Saturday, 11 August 2018

வண்ணச் சிதறல் 27 காற்றும் மழையும்......






காற்றும் மழையும்.......

.
நான் சென்னையில் பணிபுரிந்தபோது வங்கி வாடிக்கையாளர் ஒருவர் வீட்டுக்குப் போயிருந்தேன். வெளிநாட்டில் இருப்பவர் ,விடுமுறையில் சென்னைக்கு வந்திருந்தார்
கருங்கல்லையும் சலவைக்கல்லையும் இழைத்துக் கட்டிய மிகப்பெரிய வீடு .மூன்று குடும்பம் வசதியாக வாழலாம் .
. இரண்டாண்டுக்கு ஒரு முறை வந்து ஒரு மாதம் தங்கியிருப்பார்கள் . ஒரு நாயும், அதைப்பார்த்துக்கொள்ள ஒரு ஆளும் மட்டும் மற்ற நாட்களில் இருப்பார்களாம் . அப்படித்தான் அவர் சொன்னார்.

வீடு என்பது ஒரு மனிதனின்,, ஒரு குடும்பத்தின் தேவை என்பதைத் தாண்டி ஒரு சமுதாயத் தேவையாகவும் , நிலைக் குறியீடாகவும் (status symbol) மாறி வருகிறது
பையன் பேரில் சொந்த வீடு, அதுவும் கடனில் இல்லாமல் இருக்கிறதா என்று பெண் (வீட்டார்) கேட்பது அதிகரித்து வருகிறது
இது காலத்தின் கட்டாயம் இதை மாற்றவும் முடியாது .இதைப்பற்றி நான் ஒன்றும் சொல்லவும் இல்லை

வீடு கட்டும்போது நாம் கருத்தில் கொள்ள வேண்டிய சில செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்ளவே இந்தப்பதிவு

நான் வாழ்நாளில் கட்டியது ஒரு வீடுதான் அதற்கும் பெரிதாக போய் நின்றதில்லை .இருந்தாலும் நாட்டின் பல மாநிலங்களில் நாற்பது வீடுகளில் வாழ்ந்த அனுபவம், ஆங்காங்கே காதில் விழுந்தவை, படித்தவை என் சொந்தக் கருத்துக்கள்  எல்லாம் சேர்ந்த கலவைதான் இது

அடுக்ககங்களில் வாழ்ந்தது இல்லை . எனவே அது பற்றி அதிகம் பேச முடியாது

வீடு கட்டும்போது முதலில் வீடு நாம் குடியிருக்கவா இல்லை வாடகைக்கு விடவா என்பதை ப்பொறுத்து நம் வீடு அமைய வேண்டும்

வாடகைக்கு வருபவர்கள் சில எதிர்பார்ப்புகளோடு வருவதாகச் சொல்கிறார்கள் – வழவழப்பான ஓடுகள் பதித்த தரை, குளியல் அறை சுவர்கள் , மேற்கத்தியக் கழிவறை – இவையெல்லாம் இல்லாவிட்டால் வீட்டின் வாடகை மதிப்பு குறையும் என்கிறார்கள்

அதுவே நாம் குடியிருக்க வீடு கட்டினால் தரை, குளியல் அறை சுவர்கள் , படிகள், மாடிப்படிகள் சற்று சொரசொரப்பாக இருப்பது நல்லது .முதுமைக் காலத்தில் அந்த வீட்டில் பெரும்பாலும் நாம் இருவர் என்று வாழ வேண்டியதிருக்கும் .
வீடு ஒரே தளத்தில் இருப்பது நல்லது. படிஏறும் வேலை குறையும்

ஒரு பெரிய கூடம், இரண்டு படுக்கை அறைகள் ,என்ற பொதுவான அமைப்பை நம் தேவைகேற்ப மாற்றிகொள்ளலாம்

படுக்கை அறைகள் இப்போது பெரும்பாலும் வசிக்கும் அறைகளாக (லிவிங் ரூம்ஸ்) மாறி வருகின்றன எனவே அவற்றை விசாலமாக அமைத்துக்கொள்ளலாம் . அந்த அறையிலேயே ஒரு சிறிய மேசை போட்டு சாப்பிட, எழுத,படிக்க , மடிக்கணினி வைக்க பயன்படுத்தலாம்

சமையலறையை மிக விசாலமாக அமைத்தால் பிற்காலத்தில் அதில் குறுக்கும் நெடுக்கும் நடப்பதே சிரமமாகத் தெரியும் என்பதைக் கருதி நம் தேவைகேற்ப அமைத்துக்கொள்ள வேண்டும்

இயற்கை காற்றும் வெளிச்சமும் உள்ளே வரும் படி வீட்டை அமைத்தால் உயர்ந்து கொண்டே போகும் மின்கட்டணத்தை குறைக்கலாம் 

.சூரிய ஒளி ஒரு மிகச்சிறந்த நுண்ணுயிக்கொல்லி – அதை முழு அளவில் பயன்படுத்திகொள்ள வேண்டும் .

