Friday, 26 August 2022

திரை மின்னல்கள்

 திரை மின்னல்கள்

என் அரை நூற்றாண்டு நண்பர் GSRKஎன்ற சிவராமன் அண்மையில் அனுப்பிய பதிவு ஒன்றில் வந்த
“திருநெல்வேலிக் காரர்கள் அனைவருமே சினிமா கோட்டிகள் “
என்ற வரியைப்படித்ததும் என் மனதில் திரை மின்னலடித்து நினைவுகளை பின்னோக்கி இழுத்துச் சென்றது
என் வாழ் நாளில் நான் அதிக அளவில் திரைப்படங்கள் பார்த்தது நெல்லைச் சீமையில்தான்
அந்த ஊர் அமைப்பு அப்படி
சிறி தும் பெரிதுமாய் , பழையதும் புதியதுமாய் 10 திரை அரங்குகள்
புதிய படங்கள் எல்லாம் நெல்லையில் உடனே திரைக்கு வந்து விடும்
இன்றும் மனதில் நிற்கும் திரை அரங்கு சென்ட்ரல்
அழகான அமைப்பு வசதியான இருக்கைகள் பிள்ளைகளைப் படுக்க வைக்க தொட்டில்கள் என பல சிறப்பு வசதிகள்
குளிர் வகுப்பு இருந்தது அங்கு மட்டும்தான்
நெல்லையில் நான் பார்த்த படங்களில் நினைவில் நிற்பவை
ஆராதனா
, திருமணத்துக்குப்பின் நாங்கள் போனமுதல் படம் பொன்னூஞ்சல்
4முறை வேறு வேறு அரங்குகளில் பார்த்த
சுமதி என் சுந்தரி ,
என்கேள்விக்கென்ன பதில் என்ற பாட்டிற்காகவே பார்த்த உயர்ந்த மனிதன் – அந்தப்பாட்டு பாடுவது சிவாஜி இல்லை என்று தெரிந்து ஒரு ஏமாற்றம்
.பரபரப்பு ஏற்படுத்திய துக்ளக்
திருநெல்வேலி பற்றி எழுதத் துவங்கினால் அது நீண்டு கொண்டே போகும்
வங்கி நண்பர்கள் GSRK , GS , KS ஸ்ரீனிவாசனோடு அடிக்கடி திரை அரங்குகள் (பெரும்பாலும் தினமும்) போனது
கல்லூரிகாலத்தில் வகுப்பு மொத்தமும் சுப தினத்துக்குப் போனது
பள்ளி விடுமுறையில் சுல்தான் மாமா வீட்டில் இருந்து பல படங்கள் பார்த்தது எல்லாம் ஏற்கனவே நெல்லை பற்றிய பதிவுகளளில் விரிவாக எழுதியிருக்கிறேன்
எனவே இப்போது நெல்லையை விட்டு வெளியேறி மூன்றாம் வகுப்புப் படித்த மேட்டூருக்குப் போகிறேன்
அதற்கு முன் பாளையம்கோட்டை அசோக் அரங்கில் கிளியோபாத்ரா படம் பார்க்க கமால் அண்ணன் வீட்டுக்குப் போய் தல்லத்தோடு அரங்குக்குப் போனால் அங்கே படம் மாறியதால் ராஜாத்தி யைப் பார்த்து விட்டு வந்தோம்
முதன் முதலாகப் பார்த்ததாக நினைவில் நிற்பது மேட்டூரில் பார்த்த சம்பூர்ண இராமாயணம்
Touring talkies எனப்படும் டென்ட் கொட்டாயில் (கூரைக் கொட்டகை என்று சொல்லலாம்) இரு பக்கங்களிலும் திறந்துதான் இருக்கும்
மடக்கு நாற்காலிதான் உயர் வகுப்பு இருக்கை
அடுத்து பென்ச் (bench) டிக்கெட்
பிறகு தரை டிக்கெட் .தரையில் பரப்பியிருக்கும் மணலில் உட்கார்ந்து படம் பார்ப்பது ஒரு இனிய நினைவு
இனிமேல் கைகூடாத கனவு
படம் துவங்கு முன் போடும் மிக்கி மௌஸ் போன்ற குறும்படங்கள் வண்ணத்தில் கண்ணைக் கவரும்
டென்ட் கொட்டாயில் இடைவேளை (interval ) மூன்று நான்கு விடுவார்கள்
சொந்த ஊரான திருப்பத்தூரில் பெரியத்தா வீட்டில் தங்கிப் படித்த ஓராண்டு காலத்தில் அஜுமலும் நானும் அங்குள்ள சாம்பியன் கொட்டாயில் நிறைய படங்கள் மணலில் உட்கார்ந்து பார்த்திருக்கிறோம் CH அண்ணன் அந்த அரங்கு மேலாளர்
திருமணத்துக்குப்பின் காட்பாடியில் ஜோதி அக்கா வீட்டுக்குப் போயிருந்தபோது லியாகத் அலி அண்ணனோடு அந்த இனிய அனுபவத்துக்காகவே தரை டிக்கெட் எடுத்துப் படம் பார்த்தேன்
அஜுமல் என்றதும் கேரளா திரூரில் நானும் அஜ்மலும் பார்த்த மூன்று முடிச்சு படம் நினைவில் வருகிறது
இடைவேளை விட்டவுடன் அரங்கு முழுதம் டப் டப் என்ற ஒலியோடு சிகரெட் லைட்டரின் ஒளியில் பீடி பற்ற வைப்பார்கள்
அத்தா ,அம்மாவோடு எல்லோரும் மகிழுந்தில் படம் பார்க்கப் போவது ஒரு சிறப்பு அனுபவம்
அத்தா அலுவலத்தில் இருந்து வந்து கைகால் முகம் கழுவி உடைமாற்றி புறப்பட்டுப் போகும்போது படத்தின் பெயர் (titles)போட்டு முடிந்திருக்கும்
போக்கு வரத்து இடைஞ்சல் இல்லாமல் எளிதில் மகிழுந்தை வெளியே எடுப்பதற்கு தோதாக படம் நிறைவடையும் முன்பே கிளம்பி விடுவோம்
கலைமகள் ராமசாமி – பொள்ளாச்சியில் அத்தாவின் நெருங்கிய நண்பர்
எதிரெதிரே இருந்த கலைமகள், நாராயணா என இரண்டு திரை அரங்குகள் அவருடையது
அவரைப் பார்ப்பதற்காக அத்தா, ரஹீம் அண்ணனோடு நானும் கலைமகள் அரங்குக்குப் போயிருந்தேன்
செல்வம் படத்தின் இரண்டாம் (பின்) பகுதியை முதலில் கலைமகள் அரங்கிலும் அடுத்து முதல் பகுதியை நாராயணா அரங்கிலும் பார்த்தோம்
காரைக்குடியில் இருக்கும்போதுதான் பாசமலர், பாலும்பழமும் ,பாவமன்னிப்பு என தொடரந்து ப வரிசைப்படங்கள் வெளிவந்தன.
அத்தா அம்மா அனுமதி பெற்று பணியாளோடு உடன் பிறப்புகளும் நானும் நடந்தே போய்வருவோம்
தேனிலவு படம் அத்தம்மாவோடு பார்த்தோம் (நடந்துதான் )
திருச்சி கலை அரங்கம் – அழகான ,விசாலமான திரை அரங்கு இன்றும் மனதில் நிற்கிறது
ஒளிப்பதிவை எல்லாம் பாராட்டி கைதட்டும் ரசிகர்களை அங்குதான் பார்த்தேன் –படம் சாந்தி நிலையம் என நினைவு
திருச்சியில் பார்த்த , மனதில் நிற்கும் படங்கள் நெஞ்சத்தைக் கிள்ளாதே , ஒரு தலை ராகம்
இப்படி திரை மின்னல் தொடர்ந்து ஒளிப்பதைப் பார்த்தால் நானும்ஒரு சினிமா கோட்டிதானோ என்ற எண்ணம் தோன்றுகிறது
உங்களுக்கு அந்த எண்ணம் தோன்றி வலுப் பெறுவதற்குள் இந்தப் பதிவை நிறைவு செய்ய விரும்புகிறேன்
நிறைவு செய்யுமுன் பீகார் சிவான் திரை அனுபவத்தை பதிவு செய்கிறேன்
பல முறை பகிர்ந்தாலும் நெஞ்சில் நிறைந்து நிற்கும் ஒரு நெகிழ்ச்சி அது :
தொடர்ந்து நாலு நாள் வங்கி விடுமுறை , வங்கி நண்பர்கள் எல்லோரும் ஊருக்கு போய் விட்டார்கள்
நீண்ட விடுப்புக்குப் பின் வந்திருந்த நான் மட்டும் தனிமையில்
கடும் குளிர், கொடுமையான வெய்யில் இரண்டும் இல்லாத சுகமான பருவ நிலை
காலை சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு அப்படியே நடந்தேன்
