Friday, 13 January 2023

புதுப் பொலிவில் சொந்த வீடு மீண்டும் ஒரு நிறைவுப் பகுதி +1 & 2

 

புதுப்பொலிவில் சொந்த வீடு மீண்டும் ஒரு நிறைதிவுப்பகுதி 


என்னைப் பொருத்த வரையில் இரண்டு பகுதிகளில் வீடு பற்றி எழுதிநிறைவு செய்ததாகவே எண்ணுகிறேன்

ஆனால் சிலர் இல்லை அப்படியே பூந்தமல்லி பள்ளிவாசல் இமாமை சந்தித்ததோடு விட்டு விட்டீர்கள்
என்று எழுதியிருந்தார்கள்
அவர்களுக்காக அதன் பின் என்னவாயிற்று எனபதை சுருக்கமாகத் தருகிறேன்
மைத்துனர் சிராஜுதீனின் காவல் துறை நண்பர் மூலமாக வீட்டைக் கவனிக்கும் பொறுப்பு எங்கள் பூந்தமல்லி வீட்டுக்கு அருகில் இருக்கும் ரகு என்பவரிடம் ஒப்படடைக்கப்பட்டது-
சிராசுதீனுக்கு நன்றி
நல்லவராகப் பார்த்து குடி வைப்பது , வாடகை வாங்கி அனுப்புவது ,பராமரிப்பு , வரி கட்டுவது என எல்லாப் பணிகளையும் இன்று வரை செவ்வனே செய்து வருகிறார்
இறைவன் அருளால் பணி நிறைவுக்குப்பின் அவரின் மேறபார்வையில் கீழ்தளம் அளவுக்கு மதல் தளம் கட்டினேன்
என்ன ,கீழே இரண்டரை லட்சம் மேலே 25 லட்சம் அவ்வளவுதான்
சென்னைக்குப் போகும்போது அவ்வப்போது வீட்டைப் போய் பார்த்து வருவேன்
குடியிருப்பவர்களில் வீட்டை மிக அழகாக , தூய்மையாக வைத்திருப்பவர்கள் இருப்பார்கள்
சிலர் ஓரளவு நன்றாக வைத்திருப்பார்கள்
இன்னும் சிலரோ மிகக் கொசகொச என்று வைத்திருப்பார்கள்
பல் தடவை சொல்லியும் கேட்காவிட்டால் வேறு வீடு பார்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவேன்
நாங்கள் வாடகைக்கு குடியிருந்த அனுபவங்கள்
வீட்டு உரிமையாளர் என்ற முறையில்ஏற்பட்ட நிகழ்வுகள் இவற்றின் விளைவாக
யாரிடமும் கடுத்தமாக விரட்டுவது போல் நானோ ரகுவோ பேசியதில்லை
இதற்கிடையில் பணி நிறைவின் பின் சொந்த வீட்டில் இருக்கலாம் என்ற ஒரு எண்ணம் தோன்றியது
ஆனால் துணைவி ஒத்துக்கொள்ளவில்லை ,
அவர் சொன்ன காரணம் சரியாக இருந்ததால் நானும் மகனோடு இருக்க சம்மதிதேன்
பத்தாண்டுக்கு மேல் பெரிய பிரச்சனை ஏதும் இல்லாத வாழ்க்கை
துணைவியும் பேரனும் தோழமையோடு விளையாடுவார்கள்
பிறகு துணைவி மறைவு . அவர் நினைப்பு(கள்) உண்மையாகி விட என் சொந்த வீட்டு எண்ணம் கரைந்து போனது
இதற்கு மேல் பெரிதாக வீட்டைப்பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை
சொந்த வீடு என் முதல் பதிவு
அப்போது பெயர்கள் எதுவும் குறிப்பிடவில்லை
வாழ்வின் நிகழ்வுகளை எழுதும்போது பெயர்களையும் சொன்னால் சுவையாக இருக்கும் என்று கருத்துக்கள் வந்த பின் பெயர்களை சொல்லவும் அப்பா என்பதை அத்தா என்று சொல்லவும் துவங்கினேன்
