புதுப்பொலிவில்---------
சிவான்
(நேற்றிய பதிவின் தொடர்ச்சியாக
நிறைவுப்பகுதி )
மிகநட்பாக இருந்த வீட்டு உரிமையாளர் பயமுறுத்தும் பாணியில் வீட்டை உடனே காலி செய்யச்சொன்னார்.
பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கி விட்டது, எனவே சொந்த ஊரில் – திருப்பத்தூரில் அத்தாவின் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்யக் கேட்டுக்கொண்டு அந்த வீட்டில் குடியேறினோம்.
சொந்த ஊர் என்பதால் பள்ளியில் இடம் எளிதாக வாங்க முடிந்தது. சொந்த ஊரில் வசிக்கும் முதல் அனுபவம் எனக்கு.
துணைவியின் வீடும் அருகில் இருந்ததால் பாதுகாப்பு பிரச்சனை இல்லை . இரண்டு மாதங்களுக்கு மேல் விடுப்பில் இருந்தேன். இட மாற்றல் எதுவும் கிடைக்காது என்று ஒரு முடிவு தெரிந்ததும் தனியே சிவான் போவது என்று முடிவு செய்து சென்னை போய் கல்கத்தா வழியாக சிவான் போய்ச் சேர்ந்தேன்
இந்தக்கதையின் கருவையும் பெயர் தெரியாத கதாநாயகனையும் பற்றி விவரிக்குமுன் சிவானைப்பற்றியும் பிகாரைபற்றியும் சில செய்திகள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்,
*கனிம வளம், நீர் வளம் மக்கள் வளம் நிறைந்த அந்தப்பகுதி உடல் நலத்துக்கு மிகவும் உகந்த இடம்.
சிவானில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்தபோது என்னைச்சந்தித்தவர்கள் பத்து வயது குறைந்ததுபோல் தெரிவதாகச் சொன்னார்கள்.. குறிப்பாக நரை முழுதும் மாறி தலைமுடிகருப்பாகிவிட்டது,
உணவுப்பொருட்கள் விலை மிக மலிவு. இரண்டு ரூபாய்க்கு அளவில்லாமல் சோறும் சப்பாத்தியும் சாப்பிடலாம்.
விடுமுறை நாட்களில் பாணி பூரி சாப்பிடப் போவோம்..
பாணி பூரி தயிர் வடை எல்லாம் போதும் போதும் என்கிற அளவுக்குச் சாப்பிட்டாலும் ஒரு இரண்டு ரூபாய்க்கு மேல் வராது
மிக அன்பாக, நட்புடன் பழகும் மக்கள். சிவானில் ஏழு மாதம் பணி புரிந்து விட்டு மாற்றலாகிப் போகையில் கிளையில் உள்ள அத்தனை ஊழியர்களும் தொடர் வண்டி நிலையத்திற்கு வந்து வழியனுப்பி வைத்தார்கள்.
வெளி மாநிலத்தில் பணிபுரியும்போது சில பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
சிவானில் எனக்கு மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தது குளிர்.
நடுக்கும் குளிர் என்றால் அதுதான்..
இரவில் படுக்கும்போது தலையில் கம்பளித்தொப்பி உடலில் சட்டைக்கு மேல் கம்பளி ஆடை கைகால்களில் கம்பளி உறை கால் முழுதும் மறைக்கும் ஒரு உள்ளாடை அதற்குமேல் முழுக்கால்சட்டை அணிந்து படுக்கையில் மெத்தைக்குமேல் ஒரு கம்பளி விரித்து மேலே மெத்தை போல் இருக்கும் ரசாயைப் போர்த்திக்கொண்டு படுப்பேன்.
அதையும் மீறிக் குளிர் வாட்டி எடுக்கும்.இவ்வளவு குளிரிலும் உடல் சுகவீனம் எதுவும் ஏற்படவில்லை..சிவானில் வாங்கிய கம்பளி ஆடைகள் முப்பது ஆண்டுகள் கழிந்தும் இன்றும் அணியும் நிலையில் உள்ளன
.அந்தக்குளிரிலும் நாள் தவறாமல் பச்ச்சைத்தண்ணீரில் குளித்தது ஒரு சுகமான அனுபவம்.
