அரணுக்கு அரண் (DSC)
நேற்றைய பதிவின் தொடர்ச்சி
Wg Cdr அஜ்மல் கான் பணி நிறைவு
09 01 2023
HALT! WHO COMES THERE?
நில் யாரங்கே
இப்படித்தான்
தன் பதிவுக்கு தலைப்பு கொடுத்து துவக்குகிறார் சகோ அஜ்மல்
அழகான ஆங்கிலத்தில் அவர் அனுப்பிய பதிவை முடிந்த வரை நல்ல தமிழில் அவர் வாய் மொழியில் தர இறைவன் அருளால் முயற்சிக்கிறேன்
“வான் படை பணி ஒரு நீண்ட கால பயிற்சியுடன் துவக்கம்
18 மாத பயிற்சியில் முதல் 12 மாதம் மிகக் கடுமையான உடல் பயிற்சி அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல் என்று கடந்து போனது
இதோடு ஒப்பிட்டால் அடுத்த ஆறு மாத வானூர்தி பொறியியல் பயிற்சி மிக எளிதாக் இருந்தது
பாதுகாப்புப் பணி என்பது பயிற்சியில் ஒரு முக்கிய இடத்தை வகித்தது
Defense Security Corps- (DSC) என்று ஒரு சிறப்பான அமைப்பு பாதுகாப்புப் படையில் இயங்கி வருகிறது
தரைப்படை வீரர்களைக் கொண்ட இந்த அமைப்பு முப்படைப் பிரிவுகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ஒரு தலயாய பணியை செய்து வருகிறது
தேவைப் பட்டால் தற்காலிகமாக . சில கப்பல் படை, வான்படைவீரர்கள் அழைக்கப் படுவது உண்டு
இந்த சிறப்புப் பிரிவின் பணிகளை இரவில் மேற்பார்வை செய்து பாதுகாப்பு செவ்வனே இருக்கிறது என்பதை உறுதி செய்வதுதான் எங்களுக்கு பாதுகாப்புப் பணிப்பயிற்சியில் வலியுறுத்திச் சொல்லப்பட்டது
நீங்கள் DSC வீரரின் கண்ணில் பட்டவுடன்
“நில் வருவது யார் “
Halt ! Who comes there
என்று உரத்த குரலில் சொல்வார் (Shout)
சுடுவதற்கு ஆயத்தமான நிலையில் அவர் துப்பாக்கி உங்களை நோக்கி குறிபார்த்தபடி இருக்கும்
நீங்கள் உடனடியாக
நான் விங் கமாண்டர் அஜ்மல்
என்று உங்கள் பதவி, பெயருடன்
உங்கள் அடையாளத்தை அறிவிக்க வேண்டும்
அந்த வீரருக்கு உங்கள் பெயர் தெரியாது
எனவே அவர் சொல்லுக்கு இணங்க கைகளை மேலே உயர்த்தி
ஒரு கையால் உங்கள் அடையாள அட்டையை தரையில் வைத்து விட்டு
சில அடிகள் பின்னால் போய்
அவருக்கு உங்கள் முதுகைக் காண்பித்த் நிலையில் திரும்பி நிற்க வேண்டும்
துப்பாக்கியை சுடும் நிலையில் நீட்டியபடி அவர் முன்னால் வந்து உங்கள் அடையாள அட்டையை சரி பார்ப்பார்
நீங்கள் திரும்பி நிற்பதால் அவர் என்ன செய்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது
உங்கள் அடையாளத்தை அறிந்த பின் அவர் உங்கள் பதவிக்குரிய மரியாதையை செலுத்தி உங்களைப் போக அனுமதிப்பார்
இந்த செயல் முறையில் கைகளைத் தூக்குவது, அ.அட்டையை
தரையில் வைப்பது ,திரும்பி நடப்பது என்ற செயல்களில் ஏதாவது ஒன்றில் ஒரு நொடி தாமதம்/தொய்வு ஏற்பட்டால் உடனே சுடுவதற்கு அவருக்கு அதிகாரம் உண்டு
உங்கள் உயிர் போகுமா என்பது அவரின் குறி பார்த்து சுடும் திறமையைப் பொருத்தது
நொடி தாமாதித்ததனால் சுடப்பட்ட பலரின் கதையை பயிற்சிக் காலத்தில் கேட்டு , அது பற்றிய அச்சம் எங்கள் மனதில் எப்போதும் இருக்கும்
.
பயிற்சி நிறைவுக் கட்டத்தில் நடு இரவில் பயிற்சிக் கல்லூரியில் உள்ள 12 காவலர்களின் பணியை சரி பார்க்கும் வேலை தரப்பட்டது
வான்படை வீரர்கள் இருந்தால் எங்களை எளிதில் அடையாளம் கண்டு, மரியாதை செலுத்தி நோட்டுப் புத்தகத்தில் கைஎழுத்து வாங்கிக் கொண்டு விட்டு விடுவார்கள்
ஆனால் DSC வீரர்கள் என்றால் எங்களை முழுக்க முழுக்க எதிரிகளாகப் பாவித்து உச்ச குரலில் halt என்று கதத்துவதிலிருந்து ஒவ்வொரு செயலையும் முழுமையாகச் செய்வார்கள்
திரும்பி நிற்கும் ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போலத் தோன்ற உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு
"Jai Hind Saab”
என்ற குரலுக்காக காத்திருப்போம்
இப்படி DSC வீரர்களை சரிபார்க்கும் ஒவ்வொரு இரவும் எங்களுக்கு ஒரு சோதனையாகவே இருக்கும்
யாரும் சுடப்படவில்லை என்ற மகிழ்வோடு, பயிற்சி நிறைவு பெற்றது
.