சொந்த வீட்டில் வலம் வந்த சிலரின் பெயர்கள்
திரு இளங்கோ திருமால் எஸ்டேட்ஸ் உரிமையாளர் – இடம் விற்று , வீடு கட்டிக் கொடுத்தவர்
திரு சுப்புராஜ் இ ஆ ப தலைமை நிர்வாகி (C&MD) குடி நீர் வடிகால் வாரியம் (TWAD Board) – வீட்டை மீட்டுக் கொடுத்து மின் கட்டண நிலுவையை கட்ட வைத்தவர்
திரு P.B.இராமானுஜம் வழக்கறிஞர்- இடத்துக்கு சட்ட அறிக்கை கொடுத்தவர் , பின்பு ஒரே சந்திப்பில் சில மணி நேரங்களில் மாற்று ஆவணம் தயாரித்துக் கொடுத்தவர்
ஜனாப் ஹனீப் , வழக்கறிஞர் – என் மீது போடப்பட்ட வழக்கை மிகப் பொறுமையாக என் சார்பில் நடத்தி மிகக் குறைந்த செலவில் எனக்கு அதிக அலைசசல் இல்லாமல் வீடு கிடைக்கச் செய்தவர்
இவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
இன்னும் வீடு கட்டுவதில் உறு துணயாக இருந்த அனைவருக்கும் , இப்போது வீட்டை பராமரிக்கும் திரு ரகுவுக்கும் நன்றி
எல்லோரையும் எல்லாவற்றையும் இயக்கும் ஏக இறைவனுக்கு நன்றி
லாரி பேக்கர் வீடு
இது பற்றியும் சிலர் கேட்டிருந்தார்கள்
லாரி பேக்கர்இங்கிலாந்தில் பிறந்து கட்டிடக் கலையில் தேர்ச்சி பெற்றவர்
நம் நாட்டுப் பண்டைய கட்டிடக் கலையில் ஆர்வம் கொண்டு அது பற்றி ஆராய்ந்து அறிந்தவர்
மிகக் குறைந்த செலவில் அழகான வீடுகளை கட்டியவர்
செலவைக் குறைக்க இவர் சொல்லும்/ செய்யும் சில வழிமுறைகள்
கட்டுமானப் பொருட்களின் போக்குவரத்துச் செலவை குறைத்து , அருகில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துதல்
சிமென்ட் ,இரும்பு பயன்பாட்டை வெகுவாக் குறைத்தல்
நம் நாட்டு கால நிலைக்கு ஒவ்வாத மொசைக் , கிரானைட் , பளிங்கு தரைகளைத் தவிர்த்தல்
வீடு என்பது உடை போல ஒவ்வொருவர் தேவைக்கு ஏற்ப தனித்துவமாகக் கட்டவேண்டும்
அது போல் ஒரு பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நம் விருப்பம் போல் மாற்றிக்கட்டிக் கொள்ளும் வகையில் எளிய முறையில் குறைந்த செலவில் இயற்கை , சுற்றுச் சூழலுக்கு ஊரு செய்யாத வகையில் வீடு லட்டப்பட வேண்டும்
வீடு கட்டும் நிலத்தை சமன் படுத்துவது , அங்குள்ள மரங்களை வெட்டுவது இரன்டையும் தவிர்த்து அவற்றைப் பயன் படுத்தி அழகாக வீட்டைக் கட்டலாம்
பகல் நேரத்தில் மின் விளக்கு மின் விசிறி தேவை இல்லாத அளவுக்கு காற்று , வெளிச்சம் வரும்படி வீடு இருக்க வேண்டும்
வீட்டிற்குள் ஒரு சிறிய குளம் அமைத்து அதைச் சுற்றி தண்ணீரைத்தொடும்படி ஒரு சிறிய செங்கல் சுவர் கட்டினால் வீடு எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் . குளிரூட்டி தேவை இல்லை
இப்படி நிறைய இருக்கிறது .
இவற்றை எல்லாம் பயன்படுத்தும் துணிச்சல் வர வேண்டும்
சரியான கட்டுனர் கிடைக்க வேண்டும்
ஆனால் படிக்க மிக நன்றாக ,சுவையாக இருக்கும்
கட்டுமானத் துறையில் இருக்கும் ரபி போன்றோர் இது பற்றி படித்து முடிந்த அளவுக்கு பயன் படுத்த முயற்சிக்கலாம்
திருவனந்தபுரத்தில் லாரி பேக்கர் மாதிரியில் பல பெரிய வீடுகள் பார்த்த நினவு
நிறைவாக லாரி பேக்கர் பற்றி ஒரு செய்தி
குறைந்த செலவில் வீடு கட்டவது பற்றிய கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள அரசின் அழைப்பு வந்தது அவருக்கு
“ என் விமானப் போக்குவரத்து அங்கு தங்கும் செலவு எல்லாவற்றையும் கணக்குப்பண்ணி எனக்கு அனுப்பி வையுங்கள்
நான் அந்தத் தொகையில் இங்கு 4 பேருக்கு மலிவு விலை கட்டிக் கொடுக்கிறேன் “
என எழுதினர்
அவருடைய சேவை மனப்பான்மைக்கு இது ஓடு சிறிய எடுத்துக்காட்டு
இறைவன் ந்டினால் நாளை சிந்திப்போம்
14012023 சனிகிழமை
சர்புதீன் பீ



புதுப்பொலிவில் --------- சொந்த வீடு சொந்த வீடு என்பது ஒரு சராசரி மனிதனின் கனவு என்பார்கள் . ஆனால் எனக்கு அப்படி ஒரு பெரிய ஆசையோ கனவோ பொதுவாக இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் என் அறுபத்தி மூன்று வயது வாழ்க்கையில் சொந்த வீட்டில் வாழும் வாய்ப்பு இது வரை அமையவில்லை .அப்பா மாநில அரசு அதிகாரி .. நான் வேலை பார்த்தது அரசுடைமை வங்கி ( நாற்பது ஆண்டுப் பணியில் ஏழு மாநிலங்களில் பதினெட்டு இடங்களில் வேலை பார்த்த அனுபவம் ). இது வரை தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் ஒரு ஊரிலோ ஒரு வீட்டிலோ வசித்த நினைவு இல்லை. இப்படி ஒரு நாடோடி வாழ்க்கை அமைந்ததும் சொந்த வீடு பற்றிய எண்ணம் பெரிதாக ஏற்படாததற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம் .இருந்தாலும் வங்கியில் பணி புரிந்து கொண்டு வீட்டுக்கடன் வாங்காவிட்டால் பெரிய பாவம் என்ற ஒரு சமுதாய அழுத்தம் செலுத்தப் பட்டதால் அரை மனதோடு அதற்கான முயற்சிகளைத் தொடங்கினேன் . 1970 ம் ஆண்டு என் இருபது வயதில் வங்கியில் சேர்ந்தேன் .ஐந்து ஆண்டுகளில் அதாவது 1975 ல் ரூபாய் 75000/ வரை வீட்டுக்கடன் பெறத் தகுதி இருந்தது . (அந்தக்கால கட்டத்தில் அது மிகப்பெரிய தொகை ) எனவே பணம் ஒரு பெரிய பிரச்னை இல்லை . ஆனால் அதை விட மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன. முதல் குழப்பம் வீடு கட்டுவதா அல்லது கட்டிய வீட்டை வாங்குவதா . அடுத்து சென்னையிசொந்த ஊருக்கு அருகிலா இல்லை வேலை பார்க்கும் இடத்திலா (எனக்கும் என் மனைவிக்கும் நிறைய உடன் பிறப்புகள் . எனவே அறிவுரைகளுக்கும் கருத்துக்களுக்கும் பஞ்சமே இல்லை). சென்னையில் எங்கள் அக்கா வீட்டுக்கு அருகில் அழகான வடிவான வீடு விலைக்கு வந்தது . ஆனால் ரூபாய் ஒரு இலட்சத்துக்கு மேல் சொன்னதால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன் .(நாற்பது ஆண்டுகள் கடந்தும் இன்றும் என் மைத்துனர் அந்த வீட்டை வாங்காமல் விட்டு விட்டாயே என்று தன் ஆதங்கத்தை அவரை சந்திக்கும் போதெல்லாம் வெளிப்படுத்துவார்.) அடுத்து காரைக்குடியில் ஒரு மிகப்பெரிய நகரத்தார் வீடு (மாளிகை என்றே சொல்லலாம் ). விலையும் ரூபாய் நாற்பது ஆயிரதுக்குள்தான் , ஆனால் வீடு ஒரு குறுகலான சந்தில் இருந்தது . மேலும் பல ஆண்டுகளாக godown கிட்டங்கியாக பயன்படுத்தியதால் ஒரு பொலிவில்லாமல் இருந்தது எனக்கு மனம் ஒப்பவில்லை .(பின்னர் அந்த வீட்டை வெறும் முப்பது ஆயிரத்துக்கு வாங்கியவர் அதை இடித்து அதிலிருந்த பர்மா தேக்கை மட்டும் பல லட்சங்களுக்கு விற்றதாக கேள்விப்பட்டேன் , -ஒரு பெருமூச்சு)) இதற்கிடையில் எனக்கு பதவி உயர்வோடு கேரள மாநிலத்துக்கு மாறுதல் அடுத்து என் அம்மா காலமானது எல்லாம் சேர்ந்து வீட்டு முயற்சிக்கு ஒரு அரைப் புள்ளி வைக்கபட்டது .கேரள வாசம் முடிந்து திரும்பியபின் திருச்சி ,புதுக்கோட்டை ,திருப்பத்தூர் சென்னை என்று பல இடங்களில் பார்த்தும் ஒன்றும் அமையவில்லை. கால வெள்ளம் ஓடிய ஓட்டத்தில் மீண்டும் ஒரு பதவி உயர்வு பீகாருக்கு மாறுதல்.. என் இரண்டாவது மைத்துனர் எடுத்த விடா முயற்சியால் சென்னை பூந்தமல்லியில் ஒரு கிரௌண்ட் இடம் பீகாரில் இருக்கும்போதே வாங்க முடிந்தது .பீகாரில் பிள்ளைகள் படிப்புக்கு வசதி இல்லாததால் பஞ்சாப் மாநிலம் ஜலந்தருக்கு நானே முயற்சி எடுத்து மாறுதல் வாங்கினேன். ஜலந்தரில் நானே தேடி அலைந்து ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தேன் . நல்ல விசாலமான வசதியான அழகான புது வீடு. அந்த வீட்டைப் பார்க்க பார்க்க எனக்கும் இந்த மாதிரி ஒரு வீடு கட்ட வேண்டும் என்று எண்ணம் தோன்றியது .ஜலந்தரில் இரண்டு ஆண்டுகள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு தமிழ்நாடு திரும்பியவுடன் வீட்டுக் கடன் வாங்க ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன் . பூந்தமல்லியில் இடம் இருக்கிறது , வீட்டுக்கடன் தொகையும் இரண்டரை லட்சமாக உயர்ந்து விட்டது. எனவே ஜலந்தர் வீட்டைப்போல் கட்டுவதில் பிரச்னை ஏதும் பெரிதாக வராது என்று எண்ணி வேலையை ஆரம்பித்தேன். முதலில் வீட்டுக்கு வரைபடம் போட பொறியரிடம் போய் ஜலந்தர் வீட்டு மாதிரியில் வரைபடம் தயாரிக்கச் சொன்னேன்,. நீங்கள் சொல்வது போல் மூன்று பக்கம் வாசல் வைத்து கம்பியில்லாமல் பெரிய ஜன்னல்கள் வைத்து வீடு கட்டினால் வீட்டில் உள்ள பொருட்கள் மட்டும் அல்ல வீடே காணமல் போய் விடும் என்று பொறியர் பயமுறுத்தி விட்டார். மனதை தேற்றிக்கொண்டு முடிந்த வரை ஜலந்தர் வீட்டு மாதிரியில் வரைபடம் தயாரித்து ஊராட்சி அலுவலகத்தில் ஒப்புதலும் வாங்கிவிட்டேன். சில பல பக்கங்கள் கொண்ட வங்கிக்கடன் விண்ணப்பதை நிரப்பி