Wednesday, 30 August 2023

நினைவில் நிற்பவர்கள்

 




நினைவில் நிற்பவர்கள்

30082023 புதன்
வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கிறோம் பலரை
உடன் பணிபுரிவோர், வங்கி வாடிக்கையாளர்கள் ,அண்டை அயலார் ,
- உடன் பயணிப்போர் ,கடைக்காரர்கள் இப்படி இன்னும் பலர்
சிலரை அன்றாடம் , பலரை சிலமுறை ,இன்னும் சிலரை ஒரே ஒரு முறை சந்திக்கிறோம்
இந்தக்கணக்குகளைத் தாண்டி சிலர் நம் சிந்தையில் நிலைத்து நின்று விடுகிறார்கள்
அப்படி ஒரு சிலர் பற்றி இங்கே சொல்கிறேன்
முப்பது ஆண்டுகள் இருக்கும் அந்தப் பெண்ணை சந்தித்து
ஒரே ஒஉமுறை சந்தித்த அவர் இன்றும் பசுமையாய் நினைவில் நிற்கிறார்
ஈரோட்டில் இருந்து கோவைக்கு பணி இட மாறுதல் –
அங்குவீடுபார்க்கவேண்டும்
மதுரை அலுவலகத்தில் இருக்கும் ஒருவருக்கு கோவையில் வீடு
இருப்பதாக அறிந்து அவரைத் தொடர்பு கொண்டேன்
ஞாயிறு காலை 7 மணி வாக்கில் வந்தால் வீட்டைப் பார்க்கலாம் என்று சொன்ன அவர் கோவை வீட்டு முகவரியும் கொடுத்தார்
மகனும் துணைவியும் ஒரு திருமணத்துக்கு வெளியூர் போய்விட மகளும் நானும் அதிகாலையில் கிளம்பி சிற்றுண்டி கூட சாப்பிடாமல் 7 மணிக்கு அங்கு போய் விட்டோம்
முதல் பார்வையிலேயே வீடு எனக்குப் பிடிக்கவில்லை
திட்டமிடாமல் கட்டப்பட்டபல வீடுகள்- பெரிதும் சிறிதுமாய்
பசி வேறு வயிற்றைக் கிள்ளுகிறது
இருந்தாலும் வரச் சொன்னவரைப் பார்த்து விட்டுப் போய்விடலாம் என்று காத்திருந்தோம்
அங்கிருந்த பெண் மணி ஒருவர் வந்து உள்ளே உட்காருங்கள் என்று அன்புடன் அழைத்தார்
வீடு என்று சொல்ல முடியாது பெரிய அறை என்று கூட சொல்ல முடியாது அவ்வளவு சிறிய இடம்
மனதோ பெரிது
உள்ளே உட்கார வைத்து எங்கள் பசியை அறிந்து தோசை சுட்டுக் கொடுத்தார் தொட்டுக்கொள்ள ஊறுகாய்
அப்போதிருந்த பசிக்கு அது பல்சுவை விருந்தாய்த் தெரிந்தது எங்களுக்கு
கேரளத்தைச் சேர்ந்த அவர் துணைவரின் பணி நிமித்தம் கோவை வந்ததாய்ச் சொன்னார்
அவர் பேர் கூடத் தெரியாது
துணைவரும் வீட்டில் இல்லை
மனதாலும் சொல்லாலும் நன்றி தெரிவித்து வாழ்த்தினோம்
பார்க்க வந்தவரைப் பார்க்க முடியாமல் திரும்பி விட்டோம்
இப்படி ஒரு நிகழ்வை , அந்தப் பெண்ணை எப்படி மறக்க முடியும் ?
அடுத்த நிகழ்வு தொடரிப் பயணத்தில்
ஏறுவாடியில் இருந்து சென்னைக்குப் போக நாங்குநேரியில் வண்டியில் ஏறினோம்
ரம்ஜான் நோன்பு நேரம்
நெல்லை சந்திப்பில் தண்ணீர் வாங்கிக் கொள்ளலாம் என்று துணைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தேன்
நெல்லை சந்திப்பில் இறங்க முற்பட்டபோது அருகில் இருந்த ஒருவர்
“சார் சார் நீங்கள் நோன்போடு அலைய வேண்டாம் . இருங்கள் நான் போய் வாங்கி வருகிறேன் .வேறு ஏதாவது வேண்டும் என்றால் தயங்காமல் சொல்லுங்கள் வாங்கி வருகிறேன் “ என்றார்
“தண்ணீர் மட்டும்தான் நானே வாங்கிக் கொள்கிறேனே” என்று நான் சொல்ல
“கடைகள் எல்லாம் சற்று தள்ளி இருக்கின்றன “ என்றபடி இறங்கிப் போய்விட்டார்
அதோடு நிற்கவில்லை
நோன்பு திறக்க நாங்கள் ஆயத்தமாவதை அறிந்து
“ சாரும் மேடமும் நோன்பு திறக்கட்டும் .
நாம் கொஞ்ச நேரம் வேறு இடத்தில் இருப்போம் “ என்று தன் கூட வந்தவர்களையும் கூட்டிகொண்டு போய்விட்டார்
