Sunday, 23 September 2018

வண்ணச் சிதறல் 33 மா(ற்)றிய சிந்தனைகள்


மா(ற்)றிய சிந்தனைகள்

Think outside the box concept- motivational phrase in vintage letter press wood type against rustic wood.


கதை ஓன்று – நேரு அவர்களின் இளமைப்பருவம் பற்றி என் இளமைப்பருவத்தில் படித்தது
நேரு தோழர்களுடன்  பந்து விளையாடிக்கொண்டிருந்தார் .பந்து தவறி ஒரு மரப்பொந்துக்குள் விழுந்துவிட்டது. கையை விட்டுப் பார்த்தால் எட்டவில்லை .குச்சியை விட்டுப்பார்த்தும் பந்தை எடுக்க முடியவில்லை
அப்போது நேரு சொன்னபடி அந்தப்பொந்தில் தண்ணீர் ஊற்ற பந்து மேலே வந்துவிட்டது

இது ஒரு விளையாட்டுச்செய்திதான். ஒரு சிறிய மாற்றுச் சிந்தனைதான் .ஆனால் இப்படிப்பட்ட சின்னஞ்சிறு மாறுபட்ட எண்ணங்கள் , சிந்தனைகள்தான் அறிவியலிலும் தொழில் துறையிலும் சமுதாயத்திலும் பல பெரிய மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்திருக்கின்றன

ஒரு சோப்புத் தொழிற்சாலை . பெரும்பாலான பணிகள்  எந்திர மயமாக்கப்பட்ட ஒரு பெரிய தொழிற்சாலை .சந்தையில் நல்ல பெயர் எடுத்த ஒரு நிறுவனம். சில மாதங்களாக மொத்தமாக சோப்பு வாங்கும் வணிகர்களிடமிருந்து ஒரு புகார்  வருகிறது –

நூறு சோப்புகள் கொண்ட  பெட்டியில்  ஒரு ஐந்தாறு ,சோப்பு இல்லாமல் வெறும் உறை மட்டும் இருக்கிறது

தொடரும் இப்புகாரை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று உயர் மட்ட நிர்வாகிகள் விவாதித்தார்கள் .தொழில் நுட்பவியலார்களை அழைத்து கலந்துரையாடிர்கள் .

பிரச்சினை இதுதான்
முழு வடிவம் பெற்ற சோப்புக்கள் எந்திரம் மூலம் உறை இடப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக அட்டைபெட்டியில் விழுகின்றன , சோப்பு இல்லாத சில உறைகளும் வந்து பெட்டியில் விழுந்து விடுகின்றன் 
நூறு எண்ணிக்கை விழுந்தவுடன் அட்டைபெட்டி நகர்ந்து அடுத்த பெட்டிக்கு இடம் கொடுக்கும் .
விழுந்த நூறும் சோப்பா இல்லை வெறும் உறையா என்பதை உணரும் தொழில் நுட்பம் அங்கு இல்லை

பல கருத்துகள் வெளிவந்தன, விவாதிக்கப்பட்டன ,எல்லாம் மிகுந்த பொருட்செலவில் சிக்கலான தொழில்நுட்பம் கொண்டவையாக இருந்தன
அப்போது தொழிலாளி ஒருவர் முன் வந்து ஒரு கருத்துத் தெரிவித்தார்.
மிக எளிமையான, பொருட் செலவு இல்லாத ஒரு நல்ல தீர்வு
அவர் சொன்னது

“சோப்புக்கள் அட்டைப்பெட்டியில் விழும் இடத்தில் ஒரு மின்விசிறியை இயக்க வேண்டும் . சோப்பு இல்லாமல் வரும் வெறும் உறைகள் அந்தக்காற்றில் பறந்து பக்கவாட்டில் போய்விடும் ..பெட்டிக்குள் விழாது “

அவர் கருத்து ஏற்கப்பட்டது .பெருத்த செலவு தவிர்க்கப்பட்டது . நிறுவனத்தின் பெயரும் காப்பாற்றப்பட்டது.
 .
தொழிலாளிக்கு பாராட்டும் பணப்பரிசும் கொடுக்கப்பட்டது

ஒரு பற்பசை நிறுவனம் தன விற்பனையை அதிகரிக்க கலந்தாலோசனைக்கூட்டம் நடத்தியது

.விற்பனைப்பிரிவு அதிகாரி பேசினார் :
-நம் மக்களுக்கு  ஒரு நல்ல  பழக்கம் இருக்கிறது . பல் பிரஷ்ஷின் முழு நீளத்துக்கும் படுமாறு பற்பசையை வைத்தால்தான்  . நன்றாகப் பல் துலக்கிய நிறைவு  வரும் .