நிற்க. சில ஆண்டுகளுக்குப்பின் பதான்கோட் ---
ஆம் செய்தி ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்ட அதே பதான்கோட் டுக்கு எனக்கு பணி மாறுதல்
நாட்டின் எல்லைக்கு மிக அருகில் இருந்ததால் மிகவும் பதற்றாமான பகுதி
மேலும் அங்கு இரண்டு
MIG Aircraft Squadrons நிலை கொண்டிருந்தன
எனவே அங்கே இரண்டு போர் விமானங்கள்
இரண்டு நிமிட அவகாசத்தில் புறப்படும் அளவுக்கு ஆயத்த நிலையில் 24x7 நேரமும் இருக்கும்
அங்கு பணியிட மாறுதலில் நாங்கள் சென்றபோது தற்காலிகமாக ஒரு வீட்டில் தடங்கி இருந்தோம்
விமான ஓடு தளத்துக்கு அருகில் இருந்த அங்கு தங்கியபோது இரவும் பகலும் இடைவிடாமல் பறக்கும் MIG fighter விமானங்களின் செவிப்பறையை கிழிக்கும் ஓசைக்கு என் குடும்பத்தினர் பழக்கப் படுத்திக் கொண்டனர்
ஒரு நாள் Officers Mess இல் இரவு விருந்தில் கலந்து கொண்டு விட்டு வீடு திரும்பினோம்
விமான ஓடு தளத்தைக்கடந்துதான் எங்கள் வீட்டுக்குப் போக முடியும்
பூட்டியிருந்த ஓடு தள வாசல் கதவு திறப்பதற்காக காத்திருந்தோம்
எங்கிருந்தோ திடீரென்று ஒரு DSC காவலர் முளைத்து நீட்டிய துப்பாக்கியோடு ஹால்ட் என்று கத்தி வழக்கமான செயல்களை துவங்கினார்
ஸ்கூட்டரின் பின்னால் இருந்த என் துணைவி அச்சத்தில் ஆடிப்போய் விட்டார்
அவரைப் பார்த்தும் கூட அந்த வீரர் துப்பாக்கியை தாழ்த்தவில்லை
நல்ல வேளை என்னை நான் அடையாளம் காண்பித்துக் கொள்ளும் வரை அவர் பொறுமை காத்தார்
ஓடு தளத்தின் அருகில் வீடு அமைந்த என் அண்டை வீட்டார் பலருக்கும் இது போன்ற அச்சமூட்டும் அனுபவங்கள் ஏற்பட்டன
இருந்தாலும் நடு இரவில் பெண்மணி ஒருவர் DSC காவலரை சந்திக்க நேர்ந்தது வான் படையில் ஒரு அரிய நிகழ்வு
ஆனால் நடந்தது பதான் கோட் என்பதால் அது இயல்பான நிகழ்வாகிறது “
இனி நான்
நேற்றைய பதிவின் நிறைவில் அரணுக்கு அரண் பற்றி வினா எழுப்பியிருந்தேன்
பெரும்பாலும் யாரும்(என்னையும் செர்த்துத்தான் ) அறியாத ஓன்று என்பதால் இதற்கு விடை யாரிடமிருந்தும் எதிர் பார்க்கவில்லை
இருந்தாலும் ஆர்வத்துடன் முயற்சித்து விடை அனுப்பிய சகோ
அஷ்ரப் ஹமீதாவுக்கும் இதயத்துக்கும் நன்றி
Defense Security Corpse (DFC)
என்ற விடை , சுவையான தெளிவான விளக்கம் சகோ அஜ்மல் பதிவில் பார்த்தோம்
Profile of Wing Commander Ajmal Khan Retd
25 ஆண்டுகள் வான் படையில் வானூர்தி பொறியர்
அங்கிருந்து விலகும்போது Wing Commander பதவி
தகவல் துறை பெரு நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணி
விலகும்போது துணைத் தலைவர் (Vice President ) பதவி
கல்வி
B E (Electronics ) from NIT Trichy )
M Tech Computer Science from IIT madras
இவ்வளவுதான் அவர் அனுப்பியது
எனக்கே இதை விட அதிகமாக அவரைப் பற்றித் தெரியும்
தற்போதைய NIT க்கு அவர் படித்த காலத்தில்
Regional Engineering Colllege (REC)
என்று பெயர்
பள்ளி கல்லூரி என எல்லாவற்றிலும் படிப்பில் முதன்மையாக இருந்தவர்
M tech படிக்க வான்படையால் தெரிவு செய்ய்பட்டவர்
எனது வகுப்புத் தோழர் நெருங்கிய உறவினர் நண்பர்
மிக எளிமையானவர்
இன்னும் நிறைய உண்டு
ஒரு சுவையான மாறுபட்ட பதிவைத் தந்த அவருக்கு என்நன்றி
தொடர்ந்து இது போல பல பதிவுகள் அனுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன்
மொழி மாற்றம் செய்யும்போது மூலப்பதிவின் உயிரோட்டம் குறைந்து போகும்
சகோ அஜ்மல் அனுப்பிய ஆங்கிலப்பதிவு யாருக்காவது தேவைப் பட்டால் அனுப்பி வைக்கிறேன்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
09 01 2023 திங்கள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment