Wednesday, 25 July 2018

நம் கடலூரை மீட்போமா !! 6 கல்வி



கல்வி


கடலூரின் நாடி நரம்பெல்லாம் தளர்ந்து நொறுங்கி இருப்பது பற்றி சென்ற வாரம் போகுவரத்து பகுதியில் பார்தோம் .
தனி ஒருவனுக்கு, ஒரு குடும்பத்துக்கு, ஒரு சமுதாயத்துக்கு ஒரு நாட்டுக்கு ஏன் உலகுக்கே கண்ணாக விளங்கும் கல்வி பற்றி இந்த வாரம்
ஒரு மாறுதலாக கடலூர் பற்றிய நல்ல செய்திகள் சிலவற்றை முதலில் பாப்போம்
முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ---
1717 ஆம் ஆண்டு  கடலூரில் துவங்கப்பட்ட புனித டேவிட் பள்ளி தமிழகத்தின் இரண்டாவது பள்ளியாகும் ----
என்கிறது இணையம்
அதே இணையத்தில் கண்ட கடலூர் உலகுக்குத் தந்த சான்றோர்கள் பட்டியலைபார்ப்போம்
ஆற்காடு சகோதரர்கள் ,ஆற்காடு இரட்டையர் என்றும் பெயர் பெற்ற ஆற்காடு லட்சுமண முதலியார் ராமசாமி முதலியார்
சிறந்தஎழுத்தாளரும் சிந்தனையாளருமான ஜெயகாந்தன்
பெ.ம.பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி .வீரமணி
வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமி அவர்கள்
சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராய் இருந் சுப்பராயலு ரெட்டியார்
நீதியரசர்கள் கண்ணன் சம்பத் பாலசுப்பிரமணியம்
கடலூர் முதல் இசுலாமிய தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் அப்துல் லதீப் (எ) ஹிலால்
இது வரை பார்த்தது வரலாற்றுப்பெருமை
இனி இன்றைய நிலையைப் பார்ப்போம் .மீண்டும் இணையத்தில் இருந்தே தருகிறேன். மிகதெளிவாக பிரச்சினை எல்லாக் கோணங்களிலும் அலசப்பட்டுள்ளது

 Added : மே 17, 2017 

. ஒரு காலத்தில் நாட்டிற்கு பல கல்வியாளர்களை உருவாக்கித் தந்து, தமிழகத்தின் கல்விக் கேந்திரமாக விளங்கிய கடலுார் மாவட்டம், அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மை, ஆசிரியர்களின் அலட்சியம், பெற்றோர்களின் மெத்தனம், ஆசிரியர் சங்கங்களின் ஒத்துழையாமை போன்றவைகளால் பொதுத் தேர்வுகளில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாநில அளவில் தொடர்ந்து மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவில், கடலுார் மாவட்டம் வழக்கம் போல் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டு தேர்வு முடிவுகளின் போதும் மாவட்ட நிர்வாகமும், கல்வி அதிகாரிகளும், வரும் ஆண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவும், மாவட்டத்தை முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வருவோம் என வாய்ச் சவடால் விடுவதோடு சரி. அதன் பிறகு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என்பது ஒவ்வொரு தேர்வு முடிவுகளின் போதும் கண்கூடாக தெரிகிறது. இம்மாவட்டத்தில் 200 மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து 14 ஆயிரத்து 545 மாணவர்களும், 16 ஆயிரத்து 788 மாணவியர் என மொத்தம் 31 ஆயிரத்து 333 பேர் தேர்வு எழுதினர். இதில் 11 ஆயிரத்து 658 மாணவர்களும், 14 ஆயிரத்து 931 மாணவியர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 589 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 84.86. வழக்கம் போல் இந்த ஆண்டும் தமிழகத்தில் கடைசி இடம் கிடைத்துள்ளது.