எனவே பற்பசை குழலின் வாயை சற்று அகலப் படுத்தினால் விற்பனை மிக அதிகமாகும் . –
இந்தக் கருத்து ஏற்கப்பட்டு செயல்படுத்தபட்டு விற்பனை கொடி கட்டிப்பறந்தது , பறக்கிறது

நான் சென்னை பெரம்பூர் கிளையில் பணியாற்றியபோது  வாடிக்கையாளர்களுக்கான இருக்கைகள் புதிதாக வந்தன ..அவற்றை இருக்கும் இடத்தில் ஒழுங்காகப் போடுவது ஒரு பெரிய பிரச்ச்னையாக இருந்தது . அப்போது அங்கு வந்த வேறொரு கிளையின் பணியாளர் மிக எளிதில் அந்தப் பிரச்சனையை தீர்த்து வைத்து வேறொரு கோணத்தில் மிக அழகாக அடுக்கினார்

பெங்களூரில் புகழ் பெற்ற உணவு விடுதி எம் டி ஆர் (MTR) . . வரிசையில் காத்து நின்று சாப்பிடுவார்கள் .அந்த அளவுக்கு சுவை, சுத்தம்
இரண்டாம் உலகப்போர் நடக்கும்போது  அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது . அதை சமாளிக்க ரவையை கலந்து இட்லி செய்து பார்த்தார்கள் .அது ரவை இட்லி என்ற பெயரில் கர்நாடகம் முழுதும் தமிழ் நாட்டில் ஓரளவுக்ககும் மக்கள் மிகவும் விரும்பும் உணவாகி விட்டது

தலையில் தேய்க்கும் ஷாம்பூ (சவர்க்காரக் குழம்பு, தலை நீவல் என்கிறது அகராதி) பெரிய புட்டிகளில்தான் விற்கப்பட்டு வந்தது . அதை மாற்றி சிறு பைகளில் அடைத்து விற்றார் ஒருவர் . இன்று அந்த சிறு பை வணிகம் ஷாம்பூவோடு  நில்லாமல் எண்ணெய், பற்பசை போன்ற பல பொருட்களுக்கும் பரவி விட்டது

சென்னை போன்ற பெருநகர்களிலும் மற்ற நகரங்களிலும் மாற்று சிந்தனையால் பல்வேறு வசதிகள் கிடைத்திருகின்றன. அழைப்பு கட்டண மகிழுந்து (கால் டாக்ஸி) ஒரு நல்ல எடுத்துக்காட்டு அதோடு அழைப்பு தானியும்( ஆட்டோ) வீடு தேடி வருகிறது

இப்போது நாம் விரும்பும்  உணவை நாம் சொல்லும் உணவகங்களில் வாங்கி வீட்டில் கொண்டு வந்து கொடுக்கும் சேவை மிகக்குறைந்த கட்டணத்தில் கிடைக்கிறது 

தானி என்றவுடன் அண்மையில் படித்த செய்தி ஓன்று நினைவில் வருகிறது .ஓலா உபெர் வந்து எங்கள் பிழைப்பைக் கெடுத்து விட்டது என்று தானி ஓட்டுனர்கள் புலம்புவது வழக்கமாகி விட்டது .இதில்  மாற்றி சிந்தித்து எதிர் நீச்சல் போட்டு வெற்றி கண்டுள்ளார்கள் இரண்டு தானி உரிமையாளர்கள்.

ஒருவர் அளவி (மீட்டர் ) காண்பிக்கும் கட்டணம் மட்டுமே வாங்குகிறார் .ஒரு ரூபாய் கூட அதிகமாக வாங்குவதில்லை . வண்டியின் முன்னும் பின்னும் இந்த அறிவிப்பை பெரிதாக எழுதி வைத்திருக்கிறார் .முதலில் சற்று இழப்பு போல் தோன்றியது ,போகப்போக வண்டி நிற்காமல் ஓடிகொண்டே இருப்பதால் முன்பைவிட நல்ல வருமானம் வருகிறது ,நிறைவாக இருக்கிறது என்கிறார் 

