Saturday, 21 July 2018

வண்ணச் சிதறல் 24 பெற்ற தாயும்......




பெற்ற தாயும்......


நல்லதொரு  குடும்பம் பல்கலைக்கழகம் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக  எங்கள் குடும்பம் உறவினரால். சுட்டிக் காண்பிக்கப்படுவதுண்டு  
அந்தப்பெருமை மிகு  பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராய் இருந்து  ஆட்சி புரிந்த எங்கள் அம்மா பற்றி மிகச் சில நினைவுச் சிதறல்கள்
  
அத்தாவின் படிப்புக்கும் பட்டத்துக்கும் பதவிக்கும் சளைக்காமல் சலிக்காமல் ஈடு கொடுக்கும் உலக அறிவு, கேள்வி ஞானம், பகுத்தறிவு பட்டறிவு, யாரையும் எளிதில் சரியாக எடை போட்டுவிடும் மன முதிர்ச்சி, எதிலும் மனம் ஒன்றிய  கவனம் , ஒரு சன்னல் வழியே வேடிக்கை பார்த்து நாட்டு நடப்புகளை அறியும் திறன் என்று அம்மாவின் சிறப்புகளை அடுக்கிக்கொண்டே போகலாம்

கொஞ்சம் மலைப்பாக இருக்கிறது நினைக்கவே .
 எத்தனை உடன்பிறப்புக்கள், எத்தனை உறவுகள், எத்தனை  சுற்றங்கள்,எத்தனை  பிள்ளைகள்,எத்தனை  வளர்ப்புகள், எத்தனை இட மாறுதல்கள்,எத்தனை  வீடு மாற்றங்கள் எத்தனை பயணங்கள்  எத்தனை சம்பந்தங்கள் எத்தனை  திருமணங்கள் எத்தனை  மருமக்கள் எத்தனை பேறுகாலங்கள் , எத்தனை பேரப் பிள்ளைகள் எத்தனை விருந்துகள் எத்தனை விருந்தோம்பல்கள் 

-தலை சுற்றுகிறது

எத்தனை எத்தனை  என்னும்போதே எத்தனை பிரச்சினைகள் முளைத்திருக்கும் ! அத்தனையும் எதிர்கொண்டு, சமாளித்து வெற்றிகொண்டு குடும்பத்தின் பெயரை நிலை நிறுத்த வேண்டும்

நல்ல குடும்ப நிர்வாகி, கை தேர்ந்த சமையல் வல்லுநர் , சிறந்த மருத்துவர் என்று எதிலும் ஒரு நிறைவு

இவ்வளவு இருந்தும் எதுவும் அறியாதது போன்ற அடக்கம் எளிமை . சோபா போன்ற சொகுசு இருக்கைகளில் அம்மா உட்கார்ந்து பார்த்ததில்லை தொலைபேசி எவ்வவளவு நேரம் ஒலித்தாலும் எடுப்பதில்லை

அம்மாவின் சமையல்பக்குவமும் விருந்து உபசரிப்பும் சொல்லி மாளாது .ஆம்பூரில் பிரியாணி செய்முறையைக் கற்றுக்கொண்டு உற்றார் உறவினர்களிடையே பரப்பியது அம்மாதான் . அதே ஆம்பூரில் அம்மா செய்த சுண்ட வைத்த குழம்பு ஊரெங்கும் மணம் பரப்பியது ஒரு தனிக்கதை

சைவ உணவு ஆம்பூர் மக்களுக்கு அரிதான் ஒன்று. வாரத்தில் ஏழு நாளும் தினமும் மூன்று வேளையும் அசைவம்தான். அதிலும் குறிப்பாக கறிதான்
.ரசம், சாம்பார் இதெல்லாம் ஏன் மோர் கூட  அவர்கள் கேள்விப்படாத உணவுகள்.

எங்கள் மகிழுந்தில் அடிக்கடி அக்கம்பக்கம் உள்ள ஊர்களுக்கு நாங்கள் சிற்றுலா செல்வதுண்டு. மிகச்சுவையான உணவு அம்மா செய்வதுண்டு அப்படி  செல்வதற்காக எங்கள் வீட்டில் தயிர் சோறு செய்து தொட்டுக்ககொள்ள முழுப்பயிறு புளிக்குழம்பு சுண்ட வைத்து வைத்திருந்தார்கள் அம்மா . அந்தக் குழம்பை ருசி பார்த்த அண்டை வீட்டார் அதன் சிறப்பான சுவை பற்றி அக்கம் பக்கத்தில் தெரிவிக்க பல வீடுகளில் இருந்து மிக உயர்வான உணவு வகைகளைக் கொடுத்தனுப்பி பதிலுக்கு அந்த சுண்ட வைத்த புளிக்குழம்பை வாங்கி சுவைத்துப் பாராட்டியது ஒரு வரலாறு

புளிச்சோறுக்கு தொட்டுக்கொள்ள கறிப்பொரியல், தேங்காய்ச் சில்லு , பகல் உணவுக்கு இட்லி,தயிர்சோறு  என பல புதிய இணைவுகள் அம்மாவின் கண்டுபிடிப்புகள் 
..
பழப்பாகை(Fruit Jam ) விருந்தில் வெஞ்சனமாக அறிமுகப்படுத்தியதும் அம்மாதான்  

பழைய கால்சட்டை (Pants) யை தலையணையாக மாற்றும் வித்தையை மற்றவர்க்கு சொல்லிக்கொடுத்தது அம்மாதான்
எங்கள் பெரியம்மா
“ உங்க  சின்னம்மாவிடம் கொஞ்ச நேரம் பேசினால் பள்ளி,கல்லூரிப் படிப்பில் தெரியவராத உலக விசயங்கள் பலவற்றைத் தெரிந்து கொள்ளலாம்” என்று தன் மக்களிடம் சொல்வார்கள்

ஊறுகாய் தாளிப்பது என்றால் எரிக்க கொட்டாங்கச்சிதான் வேண்டும் .பிரியாணி செய்வதென்றால் இரண்டு நாட்களுக்கு முன்பே தயிர் துணியில் கட்டித் தொங்கும்..  மீன் குழம்பு என்றால் மண் சட்டிதான் .சமையல் எரி வாயு (cooking gas) வாங்க அம்மா  ஒத்துக்கொள்ளவே இல்லை.

ஒரு முறை அத்தா அம்மாவிடம் முட்டையை அடுப்பில் போட்டு பொறிக்கச் சொல்ல அம்மா முடியாதென்று மறுத்துவிட அத்தாவின் சொல்கேட்டு ஜமிலாக்குப்பி முட்டையை அடுப்பில் போட முட்டை விண்கலம் போல் பறந்து முகட்டில் மோதி விழுந்ததாம்

மிக எளிய மக்களிடம் நன்றாகப் பேசி பழகுவது அம்மாவின் தனி சிறப்பு .தான தருமங்கள் செய்யத் தயங்காத அம்மா ஒரு நெருங்கிய உறவினரிடம் காட்டிய கண்டிப்பு இன்னும் மனதில் இருக்கிறது .
“திருப்பத்தூரில் இருக்கும் ஒரு கடைக்காரர் சில பொருட்கள் வாங்கி வரும்படி என்னை காரைக்குடிக்கு அனுப்பினார். இப்போது திரு.வுக்கு திரும்பிப்போக  பஸ்ஸுக்கு காசு இல்லை “
என்று அம்மாவிடம் பணம் கேட்டார்

பணம் வாங்காமல் வந்தது உங்கள் தவறு என்று அம்மா பணம் கொடுக்க அறுதியாக மறுத்துவிட்டார்கள்
மிகப் பின்புதான் தெரிந்தது அந்த உறவினரின் நேர்மை சற்றுக் குறைவுதான் என்பது

காரைக்குடியில் நாங்கள் இருந்த காலத்தில் விருந்தினர் வருவது ஒரு தினசரி நிகழ்வாக இருந்தது

மதுரையில் நாங்கள் இருந்தபோது ஒரு கோடை விடுமுறையில் இருபதுக்கும் மேற்பட்ட விருந்தினர்கள் பல நாட்கள் தங்கியிருந்தனர் .
“மகராசி பேல் பேலாக அப்பளம் பொரிக்கும் “என்று அந்த மதுரை விடுமுறை பற்றி ஒரு கருத்து ஓன்று நூரக்கா போட்டிருந்தது

சென்னையில் எங்கள் அக்கா திருமணத்திற்கு காரைக்குடியில் இருந்து இரண்டு பேருந்தில் உறவினர்கள் அழைத்துச்செல்ல ஏற்பாடு .
ஒரு பேருந்தில் போன நாற்பது பேருக்கு  தயிர் சோறும் மிகச் சுவையான மாங்காய்த் தொக்கும் செய்து கொடுத்தது அம்மாவின் சாதனைகளில் இன்னொன்று .