ஒப்புதலுடன் கூடிய வரைபடம்,,சட்ட அறிக்கை, திட்ட மதிப்பீடு என்று தேவையான எல்லாவற்றையும் இணைத்து வட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தேன். சில நாட்கள் கழித்து வட்ட அலுவலகத்தின் சட்டப்பிரிவில் இருந்து பதினாறு கேள்விகளுடன் நீண்ட ஒரு கடிதம் வந்தது. சாதாரணமாக சட்ட அறிக்கை ஒரு நான்கைந்து பக்கங்கள் இருக்கும். ஆனால் என் இடத்துக்கு கொடுக்கப்பட்ட சட்ட அறிக்கை மிக நீளமாக பதினான்கு பக்கங்கள் கொண்டது . ஒரு பக்கத்துக்கு ஒரு கேள்வி என்ற கணக்கையும் மீறி பதினாறு கேள்வி கேட்டதோடு நான் அனுப்பிய சட்ட அறிக்கையே சரியில்லை வேறு ஒன்று வாங்கி அனுப்புங்கள் என்று சொல்லியிருந்தார்கள்\. இதுதான் என் மனதுக்கு நெருடலாக இருந்தது..என் இடத்துக்கு சட்ட அறிக்கை கொடுத்த வழக்கறிஞர் மிகத் திறமையானவர்,இடபபறிமாற்றத் துறையில் வல்லுநர் .அப்படிப்பட்டவர் கொடுத்த அறிக்கை சரியில்லாமல் இருக்காது என்று என் மனம் சொன்னது, பொறுமையாக சட்ட அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்தையும் வரி வரியாகப் படித்தேன். பின் சட்டப்பிரிவில் இருந்து வந்த பதினாறு கேள்விகளையும் நிதானமாகப் படித்துப் பார்த்தேன் . எல்லாக் கேள்விகளுக்கும் மிகத் தெளிவான பதில் சட்ட அறிக்கையில் இருந்தது. கடிதப்போக்குவரத்து மூலம் இதைத் தெளிவு படுத்த ஆரம்பித்தால் என் பணிக்காலமே முடிந்து விடும் என்று எண்ணத்தோன்றியது. சட்ட அறிக்கையில் சட்டப்பிரிவு கேட்ட கேள்விகளுக்கான பதில்களை அடிக்கோடு போட்டு குறித்துக்கொண்டு வட்ட அலுவலகத்தின் சட்டப்பிரிவுக்குப்போனேன் , வேறு சட்ட அறிக்கை கொண்டு வந்தீர்களா என்று கேட்ட அதிகாரியுடன் ஒரு நாற்பது மணித்துளிகள் பேசி ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சட்ட அறிக்கையில் இருப்பதை சுட்டிக்காட்டினேன் . அவரும் அதை ஒப்புக்கொண்டு கேள்விகள் அனைத்தையும் நீக்கிவிட்டார்,. அதற்குப்பிறகு கடன் பிரிவில் கேட்ட சில பல கேள்விகளுக்கு பொறுமையாகவும் சில இடங்களில் சூடாகவும் பதில் எழுதி ஒரு வழியாக கடன் அனுமதி கிடைத்து விட்டது. வீடு கட்டும் இடத்துக்கு அருகில் உள்ள வங்கிக் கிளை மூலம் கடன் வழங்கப்படும்.. என் பெயரில் கணக்கு திறக்கவும், அடமானப் பத்திரம் கையெழுத்துப் போடவும் அதன்பின் கடன் பத்திரம் கையெழுத்துப் போடவும் என பல முறை வங்கிக் கிளைக்கு சென்ற போது சற்றும் எதிர் பாராத சில சிக்கல்கள் எழுந்தன. வங்கி அலுவலர் ஒருவர் என்னிடம் அவர் குறிப்பிடும் ஒப்பந்தக்காரரிடம் வீடு கட்டும் வேலையை ஒப்படைத்தால் நல்லது,அப்போதுதான் கடன் தொகை வழங்குவது எளிதாக இருக்கும் என்று மிரட்டாத குறையாகச் சொன்னார் .கிளை உதவி மேலாளர் எனக்குத் தெரிந்தவர் என்பதால் அவர் தலையிட்டு இந்தப் பிரச்னை தீர்ககப்பட்டது . அடுத்து கடன் சம்பந்தமான பத்திரங்கள் எல்லாம் பூர்த்தி செய்யப்பட்டு என் கைஎழுத்தோடு கிளை மேலாளரிடம் போனது, நானும் அவர் அறைக்குப் போனேன். என்னை மேலும் கீழும் பார்த்த அவர் என்ன இவ்வளவு பொடியாக கையெழுத்துப் போட்டு இருக்கிறீர்கள். ஏதோ கொசு பறப்பது போல் இருக்கிறது உங்கள் கையெழுத்து. இதை வைத்து நான் எப்படி கடன் கொடுப்பது என்று கேட்டார் , நான் பதில் எதுவும் சொல்லவில்லை. நானும் ஒரு கிளை மேலாளர் என்பதால் என் கைஎழுத்துப் பிரதி எல்லாக் கிளைகளிலும் தலைமை அலுவலகத்தால் அனுப்பப்பட்டு இருக்கும்.மேலும் என்னையும், என் அப்பாவையும் அவருக்கு நன்றாகத் தெரியும்.. நான் வாய் மூடி இருந்ததால் அவர் வட்ட அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் . அங்கிருந்து இவர்தான் இன்னார் என்று உங்களுக்கு தெரிந்தால் கடன் கொடுங்கள அதில் சந்தேகம் இருந்தால் கொடுக்காதீர்கள் என்று சொல்லிவிட்டர்க,ள் வேறு வழியில்லாமல் அரை மனதாகக் கடனுக்கு ஒப்புதல் அளித்தார் . ஒரு வழியாக கடன் பிரச்சனை தீர்ந்தது . அடுத்து கட்டுமானப்பணியை ஆரம்பிக்க வேண்டும். நான் ஈரோடு அருகில் ஒரு கிளையில் மேலாளராக இருந்தேன். கட்டிட வேலையை யாரிடம் ஒப்படைப்பது என்பது இப்போதுள்ள கேள்வி . இதற்கிடையில் லாரி பேக்கர் மாதிரியில் வீடு கட்டலாம் என்று ஒரு எண்ணம் உதித்தது .அதற்கான அலுவலகத்தை அணுகிய போது மிக உற்சாகமாக வரவேற்று விபரங்கள் சொல்லி ஒரு விண்ணப்ப படிவத்தையும் கொடுத்தார்கள் , கணினி என்பது மிக அரிதாக இருந்த அந்தக்காலத்திலேயே அந்த அலுவலகத்தில் ஒவ்வொரு இருக்கையிலும் ஒரு கணினியைப் பார்க்க வியப்பாக இருந்தது, (ஆனால் கணினியை வெறும் தட்டச்சு பொறியாகத்தான் பயன் படுத்தினார்கள்). விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தையும் சேர்த்து கொடுத்து சில நாட்களில் கட்டிடக்கலை முதுநிலைப் பொறியர் (M .Arch )ஒருவரை அணுகும்படி சொன்னார்கள். அந்தப்பொறியரின் முகவரியைப் பல கோப்புகளில் சுமார் ஒரு மணி நேரம் தேடிக்கண்டு பிடித்தார்கள். இதையெல்லாம் கணினியில் போட்டு வைத்திருந்தால் பார்க்க எளிதாக இருக்குமே என்று நான் சொன்னதற்கு இதெல்லாம் சாத்தியமா என்பது போல் ஒரு வியப்பான பார்வைதான் பதிலாக வந்தது.. பொறியரைத் தேடி என் தம்பி , இடம் விற்ற என் நண்பர், நான் மூன்று பேரும் போனோம்.. காற்று வேகமாக வீசினால் பறந்து விடும் அளவுக்கு ஒரு ஒல்லியான பெண்ணை நாங்கள் எதிர்பார்க்கவில்லை . சற்று குண்டான எங்கள் உருவத்தைப் பார்த்து பயந்தது போல் இருந்தார். ஒரு வழியாக அவர் பயத்தை நீக்கி இடத்தைப் பார்வையிட அழைத்துச்சென்றோம். மலையைத் தூக்குகிறேன் என்று சவால் விட்ட பயில்வானை நினைவு கூறும் வகையில் சில நிபந்தனைகளை விதித்தார் அவர். கிணறு நாங்கள் தோண்டித் தர வேண்டும் , அஸ்திவாரம் தோண்டுவது எங்கள் பொறுப்பு கட்டுமானப்பொருட்கள் அனைத்தையும் நாங்களே வாங்கி கட்டும் இடத்துக்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்று சொன்னார். இடம் விற்ற என் நண்பரிடம் இது பற்றி நான் பேசினேன். , அவர் ஒரு சிறிய கட்டணத்துக்கு இதையெல்லாம் செய்வதாக நட்புக்காக ஒப்புக்கொண்டார். ஆனால் தொடர்ந்து பலமுறை பேசியும் அந்தப் பொறியர் ஒரு எதிர் மறை எண்ணத்துடனே இருப்பதாகத் தோன்றியது, அப்போது இடம் விற்ற என் நண்பர் நீங்கள் சம்மதித்தால் நானே வீட்டைக் கட்டித் தருகின்றேன் என்று சொன்னார். அவர் இது வரை வீடு எதுவும் கட்டியதில்லை என்றாலும், இடம் விற்றதில் அவர் காட்டிய ஒழுங்கு, நேர்மை எல்லாம் அவர் மேல் முழு நம்பிக்கை கொள்ள வைத்தது அந்த நம்பிக்கை சிறிதும் சிதையாத அளவுக்கு மிக நேர்த்தியாக வீட்டைக் கட்டி முடித்தார். ஒரே ஒரு குறை மழை நீர் சேகரிப்பைப் பற்றி ஏதோ ஒரு இதழில் படித்து விட்டு அது மாதிரி செய்யச்\சொன்னேன் . பழக்கம் இல்லாததெல்லாம் செய்தால் வீடு வலிமை இழந்து விடும், மாட்டேன் என்று சொல்லிவிட்டார். . இதற்கிடையில் சந்தித்த சில எதிர்பாராத நிகழவுகள் பல அனுபவப் பாடங்களை கற்றுத்தந்தது அவற்றை விவரிக்க எண்ணம் இல்லை ! இறைவன் அருளால் வீடு நல்லவிதமாக கட்டி முடிந்தது. சென்னையில் என் தம்பி வீட்டில் அப்பா இருந்தார், கட்டிடம் கட்டிய நண்பரே தன் காரில் அவர்களை கூட்டிக்கொண்டு போய் அவ்வப்போது வீட்டைக் காண்பித்து வருவார். நான் மிக அரிதாக வந்து வீட்டைப் பார்ப்பேன். எந்த விதப்பிரச்சனையும் இல்லாமல் வீட்டு வேலை நடந்து, நல்ல முறையில் முழுமையயும் அடைந்தது. . திடிரென்று என் வங்கி முகவரிக்கு என் உறவினர் எழுதிய மடல் ஓன்று வந்தது.“ சரியான மேற்பார்வை இல்லாததால் உன் வீட்டு வேலைகள் முறையாக நடக்கவில்லை.. கட்டுனர் தன் வருமனைத்தைப் பெருக்குவதிலேயே குறியாக இருக்கிறார் .வீடு அரைகுறையாக நிற்பது போல் தெரிகிறது என்றுஎழுதியிருந்தார், உடனே விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னை போய் தம்பியிடமும் அப்பாவிடமும் அந்த மடலைக்காண்பித்தேன். என் தம்பியும் நானும் கட்டுனரின் துணையில்லாமல் பூந்தமல்லி போய் வீட்டைப் பார்த்தோம். என்ன நிலையில் இருந்தது வீடு ? இறைவன் நாடினால் அடுத்த பகுதியில் (எப்போது ?) 2014 ஆம் ஆண்டு எழுத்துப் பணியில் என் முதல் முயற்சி அப்போது ஒரே பதிவு நீளமான பதிவு அதை பிரித்து ஒரு பகுதி இப்போது புதுப் பொலிவில் இது பற்றி உங்கள் கருத்துக்களை எதிர் நோக்குகிறேன் இப்போது ஒரு சிறிய வினா , , ந, ல ன , ழ ற ண , ள , ர, இந்த எழுத்துக்கள் ஒரு தொகுதியாக அமைகின்றன அது என்ன தொகுதி? இறைவன் நாடினால் நாளை விடை ,விளக்கத்துடன் சிந்திப்போம் ௦1012013 ஞாயிறு சர்புதீன் பீ

May be an image of outdoors and brick wall
Like
Comment
Share

No comments:

Post a Comment