வழியில் ஒரு திரை அரங்கு என்ன படம் என்று தெரியாது
சீட்டு வாங்கி உள்ளே போய் உட்கார்ந்தேன் . படம் போட இன்னும் அரைமணி நேரத்துக்கு மேல் ஆகும் என தெரிய வர
நடைப்பயணத்தை தொடர வெளியே வந்தேன்
வெளியே கிடைத்த எலுமிச்சை சாறு கலந்த்கறுப்புத் தேனீரை சுவைத்துக் குடித்து விட்டு ஒரு ரூபாய் பணம் கொடுத்து விட்டு நடக்கத் துவங்கினேன்
யாரோ என்னைப் பின் தொடர்வது போன்ற உணர்வு
திரும்பிப் பார்த்தால்
என் மூச்சே நின்று விடும் போல் இருந்தது
தேநீர் விற்பனையாளர் – நல்ல உயரம் , வலுவான உடலமைப்பு
இடையில் லங்கோடு மட்டும் அணிந்திருந்தார் – என்னைத் துரத்திக் கொண்டு வருகிறார்
நான் வேகமாக நடந்தால் அவரும் வேகமாக
நான் மெதுவாக அவரும் வேகத்தைக் குறைக்கிறார்
நம்மை அறியாமல் ஏதோ பெரிய தவறு செய்து விட்டோம்
அதனால்தான் அங்கு காத்திருக்கும் அவ்வளவு கூட்டத்தை ,விற்பனையை விட்டு விட்டு இவ்வளவுநேரம் நம்மைத் துரத்துகிறார்
மொழி தெரியாத புது இடத்தில் யாருமில்லாமல் உயிர் போகப்போகிறது என்ற எண்ணம் தலை தூக்கியது
இனி நடக்க முடியாது என்ற நிலையில் நின்று விட்டேன்
அவர் என்னை நெருங்கி விட்டார்
பெரிய கும்பிடு போட்டார்
பலி ஆட்டுக்கு மாலை போடுவதுபோல் இங்கெல்லாம் கும்பிட்டு விட்டு பிறகுதான் அடிப்பார்கள் போலும் என்று நினைத்தேன்
அவர் ஒன்றும் பேசவில்லை என் கையில் ஒரு ஐமபது பைசா நாணயத்தை திணித்து விட்டு மீண்டும் ஒரு கும்பிடு போட்டு விட்டு வந்த வழியே திரும்பி வேகமாக நடந்தார்
திகைத்து நின்ற எனக்கு உண்மையை உணர வெகு நேராமாகி விட்டது
உணர்ந்தபோது அந்த உயர்ந்த மனிதர் இன்னும் உயரமாக இமயம் போல் உயர்ந்து நிற்க
மொழியாலோ செய்கையாலோ ஒரு நன்றி கூடச் சொல்லத நான் சிறுமைப்பட்டு நின்றேன்
பீகார் பற்றி நிறைய எதிர்மறை செய்திகள் கேள்விப்பட்டிருக்கிறேன்
அவை அனைத்தையும் துடைத்து எறிந்து பிகாரின் மதிப்பை , ஏன் இந்தியாவின் மதிப்பையே உயரச் செய்து விட்டார் ஒரு ஐம்பது காசைக்கொண்டு
நேர்மையாக இருக்கிறோம் என்பதைக் கூட உணராமல் நேர்மை, உண்மை வழியில் நடக்கும் இந்தப் பாமர மக்கள் இருக்கும் வரை இந்தியாவை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது
பதிவு சற்று நீளமாகி விட்டது
இருந்தாலம் 35 ஆண்டுகள் கடந்தும் பசுமை யாக நினைவில் நிற்கும் இந்த சிவான் பீகார் நிகழ்வை குறிப்பிடாமல் நிறைவு செய்ய மனம் வரவில்லை
இறைவன் நாடினால் நாளை ஆங்கிலத்தில் சிந்திப்போம்
இ(க)டைச் செருகல்
கோட்டிக்காரன் –நெல்லை வட்டார மொழியில் பைத்தியத்தைக் குறிக்கும் தூய தமிழ் சொல்
கோட்டம் = வளைவு
மனம் பிறழ்ந்து வளைந்திருத்தல்
27082022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
May be a black-and-white image of tree and sky
Like
Comment
Share

No comments:

Post a Comment