சன்னல் கதவுகள் உள்நோக்கித் திறப்பது போல் இருந்தால் காற்று நன்றாக வருமாம்.  .சன்னல் கதவுகள் இரட்டையாக இருந்தால் நம் தேவைக்கேற்ப திறந்து மூடிக்கொள்ளலாம் . - பழையமுறையில் அமைந்த  எளிய சன்னல்  கொக்கிகளே நல்லது

சுவரில் அடிக்கடி கை பட்டு.அழுக்காகும் இடங்களில் அடர் நிற ஓடுகளை பதித்து வைக்கலாம் .முடிந்தால் அடர் நிற வண்ணம் பூசி விடலாம்
சமையலறை சுவருக்கு ஓரளவு அடர் வண்ணம் பூசினால் அழுக்குத் தெரியாது

மழை நீர் சேகரிக்கும் அமைப்பு மிக மிக அவசியமான ஓன்று .அண்டை வீட்டில் ஆழ்துளை கிணறு தோண்டினால் நம் வீட்டில் தண்ணீர் வற்றிவிடும் நிலையை இது தவிர்க்கும். மழை நீர் நிலத்தடியில் போகாமல் வீட்டுக்குள் நெகிழி தொட்டி (சின்டெக்ஸ் டான்க்) வைத்து அதில் நீரை சேகரிக்கும் முறை பற்றி இந்திய தொழில் நுட்பக் கழகப் பேராசிரியர் ஒருவர் சமூக வலை தளத்தில் பதிந்திருந்தார் .அவர் வீட்டில் இது போல் போட்டு தண்ணீர் பற்றாக்குறையே இல்லை என்று எழுதியிருந்தார் .இதை முயற்சி செய்து பார்க்கலாம்

முடிந்தால் சூரிய ஒளிமின் கருவிகளும் பொருத்தி விடலாம்

குளியல் அறை கழிவறை தனித்தனியாக அமைக்கலாம் .அதற்கு இடம் இல்லைஎன்றால் இரண்டுக்கும் இடையில் ஒரு தடுப்பு அமைக்கலாம்

குளியலறையில் ஒரே இணைப்பில் மூன்று குழாய்கள் அமைப்பது தேவையற்றது .ஒரு குழாய் பழுதானாலும் மூன்றையும்தான் மாற்ற வேண்டும் . புதிதாக வருபவர்கள் இது  போன்ற அமைப்பில்  தவறாமல் தவறி தலையை   நனைத்துகொள்வார்கள்

கழிவறையில் உள்ளதுபோல் ஒரு கைக்குழாய் குளியலறையில் பொருத்தினால் சுகமாகக் குளிக்கலாம்

முடிந்தால் ஆழ்துளைக் கிணற்று நீர் நேரடியாக வரும் குழாய் ஓன்று குளியலறையில் பொருத்தலாம் .அதிகாலையில் குளிர் நேரத்தில் வெதுவெதுப்பாகவும் கோடையில் குளிர்ச்சியாகவும் வரும் புத்தம் புது நீரில் குளிப்பது ஒரு தனி சுகம் 

மேலை நாடுகளில் குளியலறையை ஒரு நொடியில் ஈரமில்லாமல் காய வைக்கும் மின் உலர்த்தி இருப்பது பற்றிப் படித்திருக்கிறேன் .அது போல் இங்கும் பொறியாளரைக் கலந்து பொருத்தலாம்

குளியலறை, கழிவறைக் கதவுகளின் தாழ்ப்பாள்கள் தொடர் வண்டியில் இருப்பது போல் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் திறப்பது போல் இருந்தால் முதியோரும் சிறு குழந்தைகளும் இருக்கும் வீடுகளில் பல விபத்துகளைத் தடுக்கலாம்

சூரிய ஒளி குளியல் , கழிவறைகளில் நன்றாகப் படவேண்டும்
குளியல் அறையை சற்று உயரத்தில் அமைப்பது எதற்காக என்று தெரியவில்லை. ஈரக்காலோடு குளியலறையிலிருந்து இறங்கையில் வழுக்கி விடலாம்

மாடியில் திறந்த வெளியில் உட்கார, படுக்க ஒரு இருக்கை அமைத்தால் இரவில் காற்று வாங்கலாம் .நிலவை ரசிக்கலாம் விண்மீன்களை எண்ணலாம் 

.பளிங்குகல்லில் இருக்கை அமைத்தால் வெய்யிலில் சூடாகாது என்கிறார்கள் .படிக்கும் அளவுக்கு வெளிச்சம் தரும் விளக்கும் பொருத்தலாம் 

