Sunday, 1 July 2018



வண்ணச் சிதறல் 21

மார்பு துடிக்குதடி


ஒரு நல்ல மனிதரை சுட்டிக்காட்டுங்கள் என்றால் சற்றும் தயக்கமின்றி ராமசாமியை நோக்கி கையை திருப்பலாம்

நல்ல அளவான ஒல்லியான, ஆரோக்கியமான உடல் வாகு .புன்னகை தவழும் முகம் .எவருடனும் எளிதில் பழகும் எளிமை .முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவி செய்யும் உள்ளம் இப்படி அடுக்கிகொண்டே போகலாம்

எண்பது வயது நெருங்கியும் இளமையான தோற்றம். காலையில் இருந்து மாலை வரை சுறுசுறுப்பான இயக்கம் .நேர்மையை விட்டு சிறிதும் விலகாத மன திடம்.

தான் சார்ந்த மதத்தில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் முழுமையான புரிதலும் உடையவர் . மூட நம்பிக்கைகள் வீண் சடங்குகளை ஒதுக்கிவிடுவார் . பிற மதங்களில் உள்ள நல்ல கருத்துகளை தயங்காமல் ஏற்றுக்கொள்வார்

கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே மைய அரசுப்பணி கிடைக்க, தயக்கமின்றி படிப்பை இடை நிறுத்தி விட்டு பணியில் சேர்ந்து விட்டார். பணியில் இருந்தபடியே பட்டம், அதற்குமேலும் அதற்கு மேலும் என்று படித்தார். துறை சார்ந்த தேர்வுகள் பல எழுதி ஒரு உயர் நிலைப் பதவியைப்பெற்றார்
 .
.நாற்பத்திரண்டு ஆண்டு பணியில் தவறு செய்ததும் கிடையாது தவறுக்குத் துணை போனதும் கிடையாது .

இதனாலேயே பல எதிரிகள் அலுவலகத்தில்.. .அந்த எதிரிகளுக்கும் பணியிலோ சொந்த வாழ்விலோ ஏற்படும் இன்னல்களை முன்வந்து தீர்த்து வைக்கும் பரந்த உள்ளம்

இவரைப்பற்றி சில நம்ப முடியாத செய்திகளும் உண்டு . வீட்டில் தொலைகாட்சி கிடையாது . அறைக்குளிரூட்டி பயனபடுத்த மாட்டார் . கூடிய மட்டும் தரையில் அமர்ந்து உணவை ரசித்து ருசித்து  உண்பார் .-கட்செவி, முகநூல் இதெல்லாம் அவருக்குத் தொலை தூரம் ,கணினியில் மின்னஞ்சல் மட்டும் வைத்திருக்கிறார்

பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பின் தனியார்துறை பணிகள் இவரைத் தேடி வந்தன,. என் வாழ்க்கையை நான் எப்போது  வாழ்வது என்று அவற்றையெல்லாம் மறுத்துவிட்டார்.

நிறைய படிப்பு, எழுத்து இசை ,நல்ல நண்பர்களோடுநல்ல செய்திகளைப் பேசுவது அக்கம்பக்கம் உள்ளவர்களுக்கு பள்ளிக் கல்வி,வாழ்க்கைக் கல்வி , என்று நல்ல விதமாய் பொழுது போனது .

கை நிறைய கிடைக்கும் ஓய்வூதியத்தை தாராளமாக குடும்பத்துக்கு செலவழிப்பார்  தான தர்மங்கள் நிறைய கொடுப்பார்
 
பதவியில் இருக்குபோதே மக்களுக்கு திருமணம் முடித்து விட்டார் . .தன் மக்கள் வெளிநாடு போவது அவருக்கு விருப்பமிலாத ஓன்று .அதே போல் பெண்கள் நன்றாகப் படிக்கட்டும் பணிக்குச் செல்வது தேவையிலாத ஓன்று என்பார்..பையன்களுக்கு திருமணம் நடந்த மூன்று மாதத்திற்குள் தனிக்குடித்தனம் வைத்து விடுவார். 
.
தன் துணைவி சீதாவுக்கு எந்த வித சிரமமும் இல்லாதவாறு வீட்டு வேலைக்கு ,சமையலுக்கு உதவிக்கு என்று ஆள் அமர்த்தி விடுவார். .
தொலைக்காட்சி இல்லாத குறையை துணைவி உணராத அளவுக்கு நல்ல திரைப்படங்கள், நண்பர்கள் வீடு, கோவில், குளம் நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று அழைத்துச் செல்வார் 

துணைவியும் அவரது வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் ஆதரவாக இருந்து அவரின் மனதறிந்து நடந்து கொள்வார் 
.
மக்கள் வீட்டுக்குப் போவதிலும் ஒரு கணக்கு வைத்திருக்கிறார். மகன்கள் வீட்டுக்குப்போனால் சரியாக ஒருவாரம் பெண்கள் வீட்டுக்குப்போனால் மூன்று நாள் அதற்கு மேல் தங்க மாட்டார் ..துணைவியையும் தங்க விட்  மாட்டார்

