Tuesday, 14 March 2023

தமிழ்( மொழி) அறிவோம் “நந்தவனத்தில் ஓராண்டி

 தமிழ்( மொழி) அறிவோம்

“நந்தவனத்தில் ஓராண்டி
15032023
“கொண்டு வந்தான் ஒரு தோண்டி”
எந்தப் பாடலில் வரும் வரி ?
விளக்கம் ?
விடை
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
"நல்ல வழிதனை நாடு - எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு" -
கடுவெளிச் சித்தர்
விளக்கம்[]
மேலோட்டமாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போலத் தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவெளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார். மனித உயிர் (சீவன்) ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப்பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்படுகிறான். சீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று நாலாறு மாதமாய் (பத்து) மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.
சீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன்(இறைவன்) செய்து கொடுத்தான்.
தோண்டி(உடல்) கிடைத்தவுடன் ஆண்டி கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியைப் போட்டுடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை. தோண்டியை(உடல்) தவறாகப் பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.(மனிதன்)
மேலும் நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளைத் தேட வேண்டும் என்றும், வல்லவர்(பக்தர்) கூட்டத்தோடு சேர்ந்து அவர்களை நெஞ்சினில் வைத்து வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
தத்துவம்[]
சீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலைத் தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை நகைச்சுவைப் பாடலைப் போல வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.
மூலம்
பொருள்
தோண்டி என்றால் மண் அல்லது தண்ணீர் கொண்டு வரும் ஒரு சிறு மண் பாத்திரம். பொதுவாக அதில் தண்ணீர் கொண்டு வருவார்கள்.
சிரமப்பட்டு ஒரு மண் கலயத்தை பெற்று, அதை சரியாக கையாளாமல் கீழே போட்டு உடைத்து விட்டான் அந்த ஆண்டி.
ஆண்டி என்பது நம் உயிர். ஆன்மா.
குயவன், இறைவன்.
தோண்டி, இந்த உடம்பு.
இந்த உடம்பை பெற்று என்ன செய்து கொண்டு இருக்கிறோம்?
சாப்பிடுகிறோம். தூங்குகிறோம். பிள்ளைகள் பெற்றுக் கொள்கிறோம். அவர்களை வளர்க்கிறோம். டிவி பார்க்கிறோம். என்று ஒரே ஆட்டமும், பாட்டமுமாக இ இருக்கிறது.
இப்படி கொஞ்ச நாள் போனால், இந்த உடம்பு விழுந்து விடும். அதாவது, மண் பாண்டம் உடைந்து விடும்.
இந்த உடம்பை பெற்றதன் நோக்கம் என்ன என்று அறிந்தோமா?
அல்லது, அப்படி எல்லாம் ஒரு நோக்கமும் இல்லை. இருக்குற வரை ஆண்டு அனுபவித்துவிட்டு போவதுதான் அதன் நோக்கமா?
