கரீம் அண்ணன்
ஏனோ தெரியவில்லை
மச்சான் என்பது எங்கள் வீட்டில் தடை செய்யப்பட்ட பலசொற்களில் ஒன்றாகிவிட்டது .
எங்கள் அக்கா தங்கையின் துணைவர்களை நாங்கள் அண்ணன் என்றுதான் சொல்லுவோம்
அந்த வகையில் கரீம் அண்ணன் எங்கள்
வீட்டு முதல் மருமகன்
முதல் மடடுமல்ல முதன்மை மருமகனும் கூட
எனக்கு கரீம் அண்ணன் ஆகி விட்டார்
அக்காவுக்கு திருமணம் நடந்தபோது நான்
விழுப்புரத்தில் ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன்
திருப்பத்தூரில் திருமணம். எங்கள்
வீட்டில் எந்தத்திருமணத்துக்கும்
மண்டபம் பிடித்ததில்லை . திருமணம் , விருந்து , வந்தவர்கள்
தங்குவது எல்லாம் வீடுகளில்தான்
அப்போது பிரியாணி எங்கள் பக்கத்தில்
விருந்துகளில் அறிமுகமாகவில்லை.செல்வந்தர் வீடானாலும் மற்றவராயினும் ஒரே வகையான
விருந்துதான் .காலை இட்லி, வடை, கேசரி சட்னி சாம்பார்,மதியம் தாளிச்சோறு பொடிக்கறிக்குழம்பு
, காய்க்குழம்பு தின்னத் தின்ன திகட்டாத சுவை .
சக்கரை,,அழுத்தம் பற்றி எல்லாம் அதிகம் அறியாததால் நிறைவாகச் சாப்பிடுவார்கள்
கரீம் அண்ணன் (இனிமேல் அண்ணன்
மட்டுமே) நல்ல உயரம், கவர்ச்சியான கண்கள் , கனிவான புன்னகை , எளிதில் யாருடனும்
பழகிப் பேசும் நல்ல குணம் ,, நகைச்சுவையான கலகலபபான பேச்சு, எங்கள் மண்ணுக்கே உரித்தான நக்கல் கிண்டல் எதையும் எளிதாக நினைக்கும் இயல்பு . இதோடு நல்ல இலக்கிய ரசனை, கலைத்துறையில்
ஆர்வம் , சமுதாய முன்னேற்றத்தில் அக்கறை என்று அடுக்கிக்கொண்டே போகலாம்
இவற்றிற்கெல்லாம் மேல் பிறருக்கு தாமாக
முன்வந்து உதவும் உயரிய பண்பு
அண்ணனைப்பற்றி பேச்சு வந்தாலே
" அவர் எனக்கு இப்படி உதவினார்,
வேலையில் சேர்த்து
விட்டார் .
படிப்பு பற்றி எடுத்துச் சொன்னார் ,
வாழ்க்கைக்கு
வழிகாட்டினார்”
என்ற கருத்து வராமல் இருக்காது
திருமணம் ஆன புதிதில் அண்ணன்
விழுப்புரத்தில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தது. குளித்துவிட்டு வந்து
முகப்பூச்சுத் தூள் (பவுடர்) கேட்டது .
எங்கள் வீட்டில் அதற்கும் தடை . அடுத்த வீட்டில்
வாங்கிக்கொடுத்தோம் .
அத்தாவுக்கு விழுப்புரத்தில் இருந்து
சில மாதங்கள் மதுரைப் பணிக்குப்பிறகு காரைக்குடிக்கு மாற்றல் .அங்குதான் அண்ணனின்
குடும்பமும் இருந்தது
.
தாவன்னா என்று அழைக்கப்படும் ஜனாப்
தாவுது ராவுத்தர் அண்ணனின் அத்தா..
.மிகப்பெரிய குடும்பம் அதற்கேற்ற
பெருந்தன்மை ,குழந்தைகளையும் வாங்க போங்க என்றழைக்கும் பாங்கு .காரைக்குடி
நகராட்சியில் பணி.. சம்பந்தி என்ற உறவிலும், அலுவலப்பணியாகவும் எங்கள்
வீட்டுக்கும் அவர்கள் வீட்டுக்கும் நெருங்கிய தொடர்பும் போக்குவரத்தும இருந்தது
எங்கள் குடும்பத்தின் முதல் பேரன்(தாவன்னா
அவர்களுக்கும் முதல் பேரன் ) சாகுலும் காரைக்குடியில் பிறக்க, நெருக்கம் இன்னும்
அதிகமானது
அசோக் லேலன்ட் நிறுவன பணியாளர்கள்
கூட்டுறவு சங்க செயலராக அண்ணன் பணிபுரிந்தது . அந்தோணிப்பிள்ளை போன்ற தொழிற்சங்க
தலைவர்களிடம் நல்ல நட்பு உண்டானது
இசுலாமிய நல சங்கம் (Islamic Welfare Association IWA) என்ற அமைப்பை துவங்கி சமுதாயப் பணியில் ஈடுபட்டது
சிறிய அளவில் தொழில் செய்து வந்த
பிளாஸ்டிக் ரகுமான் என்பவருக்கு,
பல அறிவுரைகள் வழங்கி, அவரை ஒரு பெரிய
தொழில் அதிபர் ஆக்கியது
கலைத் துறையில் உள்ள ஈடுபாட்டால் ரா.வெ.என்ற திரைக்கதை
ஆசிரியரிடம் மிக நெருக்கமாக இருந்தது .ஓவியம் என்ற பெயரில் ஒரு மாத இதழ்
துவங்கவும் முயற்சி செய்தது
பணியில் இருக்கும்போதே சட்டக்
கல்லூரியில் சேர்ந்து படித்து வெற்றிகரமாக நிறைவு செய்து வழக்ககறிஞராகப் பதிவு
செய்தது
திருமணம் ஆகி குழந்தைகள் இருந்த நிலையில் துணிந்து பணியை விட்டு விலகி
வழக்கறிஞர் தொழிலைத் துவங்கியது
இதை எதிர்த்தவர்கள், கிண்டல்
செய்தவர்கள் எல்லாம் வியக்கும் அளவுக்கு மிகப்பெரிய அளவில் தொழிலில் வளர்ச்சி
பெற்றது
.ஜனாப் அப்துல் கரீம் என்ற மிகப்பெரிய
,மிகதிறமையான மூத்த வழக்கறிஞரோடு பணியாற்றி அவரது நம்பிக்கைக்குப்
பாத்திரமாகி மிகச் சிறப்பாக செயல் புரிந்தது
தொழிலில் தான் அடைந்த வெற்றியால் தன்
இரு மகன்களையும் அதே துறையில் நுழைத்து விட்டது
ஆங்கிலப்புதினங்கள் படிப்பதில் ஒரு
சுவையை எனக்கு உண்டாக்கியது அண்ணன்தான் .
Erle Stanley Gardner. எழுதிய Perry
Mason புதினங்கள் நிறையப் படித்தேன் . அதைத்
தொடர்ந்து James Hadely Chase , Harold Robins, Alister
Macllean ,Arthur Hailey, Robin Sharma என பல
எழுத்தாளர்கள் புதினங்களைப் படித்தேன்
பட்டப்படிப்பு முடித்து விட்டு பல மாதங்கள் அக்கா
வீட்டில் தங்கி தட்டச்சுப் பயின்றேன்
எனக்கு ஒரு தொழில் நிறுவனம் துவங்க அண்ணன் பெரு முயற்சி
செய்தது .ஏனோ அது முழுமை அடையவில்லை
பூந்தமல்லியில் எனக்கு வீட்டு மனை வாங்க முழு முயற்சி
எடுத்தது அண்ணன்தான் .
