போவாய் வருவாய்
வண்டிகளின் எரிபொருள் – பெட்ரோல், டீசல் – விலை எகிறும்போதெல்லாம் ஒரு
கருத்துப்படம் ஊடகங்களில் வெளியாகும்-
--மகிழுந்துகளை விற்று மக்கள் மாட்டு வண்டிக்கு மாறுகிறார்கள் –
என்ற கருத்தில்
இன்று பெட்ரோல் விலை எண்பதுக்கு மேல் போய்விட்டது .ஒரு காலன் –
ஏறத்தாழ ஐந்து லிட்டர்- ஐந்து ரூபாய்க்கு விற்றதும் என் நினைவில் உள்ளது .அதாவது
ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரே ரூபாய்
அந்த ஒரு ரூபாய் காலம் முதல் இன்றுள்ள எண்பது+ காலம் வரை அறுபது
ஆண்டுகள்
இந்த நீண்ட இடைவெளியில் எனக்குத் தெரிந்து யாரும் மகிழுந்தை விற்று
மாட்டு வண்டி வாங்கியதை நான் பார்க்கவும் இல்லை கேள்விப்படவும் இல்லை
மாறாக மிக வசதி படைத்த செல்வந்தர்கள் வீடுகளில் மட்டும் நின்ற
மகிழுந்துகள் இன்று நடுத்தரக் குடும்பங்கள் பயன்படுத்தும் அவசியப் பொருள் ஆகி விட்டது
. ஒரு குடும்பத்துக்கு ஓன்று என்ற நிலை மாறி குடும்ப உறுப்பினர் எண்ணிக்கைக்கு
ஏற்ப இரண்டு, மூன்று என்றாகி விட்டது
செல்வச் செழிப்பு மிகுந்த சிங்கப்பூரில் யாரும் எளிதாக மகிழுந்து
வாங்கி விட முடியாது அரசு அனுமதிக்காது .
ஆனால் தனி வண்டி இல்லாத குறையை யாரும் நினைக்காத அளவுக்கு வியக்க
வைக்கும் பொது போக்குவரத்து வசதிகள் – நேரம் தவறாத சேவை, வெளிநாட்டினரும் எளிதில்
புரிந்து கொள்ளும் அறிவிப்புப் பலகைகள் .வீட்டை விட்டு இறங்கியவுடன் பேருந்து /
தொடரி நிறுத்தத்துக்கு அழைத்துச் செல்ல சிறு தொடரிகள் .
இதெல்லாம் நாம் கனவு கூடக் காண முடியாத வசதிகள்
இன்னும் சில வளர்ந்த நாடுகளில் வணிக நிறுவனங்கள் நிறைய இருக்கும்
இடங்களுக்கு தனியார் மகிழுந்துகள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது .
நம் நாட்டில்தான் பதவி ஏற்க
ஒருவர் செல்லும்போது ஐம்பதுவண்டிகளாவது போனால்தான் மதிப்பு மரியாதை .
ஜெர்மனியில் எரிபொருள் விலை ஏற்றத்தைக் கண்டிக்கும் முகமாக
ஆயிரக்கணக்கான வண்டிகளை சாலைகளில் நிறுத்தி போராட்டம் நடத்தினர்
நாம் அப்படியெல்லாம் செய்ய மாட்டோம் ; கட்செவியிலும் முகநூலிலும்
எதிர்ப்பைக் காண்பிப்போம். ஊடகங்கள் வழக்கம்போல் மாட்டு வண்டி கருத்துப்படம்
போடும்
மக்களின் இந்த மன நிலை ஆளுபவர்களுக்கு மிக நன்றாகத் தெரியும் .
அதனால்தான் எந்த விதத் தயக்கமும் கூச்சமும் இன்றி எரிபொருள் விலையை ஏற்றிக்கொண்டே
போகிறார்கள்
மாட்டு வண்டி என்றதும் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றன
காரைக்குடியில் நிறைய குதிரை வண்டிகள் இருக்கும் .டக் டக் என்று
குதிரை குளம்பொலி ஒலித்துக்கொண்டே இருக்கும்
அங்கிருந்து இருபது கி மி தொலைவில் உள்ள திருப்பத்தூரில் குதிரை
வண்டிகள் அறவே கிடையாது
திருநெல்வேலி பேட்டையில் முசுலீம் மாணவிகள் பள்ளி வீட்டுக்கு அருகில்
இருந்தால் கூட திரையிட்ட மாட்டு வண்டியில்தான் பள்ளிக்குச் செல்லவேண்டும். கூடவே இரு
பணிப்பெண்கள் பாய் பிடிக்கப் போவார்கள் .
பெண்கள் மாட்டு வண்டியில் ஏறும்போதும் இறங்கும்போதும் மற்றவர்கள்
கண்ணில் படாமல் இருக்க வண்டியின் இரு பக்கங்களிலும் பணிப்பெண்கள் பாய்பிடித்து
நிற்பார்கள்
மகிழுந்து என்றாலும் மாட்டுவண்டி என்றாலும் எங்கள் அத்தாவை
நினைக்காமல் இருக்க முடியவில்லை
அத்தா வெகுநாளாக வைத்திருந்த மகிழுந்து ஹில்மேன் என்ற வண்டி
உண்மையிலேயே மகிழ்ச்சியான நினைவுகள் .குடும்பம் முழுதும் அதில் பயணம் செய்வோம் .