இந்த உடம்பை இன்னும் கொஞ்ச உயர்ந்த வழியில் ஈடுபடுத்த முடியுமா? அல்லது இவ்வளவுதானா?
கடைசியில் போட்டு உடைத்துவிட்டுப் போக வேண்டியதுதானா?
போட்டு உடைத்தால் கூட பரவாயில்லை ..கூத்தாடும் போது கை தவறி விழுந்து உடைந்து விட்டால்?
?
சிந்திப்போம் .
சித்தர்கள் எப்போதுமே உடம்பு, ஆன்மா, நிலையாமை என்று ஒரு சிந்தனைக்குரிய கருத்துக்களையே கூறுவர். அவர்கள் வேடிக்கையாகச் சொல்லிவிட்டு செல்வது போல் இருக்கும். ஆனால், அந்த வேடிக்கையிலும் ஒரு உள்ளார்ந்த கருத்து இருக்கும்.
இப்படித்தான் கடுவெளிச்சித்தர் ஒருநாள் கால் போன போக்கில் நடந்து சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு சுடுகாடு. அங்கே காணும் காட்சி அவரை சிந்திக்க வைக்கிறது. அங்கு, அவர் இளம் வயதுடைய மனிதனின் உடல் அடக்கம் செய்யப்படுவதை காண்கிறார். இவ்வளவு சிறுவயதில் இப்படிப்பட்ட பரிதாபத்தைத் தேடிக் கொண்டானே என மனம் வருந்துகிறார்.
“என்ன உலகம் இது? நேற்று இருந்தார். இன்று இல்லை. வாழும்வரை ஆடிய ஆட்டம் என்ன? எனக்கு நிகர் யார் என்று அடித்தக் கொட்டம் என்ன? மூச்சுப் போச்சு என்றால் எல்லாம் அடங்கிப் போச்சு. ஆனால், கிடைத்தற்கரிய பிறவி அல்லவா இந்த மானிடப்பிறவி.
இந்தப் பிறவியின் அருமையை எத்தனைபேர் உணர்ந்து வாழ்கிறார்கள்? வரமாக கிடைத்துள்ள இப்பிறவியின் அருமையை உணராமல், தாறுமாறாக வாழ்ந்து காலத்துக்கு முன்பாகவே, வாழ்க்கையை முடித்துக் கொண்டுவிட்டானே” என்று நினைத்து அங்கேயே நின்று பார்த்துக் கொண்டே இருக்கிறார்.
“இப்படி பொசுக்கென்று போய்ச் சேருவான் என்று நினைக்கலியே” என்று அழுது புலம்புகின்றனர் அவரது உறவினர்கள். அவர்களை பார்த்துக் கொண்டிருந்த கடுவெளி சித்தர், “நந்தவ னத்திலோ ராண்டி” என்ற பாடலை பாடிவிட்டு அவர் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருக்கிறார்.
அது என்ன ஆண்டி.. வேண்டி.. தோண்டி.. தாண்டி.. வேடிக்கையாக இருக்கிறதல்லவா!
இந்தப் பாடலை மேலோட்டமாக பார்த்தால் உண்மையான அர்த்தம் நமக்கு புரிய சிறிது கடினமாக தோன்றலாம்.
கதையின் மூலம் பொருள் விளக்கம்:
ஏழை ஆண்டி ஒருவன், தினசரி பிச்சை எடுத்து உண்பவன், தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத அவன், ஒருநாள் நந்தவனமொன்றில் வித விதமான வண்ண மலர்களை காண்கிறான். நந்தவனத்தின் அருகில் ஒரு குளம் இருப்பதையும் காண்கிறான். ஆனால், என்ன பயன் குளத்தின் நீரை எடுத்து நந்தவனத்துக்கு பயன்படுத்த முடியவில்லையே என்று நினைக்கிறான்.
தனக்கு ஒரு குடம் (தோண்டி) இருந்தால், அந்த குடத்தை வைத்து குளத்து நீரை தினசரி நந்தவனத்தில் ஊற்றினால், பல மலர்கள் பூக்கும். அந்த மலர்களை விற்று ஒரு மண்டபம் கட்டலாம் என்றும் அதில், பல ஆண்டிகளை தங்க வைக்கலாம் என்றும் கற்பனையில் மிதக்கிறான்.
பக்கத்து ஊரில் உள்ள குயவனிடம் சென்று, தனக்கு ஒரு குடம் தானமாக வேண்டும் என்று கேட்கிறான். ஆனால், அந்த குயவன் அதற்கு இணங்கவில்லை. ஆண்டி பத்து மாதங்கள் அங்கிருந்து குயவனிடம் மன்றாடுகிறான். குயவனும் மனம் இலகி ஒரு குடத்தை தானமாக கொடுக்கிறான்.
ஆண்டி தனக்கு குடம் (தோண்டி) கிடைத்த சந்தோசத்தில், அதை தலையில் வைத்து ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, குடத்தை கீழே போட்டு உடைத்து விட்டான். பத்து மாதங்கள் மன்றாடி வாங்கிய தோண்டியை பத்து நாழிகைகளில் உடைத்து விட்டான்.
இது ஒரு சாதாரன ஆண்டி, குயவன், தோண்டி கதையல்ல!
பத்து மாதம் தவம் செய்து பெற்ற இந்த மனித உடலை, போற்றி பாதுகாக்காமல், அற்ப சுகங்களுக்கு ஆசைபட்டு, மனித உடல் என்னும் தோண்டியை போட்டு உடைக்கிறாயே, இந்த உடல் இருக்கும்போதே ஆன்மா இறையுடன் கலக்க வழி தேட வேண்டாமா என்று கேட்கிறார் கடுவெளி சித்தர்.
மேலும், நல்ல வழியை தேட வேண்டும் என்றும், எந்நாளும் கடவுளின் அருளைத் தேட வேண்டும் என்றும், பக்தர் கூட்டத்தோடு சேர்ந்து இறைவனை நெஞ்சில் வைத்து, வாழ்த்திக் கொண்டாட வேண்டும் என்கிறார்.
சீ(ஜீ)வாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று உள்ளது. அப்படிப் பெற்ற உடலைத் தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை, நகைச்சுவைப் பாடல் போல வெளிப்படுத்துகிறார் கடுவெளிச் சித்தர்.((Source முக நூல், விகிபீடியா )
சரியான விடை எழுதி வாழ்த்து பாராட்டுப் பெறுவோர்
சகோ
ரவிராஜ் – முதல் சரியான விடை
அஜ்மீர் அலி ராஜாத்தி ஷர்மதா பாடி பீர் ஹசன் அலி
சிராஜுதீன் ஷாகுல் சுராஜ் அஷ்ரப்ஹமீதா செல்வகுமார்
ஷேக் பீர் நஸ் ரீன் ஹிதயத் நசீமாபெரோஸ் மெஹராஜ்
துளசிதாஸ் ஜான் செல்வகுமார் பானு மதி மீ மு இஸ்மாயில்
முத்து ராமன் குமாரசாமி சாமுவேல் தல்லத்
கணேச சுப்பிரமணியம் அனு
பாடலை முழுதாகக் குறிப்பிட்டவர்கள் , பகுதியாகக் குறிப்பிட்டவர்கள் , சிறு விளக்கம் நீண்ட விளக்கம் என பல விதமான விடைகள் வந்தன
அனைவற்றையும் சரி என்று ஏற்றுக்கொண்டேன்
முடிந்தவரை சரி பார்த்து பெயர்களை போட்டிருக்கிறேன்
விடுதல் இருந்தல் sorry
ஒரு பண்டைத் தமிழ் பாடல், அதுவும் ஆழ்ந்த தத்துவப் பாடல் இவ்வளவு பேர் மனதில் நிற்கக் காரணாமாய் இருப்பது எளிய சொல் பயன்பாடும் ஓசை நயமும்தான் காரணம்
ஆண்டி, வேண்டி, தோண்டி என்று படிக்கும்போதே மனதில் பதிந்து விடுகிறது
முதன் முறையாக விடை அனுப்பிய எல்லோருக்கும் நன்றி ,
தொடர்பு தொடரட்டும்
நலவாழ்வுக் குறிப்புகள், அறிவியல் உண்மைகள் வாழ்க்கைத் தத்துவங்கள் என பலவும் பரவி, விரவி இருக்கின்றன சித்தர் பாடல்களில்
இன்னும் நிறைய எழுதலாம்
ஆனால் விடை சற்று நீளமாகி விட்டது
எனவே இத்துடன் நிறைவு செய்கிறேன்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
௧௫௦௩௨௦௨௩
15032023 புதன்
சர்புதீன் பீ
No photo description available.
Like
Comment
Share

No comments:

Post a Comment