இன்னொரு தானி உரிமையாளர் தான் ஒரு பொறியியல் துறை முதுநிலைப் பட்டதாரியை விட அதிகம் சம்பாதிப்பதாக நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார் . இவர் தானியில் உள்ள சில வசதிகள்
செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள் , வங்கி அட்டைகளுக்கு பணம் பெறும் பொறி, பணப்பரிமாற்ற வசதி, இணய வசதி ,நகல் பொறி (ஜெராக்ஸ்) ,கைப்பேசி மறுசெறிவு (ரீசார்ஜ்) இன்னும் பலபல

தகவல் தொழில் நுட்பத்துறையில் கிடைக்கும் ஊதியம் மிக அதிகமாக இருக்கிறது என அதை உதறித்தள்ளி விட்டு மன அமைதிககாக உழவுசார்ந்த தொழில்களுக்கு வரும் இளைஞர்களின் மாற்றுச் சிந்தனை வரவேற்கப்படவேண்டிய ஓன்று

மூதாதையரின் மூட நம்பிக்கைகள் , பழக்க வழக்கங்கள் இவற்றிலிருந்து மாறுபட்டு இறைவழியில் நபி மார்கள் சிந்தித்தது மிகப்பெரிய சமுதாய மாதங்களுக்கு வழி வகுத்தது .
 கைம்பெண் மறுமணம் , பெண்களுக்கு சொத்து உரிமை , தீண்டாமை ஒழிப்பு , பெண் பிள்ளைகள் கொலைத் தடுப்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம்

பள்ளி, கல்லூரி பொதுத் தேர்வுகளின் மதிப்பெண்களை பட்டியலிட்டு முடிவு வெளியிடுவது ஒரு மிகச் சுமையான சிரமமான பணியாகும் ..கல்வித்துறை அதிகாரிகள் முதல்வர்   எம்,ஜி ஆர் அவர்களோடு இது பற்றி பேசிக்கொண்டிருந்தனர் .கணினிப் பயன்பாடு பெரிய அளவில் இல்லாத அந்த காலகட்டத்தில்

“எதோ கம்ப்யூட்டர் என்று சொல்கிறார்களே அதைப் பயன்படுத்திப்பார்த்தல் என்ன “
என்று முதல்வர் சொல்ல கல்வியாலர்களுக்கெல்லாம் ஒரே வியப்பு . நமக்கு இந்த சிந்தனை வரவிலையே என்று

முதல்வர் அதுவும் எம் ஜி ஆர் சொல்லுக்கு மறுபேச்சு இருக்க முடியுமா ? சொல் செயல் படுத்தப்பட்டு பெருமளவு பணிச்சுமை குறைக்கப்பட்டது

போதும் போதும் என்கிற அளவுக்கு நிறைய மாற்றுச் சிந்தனைகள் பார்த்து விட்டோம். எனவே  .இதோடு இப்பகுதியை நிறைவு செய்கிறேன்

இ(க)டைச்செருகல்
நிலை தடுமாறிய சில மாற்று சிந்தனைகள் இப்போது தலை தூக்கி வருகின்றன .-திருமணம் இன்றி சேர்ந்து வாழ்தல், தன்பால் திருமணம் இதெல்லாம் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை

மூளைக்கு வேலை
சென்ற வாரப்புதிர்
-Jo  was fourscore and six years old,
ஜோவின் வயது என்ன ?
இதுதான் சென்ற வாரக்கேள்வி
எண்பத்தியாறு (86)  என்பது சரியான விடை
Score  என்ற சொல்லுக்கு இருபது என்று ஒரு பொருள் இருக்கிறது ,ஏறத்தாழ இருபது என்றும் ஒரு பொருள்
யாருமே விடை சொல்லவில்லை .
கதை .விடு கதையை விட சூடான பதிவுகள் முகநூலிலும் கட்செவியிலும் பரவி வருவதால் இதை எல்லாம் யாரும் படிப்பதில்லை போலும்
இனி
இந்த வாரப்புதிர்
மகிழுந்தில் கணவன் மனைவி- கணவன் வேகமாக ஓட்டிக்கொண்டு போகிறார் ..ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு கணவன் இறங்குகிறார் .திரும்பி வந்து பார்த்தல் மனைவி உயிரிழந்து கிடக்க புதியவர் ஒருவர் வண்டியில் இருக்கிறார்
நடந்தது என்ன ?
 இறைவன் நாடினால்
                                                   மீண்டும்
                                                                        சந்திப்போம் 

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot .com

F/B/W 23092108



No comments:

Post a Comment