என் திருமணத்தையொட்டி வங்கித்தோழர்களுக்கு வீட்டில் பிரியாணி விருந்து வைத்தோம் . ஒரு ஐம்பது பேர் சாப்பிட்டிருப்பார்கள். சமையல் அம்மாதான் .அந்த பிரியாணி சுவையும் அம்மாவின் ஊறுகாய் சுவையும் இன்றளவும் வங்கித் தோழர்கள் நினைவில் நிற்கின்றன 

அம்மாவின் பேறுகால கவனிப்பு ஒரு மருத்துவருக்கு மேல் இருக்கும்
அது பற்றி மெகராஜ் அக்கா முன்பு ஒரு முறை எழுதியது :
அம்மாவின் உபசரிப்பு சிறப்பாக இருக்கும் .முட்டைதோசை, பட்டர் டீ, நெஸ்காபி என எல்லாம் ஸ்பெஷல் .எல்லோருக்கும் பிறந்த எல்லாகுழந்தைகளுக்கும் பிறந்த பின் அம்மா செய்யும் கவனிப்பு வேறு யாரும் செய்ய முடியாது .ஹாஸ்பிடல் போகும் முன் குளிக்க வைத்து இரட்டைச்சடை,.குழந்தை பிறந்தபின் வெற்றிலையில் கோரோசனை, தேன்.. குழந்தைக்கு மண் கிண்ணத்தில் மோதிரம் உரசி தேன் பாங்கு சொல்லி ஊட்டப்படும்.. காலையில் டெட்டால் கலந்த வெந்நீர் குளியல், கருப்பட்டி காபி, இஞ்சிச்சாறு, அஞ்சு மருந்து .வாராவாரம் லேகியம் சூப், நாற்பது அன்று வீட்டுக்கூரை தவிர எல்லாம் கழுவப்படும் ,

வீட்டுப் பணியாளர்களுக்கு அம்மா கொடுக்கும் சாப்பாட்டைப் பார்த்தால் யாருக்கும் நாமும் பேசாமல் வீட்டுப்பணியில் சேர்ந்து விடலாம் என்ற எண்ணம் தோன்றும்
ஒரு மண் சட்டி நிறைய மணக்கும் பழைய சோறு. .அதற்கு மேல் இன்னொரு சட்டியில் கமகமக்கும் சுண்டவைத்த பழைய குழம்பு . அதற்குமேல் ஒரு தட்டில் இரண்டு ஊறுகாய் வகைகள் உப்பு, வெஞ்சனம் என்று ஒரு பல்சுவை விருந்தே இருக்கும்

சையது சச்சாவை அம்மா நடத்தும் விதத்தில் ஒரு தாயின் பாசமும் ஒரு அக்காவின்  பரிவும் கண்டிப்பும் தெரியும்

நோன்பு மாதத்தில் எங்கள் வீட்டுக்கு வருபவர்கள் நோன்பு திறக்க வைக்கும் உணவு வகைகளைப் பார்த்து அசந்து விடுவார்கள்
பெருநாளுக்கு முதல் நாள் இரவு முழுக்க பலகாரம் செய்யும் வேலை நடக்கும்

குடும்ப நிர்வாகத்தில் அத்தாவின் கை ஓங்கியிருப்பது போல் தெரியும் .ஆனால் பெரும்பாலும் அம்மாவின் முடிவே ஒப்புக்கொள்ளப்படும்  அப்படி இல்லாவிட்டால் பின்னால் அம்மாவின் கருத்துத்தான் சரியென்று தெரிய வரும்
எடுத்துக்காட்டக ஒன்றை மட்டும் சொல்கிறேன். .அத்தாவுக்கு இரண்டாவது முறையாக திருநெல்வேலிக்கு இட மாறுதல் வந்தபோது அம்மா நகராட்சிக் குடியிருப்புக்குப் போக வேண்டாம் . பணி ஒய்வு நெருங்கி விட்டதால் இப்போதே வேறு வீடு பார்த்துப் போய் விடலாம் என்று சொன்னது . அத்தா ஏனோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
பணி ஓய்வுபெற்றபின் சரியான வீடு கிடைக்காததால் வளர்த்த ஆடு கோழி மாடெல்லாம் கொண்டு போக முடியவில்லை

