சென்றபோது ஒரு நாள் தங்கி நான் படித்த கல்லூரி , வாழ்ந்த வீடுகள், பணி புரிந்த வங்கிக்கிளைகள் எல்லாம் போய் வந்தேன் .கல்லூரி முதல்வரும், வேதியல் துறைத் தலைவரும் மிக அன்பாக வரவேற்றார்கள் . துறைத்தலைவர் கவிதா அவர் வீட்டுக்கு வந்த விருந்தாளி போல் என்னை உபசரித்து மதிய உணவு சாப்பிடச் சொல்லி மிகவும் வற்புறுத்தினார். உறவினர் வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொல்லி வந்து விட்டேன் . .அங்கு இருந்த சில மணி நேரங்கள் மனதுக்கு இதமாகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தது .இளமையாக உணர்ந்தேன்
பட்டம் பெற்று ஒரு ஆண்டு கடந்து காரைக்குடி செக்ரி(CECRI)யில் பயிற்சிப்பணி . அங்கு ஜெர்மன் மொழி வகுப்பில் சேர்ந்தேன் அதோடு வேதியல் முதுகலைப் பட்டத்திற்கு சமமான பாட்டர் (Potter) தேர்வுக்கும் படித்தேன் .சோதனைக் கூடங்கள், பெரிய நூலகம் என செக்ரி கல்லூரி வாழ்வின் நீட்சி போல தோன்றி மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது .எல்லாம் ஒரு மூன்று மாதம்தான் பிறகு வங்கிப்பணி
பணிச்சுமையின் அழுத்தத்தில் குமுதம் விகடனே மறந்து விட்டது . துறையூரில் பணிபுரிந்த போது தொடர் கல்வி பீ ஜி எல் படிப்பில் சேர்ந்தேன். ,அட்டையில்லாத பாட நூல்கள் , தெளிவில்லாத அச்சு , மலிந்த பிழைகள் – படிக்கத் தூண்டுவதாய் இல்லை
மங்கலப்பட்டியில் கிளை மேலாளர் பொறுப்பு. அந்த சிற்றூர் கிளையில் ஒருவர் ACS , இன்னொருவர் ICWA படித்து நிறைவு செய்யும் நிலையில் இருந்தது பணிச்சுமை தாண்டி என் படிப்பு ஆர்வத்தைத் தூண்டியது .இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் (IGNOU ) மேலாண்மை முதுநிலைப் பட்டம் (MBA ) படிக்கப் பதிவு செய்தேன் . பாட நூல்கள் அழகான வடிவமைப்பில் தெளிவான அச்சுடன் விளக்கமாக சுருக்கமாக இருந்தான... கோவை கல்லூரி ஒன்றில் தொடர்பு வகுப்பு , சிறிய அளவில் பல தேர்வுகள் என எல்லாமே முறையாக இருந்தன . மொத்தம் உள்ள 21 தேர்வுகளில் ஏழில் தேர்ச்சி பெற்று மேலாண்மைப் பட்டயம் பெற்றேன் . அதற்கு மேல் தொடர முடியவில்லை ,
ஆப்பிள் நிறுவனத்தின் கணினி பட்டயமும் படித்துத் தேர்ச்சி பெற்றேன். அதற்கு தொடர்பு வகுப்பு ஈரோட்டில் .
பல ஆண்டுளுக்குப் பின் கடலூரில் பணி புரிந்த போது ஆழிப்பேரலை , வெள்ளம் – இதன் தாக்கத்தால் நிறைய(NGO) அரசு சாரா அமைப்புகள் .தொடர்பு உண்டானது , அதனால் அரசு சாரா அமைப்புகள் மேலாண்மையில் முது நிலைப்பட்டயம் அண்ணாமலைப் பல்கலை கழக தொடர் கல்வியில் படித்துத் தேறினேன்
அடுத்து காரைக்கால் –
தேடி வந்த மூலிகை காலில் பட்டது போல்- வெகு நாளாக மனதில் ஒரு எண்ணம் –அக்கு பஞ்சர் வைத்தியம் படிக்க வேண்டும் என்று . காரைக்கலில் மிக எளிதாக அந்த வாய்ப்பு கிடைத்தது இறைவன் அருள் ஆசிரியர் காதர் அவர்கள் தலைமையில் மிகச் சிறந்த வல்லுநர் குழு. .எல்லோரும் ஒரு அர்ப்பணிப்புடன் வேறு மருத்துவமே உலகில் கிடையாது என்பது போல் அக்கு பஞ்சர் மேல் ஒரு ஈடுபாடு .திரு மோகன் ராஜ் குறிபிடத் தக்கவர் . . குடும்ப நண்பராக மாறிய காதர் மூலிகை வைத்தியம்,சித்த மருத்துவம் ஓமியோபதி என பல துறை வல்லுநர்
பணியிலிருந்து ஓய்வு .