முதல் மருமகன் என்ற முறையில் எங்கள் குடும்ப நிகழ்வுகள்
எல்லாவற்றிலும் அண்ணனின் பங்களிப்பு முழுமையாக இருந்தது ,தம்பி சகாவின்
திருமணப்பேச்சு துவக்கத்தில் இருந்து மணவிழா நிகழ்வு வரை உறுதுணையாக நின்றது
திருச்சியில் எங்கள் வீட்டுக்கு வந்த அண்ணன் எங்கள்
விருந்தோம்பல் பற்றி சென்னையில் மிகவும் சிறப்பாகப் பலரிடம் சொன்னதாம்
துறையூரில் என் பிள்ளைகளுக்கு நடந்த விழாவில் கலந்து
கொண்ட அண்ணன், உன் குடும்ப முதல் விழா நன்கு சிறப்பாக,நடந்து விருந்து மிக சிறப்பாக அமைந்தது உன் வளமான
வாழ்வுக்கு ஒரு அறிகுறி என்று மனமார வாழ்த்தியது
எங்கள் அத்தா ஹஜ் புனிதப்பயணம் செல்கையில் அண்ணன் ,என் தம்பி சகா , நான் மூவரும் பம்பாய் வரை சென்றோம்
. அப்போது சென்னையில் இருந்தெல்லாம் ஹஜ் விமான சேவை கிடையாது . தனியார் பயண
சேவையும் கிடையாது .. அரசு பயண சேவை மட்டுமே
எல்லோரும் தமிழ்நாடு ஹஜ் குழு கட்டிடத்தில்
தங்கியிருந்தோம் .அண்ணன் துணையிருந்தால் பம்பாயில் பல இடங்களைச்
சுற்றிப்பார்க்கவும் பல பெருட்கள் வாங்கவும் முடிந்தது
தஞ்சாவூரில் இருந்து அண்ணன் தம்பி இருவர் புனிதப் பயணம்
செல்வதற்காக அடுத்த அறையில் தங்கியிருந்தார்கள் . நல்ல பொருள் வளம் படைத்த அவர்கள்
ஒவ்வொரு காசையும் செலவழிக்க பல முறை சிந்தித்து கலந்து பேசுவது சற்று வேடிக்கையாக
இருக்கும்
வான் ஊர்தியில் ஏறப்போகும் நேரத்தில் கரீம் அண்ணன்
எங்கள் அத்தாவிடம் இந்தியப்பணம் எதாவது வைத்திருந்தால் கொடுத்து விடுங்கள் .
அதிகாரிகளுக்குத் தெரிந்தால் பறிமுதல் செய்து விடுவார்கள் என்று சொன்னது அதற்கு அத்தா ஒரு சிறிய தொகைதான் வைத்திருக்கிறேன்
. பறிமுதல் செய்தாலும் பெரிய இழப்பு ஒன்றும் இல்லை என்று சொன்னது
தஞ்சாவூரார் இருவரும் திரு திரு வென்று முழித்தார்கள் .
அவர்கள் பெருந்தொகையிலான இந்தியப்பணம் கையில் வைத்திருந்தார்கள் . அவர்களை
வழியனுப்ப யாரும் வரவில்லை (சிக்கனம்) .வேறு வழியின்றி அரை மனது கால் மனதாக அந்தப்பணத்தை
அண்ணனிடம ஒப்படைத்தார்கள்
நூறு முறையாவது கேட்டிருப்பார்கள் .- நாங்கள் திரும்பி
வரும்போது நீங்கள் வந்து பணத்தைக் கொடுத்து விடுவீர்களா என்று
பயணம் நிறைவுற்று இந்தியா வந்து அண்ணனைப்
பார்த்தவுடன்தான் அரை உயிர் திரும்பியுது..அவர்கள் நம்பிக்கை சற்றும் குறையாமல்
பணத்தை அண்ணன் முழுமையாக ஒப்படைக்க , முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு,
மகிழ்ச்சி
மங்கலபட்டியில் நான் பணியாற்றும்போது அக்காவும்
அண்ணனும் திருமண அழைப்புக் கொடுக்க வந்தார்கள்
அமைதியான கிராமத்துப்புற சூழ்நிலையைப் பார்த்து ,
இங்கேயே தங்கி விடலாம் போல் தோன்றுகிறது என்றது அண்ணன்
வழக்கறிஞர் என்பதோடு எளிமையாக இனிமையாகப் பழகும் இயல்பு
சேர்ந்து பல நட்பு வட்டங்களை உருவாக்கியது -நீதியரசர்கள், காவல் துறை, மற்ற துறை உயர்
அதிகாரிகள், வணிகர்கள், தொழில் உரிமையாளர்கள் கல்வியாளர்கள் என பலரும் இந்த வட்டத்தில்
அடங்குவர்
இந்தத் தொடர்புகளை தன் வளர்ச்சிக்கு மட்டும் அல்லாமல்
பிறருக்கு முடிந்த வரை உதவி செய்யவும் பயன்படுததிக்கொண்டது
நான் பஞ்சாப் ஜலந்தருக்கு மாற்றலாகிப் போகையில் அங்கு
அங்கு வருமான வரித் துறையில் பணியாற்றும் ஒரு தமிழ் நாட்டு உயர் அதிகாரியின் பெயரைச் குறிப்பிட்டு அவரைப்
பார்க்கும்படி சொன்னது .அண்ணனின் நெருங்கிய நண்பரான அவர் மிக எளிமையாகப் பேசிப்
பழகினார்
வடபழனியில் அருணா காலனி என்ற குடியிருப்புப் பகுதியில்
குடியிருப்போருக்கும் உரிமையாளருக்கும் இடையில் ஒரு வழக்கு. குடியிருப்போர்
சார்பில் அண்ணன் வழக்கை நடத்தி வெற்றி கண்டது .அதற்கு ஊதியமாக அந்தக் குடியிருப்பில்
ஒரு வீடு கிடைத்தது. கீழ் தளத்தில் மட்டும் இருந்த வீட்டை சீராக்கி மேலேயும்
கட்டியது
இப்போது அந்த வீடு இருக்கும் பகுதி சென்னையின் மிக
அதிகமான போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில் ஒன்றாகி விட்டது . அந்த நெரிசல் தெரியாத
அளவுக்கு ஒரு உள்ளடங்கிய மிக வசதியான குடியிருப்பாக உருமாறி விட்டது .
நடக்கும் தொலைவில் மெட்ரோ நிலையம், நான்கு புறமும்
செல்ல பேருந்து நிறுத்தங்கள், சற்றுத்தொலைவில் பேருந்து நிலையமும் கோடம்பாக்கம்
தொடரி நிலையமும், பெரிய மருத்துவமனைகள் கல்வி நிலையங்கள் பல பேரங்காடிகளையும்
உணவகங்களையும் திரையரங்குகளையும் உள்ளடக்கிய வணிக வளாகங்கள் – இப்படி எல்லாம் மிக
அருகில்.
வாழ்வாங்கு வாழ நீண்ட நெடிய வாழ்நாள் தேவையில்லை என
மெய்ப்பித்துக் காட்டியது கரீம் அண்ணனின் அரை நூற்றாண்டு வாழ்க்கை .ஆம் இந்த
பூமியில் கரீம் அண்ணன் வாழ்ந்தது ஐம்பதே ஆண்டுகள்தான் ..இந்த குறுகிய
காலத்திற்குள்
தங்கை தம்பிகளுக்கு நல்ல வாழ்க்கையும் மண வாழ்க்கையும்
அமைத்துக் கொடுத்தது
தன் பிள்ளைகள் மூவருக்கு சிறப்பாக திருமணம் நடத்தியது
துணைவி, பிள்ளைகள் எல்லோருக்கும் வசதியாக வாழும்
அளவுக்கு சொத்து சேர்த்தது
நண்பர்கள் உறவினர்கள் இல்ல நிகழ்சிகள் அனைவற்றிலும்
கலந்து கொண்டது
பலமுறை வெளிநாட்டுப்பயணம் ஒரு முறை அக்காவுடன்
ஒரு நல்ல நட்பை இழந்தேன் கரீம் அண்ணன் மறைவால் .