அத்தாவுக்கு  அதிகாலையில் எழுந்து விடும் பழக்கம் உண்டு . தொழுது விட்டு வந்தவுடன் காபி வேண்டும் . எட்டு மணிக்குள் காலைச்சிற்றுண்டி. பிறகு பதினோரு மணிக்கு விலைக்கு வாங்கிய வடை தட்டை சமோசா என எதாவது காபி யுடன் ..ஒரு மணிக்கு மதிய உணவு .சிறிது நேரத்தில் மிளகாய்ப்பொடி கலந்து  எண்ணையில் வறுத்த வேர்க்கடலை . நாலு மணிக்கு மாலை காபி . எட்டு மணிக்குள் இரவு உணவு . அதற்குப்பின்  வாழைப்பழம் பால் என்று ஒரு பட்டியல்
இதற்கிடையில் அத்தாவைப் பார்க்க வரும் நண்பர்களுக்கும் அத்தாவுக்கும் காபி
இந்த அட்டவணைப்படி அத்தாவைக் கவனிப்பதில் அம்மா சிறிதும் பின் வாங்கியதில்லை.

உடன்குடியில் நான் பணி புரிந்த ஒரு ஆண்டும் சனிக்கிழமை மாலை வீட்டுக்கு வந்து திங்கள் அதிகாலையில் திரும்புவேன் .அந்தக்காலை நேரத்திலேயே சுடச்சுட தோசையும் கறிக்குழம்பும் தவறாமல் கொடுத்து விடும். தம்பி சகாவுடன் மிதிவண்டியில் போய் நெல்லை சந்திப்பில் தொடரியைப் பிடிப்பேன்  

பிரியாணி நெய்ச்சோறு போன்ற சிறப்பு உணவுகள்  எங்கள் வீட்டில் இயல்பான உணவாகி விட்டன. . கறி சிறப்பாக இருந்தால் உடனே பிரியாணி .அத்தா நிர்வாகப் பொறுப்பில் இருந்த கூட்டுறவு சங்கத்தில் நல்ல பச்சரிசி போட்டால் பிரியாணி , நெய்ச்சோறு செய்யப்பட்டு குறைந்தது நான்கைந்து விருந்தினர்கள் வருவரர்கள்

சிகரெட் புகை மணமும்  பெட்ரோல் மணமும் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும் .காபியை தொட்டுக்கொண்டு இட்லி தோசை சாப்பிடுவது அம்மாவின் தனிச் சுவை .தலையணையை இரண்டாக மடித்து தலைக்கு வைத்துக்கொள்ளும் அம்மா வெளியூர் பயணத்தில் தலையணை கொண்டு செல்வது வழக்கம் .

அம்மாவின் உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தவை
தோசைக்கு வைக்கும் தக்காளிச் சட்னி, கெட்டியான வெங்காயச் சட்னி , நெய்ச்சோறு, பிரியாணிக்கு வைக்கும் சாம்பார்
காய்கரி போடாமல் தேங்காய்ச்சில்லு  நிறைய போட்டு வைக்கும் சிறப்பு சாம்பார்
கொத்தமல்லிமணம் கமழும் முருங்கைக்காய் சாம்பார்
நிறையத் தேங்காய்ச்சில்லு போட்டு வைக்கும் மீன் குழம்பு
சுடுகஞ்சி -பேர்தான் கஞ்சி ஒரு சுவையான உணவு , எள்ளுத் துவையல்
கோதுமை ரொட்டியை அழகான சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பொறித்தெடுத்த கொத்துப்புரோட்டா
தாளித்த இடியப்பம்
தேங்காய் சில்லு சேர்த்து பொறித்த கறி
கைமா அவரைப்பொறி.யல்
இப்படி அடுக்கிகொண்டே போகலாம்

குடும்ப ஓய்வூதியம்(Family Pension ) தொடர்பாக அத்தாவின் ஓய்வூதிய நூலில் (Pension Book) அம்மா அத்தா இருவரும் இருக்கும் புகைப்படம் ஒட்ட வேண்டும் ,அதற்காக அத்தாவின் நண்பர் புகைப்படம் எடுக்க வீட்டுக்கு வந்தார் . அம்மாவின் முகத்தில் ஒரு கடுகடுப்பு சிடுசதுப்பு . .இதெல்லாம் எனக்குத் தேவையில்லை என்பது போல் ஒரு தீர்க்க தரிசனமா என்று தெரியவில்லை