சொல்லாமலே புரிந்திருக்கும் அவர்கள் மாற்று மத அன்பர்கள் என்பது
இதே போல மற்றவர்களையும் மதித்து நடப்பதுதான் நாம் அந்தப் பயண
நட்புகளுக்கு செய்யும் கைம்மாறு
இனி பேருந்துப் பயணம் பற்றி ஓன்று சென்னையில்
மைத்துனர் மறைவு நெஞ்சில் பாரமாக அழுத்த ஒரு வெறுமை உணர்வு
வீட்டில் இருக்கவும் பிடிக்கவில்லை வங்கிக்கு செல்லவும் மனமில்லை
சில துணிமணிகள் மட்டும் எடுத்துக்கொண்டு துணைவியும் நானும் கோயம்பேடு வந்து உட்கார்ந்து விட்டோம் இலக்கில்லாத ஒரு பயணம்
ஒருவழியாக சொந்த ஊருக்குபோய் ஒருசில நாட்கள் தங்கி வர எண்ணி திருச்சி செல்லும் பேருந்துக்காக காத்திருந்தோம் , காத்திருந்தோம் காத்துக்கொண்டே இருந்தோம்
நிறைய பேருந்துகள் வருகின்றன . வரும்போதே வண்டி நிறைய கூட்டம் வேறெங்கோ வண்டியை நிறுத்தி பயணிகளை ஏற்றுகின்றாரகள் என்பது தெளிவாகத் தெரிகிறது
அந்த இடத்தை தேடிச் செல்லும் அளவுக்கு மனதில் , உடலில் உற்சாகம் இல்லை
இருந்த இடத்தில் அப்படியே இருந்தோம்
சற்று நேரத்தில் ஒரு வசதியான இருக்கை கொண்ட அரசு வண்டி வந்தது
அவ்வளவாகக் கூட்டம் இல்லை
இருந்தாலும் நாம் அசைந்து ஏறுவதற்குள் கூட்டம் வந்து மொய்த்து விடுமோ என்று தயக்கம்
அப்போது முன்பின் தெரியாத ஒருவர்வந்து “ சார் உங்களுக்காக இரண்டு சீட் பிடித்து வைத்திருக்கிறேன் . கிளம்புங்கள் “ என்றவர் எங்களை வண்டியில் உட்கார வைத்து விட்டு இறங்கி விட்டார்
உண்மையிலேயே மிக வசதியான இருக்கை, சுகமான பயணம்
இன்று வரை அந்த நல்ல உள்ளம் யார் என்று தெரியாவில்லை
இன்னும் மகிழுந்தை அப்படியே தூக்கி பாதுகாப்பாக வைத்தவர்கள்,
மகிழுந்து சக்கரம் பழுதான நேரத்தில் வந்து உதவியவர் ,
சிவானில் 50 பைசாவை என்னிடம் கொடுப்பதற்காக வெகு நேரம் என்னைத் தொடர்ந்தவர்
காலத்தில் பணம் கடன் கொடுத்து உதவிய நண்பர் குப்புசாமி
இதெல்லாம் பலமுறை விரிவாக எழுதியிருக்கிறேன்
அவற்றைத் திரும்பச் சொல்லவில்லை
இந்தப் பதிவை நிறைவு செய்யுமுன் ஒரே ஒரூ எதிர்மறைச் செய்தியை சொல்லிவிடுகிறேன்
வாணியம்பாடிக் கிளையில் சேர்ந்து சில நாட்களில் அருகில் உள்ள ஒரு கிளைக்கு மேலதிகாரி வருகிறார்
எனக்கு முன் வாணியம்பாடியில் மேலாளராக இருந்தவர்
“வாங்க சார் AGM மைப் பார்த்து வரலாம்” என்கிறார்
“எனக்கு இதெல்லாம் பழக்கம் இல்லை “ என்று நான் மறுக்க , பழகிக் கொள்ளுங்கள் என்று வற்புறுத்தி கூட்டிக்கொண்டு போகிறார்
அந்த மேலத்காரியை அதற்கு முன் நான் பார்த்துப்பேசியதில்லை
என்னைப் பார்த்தும் அவர் சொன்னது இன்றும் என் நெஞ்சில் நிற்கிறது
“you will be shifted “
என்பதுதான் அந்தப் பொன்மொழி
கொஞ்சம் பேச்சு வழக்கில் சொன்னால்
“உன்னைத் தூக்கி வேறு எங்காவது போட்டுவி டுவேன் “
ஆனால் அவர்தான் அவர் விரும்பாத ஒரு ஊருக்கு மாற்றப்பட்டு
அங்கு சமாளிக்க முடியாமல் விருப்ப ஓய்வில் போனாக அறிந்தேன்
நான் மூன்று ஆண்டு வாணியம்பாடி பணிக்குப்பின் சென்னைக்கு மாற்றப்பட்டேன்
அப்படி என் மேல் என்ன ஒரு வெறுப்பு ? புரிய வில்லை
என் பெயரே அவருக்குப் பிடிக்க வில்லை போலும்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
3008 2023 புதன்
சர்புதீன் பீ

No comments:

Post a Comment