வங்கி அலுவலர்கள் பற்றி ஒரு சில செய்திகள்
இங்கிருந்து வட மாநிலம் மாற்றலாகிச் செல்லும் நண்பர்கள் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்
நாம் அங்கு இருக்கப்போவது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள்தான்
அதற்குள் அவர்களுக்கு ஒழுக்கம் ,வேலை கற்பிக்க முயற்சி செய்ய வேண்டாம்
நம் ஒரே நோக்கம் , முடிந்த வரை நன்றாக நம் கடமையை , காலததை நிறைவு செய்து உடல், உயிர் உடமைக்கு ஊறு இல்லாமல் திரும்ப வருவதுதான்
அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்ப நாம் நடந்து கொள்ளவேண்டும்
ஒரு சிறிய எடுத்துக்காட்டு
தொடரியில் வந்து போகும் அலுவலர்கள் தொடரி வரும்போது வருவார்கள் , போகும் நேரத்துக்கு ஏற்ப வங்கியிலிருந்து கிளம்பி விடுவார்கள்
அதை விட்டால் அவர்களுக்கு வேறு போக்குவரத்து வசதி இருக்காது
(இந்த 30 ஆண்டு இடைவெளியில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றி எனக்குத் தெரியாது )
மின்சாரம் மிகவும் அரிதான ஒன்று..இரவு பன்னிரண்டு மணியில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு மட்டும் மின் விநியோகம் இருக்கும். வங்கிகள், அலுவலகங்கள் வசதியான வீடுகள் வர்த்தக நிறுவனங்கள் தங்கும் விடுதிகள் உணவகங்கள் எல்லாவற்றிலும் மின்னாக்கி (ஜெனரேட்டர்) _ஓடிக்கொண்டே இருக்கும்
. *சிவான் ஒரு குற்றப்பகுதியாக அறிவிக்கப்பட்ட இடம்(Declared crime belt) என்று கேள்விப்பட்டேன்.
நான் சிவான் சென்ற ஓரிரு தினங்களில் ஒரு நிகழ்வு
ஒரு திருமண வீடு
திரைப்படக் காட்சி போல் ஒரு வண்டியில் துப்பாக்கி ஏந்திய நான்கைந்து பேர் வருகிறார்கள்
இருக்கிற நகைகளஎடுத்துக்கொண்டு போய் விடுகிறார்கள் , ஒரு இருபது நிமிடத்துக்குள்
செல்வச்செழிப்பும் வறுமையும் ஒரு சேரக் காட்சி அளிக்கும் இடம்.
இப்போது கதையின் கருவுக்கு வருகிறேன்..
தொடர்ந்து ஆறு நாட்கள் வங்கி விடுமுறை,. சக ஊழியர்கள் அனைவரும் தம் ஊர்களுக்குப்போய் விட்டார்கள்.. சமீபத்தில் ஊர் போய் திரும்பியிருந்த நான் தனிமையில் மாட்டிக்கொண்டேன். குளிர் முடிந்து இளவேனில் பருவம் தொடங்கும் இதமான பருவ நிலை.
காலை சிற்றுண்டியை முடித்து விட்டு ஒரு நடைப்பயணம் சென்றேன். வழியில் திரை அரங்கு ஒன்று கண்ணில் பட நுழைவுச்சீட்டு வங்கி உள்ளே போய் அமர்ந்தேன்.
படம் ஆரம்பிக்க இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்பது போல் ஒரு செய்தி கிட்டியது. சரி இன்னும் சற்று நேரம் நடக்கலாமே என்று வெளியே வந்தேன்,
திரை அரங்கு வாசலில் எலுமிச்சை சாறு கலந்த கருப்புதேநீர் விற்றுக்கொண்டிருந்தார்கள்.
இதமான குளிரில் சூடான் தேநீர் சுவையாக இருந்தது;
ரசித்துக்குடித்து விட்டு பணம் கொடுத்து விட்டு நடக்கத்தொடங்கினேன்.
சிறிது நேரத்தில் யாரோ என்னைப் பின் தொடர்வது போல் ஒரு உணர்வு.
திரும்பிப்பார்த்த எனக்கு மூச்சே நிற்பது போல் இருந்தது
நெடிது வளர்ந்து உழைப்பில் உரமேறிய ஒரு உருவம் –இடையில் லங்கோடு மட்டும்அணிந்து என்னை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது..