அண்ணன் முயற்சி செய்து எனக்கு வாங்கிகொடுத்த இடத்தில்
வீடு கட்டி நடதிய இல்லப் புகு விழாவில் கலந்து கொள்ள அண்ணன் இல்லை
நான் அண்ணனுடைய சம்பந்தி ஆன என் மகள் திருமண விழாவிலும்
அண்ணன் இல்லை
கரீம் அண்ணன் போல் உருவம் மட்டுமல்லாமல் நல்ல உள்ளமும்
பிறருக்கு உதவும் குணமும் கொண்ட அண்ணன் மகன் சேக் பீர் எங்கள் மருமகனாக வந்தது
இறைவன் அருள்
இப்பகுதியின்
நிறைவாக அண்ணனின் நண்பரும் பள்ளித்தோழரும்
எங்கள் உறவினருமாகிய ஹாஜி ஜனாப் சலாம்( SBI) அவர்கள்
கருணை மிக்க கரீம்
என்ற
தலைப்பில் எழுதிய அஞ்சலிக் கவிதையில்
இருந்து சில வரிகள்
பாருன்னைப் பாராட்ட
பார் உன்னை
உயர்த்துகிறேன்
எனச் சபதமிட்டு
வங்கிக்கு வழிகாட்டி
என்
வாழ்க்கைக்கு
ஒளி கூட்டியவன் நீ !
என்றோ ஒரு நாள்
“அங்கு” நான்
வரும்போது
சுவனத்தின் கதவுகளைத்
திறந்து வைத்துக்காத்திரய்யா !
சொர்க்கம் வேண்டிடும்
சுயநலமல்ல ;
சொர்க்க வாசலில் நின்று
நீ
சிந்திடும் புன்சிரிப்பைக்
கண்டாலே போதுமய்யா !
இ(க)டைச் செருகல்
மூன்று பெருந்தலைவர்கள் பிறந்த நாள் ஒரே நாளில் வருவது
உனக்குத் தெரியுமா என்று என்னிடம் கேட்டு தன நாட்குறிப்பை கரீம் அண்ணன் என்னிடம் காண்பித்தது
அதில் செப்டம்பர் ஐந்தாம் நாள் பிறந்த தினம் என்று
போட்டு கப்பலோட்டிய தமிழன் வ .உ .சி படமும் முனைவர் ராதாக்கிருஷ்ணன்( முன்னாள்
குடியரசுத் துணைத்தலைவர் )படமும் போட்டிருந்தது . மூன்றாவது யார் என்று கேட்டேன்
.நான்தான் என்று சொன்னது
ஆம் கரீம் அண்ணன் பிறந்த நாள் 05 09
1939 .
ஆசிரியர் தினமான அன்று வாய்ப்பு இருக்கும்போது முனைவர்
ராதாக்கிருஷ்ணன்,அவர்களைநேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக் கூறும் வழக்கம்
அண்ணனிடம் இருந்தது
மூளைக்கு வேலை
மகிழுந்தில் கணவன் மனைவி- கணவன் வேகமாக ஓட்டிக்கொண்டு போகிறார்
..ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு கணவன் இறங்குகிறார் .திரும்பி வந்து
பார்த்தல் மனைவி உயிரிழந்து கிடக்க புதியவர் ஒருவர் வண்டியில் இருக்கிறார்
நடந்தது என்ன ?
இதுதான் சென்ற
வாரப் புதிர்
பேறு
காலத்திற்காக மருத்துவமனைக்கு விரைவாக மகிழுந்தில் போய்க்கொண்டிருக்கையில் கணவன்
ஒரு தேவைக்காக ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி விட்டு திரும்பி
வருகிறார். அதற்குள் குழந்தை பிறந்து தாய் உயிர் பிரிந்து விடுகிறது.பிறந்த
குழந்தைதான் புதியவர்
இது ஒரு மாற்றுச்
சிந்தனைப் புதிர்
சரியான விடை அனுப்பிய
பேராசிரியர் முனைவர் பாஷா
அவர்களுக்குப் பாராட்டுக்கள்
இனி
இந்த வாரப்புதிர்
பத்தாவது மாடியில் வசிக்கும் ஒருவர் கீழே
போகும்போதெல்லாம் மின் தூக்கியை( Lift) முழுமையாகப் பயன் படுத்துகிறார் . ஆனால்
திரும்பி மேலே வரும்போது பெரும்பாலும் ஆறாவது மாடி வரை மின் தூக்கியில் போய் பத்தாவது
மாடிக்கு நடந்து போகிறார்.
மழைக் காலங்களில் பத்தாவது மாடி வரை மின் தூக்கியில்
போகிறார்
ஏன்?
இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்
வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com
B/F /W 30092018
No comments:
Post a Comment