பெரும்பாலும் அத்தாவே ஓட்டுவார்கள் . இன்னும் அந்த பதிவு எண் பசுமையாக நினைவில்
இருக்கிறது
MSZ 7736
அலுவலக ஏவலரை (Peon) அதிகாரியின் மாட்டு வண்டி ஓட்டப் பயன்படுத்தலாம் என ஒரு பொது ஆணை
பெற்றது ஒரு சுவையான நிகழ்வு
அத்தா அருப்புக்கோட்டையில் பணி புரிந்தபோது ஒரு
மாட்டு வண்டி (இப்போது மகிழுந்து போல்) வாங்கி அலுவலகப்பணிக்குப் பயன்படுத்தியதில்
ஒரு பிரச்சனை முளைத்தது
அலுவலக ஆய்வுப்பணிக்காக அத்தா செல்லும்போது ஏவலரை மாட்டு வண்டி
ஓட்டச்சொல்வது தவறு என மன்ற உறுப்பினர்கள் வாதிட்டு மன்றத்தில் ஒரு தீர்மானம்
நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்தனர்
அரசு இது பற்றி அத்தாவிடம் விளக்கம் கேட்க
அத்தா அனுப்பிய பதில் :
---எனது மாட்டுவண்டியை அலுவலகப் பணிக்குப் பயன்படுத்த அனுமதி உண்டு.
ஆய்வுப்பணிக்காக வெளியே போகும்போது ஏவலரை அழைத்துச் செல்லவும் அனுமதி உண்டு
வண்டிக்கு ஓட்டுனர் வைத்துக்கொள்ளும் அளவுக்கு எனக்கு பொருளாதார வசதி
இல்லை
இந்த நிலையில் எனக்கு இரண்டு வழிகள்தான் தெரிகின்றன
ஓன்று நான் வண்டிக்குள் உட்கார்ந்துகொண்டு ஏவலரை வண்டி
ஓட்டச்சொல்லலாம்
அல்லது ஏவலரை வண்டிக்குள் உட்கார வைத்து நான் வண்டி ஓட்டலாம்
இது பற்றி உங்கள் மேலான அறிவுரைக்காகக் காத்திருக்கிறேன் ---
இந்த பதிலால் வாயடைத்துப்போன அரசு உடனடியாக ஒரு பொது ஆணை மூலம் அரசு
அலுவலர்கள் தங்கள் ஏவலரை வண்டி ஓட்டப் பயன்படுத்தலாம் என அனுமதி வழங்கியது
மாட்டு வண்டியில் பயணித்த நினைவு எனக்கு இல்லை
திரையில் கண்டு களித்த சில மாட்டு/ குதிரை வண்டி காட்சிகள்
வீர் பாண்டிய கட்டபொம்மன் படத்தில் – மாட்டு வண்டி பூட்டிகிட்டு –
பாடல்
சிவகாமியின் செல்வன் படத்தில் எதற்கும் ஒரு காலம் உண்டு , அதே பாடல்
இந்தி ஆராதனா படத்திலும்
என் அண்ணன் படத்தில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு பாடல்
கருத்தம்மா படப்பாடல்
ஒரு வேளை ஊடகங்களின் கருத்துப்படங்கள் உண்மையாகி மாட்டு வண்டி குதிரை
வண்டியில் பயணம் செய்ய வேண்டிய நிலை வந்தால் அதுவும் நன்றாகத்தான் இருக்கும் எனத்
தோன்றுகிறது
இத்துடன் இப்பகுதியை நிறைவு செய்கிறேன்
இடைச்செருகல்
மகிழுந்துகள் விபத்துக்கு உள்ளாகும்போது ஏற்படும் உயிரிழப்பு,
,காயங்களைக் குறைப்பதில் காற்றுப்பைகள் ( Air Bags)
பெரிதும் உதவுகின்றன . முன்பு அரிதாக இருந்த இந்தப்பைகள் இப்போது நிறைய மகிழுந்துகளில்
பொருத்தப்படுவது ஒரு நல்ல முன்னேற்றம் .
ஆனால் இருக்கைப்பட்டி (Seat
Belt) அணிந்தால்தான்
காற்றுப்பைகள் இயங்குமாம் .இது சரியா என்று தெரியவில்லை . பட்டியை அணிவதற்குள்
விபத்து நடந்து விட்டால் ? எதிர் பாரா நிகழ்வுதானே விபத்து !!
மூளைக்கு வேலை
சென்ற வாரப்புதிர்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் குர்ஆனில் எத்தனை முறை வருகிறது ?
ஆறு முறை என்பதே சரியான விடை
முகமது ஸல் என நான்கு முறையும் , அஹமது என ஒரு முறையும் வருகிறது ( 3:144 33:408 47:22 48:29 61: 6)
இதோடு சூரா 47 ன் தலைப்பு முகமது என்று வருவதைச் சேர்த்து ஆறு முறை
யாரும் சரியான விடை சொல்லவில்லை
முயற்சித்த பர்வேசுக்கும்
ஜனாப் யாசின்
அவர்களுக்கும் ஆறுதல் பாராட்டுகள்
இனி
இந்த வாரப் புதிர்
Jo was fourscore and six years old,
ஜோவின் வயது என்ன ?
வழக்கம் போல் மிக எளிமையான கேள்வி
இறைவன்
நாடினால்
மீண்டும் சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot
.com
F/B/W 16092108
No comments:
Post a Comment