ஆண்டுதோறும் கல்வியில் இதே நிலை நீடிப்பதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் கல்வியில் அரசு கொண்டு வந்துள்ள சட்டதிட்டங்கள் முதல் பெற்றோர், மாவட்ட நிர்வாகம், கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்கங்கள் என சொல்லிக் கொண்டே போகலாம்.

பெற்றோருக்கும் பொறுப்பு வேண்டும்
'
ஐந்தில் வளையாதது; ஐம்பதியில் வளையாது' என்பார்கள் அதற்கு தகுந்தாற்போல், முன்பெல்லாம் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும் போது, 'பையன் தப்பு செய்தால் கண்ணு ரெண்டையும் விட்டுட்டு தோலை உறிச்சி எடுங்க' எனக்கூறி சேர்த்துள்ளனர். ஆனால் இன்று, அப்படியல்ல மாணவர்களை தண்டிக்காமல் கற்பிக்க வேண்டும். ஆனால், இதனை மாணவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதால், கற்றலில் திறன் குறைந்த மாணவர்களை தண்டித்து சொல்லிக் கொடுக்க முடியாத நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர். அப்படியே தண்டித்தாலும், பெற்றோர்களும் வரிந்து கட்டிக் கொண்டு வருவதால், ஆசிரியர்களும் படிக்காத மாணவர்களை கண்டும் காணாமலும் விட்டு விடுகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் பள்ளியில் சேர்த்துவிட்டால் கடமை முடிந்து விட்டதாகவே கருதுகின்றனர். தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு ஒழுங்காக செல்கின்றனரா? அவர்களின் கற்றல் திறன் எப்படி என்பதை ஆசிரியரை சந்தித்தும் கேட்பதில்லை. இதனால், பெற்றோர் - ஆசிரியருக்கான இடைவெளி ஏற்படுவதுடன் மாணவன் - ஆசிரியருக்கான இடைவெளியும் அதிகரித்துள்ளது.

தலைமையாசிரியர் - ஆசிரியர் இடைவெளிஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும்பாலும், அனுபவம் மற்றும் ஆற்றல் மிக்கவர்களாகவே உள்ளனர். ஆனால், அவர்களில் பலர் தனது திறமையை, தான் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சிக்காக பாடுபடுவதில்லை.தனியார் பள்ளி மாணவர்களுடன் நெருங்கிப்பழகி, அன்பாகவும் அரவணைத்து பாடம் கற்பிக்கும் அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் ஏனோ, தான் பணியாற்றும் பள்ளிகளில் அவ்வாறு நடந்து கொள்வதில்லை. மெல்ல கற்கும் திறன் கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு எடுக்க வேண்டும் என அப்பள்ளி தலைமை ஆசிரியர் வலியுறுத்தினாலும், ஆசிரியர்கள் கேட்பதில்லை.

இதற்கு காரணம் ஆசிரியர் பல ஆண்டுகளாக அதே பள்ளியில் பணியாற்றி வருவதால், அவர்களை தலைமை ஆசிரியர்களால் வேலை வாங்க முடியவில்லை. மீறி செயல்பட்டால் தலைமை ஆசிரியருக்கு எதிராக மாணவர்களை துாண்டிவிடுவது, ஜாதி சாயம் பூசுவது போன்ற செயல்களில் ஒருசில ஆசிரியர்கள் ஈடுபடுவதால், தலைமை ஆசிரியர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத நிலை உள்ளது.

இடமாற்றம் அவசியம்அரசு ஊழியர்களுக்கு மூன்று ஆண்டிற்கு ஒருமுறை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற அரசாணையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., நிதிச்சுமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களுக்கு மட்டும் இதில் விலக்கு அளித்தார். காரணம் 8 கி.மீ., துாரத்திற்கு அப்பால் இடமாற்றம் செய்யும் அரசு ஊழியருக்கு இடமாற்ற பயணச் செலவு வழங்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகளவில் இருப்பதால், கூடுதல் நிதிச்சுமை என்பதால், ஆசிரியர்கள் விரும்பினால் மட்டுமே இடமாற்றம் என மாற்றப்பட்டது. அன்றைய காலத்தில் 10 முதல் 20 கி.மீ., துாரத்திற்கு ஒரு மேல்நிலைப் பள்ளிகள் இருந்தது. ஆனால், இன்று 5 முதல் 8 கி.மீ., க்கு ஒரு மேல்நிலைப் பள்ளி உள்ளதால், இடமாற்ற பயணச் செலவு வழங்க வேண்டியதில்லை. அதனால், ஆசிரியர்களை கட்டாயம் மூன்று ஆண்டிற்கு ஒருமுறை இடமாற்றம் செய்தால் தனி நபர்களின் ஆதிக்கம் மற்றும் ஜாதிய செயல்பாடுகள் பெருமளவு தவிர்க்க முடியும்.

பெண்கள் பள்ளியில் ஆசிரியைகள் பெண்கள் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களும், ஆண்கள் பள்ளியில் பெண் ஆசிரியர்கள் அதிகளவு பணியில் உள்ளனர். இதனால், ஆண் ஆசிரியர்களிடம் மாணவிகள் பாடம் குறித்தான சந்தேகங்களை சகஜமாக கேட்க முடியாமல் ஒரு வித இடைவெளி ஏற்படுகிறது. இதே போன்று மாணவர்கள் பயிலும் பள்ளியில் பெண் ஆசிரியைகள் பணிபுரிவதால் அங்கும் ஆசிரியை மாணவர்களுக்கான இடைவெளி ஏற்படுகிறது. இந்த குறைபாட்டைத் தவிர்க்க பெண்கள் பள்ளிகளுக்கு பெண் ஆசிரியைகளையும், ஆண்கள் பள்ளிகளுக்கு ஆண் ஆசிரியர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்.

அதிகாரிகளின் ஆண்டு ஆய்வு தேவைகல்வித்துறை அதிகாரிகளால் இந்த கல்வியாண்டில் மட்டும் தலைமை ஆசிரியர்களுக்கு 60 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. அதேபோன்று 900 வகையான புள்ளி விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கூட்டம், புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணியிலேயே தலைமை ஆசிரியர்கள் கவனம் செலுத்துவதால், ஆசிரியர் பாடம் நடத்துவதையோ, மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்கவோ முடியாத நிலை உள்ளது. அதேபோன்று கல்வித்துறை அதிகாரிகளின் ஆண்டு ஆய்வு என்பது மாவட்டத்தில் பெயரளவில் மட்டுமே உள்ளதே தவிர நடைமுறையில் இல்லை. இதன் காரணமாக ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் மிகவும் மெத்தனமாக உள்ளனர். பள்ளிகளில் மாணவர்கள் திறன் குறித்து அதிகாரிகள் ஆண்டு ஆய்வை கட்டாயமாக நடத்தப்பட வேண்டும்.

சாட்டையை சுழற்றாத மாவட்ட நிர்வாகம்ஆண்டுதோறும் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதும் மாவட்ட கல்வித்துறையுடன் இணைந்து திறமைமிக்க, அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களை அழைத்து கல்வித்தரத்தை மேம்படுத்த ஆலோசனைகளை நடத்த வேண்டும். நல்ல ஆலோசனைகளைப் பெற்று அதன்படி நடக்க ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். கல்வியில் மட்டுமின்றி பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாவட்டமாக விளங்குவதால், ஏராளமான ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் இம்மாவட்டத்தின் கல்வித்தரத்தை உயர்த்த மாவட்ட நிர்வாகம், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களின் திறமைகளையும் வெளிக் கொண்டு வர கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சங்கங்கள் மனது வைத்தால்தங்களின் உரிமையை நிலை நாட்ட சங்கம் என்ற நிலை மாறி, கடமையை செய்யாமல் இருக்க சங்கம் என்ற நிலை கடலுார் மாவட்டத்தில் உள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளாகவே உள்ளனர்.

இவர்கள் சங்க பணிகளிலயே அதிக கவனம் செலுத்துவதால் கற்பித்தல் பணி பெரிதும் தடைபடுகிறது. இதனை தலைமை ஆசிரியர் அல்லது கல்வித்துறை அதிகாரிகள் கேட்க முயன்றால் சங்கம் சார்பில் போராட்டம் நடத்துவது, மாநில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, மாவட்ட அதிகாரிகளின் நடவடிக்கையை தடுப்பது.

அதேபோன்று சங்க நிர்வாகிகள் சிறப்பு வகுப்புகள் எடுக்காததோடு, பிற ஆசிரியர்களையும் சிறப்பு வகுப்புகள் எடுக்க விடாமல் தடுப்பதும், கற்பித்தல் பணியை மேம்படுத்த அதிகாரிகள் நடத்தும் சிறப்பு பயிற்சியிலும் பிற ஆசிரியர்களை பங்கேற்க விடாமல் தடுப்பது மாவட்டத்தில் தொடர் கதையாக உள்ளது.

மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் சங்கங்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் கல்வித்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும். சங்கங்கள் மனது வைத்தால் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை இன்னும் கூடுதலாக மட்டுமின்றி தமிழகத்தில் முதல் 10 இடங்களில் ஏன் முதலிடத்தைக் கூட நம்மால் எட்ட முடியும்.

மாணவர்களை ஆசிரியர்கள் தத்தெடுக்க வேண்டும்தலைமை ஆசிரியர், ஆசிரியர், மாணவர், பெற்றோர் அனைவரும் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படும் நிலையை உருவாக்க வேண்டும். அதே போன்று சிறந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் கல்வியில் சிறந்து விளங்க அந்தந்த மாவட்ட மக்கள் தான் முக்கிய காரணம். தங்கள் ஊர் பள்ளி தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் அர்ப்பணிப்போடு செயல்படுகின்றனர். மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்த அனைத்து உதவிகளும் செய்கின்றனர். அந்த நிலை நமது மாவட்டத்தில் உருவாக வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மதிக்கப்பட வேண்டும். மாணவர்களுடனான உறவு மேம்பட வேண்டும். அதற்கு ஒவ்வொரு ஆசிரியர்களும் மாணவர்களை தத்தெடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக பள்ளி நிர்வாகக்குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகங்கள் முறையாக செயல்பட வேண்டும். இதன் உறுப்பினர்களாக பள்ளியில் படிக்கும் மாணவரின் பெற்றோர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.நடராசன், கல்வியாளர், கடலுார்.


பெற்றோர்களிடம் விழிப்புணர்வு இல்லைபின்தங்கிய விருத்தாசலம் கல்வி மாவட்ட மாணவர்களிடம் கல்வியை கொண்டு செல்வது மிகவும் சிரமமானது. நன்கு கற்கும் மாணவர்களையும் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என நினைத்து, தனியார் பள்ளிகளிலும், வெளி மாவட்ட பள்ளிகளிலும் சேர்த்து விடுகின்றனர். தற்போது கற்கும் திறன் குறைந்த மாணவர்களே அரசு பள்ளிகளில் படிப்பதால், அவர்களை தேற்றி வருகிறோம். பெற்றோர்களிடம் விழிப்புணர்வு குறைவாக உள்ளது. தங்கள் பிள்ளைகள் தினமும் படிப்பு விஷயத்தில் கண்காணிக்க வேண்டும். வரும் கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களிடையே நன்கு எழுத, படிக்க, பழக (BRIDGE COURSE) நம்பிக்கையூட்டும் பயிற்சி கொடுக்க உள்ளோம். இதற்காக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.கோமதி, மாவட்ட கல்வி அலுவலர், விருத்தாசலம் கல்வி மாவட்டம்.


போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்தற்போது, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பான்பிராக், குட்கா, மது போன்றவைகளுக்கு கூட அடிமையாகி வருகின்றனர். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமல்ல. தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கூட இந்த பழக்கத்திற்கு அடிமையாக உள்ளனர். இவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியர்களும் கண்டு கொள்வதில்லை. மாணவர்களுக்குள்ஜாதிய மோதல்மாணவர்களிடையே ஜாதி ரீதியாகவும், ஒரே ஊரைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு கோஷ்டியாக செயல்படுவதும், ஏதாவது ஒரு சின்ன காரணங்களுக்கு கூட மாணவர்களுக்குள் பெரிய மோதலாக மாறுகிறது. அது அந்தந்த பகுதி கிராம அளவில் மோதலாக வெடிக்கிறது. இதுபோன்று பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாணவ பருவத்தில் அபாயகரமான சூழலை நோக்கி செல்வதாக உணர்ந்த போலீஸ் டி.ஐ.ஜி., முயற்சியால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கூட்டம் கூட நடத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இப்பிரச்னை மாவட்டத்தில் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.கண்டு கொள்ளாதமக்கள் பிரதிநிதிகள்ஒவ்வொரு ஆண்டும், பொதுத் தேர்வு முடிவுக ளின் போது, மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளை அழைத்து ஆய்வுக்கூட்டம் நடத்தி, தேர்ச்சி சதவீதம் குறைவதற்கான காரணம் குறித்து விவாதித்து, காரணமான ஆசிரியர்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், தேர்ச்சி சதவீதம் குறைவது குறித்து அவர்கள் கவனத்தில் கொள்வதே இல்லை. மாறாக, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் கல்வித்துறை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கும் வேலைதான் இம்மாவட்டத்தில் நடக்கிறது.


வேலைக்கு செல்வதால்பாதிக்கும் படிப்புமாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் குறைவுக்கு முக்கிய காரணம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகளே. அரசு, ஆதிதிராவிடர் மற்றும் நகராட்சி ஆண்கள் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பலர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்கள் தங்கள் குடும்ப சூழல் காரணமாக பலர் பள்ளி நாட்களிலேயே முந்திரி கொட்டை பொறுக்குதல், முந்திரி கொட்டை உடைத்தல், பலா அறுவடை, மணிலா அறுவடை போன்ற விவசாய பணிகளிலும், திருமண விருந்து, சமையல் பணி உள்ளிட்ட பிற கூலி வேலைகளுக்கு செல்வதால், அவர்களால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடிவதில்லை.


கவலைப்படாத அதிகாரிகள்ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் மிக குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இப்பள்ளிகள், கல்வித்துறையின் நேரடி கட்டுப்பாடில் இல்லாததே. இதனால், தேர்ச்சி குறைவு தொடர்பாக ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகளும் தேர்ச்சி குறைவு குறித்து கவலைப்படுவதும் இல்லை.


இப்போது தான் பொறுப்பேற்றேன்பிரச்னைகள் களையப்படும்கடந்த 10ம் தேதி தான் நான் பொறுப்பேற்றுள்ளேன். தேர்ச்சி குறைவிற்கான காரணம், மாவட்ட சூழல், மாணவர்களின் நிலை, ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. தேர்ச்சி குறைவிற்கான காரணத்தை கண்டறிந்து அதனைக் களைந்து தேர்ச்சியை அதிகரிக்க, வரும் கல்வி ஆண்டு துவக்கத்தில் இருந்தே தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.-முருகன், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி.

வியப்பான தேர்வு முடிவுஇந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலம் கேரளா. இம்மாநிலத்தில் கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எழுத்தறிவு பெற்றவர்கள் 93.91 சதவீதம். அந்த மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வின் தேர்ச்சி சதவீதம் 80 சதவீத அளவே உள்ளது. ஆனால், 83 சதவீத எழுத்தறிவு பெற்ற தமிழகத்தில் 90 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்று வருவது பெரும் வியப்பாக உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


கிராமப்புற பள்ளி ஆசிரியர்கள் மீது அதிகாரிகள் கவனம் தேவைஅரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் உள்ளனரா? இருக்கும் ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனரா? கிராமப்புறங்களில் ஆசிரியர்கள் பள்ளி நேரத்திற்கு செல்கிறார்களா? என ஆய்வு செய்வதில் கல்வித்துறை அதிகாரிகள் கோட்டை விட்டு விடுகின்றனர். முறையாக ஆய்வு செய்திருந்தால் பள்ளிகள் மற்றும் மாணவர்களிடத்தில் உள்ள குறைபாடுகள் தெரிந்து இருக்கும். ஆசிரியர்களை கூப்பிட்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தி, டீ, பிஸ்கெட் சாப்பிட்டு விட்டு அவர்களை அனுப்பி விட்டால் எல்லாம் முடிந்து விட்டதாக அதிகாரிகள் நினைத்து விடுகின்றனர். முன்கூட்டியே முறையான நடவடிக்கைகளை எடுத்திருந்தால் கடலுார் மாவட்டம் கடைசியில் தள்ளப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.


ஆசிரியர்கள் - மாணவர்களிடையேஇணக்கம் இல்லாதது ஒரு காரணம்பிளஸ் 2 தேர்வு தேர்ச்சி குறைவு குறித்து ஆய்வு செய்ததில் நகர் புறத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வி.காட்டுப்பாளையம், பேர்பெரியாங்குப்பம், மருங்கூர் போன்ற கிராமப்புற பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. பெண்கள் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. தேர்ச்சி குறைவாக இருக்கும் பள்ளிகளில், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. ஆசிரியர்களும் அவர்களை கட்டாயப்படுத்தி படிக்க வைக்க முடியாத சூழல் இருப்பதாக தெரிகிறது. இந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற மாணவர்கள் - ஆசிரியர்களுக்குண்டான நல்லுறவை ஏற்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் சொல்வதைக்கேட்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக கல்வித்துறை, மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளும்.-குமாரசாமி, மாவட்ட கல்வி அதிகாரி, கடலுார் கல்வி மாவட்டம்.

பள்ளிக்கு ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை
அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் முறையாக பாடம் நடத்துவதில்லை. இதற்கு பயந்தே எனது மகனை தனியார் பள்ளியில் சேர்த்தேன். ஆனால், அங்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் தான் சிறப்பு வகுப்பு நடத்துகின்றனர். தனியார் பள்ளிகளில் சிறப்பாக பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியர்கள், அவர்கள் பணியாற்றும் அரசு பள்ளியில் முறையாக பாடம் நடத்துவதில்லை. அரசு பள்ளிகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்பு எடுப்பதை தடை செய்ய வேண்டும். -செந்தமிழ்ப்பெருமாள், சிறுதொண்டமாதேவி, பண்ருட்டி.

பெற்றோர்கள் கவனிப்பார்களா?விழுப்புரம் மாவட்டத்தில் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றை தனியார் நிறுவனம் தத்தெடுத்து, ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்களை நியமித்து சம்பளம் வழங்கி வருகிறது.காலை மற்றும் மாலையில் நடக்கும் சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பால் மற்றும் பிஸ்கட் வழங்கி, மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. இப்பள்ளி கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வில் 98 சதவீதம் தேர்ச்சி பெற்றது. அந்த பள்ளிக்கு அந்த தனியார் நிறுவனம் இந்தாண்டும் உதவி செய்து வருகிறது. ஆனால், இந்தாண்டு ஒழுங்கீன மாணவர்கள் அதிகளவில் சேர்ந்ததால் தேர்ச்சி சதவீதம் 89ஆக குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர் கண்டிப்பு இல்லாததே. பெற்றோர்கள் தங்கள் கடமையை உணர்ந்து பிள்ளைகளை கண்காணித்து நல்வழிப்படுத்த முன்வர வேண்டும்.


Posted Date : 15:46 (12/05/2017)Last updated : 16:34 (12/05/2017)

தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம்... களையெடுக்கப்படும் கடலூர் மாவட்டக் கல்வித்துறை!

இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாநிலத்திலேயே கடைசி இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது கடலூர் மாவட்டம். ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டம் கல்வியிலும் பின்னோக்கிப் போவது சமூக ஆர்வலர்களிடையே பெரும் குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது 

இதுகுறித்து சமூக ஆர்வலர் நிஜாமுதீன், "எப்போதும் கடைசி இடத்தைப் பிடிப்பதற்கு விழுப்புரம் மாவட்டமும், கடலூர் மாவட்டமும்தான் போட்டிபோடும். இந்த முறை அந்த இடத்தை கடலூர் மாவட்டம் பிடித்துவிட்டது. அரசுப் பள்ளிகளில் அதிகளவில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதும், கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் பெருமளவில் கடற்கரையோரங்களிலும், கிராமப் புறங்களிலும் அமைந்திருப்பதும்தான் இதற்குக் காரணம். அங்கு பணிபுரியும் ஆசிரியர்கள் நகர்ப்புறங்களில் குடியிருப்பதால் சரியான நேரத்துக்கு அவர்கள் பணிக்குச் செல்வதில்லை. ஏதோ கடமைக்கு வந்து செல்கிறார்கள். அதை அதிகாரிகளும் கவனிப்பதில்லை. இரண்டு வருடத்துக்கு முன் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருவதை எஸ்.எம்.எஸ் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தும் முறை இருந்தது. அப்போது ஓரளவுக்கு ஆசிரியர்கள் பயந்துகொண்டு பள்ளிக்கு வந்தார்கள். அதை மீண்டும் கொண்டுவரவேண்டும். அதேபோல், ஆசிரியர்களை அவர்கள் பணிபுரியும் பகுதிகளிலேயே குடியமர்த்த அரசு ஏற்பாடு செய்யவேண்டும். மேலும்அரசு ஆசிரியர்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மணிக்கணக்கில் தனி வகுப்பு நடத்தி தங்கள் வருமானத்தைப் பெருக்கிக்கொள்வதில்தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். எனவேஅரசு ஆசிரியர்கள் தனி வகுப்பு நடத்த தடை விதிக்கவேண்டும்.

அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்துவதில்லை. தனியார் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்புப் பாடத்தைப் பதினொன்றாம் வகுப்பிலேயே நடத்தி முடித்துவிடுகிறார்கள். இரண்டு வருடம் ஒரு பாடத்தைப் படிப்பதால் அந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்களை வாங்கி அரசுப் பள்ளி மாணவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறார்கள். இந்நிலை மாறவேண்டுமானால், மாவட்ட நிர்வாகமானது அரசுப் பள்ளிகள்மீதும், ஆசிரியர்கள்மீதும் சிறப்புக் கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு வழிவகை செய்யவேண்டும்" என்றார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேஷ், "மாவட்டத்தில் கல்வித்தரம் இவ்வளவு மோசமானதற்கு என்ன காரணம் என்று, கல்வித்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தவுள்ளோம். அதன் மூலம் அடுத்த ஆண்டு கல்வி வளர்ச்சிக்காக அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்" என்றார்.
சரி 2018 ல் நிலை என்ன ?
கடைசி இடத்திலிருந்து சற்று எழும்பி திருவாரூர்(85.49) , விழுப்புரம் (83.35)மாவட்டங்களை கீழே தள்ளி விட்டது
கடலூர் 86.69%
இது போதுமா ? போதவே போதாது
தேவை இணைந்த சிந்தனை, செயல்பாடு
மீண்டும் அடுத்த வாரம் வேறொரு பிரச்சினை பற்றி
வலைநூல் முகவரி
sherfuddin[p.blogspot.com

FB KS./B         25 07 2018

 







No comments:

Post a Comment