அம்மாவுக்கு கருப்பு நிறம் பிடிக்கவே பிடிக்காது .ஆனால் மருத்துவ மனை செல்ல கருப்பு plastic can  வாங்கியது
இருபத்தியேழு ஆண்டு வாழ்கையில் நான் பிரிவுத்துயரை ,இழப்பின் வலியை , மறைவின் தாக்கத்தை முழுதாக உணர்ந்தது மே 13 , வெள்ளிக்கிழமை 1977 அன்று

தனிமையில் மனதார வாய்விட்டு கதறி அழ வேண்டும் என்று மாடிக்குப்போனேன் .அங்கு என் தம்பி சகா ஏற்கனவே தனிமையில் அழுது கொண்டிருந்தான் .அவனை அமைதிப்படுத்தும் முயற்சியில் என் அழுகையைக் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டேன்,

ஆண்கள் அழக்கூடாதாமே
 
நிறைவாக சில சொற்கள்
என் பதிவுகளில் பொருள்குற்றம், கருத்துக்குற்றம் இருந்தால் குறிப்பிடுங்கள் .திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் .
விடுதல்களைப் பொருட்படுத்த வேண்டாம், வேண்டுமென்று எதையும் நான் விடுவது இல்லை
நான் பலமுறை குறிப்பிட்டது. போல் என் எண்ணங்களின் வெளிப்பாடும் பகிர்வும்தான் என் பதிவுகள் 
அதிலும் எதிர்மறை கருத்துக்கள் பிறர் மனம் புண்படும் செய்திகள் அவலச்சுவை இவற்றையெல்லாம் முடிந்தவரை முழுமையாகத் தவிர்த்து விடுவேன்
.ஒரு பாட நூலோ வரலாற்றுப்பதிவோ இல்லை .நான் எழுதுவது
அவரவர் கருத்துக்களை அவரவர் கோணத்தில் பதிவு செய்தால் அத்தா அம்மா  நம் குடும்பம் பற்றி ஒரு முழு நூலாக வலைப்பதிவில்  (Blog)  வெளியிடலாம் .இதுவும் நான். முன்பே சொன்னதுதான் .எல்லோருக்கும் எழுத்துத்திறன் நிறைய இருக்கிறது சிறிது நேரம் ஒதுக்கி முயற்சிக்கலாமே . காலம் போகப்போக பல செய்திகள் நம் நினைவிலிருந்து மறைந்துவிடும். அதற்குள் துவங்கலாம்

இ(க)டைச் செருகல்
“பார்க்க வருவார் கோடி
பாதையிலே நிற்பார் கோடி
,தேடி வருவார் கோடி
தெரு முனையில் நிற்பார் கோடி “
இது அத்தா பற்றி ஜமிலாக்குப்பி பெருமை பேசும் சொல்லடை என்று சர்மதா அயுப்கான் அனுப்பியது

மூளைக்கு வேலை
சென்ற பகுதியில் கேட்ட கேள்விக்கு சரியான விடை
அத்தா சொன்னது
“ தனியார் மருத்துவமனை போகும் அளவுக்கு வசதி இருக்கிறது அல்லவா ,தனியார் வண்டி பிடித்துக்கொள்ளுங்கள் “
அவ்வளவுதான் . ஆனால் இதைச்சொல்ல, சட்ட அறிவு,.இதன் பின் விளைவுகளை எதிர் கொள்ளும் மனதிடம் இவற்றையெல்லாம் ஒரு நொடிக்குள் சேகரித்து சிந்தித்து பதில் சொல்லும் நல்ல presence of mind, எல்லாம் தேவை . அதுதான் ஆணையர் அதுதான் அத்தா
சரியான விடை எழுதிய உடன்பிறப்பு
 மெகராசுக்குப் பாராட்டுக்கள்

இந்த வாரப்புதிர்
ஆயிரத்தில் ஐநூறைக் கழித்து பின் நாற்பத்தியாறைக் கழித்தால் வரும் எண் எதைக்குறிக்கிறது ?
மிக எளிதான புதிர்

இறைவன் நாடினால்
மீண்டும்
சந்திப்போம்  

வலைநூல் முகவரி
sherfuddinp.blogspot.com





.






No comments:

Post a Comment