இவர் போகும் இடமெல்லாம் கலகலப்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும் மக்கள், மருமக்கள், பேரன் பேத்திகள் அக்கம் பக்கத்தார் எல்லோரும் இவரது வருகையை ஆவலோடு எதிர் நோக்குவார்கள் 
 
இப்படி தெளிவான நீரோடை போல் குதுகலத்துடன் ஓடிக் கொண்டிருந்த வாழ்க்கையில் இடை வந்த சிறு சுழல்  – அதுவும் எதிர் பாரத இடத்திலிருந்து வந்தது அவரைப் புரட்டிப்போட்டு விட்டது

மகன் வீட்டுக்கு இருவரும் வந்து மூன்றாவது நாள்.. மகன் அலுவலகம் போய்விட்டார். மருமகள்  பெற்றோர் சங்கக்கூட்டம் என்று பேத்தி படிக்கும் பள்ளிக்குப் போய்விட்டார்.

வீட்டில் ராமசாமியும் சீதாவும் மட்டும்தான் வெளியில் போன ராமசாமி ஒரு பலாப்பழம் வாங்கி வந்தார் .

பலாப்பழம் என்றால் அவருக்கு உயிர் .
 விட்டால் ஒரு சிறியபழத்தை அவரே சாப்பிட்டு விடுவார்

. வந்த கையோடு ஒரு சாக்கை விரித்து அதில் பழத்தை வைத்து கத்தியும் நல்லெண்ணையும் வைத்துக்கொண்டு பக்குவமாக ஒரு பகுதியை  வெட்டி  தட்டில் சுளைகளை அழகாக அடுக்கி வைத்தார் . ஒரு ஐம்பது சுளைகள் வந்திருக்கும்

ஒரு கிண்ணத்தில் தேன் ஊற்றி வைத்துக்கொண்டு ஒவ்வொரு சுளையாக எடுத்து கொட்டை நாரெல்லாம் நீக்கி விட்டு தேனில் தோய்த்து உண்ணத்துவங்ககினார்.

மளமளவென்று ஒரு இருபது இருபத்தி ஐந்து சுளைகள வாய்க்குள் போயிருக்கும் 

பார்த்துக்கொண்டே இருந்த சீதா என்ன நினைத்தாரோ தெரியவில்லை
“ஏங்க பிள்ளைகளுக்கு கொஞ்சம் இருக்கட்டும் “
இவ்வளவுதான் சொன்னனர்

ராமசாமி  காதில் என்ன விழுந்ததோ, எப்படி புரிந்து கொண்டாரோ என்ன நினைத்தாரோ தெரியவில்ல்லை ..முழுதுமாக நிலை (தடு)மாறிப்போனார் .
கண்கள் சிவந்தன கைகால்கள் படபடத்தன. இதயம் படபடவென்று துடித்தது

அப்படியே எழுந்து அருகில் இருந்த  இருக்கையில் படுப்பது போல் சாய்ந்தார்

பதறிப்போன சீதா என்னங்க என்ன ஆச்சு என்று அருகில் வந்து அவரை தாங்கிப்பிடிக்க முயன்றார். மருத்துவர், மகன் மருமகளை தொலைபேசி பேசியில் அழைக்கபோனார்.

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று வாயால் சொன்னார் ராமசாமி

நான் ஏதாவது தப்பாகச் சொல்லியிருந்தால் மன்னித்து விடுங்கள் என்று கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டார் சீதா .நீ எந்த தப்பும் செய்யவில்லை . நான்தான் தவறு செய்து விட்டேன் என்று விரக்தியாகச் சொன்னார்

அன்று இரவே மகன் வீட்டிலிருந்து புறப்பட்டு தங்கள் வீட்டுக்குப் போய் விட்டார்கள் . ஒன்றும் புரியாமல் திகைத்தனர் மகன், மருமகள் .அவர்களிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று தடை செய்து விட்டார் ராமசாமி

அடுத்த நாள் அவர் தன் வீட்டுக்கு அருகில் இருக்கும் இன்னொரு மகனிடம் குடும்பத்துடன் தன வீட்டில் வந்து தங்கும்படி சொல்ல அவரும் உடனே வந்து விட்டார்.

பிறகு ஒரு வழக்கறிஞரை அழைத்து தன பெயரில் இருக்கும் அந்த வீட்டை தன் துணைவி சீதா பேருக்கு மாற்ற ஏற்பாடு செய்யச்சொன்னார்
அந்த வேலையும் முடிந்தபின் மகனிடம் வங்கி கணக்கு விவரம், பணம் எடுக்கும் அட்டை அதன் குறியீட்டுச் சொல் எல்லாவற்றையும் ஒப்படைத்தார்

அடுத்த சில நாட்களில் நான் வெளியூர் பயணம் செல்ல இருக்கிறேன் என்றார். அம்மாவும்தானே என்று கேட்டார் மகன்.இதுவரை அவர் தனியாக எங்கும் பயணித்தது கிடையாது .