தேநீர்க்கடைக்காரர் என்னைத்துரதுகிறார் என்பது புரிந்து
என் நடையை ஓட்டமாக மாற்றினேன்,.
மனதில் என்னென்னமோ எண்ணஓட்டங்கள் – மொழி தெரியாத புது இடத்தில அனாதையாக உயிரிழக்கப்போகிறோம் .என்னசெய்தோமோ தெரியவில்லை .. பெரிதாக எதோ தவறு நிகழ்ந்திருக்கிறது
இல்லாவிட்டால் இப்படி நம்மைத்துரத்தி வர மாட்டார். எதேனும் அசம்பாவிதமாக் நடந்தால் குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கக்கூட யாரும் இல்லையே என்று ஒரு பரிதவிப்பு.
இதற்குமேல் ஓட முடியாது என்ற நிலையில் மனதைதேற்றிக்கொண்டு நின்றேன்..வேகமாக வந்த அவர் என்னைப்பார்த்து பெரிய கும்பிடு போட்டார்.
சரி இந்த ஊர் வழக்கம் போலிருக்கிறது- பலி கிடாவுக்கு மாலை போடுவது போல் கும்பிட்டு விட்டுத்தான் அடிப்பார்கள் போலும் என்று எண்ணினேன். அவர் என் கையில் ஐம்பது பைசா நாணயதைத் திணித்து விட்டு வந்த வேகத்தில் திரும்பி விட்டார்...
என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள எனக்கு சில நொடிகள் தேவைப்பட்டதன ...நான் குடித்த தேனீரின் விலை ஐம்பது காசு.
நான் ஒரு ரூபாய் கொடுத்து விட்டு வந்து விட்டேன். சில்லரைபாக்கியை கொடுப்பதற்காக தேநீருக்ககக் காத்திருக்கும் கூட்டத்தைப் புறக்கணித்து விட்டு சுமார் பத்து நிமிடங்கள்.என் பின்னால் வந்திருக்கிறார்.
இந்தத்தெளிவு வந்தபோது ஏற்பட்ட உணர்ச்சிகளை என்னால் சீரணிக்கவும் முடியவில்லை.வர்ணிக்கவும் வார்த்தை இல்லை
நூறு சதவீதம் நேர்மையான ஒரு மனிதர்
தான் அப்படிபட்டவர் என்ற ஒரு உணர்வு கூட இல்லாத ஒரு வெள்ளந்தியான ஆத்மா –
அந்ததேநீர்க்காரர் என் மனதில் இமயம் போல் உயர்ந்து நின்றார்..
என்னென்னமோ அவரைப்பற்றி தப்பாக வீண் கற்பனை செய்து. நன்றி சொல்லக்கூட வாய் வராமல் விதிர்துப்போன நான் கூனிக் குறுகி உணர்ந்தேன்.,
அற்பமாக நாம் எண்ணக்கூடிய ஒரு ஐம்பது காசால் பிகாருக்கும் இந்தியாவுக்கும் ஏன் மனித குலத்துக்கே பெருமை தேடித்தந்த அந்த தேநீர்க்காரர் இந்த நிகழ்வு நடந்து முப்பது ஆண்டுகள் கழிந்தும் என் நெஞ்சில் நிறைந்து நிற்கிறார்..
பெயர் தெரியாத அந்த மாமனிதருக்கு என் பாராட்டுதான் இந்தக்கதை.
சிவான் பயணம் நிறைவு பெறுகிறது
, 09 02 2015. .அன்று ஒரே பகுதியாக வெளியிட்ட தை இப்போது இரண்டு பகுதிகளாக பதிந்திருக்கிறேன்
இ (க) தடைச செருகல்
நேற்று சிவானில் பணியாற்ரிய அதிகாரிகளின் பெயர்களை குறிப்பிடும்போது வங்காள அத்காரியின் பெயர் நினைவில் வரவில்லை
அவர் பெயர “ ராய் “
இன்னொரு பீகார் அதிகாரயின் பெயர பிரமச்சாரி
திரு பவ்சாருக்குப் பின் வந்த முது நிலை மேலாளர் பெயர்
ஷா
இருவருமே குஜராத்திகள்
2. புதுப்பொலிவில் பழைய பதிவுகளை மீண்டும் போடுவது பற்றி உங்கள் கருத்துக்களை அறிய விரும்புகிறேன்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
16012023 திங்கள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment