என்றும் மாறா இளமை
10072023 திங்கள் (கா)
யோகா, பஞ்ச கர்மா, வர்மா , அக்கு பஞ்சர்,,நினைவுத்திறன் போன்ற பல படிப்புகள் படித்துத் தேறி பட்டம் பெற்றிருந்தாலும் என்னை மருத்துவர் என்று சொல்லிக் கொள்ள முடியாது, சொல்லவும் கூடாது
அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
குறிப்பாக மூத்த குடிமக்கள் நலம் பற்றி
முதலில் யார் மூத்த குடி, அதற்கு என்ன அடையாளம் ?
பொதுவாக முதுமையின் முதல் அறிகுறி செவிப்புலன் மங்குதல் என்பார்கள்
ஆனால் காதுக் கருவிகளுக்கு வரும் விளம்பரங்களைப் பார்த்தால் இள வயதில் கண்ணாடி போல் அதுவும் இயல்பான ஒன்றாகிவிடும் போலிருக்கிறது
நரை, முடி உதிர்தல் –கேட்கவே வேண்டாம்
எனவே இவை எல்லாம் முதுமையின் அறிகுறிகள் இல்லை என்பது தெளிவாகிறது
பிறகு எது முதுமையைத் தீர்மானிக்கிறது ?
70 வயது கடந்தும் நல்ல உடல் நலத்துடன் மிதி வண்டி ஓட்டிக்கொண்டு, நடந்து திரியும் இளைஞர் களைப் பார்க்கிறோம்
இன்னொரு பக்கம் 40 வயதிலேயே நடக்க, உட்கார எழுந்திருக்க சிரமப் படுபவர்களையும் பார்க்கிறோம்
இதை எல்லாம் பார்க்கும்போது வயது, முதுமையைத் தீர்மானிப்பது மனம்தானோ எனத் தோன்றுகிறது
கண்ணியமான , அழகான முதுமை Ageing gracefully என்ற சொற்களை அடிக்கடி பார்க்கிறோம்
இன்னொரு பக்கம் முதுமை வந்து விட்டதா தனியே நடக்காதீர்கள், மாடிப்படி ஏறா தீர்கள்,எந்த வண்டியும் ஒட்டாதீர்கள் , தனியே பயணம் செய்யாதீர்கள் என்ரு எதிர்மறைக் கருத்துக்களைக் கூறி அச்சமூட்டும் பதிவுகள் நிறைய வருகின்றன
நல்ல எண்ணத்தில்தான் இவற்றை வெளியிடுகிறார்கள் ஆனால் ஒவ்வொரு மனிதனும் தனி, அவன் உடல் நலம் மன நலம் பற்றி யாரும் பொதுக் கருத்து ,சொல்ல முடியாது
உங்களை நீங்களே ஆய்வு செய்து கொள்ளுங்கள்
என்னவாக இருக்கவேண்டும், எப்படி இருக்கவேண்டும் என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்
பணி ஒய்வு என்பது ஒரு வரம்
பெரும்பாலும் சொந்த வீடு இருக்கும், ஓய்வூதியம் இருந்தால் பணப்பிரச்சினை இருக்காது
மனதைத் தெளிவாக வைத்துக்கொண்டால் உடல் நலமாக இருக்கும்
அலுவலத்தில் கழித்த ஏழெட்டு மணி நேரத்தை எப்படி நிரப்புவது என்பது என்ற சிந்தனை பலருக்கும் ஒரு சுமையாகி விடுகிறது
உலகம் எவ்வளவு அழகானது !
இயற்கை அழகை , -- காலைச் சூரியனை , மாலை செவ்வானத்தை , இரவில் கண் சிமிட்டும் விண்மீன்களை
அக்கம் பக்கம் உள்ள செடி கொடிகளை , வண்ண மலர்களை பறவைகளைப்-- பார்த்து ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
பதவியின் சுமையால் பல உறவுகள், நட்புகள் விலகிப் போயிருக்கும்
அவற்றை புதுப்பித்துக் கொள்ளுங்கள்
அக்கம் பக்கம் உள்ளவர்களோடு நல்ல நட்பை உண்டாகிக் கொள்ளுங்கள்
சின்னஞ்சிறு குழந்தைகள் , உங்களை விட மிக வயது முதிர்ந்தவர்களிடம் பேசிப் பழகுங்கள்
பக்தி ஆன்மீகத்தில் பற்று இருந்தால் அதை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள்
நிறையப் படியுங்கள்
முடிந்தால் தொலை தூரக் கல்வி நிருவனங்களில் சேர்ந்து படியுங்கள்
உங்கள் மனது மாணவப் பருவத்துக்கு சிறகடித்து சென்று உங்களை இளமை ஆக்கி விடும்
முடிந்தால் முடிந்த அளவு சமூக சேவையில் மனதை செலுத்துங்கள் .
முடிந்த அளவு தான தருமங்கள் செய்யுங்கள்
எல்லாவ்ற்றிற்கும் மேலாக உங்கள் குடும்ப உறவை மேம்படுத்தி வலுவாக்கிக் கொள்ளுங்கள்
துணைவியிடம் நிறையப் பேசுங்கள்
இருவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள்
இது உங்களுக்கு மீண்டும் ஒரு வசந்தம் , தேனிலவு
உங்கள் குழந்தைகளுக்கு பேச நேரம் அதிகம் இருக்காது
தினமும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவர்களிடம் பேசுங்கள்
இசையை ரசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
காட்சி ஊடகங்களை தவிர்க்க ,குறைத்துக்கொள்ளமுயற்சி செய்யுங்கள்
உணவு தூக்கம் இதெல்லாம் முழுக்க முழுக்க உங்கள் விருப்பம் .
காலையில் அசதியாக இருந்தால் கொஞ்ச நேரம் அதிகமாகத் தூங்கலாம்
படம் வரைதல், வண்ணம் தீட்டுதல் கதை கட்டுரை கவிதை எழுதுதல் தோட்ட வேலை – இவை creative மனதை வளர்க்கும்
உடல் பயிற்சி –
எனக்குத் தெரிந்து நடை ஒரு மிகச் சிறந்த பயிற்சி
வாழ்வின் ஒரு இயல்பான் அங்கமாக இருந்த நடை இப்போது ஒரு சிறப்புப் பயற்சி ஆகி விட்டது
சிறப்பு உடை, சிறப்புக் காலணி , கைப்பேசியில் சிறப்பு செயலி , சிறப்புப் பூங்கா , அங்கு போக வர வண்டிப் பயணம் என்று செலவு மிக்க ஒரு பயிற்சி ஆகி விட்டது
இந்த சிறப்பு நடை போக வீட்டுக்குள்ளேயே நிறைய நடக்கலாம்
சாப்பிட்ட தட்டு ,குடித்த குவளைஎல்லாம் அப்படியே வைத்து விடாம்ல் கழுவி உரிய இடத்தில் வைக்கலாம்
நம் பள்ளிப் பருவத்தில் பயின்ற எளிய உடல் பயற்சிகளை செய்து வரலாம்
நோய் நொடிகள், துன்பங்கள் துயரங்கள் வராமல் இருக்காது
வளையாமல் நதிகள் இல்லை வலிக்காமல் வாழ்க்கை இல்லை
வாழத்தான் வாழ்க்கை வீழ்வதற்கு அல்ல
பதிவு சற்று நீளமாகி விட்டது
சொன்னவை பெரும்பாலும் என் அனுபவங்கள் அல்லது எங்கள் அத்தாவைப் பார்த்துக் கற்றுக்கொள்ள விரும்பி செயல் படுத்த முடியாமல் போனவை
சலிப்புத் தட்டுமுன் எனக்குப் பிடித்த கண்ணதாசனின் வரிகளோடு நிறைவு செய்கிறேன்
“அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே
..
கலையில் கனிந்து வரும்
காதலர் களிப்பில் கலந்து வரும்
மலரில் மலர்ந்து வரும்
அழகு வாழ்வில் நிறைந்து வரும்
அதை நினைந்து நினைந்து வரும்
நெஞ்சில் மிதந்து மிதந்து வரும்
சுகம் வளர்ந்து வளர்ந்து வரும்
அந்த வாழ்க்கை வாழ்வதற்க
அலைகள் இருந்தாலும்
படகு ஆடி தவழ்ந்து வரும்
துயரம் இருந்தாலும்
வாழ்வில் சுகமும் இணைந்து வரும்
அந்த சுகத்தில் மயங்கி விடு
இன்ப சுவையில் உறங்கிவிடு
இந்த உலகை மறந்து விடு
என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
10072023 திங்கள் (கா)
சர்புதீன் பீ
No comments:
Post a Comment