நெடு நாளாகப் படிக்க விரும்பிய யோகா முதுநிலைப் பட்டம் ( முதலில் முது நிலைப் பட்டயம் , அடுத்த ஆண்டு முது நிலை பட்டம் ) நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன் . அண்ணாமலையில் எல்லாம் ஒரு ஒழுங்கு முறையில் இருக்கும் . ஆண்டுக்கு இரண்டு தொடர்பு வகுப்புகள் இருக்கும் . காலை ஆறு மணிக்கு வகுப்பு . சற்று தாமதாமக வருபவர்களை ஒரு மாதிரி மறைமுகமாக வசை பாடுவர்கள் .மற்றபடி ஆசிரியர்கள் பதி. நடராஜன் மிகவும் நட்புடன் பழகுவார்கள்
ஜம்மு , கர்நாடக, கேரளா ஆந்திரா என பலமாநில மாணவர்கள் – அதில் ஆங்கில மருத்துவர்கள் , மாற்று முறை மருத்தவர்கள் அரசு உயர் ஊழியர்கள் , பாதுகாப்பு படை அதிகாரிகள் என பல வகை .ஒரு குட்டி இந்தியாவைப்பார்க்கலாம்
ஒரு ஈடுபாட்டோடு படித்து நல்ல மதிப்பெண்கள் பெற்று முதுநிலைப் பட்டயமும் முதுநிலை பட்டமும் பெற்றேன் .தொடர்ந்து படித்து முனைவர் ஆக வேண்டும் எண்பது எண்ணம் .சில பல காரணங்களால் அது நிறைவேறவில்லை
அடுத்து வடபழனியில் எங்கள் மகள் வீட்டுக்கு அருகில் இருந்த தமிழ் நாடு விளையாட்டுப் பல்கலைக் கழகத்தின் படிப்பு மையத்தை அணுகி Counselling முது நிலைபட்டப்படிப்பு பற்றி கேட்டேன் .இதுவும் நான் வெகு நாளாகக் கனவு கண்ட படிப்பு . ஆனால் எபடியோ பேசி என்னை வர்மா முதுநிலைப் பட்டயப் படிப்பில் சேர்த்து விட்டார் .அதில் எனக்கு அதிக ஈடுபாடு இல்லை . இருந்தாலும் அதை நிறைவு செய்து அடுத்து முதுநிலைப்பட்டமும் நல்ல முறையில் படித்து நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்
தொடர்ந்து அதே விளயாட்டுப் பல். கழகத்தில் பஞ்ச கர்மா ( ஆயுர்வேதத்தின் ஒரு பகுதி ) .முது நிலைப் பட்டயம் , .நினைவுத் திறன் மேம்பாட்டில் முது நிலைப்பட்டயம் , முது நிலைப்பட்டமும் பெற்றேன் இப்படி ஐந்து ஆண்டுகள் படித்த விளயாட்டுப் பல். கழகம் பற்றி ஒரு சில வரிகள்
இந்தியாவில் முதல் விளையாட்டுப் பல்.கழகம் என்ற சிறப்பு ..தமிழக அரசு நிறுவனம் எனவே மிக எளிதான கட்டணங்கள் .ஆனால் ,ஆனால் – பல , மிகப்பல குறைபாடுகள் . முதலில் எளிதில் அணுக முடியாத இடம் ..சொந்த வண்டி இல்லாவிட்டால் மிகவும் சிரமம் வண்டலூரிலிருந்து உள்ளே பத்துப் பதினைந்து கி மி தொலைவு .பெரிய அளவில் பேருந்து வசதி இல்லை . .அதுபோல் தொலைபேசியிலும் அணுக முடியாது .துவங்கி பல ஆண்டுகளாக துணை வேந்தர் , பதிவாளர் பதவிகள் நிரப்பப் படவில்லை .அலுவலகப் பணியாளர்களும் தற்காலிக நியமனத்தில் .ஒருநாளில் ஒரு சில மணி நேரமே தொலைபேசி வேலை செய்யும் .அதற்குள் நமக்கு வேண்டிய நபர் தொடர்பு கிடைப்பது மிக அரிது .பெரும்பாலும் பாட நூலகள் அனுப்ப மாட்டார்கள் . நாம் நேரில் போய் விரலி நினைவகத்தில் (Pen Drive) பதிந்து கொண்டு அச்சு எடுத்துக்கொள்ள வேண்டும்
மாணவர் விடுதி - சொல்லும்படி இருக்காது . குளியல் அறைகள் – பெரும்பாலும் கதவு, வாளி , குவளை இருக்காது
இந்த இடர் பாடுளைத் தாண்டி சற்று சிரமப்பட்டுப் படித்தால் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடையும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி ஆனால் அதையும் மட்டுப்படுத்தும் மதிப்பெண், பட்டச் சான்றிதழ்கள் பெறுவதில் ஏற்படும் பல்லாண்டு கால தாமதம் ,
இப்போது துணை வேந்தர், பதிவாளர் நியமித்து விட்டர்கள் . இருந்தாலும் .பல் ஆண்டுகளுக்கு முன் நான் நிறைவு செய்த மூன்று படிப்புகளுக்கு இது வரை மதிப்பெண், பட்டச் சான்றிதழ் கிடைக்கவில்லை
இதற்கிடையில் தமிழ் நாடு திறந்த நிலை ப க கழகத்தில் பெரிய போராட்ம் செய்து இசுலாமியப் பட்டப் படிப்பில் சேர்ந்து ஒரு ஆண்டு படித்தேன் முதல் ஆண்டுத் தேர்வில் அரபு மொழி தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் அரபு மொழிப் புலமை பெற்ற ஒருவர் உள்ளூரிலேயே இருக்கிறார் .எனக்கு நன்றாகத் தெரிந்தவர் . இருந்தும் எனக்கு சொல்லித் தரும் மனப்பாங்கை இறைவன் அவருக்கு வழங்கவில்லை . எனவே அந்தப் படிப்பை தொடராமல் விட்டுவிட்டேன்
பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்த படிப்பில் ஒரு சில நிகழ்வுகளை இங்கே குறிப்பிடுகிறேன்
அண்ணாமலை – யோகா முது நிலை பட்டத் தேர்வு நேரத்தில் உடல் நலக்குறைவு -தேர்வு எழுத முடியுமா என்ற நிலை .மிக நன்றாகப் படித்திருந்ததால் தேர்வை விடவும் மனமில்லை
.பொதுவாக நான் படிப்பதில் என் குடும்பத்தாருக்கு பெரிய விருப்பம கிடையாது . வயதான காலத்தில் ஏன் இவ்வளவு சிரமப்பட வேணடும் என்ற ஆதங்கம்தான் .
ஆனல் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நேரத்தில் என் குடும்பத்தார் கொடுத்த ஆதரவும் ஒத்துழைப்பும் மறக்க முடியாத ஓன்று
என் துணைவி, விடுமுறைக்கு வந்த மகள் பேத்திகள் எல்லோரும் என் கூட வந்தார்கள் . ப க கழக விருந்தினர் விடுதியில் வசதியான குளிர் அறை கிடைத்தது . பெரும்பாலும் உணவைத் துறந்து தேர்வை நல்ல முறையில் எழுதி மிக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன்
அடுத்து நினைவுத்திறன் மேம்பாட்டு முது நிலை பட்டத் தேர்வு – கடும் கோடை. ,மருமகன் மருத்துவ மனையில் .- துணைக்கு மகளுடன் நானும் பலநாட்கள தங்கல். ரமலான் நோன்பு நாட்கள் . தேர்வு எழுத முடியுமா என்ற நிலை ..இறைவனருளால் தேர்வுக்கு இரண்டு நாள் முன்பு மருமகன் வீடு திரும்ப, நான் ப க கழகத்தின் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் மைத்துனர் வீட்டில் தங்கி தேர்வு எழுதினேன் .தினமும் மைத்துனர் அல்லது அவர் மகன் தேர்வு மையத்தில் இறக்கி விட்டு விட்டு திரும்ப அழைத்துச் சென்று விடுவார்கள் .இவ்வளவு வசதிகளையும் தாண்டி தேர்வு நேரம் இரண்டு மணி முதல் ஐந்து மணி வரை என்பதோடு ,ரமலான் நோன்பின் இறுதிப்பகுதி ஒரு கிறக்கம் , மயக்கம் . இறைவன் அருளால் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றேன் . மைத்துனர் குடும்பத்துக்கு நன்றி. இறைவன் அருளால் ரமலான் நோன்பையும் முழுமையாக நிறைவேற்றினேன்
.” நீ எப்போதுமே சிரமப்பட்டுப் படித்ததில்லை “ என்று ஒரு கருத்து என் பள்ளிப்படிப்பு பற்றிய புத்தகம் பையிலே என்ற பதிவுக்கு வந்தது ( சகோ அஜ்மல் கான்) . இது பாராட்டா வஞ்சப் புகழ்ச்சியா ? தெரியவில்லை .
பள்ளி கல்லூரிப் படிப்பில் எப்படியோ நினைவில்லை .
ஆனால் பணி ஓய்வுக்குப் பின் படித்த ஒவ்வொரு படிப்பும் சிரத்தையுடன் முழு முயற்சி செய்துதான் படித்தேன் . பாட நூல்களை முழுமையாக ஒரு முறை படித்து தேவையான இடங்களில் அடிக்கோடு இட்டு விடுவேன் இரண்டு மூன்று பழைய வினாத்தாள்களை படித்தால் வினாத்தாள் இப்படிதான் இருக்கும் என்ற pattern தெரிந்து விடும் . ஒவ்வொரு தாளுக்கும் பத்துப்பன்னிரெண்டு வினாக்கள் தேர்வு செய்து படித்து எழுதிப்பார்த்து விடுவேன்
,.Assignments எல்லாம் எழுதி முகப்புத்தாள் கண்ணினியில் தட்டச்சுச் செய்து ப க கழகத்தின் சின்னத்தையும் அச்சிட்டுவிடுவேன் . தேர்வு எழுதும்போது வெள்ளைத்தாளின் அடியில் ஒரு கோடிட்ட தாளை வைத்து எழுதுவேன் .என் கையெழுத்து மிக மிக மிக மோசம் ..வரிகளும் நேராக வராது . அதை சரி செய்யத்தான் இதெல்லாம் .இப்போது தேர்வு எழுத கோடிட்ட தாளை கொடுத்து விடுகிறார்கள்
யோகா முது நிலைப்பட்டம் பெற ஆய்வுக்கட்டுரை ஓன்று சமர்ப்பிக்கவேண்டும். குறுக்கு வழியில் போகாமல் நான் சொந்தமாக் எழுதி இசுலாமும் யோகாவும் என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தேன் . நல்ல பாராட்டுப் பெற்றது. கணினிப் பயன் பாட்டில் பெரிதும் உதவியது என் மகன்
பணி ஒய்வுப்படிப்பில் கிடைத்த நட்புகள் சில- அசார் , சற்குணன் , மரு.சந்திர சேகரன், முபாரக், முரளி ,,விசுவநாதன்
அசார் மறக்காமல் தன் திருமணத்துக்கு நேரில் வந்து அழைத்தார் ;பாண்டியில் மணவிழாவில் கலந்து கொண்டேன்
முரளி – சென்னை அசோக் நகரில் வீடு .பஞ்சகர்மா தொடர்பு வகுப்பு சென்னைப்புற நகர் பகுதியில் . என்னை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று காலை சிற்றுண்டி கொடுத்து தொடர்பு வகுப்புக்குப் போக வண்டியும் ஏற்பாடு செய்து கொடுத்தார் ,இதற்கெலாம் மேல் எனக்கும் மதிய உணவு கொண்டு வந்தார் .பின்பு ஒரு முறை தன் வீட்டு மரத்தில் விளைந்த மாங்காய் நிறையக் கொடுத்து விட்டார்
மரு சந்திர சேகர் கடலூரில் மாவட்ட சித்தா மருத்துவ அதிகாரியாக இருந்து இப்போது ஒய்வு பெற்று பண்ருட்டியில் இருக்கிறார் . இன்னும் தொடர்பில் இருக்கிறார்
நாற்பது ஆண்டுகளுக்கு முன் திருச்சியில் என்னுடன் வங்கியில் பணி புரிந்த விசுவநாதனை ஒரு தொடர்பு வகுப்பில் சந்தித்தது ஒரு இனிய மகிழ்வு .தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்
சற்குணன் கடலூரில் ஆங்கில பேச்சு வகுப்பு நடத்துகிறார் . இன்று தற்செயலாக அவரை ஒரு கடையில் சந்தித்தேன்
என்னிடம் பலரும் கேட்பது எதற்காக இப்படி படித்து கொண்டே போகிறாய் ? படித்த படிப்பு வீணாகமல் வைத்தியம் பார்க்கலாமே .
எனக்குப் படிப்பது பிடிக்கிறது . படித்து எழுத இறைவன் அருள் கிடைக்கிறது, பிறகு ஏன் படிக்கக்கூதாது ! இதுதான் என் மறுமொழி .காசு வாங்காமல் வைத்தியம் பார்ப்பது தவறு என்கிறார்கள் .இதை வைத்து சம்பாதிக்க மனம் வரவில்லை
வேறு பெரிய காரணம் எதுவும் இல்லை .
.படிப்பு நிறைவு பெற்றுவிட்டதா என்றால் இல்லை . வாழ்நாள் முழுவதும் படிக்க , மாணவனாக இருக்கவே எனக்கு விருப்பம் ..இறைவன் நாடினால் இன்னும் இசுலாமியப் படிப்பு இளநிலை , முது நிலை , உளவியல் முது நிலை எல்லாம் படிக்க எண்ணம் .
கனவு நனவாகுமா ,எண்ணம் நிறைவேறுமா ?எல்லாம் அவன் நாட்டம்
இந்தப்பதிவு சற்று நீளமாகத் தோன்றுகிறது .. காவியம் நீளமாகத்தானே இருக்கும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
27032020sat
Sherfuddin P

27032023 FB Mem Sharing

[16:19, 27/03/2023] CB retd Ganesa subramaniam: நினைவெல்லாம் காவியம்........ தங்கள் பதிவு கள்.ஒரு பெட்டகம் .....பள்ளிப் பருவத்தில் இருந்து இன்று வரை தங்களின் பட்டறிவு,அனுபவம், இவைகளை வெளிப்படுத்தும் தங்கள். வாக்கியங்கள் தொடர் பேராற்று நடையைப் போன்று உங்கள் உள்ள உணர்வை படிப்போற்க்கு அதே உணர்வோடு காட்சி படுத்தும் விதமாக அழகுபட அருமையுடன் அமைந்து உள்ளது.படிப்பு,பணி இரண்டும் பரவலாக வெவ்வேறு இடங்களில், சூழலில் ,பெரும் நட்புகளோடு அமைந்தது தங்களின் விசாலமான அறிவு,அனுபவங்களுக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பங்கள்.. தங்களின் அத்தா பணியிட மாறுதல்களை சாதாரணமாக எடுத்துக் கொண்டு வலம் வந்தது போன்றே தாங்களும் மற்றவர்களோடு ஒப்பிடுகையில், அதிக இட மாற்றம் எதிர்கொண்டு பயணங்கள் கொண்டுள்ளீர்கள். அத்தா வே வழிகாட்டி..,.. எழுத்அழகுபட எடுத்துயியம்பும் [16:21, 27/03/2023] CB retd Ganesa subramaniam: எழுத்துக்கள் இலக்கியமே. நயம் பட உரை என்பதற்கேற்ப படிக்க ஆவலாய் இருந்தது. வாழ்த்துகள்.


Soamsekar CBretd
ஆச்சரியமூட்டும் செய்திகள் அசாத்திய நினைவுத் திறன் கோர்வையாய் விவரிக்கும் பாங்கு அருமையான எழுத்தாளுமை தொண்டு தொடரட்டும்


ARV CB retd
Super Sir

Gulam Sathik KKL
மாஷா அல்லாஹ் அருமையான பதிவு, என்ன ஒரு நினைவாற்றல் ...

Bangaru CB retd
Very nice sir. Great achievement for your untired efforts


.
...
.
May be an image of sky, twilight, body of water and nature
Like
Comment
Share

No comments:

Post a Comment