இல்லை நான் மட்டும்தான் என்றார் சுருக்கமாக. அப்பாவின் சொல் செயல் எல்லாம் மாறுபாடாக இருப்பது மிகத் தெளிவாக மகனுக்குப் புரிந்தது . எல்லாம் தெரிந்த அப்பாவுக்கு நாம் என்ன சொல்வது என்ற ஒரு தயக்கம் .அம்மாவும் துணைவரின் கட்டளைப்படி எதுவும் சொல்ல மறுத்துவிட்டார்

அடுத்த நாள் அதிகாலையில் நடைப் பயிற்சிக்குப் போனவர் திரும்பி வரவே இல்ல .அவருடைய கைப்பேசியில் அழைத்துப்பார்த்தார்கள். அது வீட்டுக்குள்ளேயே ஒலித்தது.

மக்கள், உறவினர்கள், நண்பர்கள் யார் வீட்டுக்கும் போகவில்லை
நாட்கள் நகர்ந்து வாரங்களாகி வாரங்கள்  மாதங்கள ஆகின .இந்தா அந்தா என்று மூன்று மாதம் ஓடிவிட்டது.

குமரி முனையில் பார்த்தேன் ரிஷிகேஷில் பார்த்தேன், காசியில் பார்த்தேன் என்று பல வேறு செய்திகள் வந்தன . எதுவும் உறுதியாகவில்லை

சீதா உறுதியாக இருக்கிறார் > நான் எந்தத் தவறும் செய்யவில்லை . அவருக்குத் தவறு செய்யத் தெரியாது .அதனால் அவருக்கு எந்தத் தீங்கும் வராது .விரைவில் நலமுடன் திரும்புவார் என்று திடமாகச்சொல்கிறார்

தேடுதல் தொடர்கிறது .

(கதையும் தொடருமா தெரியவில்லை )

உங்களுக்கு ஏதாவது தகவல் கிடைத்தால்
1250 8999
என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்

இ(க)டைச் செருகல்

கடந்த இரண்டு மூன்று  ஆண்டுகளில் எனக்குத் தெரிந்த  சிலர் ,எல்லோரும் எழுபது வயது கடந்தும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவர்கள் ,திடீரென உடல் நலம், மன நலம் குன்றிப்போய்விட்டர்கள் மருத்துவம் சார்ந்த காரணம் எதுவும் புலப்படவில்லை

எய்தவர்கள் அறியாது வீசிய சொல்லம்புகளைத் தாங்க முடியாமல் இப்படி வீழ்ந்து விட்டார்களோ என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது .அந்த எண்ணத்தின் விரிவாக்கம்தான் இந்தக்கதை

மூளைக்கு வேலை

சென்ற வாரத்துக்கு முந்திய வாரம் நான் போட்டிருந்த புள்ளிப் புதிருக்கு யாரும் விடை சொல்லாததால் அதையே சென்ற வாரமும் போட்டிருந்தேன்

அதற்கு முதலில் சரியான விடை எழுதி பாராட்டுப் பெறுபவர் என் பேத்தி ஆத்திக்கா

எப்படி விடை தெரியும் என்று நான் தொலைபேசியில் கேட்டதற்கு என் குழந்தைப் பருவத்திலேயே நீங்கள் இதெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுத்தது இன்னும் என் நினைவில் இருக்கிறது என்று சொன்னது எனக்குப் பெருமையாக இருந்தது

அடுத்து தம்பி சகா இரண்டு வாரங்களுக்கு முன்பே விடை கண்டு பிடித்து விட்டதாகவும் வேறு யாரவது விடை சொல்லட்டும் என்று காத்திருந்ததாகவும் எழுதியிருந்தார் .அவருக்கும் பாராட்டுக்கள்

இது ஒரு உளவியல் புதிர்
புள்ளிகளைத் தாண்டி கோடுகள் போகக்கூடாது என்று நினைத்தோம் .. அதனல்தான் விடை வரவில்லை என்று பலரும் சொல்வார்கள் .
இது அவர்களாக மனதில் விதித்துக்கொண்ட இல்லாத ஒரு தடை (Assumptions , Mental Barriers ).

இது பற்றி சென்ற பகுதிக்கு முந்திய பகுதியில் குறிப்பிட்டிருந்தேன் .உளவியலில் இதை out of box  எல்லைகளளைத் தாண்டி சிந்திப்பது என்பார்கள் . (மாத்தி யோசி என்றும் குறிப்பிடலாம் )

Image result for 9 dots 4 lines puzzle


இந்த வாரப்புதிர்
ஒரு ஐந்து லிட்டர் குவளையும் மூன்று லிட்டர் குவளையும் உங்களிடம் இருக்கிறது ..ஒரு தொட்டியில் இருக்கும் தண்ணீரில் சரியாக நான்கு லிட்டர் தண்ணீர் எடுக்க வேண்டும்

 எப்படி? மிக எளிதான புதிர் – விடை அடுத்த பகுதியில்


இறைவன் நாடினால்

மீண்டும்

சந்திப்போம்

வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்
sherfuddinp.blogspot.com


. .

No comments:

Post a Comment