துணி காயப்போட ஒரு நல்ல அமைப்பை ஒரு வீட்டில் பார்த்தேன் . நீளமான ஒரு தாழ்வாரம் .தாழ்வாரத்தின் சுவரில் சிறு சிறு துளைகள் –அவற்றின் வழியே காற்று வரும் மழை நீர் உள்ளே வராது .மேற்கூரையில் சூரிய ஒளி வருமாறு கண்ணாடிகள் .நிறைய துணிகள் காயப்போடலாம்

வாணியம்பாடியில் ஒரு கட்டிடத்தில் பண்டைய முறையில் கட்டப்பட்ட ஒரு அறையைப் பார்த்தேன். சுவரில் நிறைய ஊசித்துவாரங்கள் இருக்கும் அந்த அறை எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும்

தொலைக்காட்சி பெட்டிக்கு மின் கட்டுப்பாட்டு பொறி பெட்டிக்குப் பின்னாலோ அருகிலோ இல்லாமல் சற்றுத்தள்ளி இருந்தால் போட, அணைக்க எளிதாக இருக்கும்

தொலைக்காட்சி பெட்டி போன்ற பொருட்களை வைக்க வீடு கட்டும்போதே அழகாக ஒரு தாங்கி கட்டி விடலாம் .இது செலவைக் குறைப்பதோடு வலுவானதாகவும் இருக்கும் .இதே போல் ஒப்பனை மேசையும் கட்டி விடலாம்

ஒரு பொறியை அழுத்தினால் வீட்டில் உள்ள எல்லா விளக்குகளும் ஒளிருமாறு அமைத்தால் இரவில் கள்வர் வருவது போல் தோன்றினால் பயனுள்ளதாக இருக்கும்

ஒரு அவசரத்துக்கு அக்கம்பக்கத்தை அழைக்க ஒரு அழைப்பு மணி வைத்துக்கொள்ளலாம்

செய்தித்தாள், பால், தபால் போட மதில் சுவரில் பெட்டி போல் அமைக்கலாம்

அழைப்பு மணிப் பொறி வெளியே இருந்தால் அது மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டும்

கைப்பேசிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை என்ற நிலை வந்து விட்டது .அவற்றிற்கு மின்னூட்ட தேவையான பொறிகளையும் தாங்கிகளையும் வேண்டிய அளவுக்குப் பொருத்த வேண்டும்

தோட்டம் – மிக மிக அவசியம் சிறியதாக இருந்தாலும் போதும் .மண்ணின் தொடர்பு இருக்க வேண்டும் மண்ணிலிருந்துதான் மனிதன் படைக்கப்பட்டான் என்கிறது புனித குர்ஆன்

தாழ்வாரம், அறை, கூடம், எதுவாக இருந்தாலும் குறைந்து ஆறு அடி நீளம், அகலம் இருக்க வேண்டும்
லாரி பேக்கர் வழியில் கட்டிய வீடு 


லாரி பேக்கர்- ஒரு நல்ல கட்டிடக்கலைஞர்- இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த இவர் நம் நாட்டு பண்டைய கட்டிடக்கலையால் ஈர்க்கப்பட்டு அது பற்றி படித்துத் தெளிந்தவர் . குறைந்த செலவில் வீடுகள் கட்டுவது இவருடைய சிறப்பு,

வீடு என்பது ஒரு நிரந்தர அமைப்பு அல்ல. காலபோக்கில்  நம் தேவைகள் மாறும்போது அதற்கேற்றாற்போல் வீட்டை மாற்றி அமைக்க வேண்டும் என்பது இவருடைய கருத்து

கட்டுமானச் செலவைக் குறைக்க இவர் சொல்லும் சில கருத்துக்கள் 
சுவருக்குப் பூச்சு தேவை இல்லை,- ,இரும்புக்கம்பி பயன்பாட்டை பெருமளவில் குறைக்கலாம் ,- கட்டில், சோபா ,சாப்பாட்டு மேசை, கட்டில் போன்றவற்றை பெரும் செலவில் மரத்தில் வாங்காமல் வீடு கட்டும்போதே கட்டி விடலாம் , வாசல் சன்னல்களுக்கு சட்டம் (Frame), தேவையில்லை

இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்து வருமா என்பது தெரியவில்லை .ஆனால் அவர் சொன்ன சில கருத்துகள் எனக்கு மிகவும் பிடித்தன.
--உங்கள் தேவைக்ற்ப உங்கள் வீட்டைக் கட்டுங்கள்
- - வீட்டை முப்பரிமாணமாகப் பாருங்கள் . நீளம், அகலமா மட்டும் பார்க்காதீர்கள்
முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் வீடு கட்டியபோது லாரி பேக்கர் வழியில் கட்ட முயற்சித்தேன். அது நடக்கவில்லை
நான் அறிந்த,பார்த்த, படித்த கருத்துகளை உங்களுடன் பகிர்ந்துகொண்டேன்

வீடு கட்டுவதில்  எனக்குள் இருக்கும்   தனி விருப்பம் எண்ணம் ஒன்றைச் சொல்லி இப்பகுதியை நிறைவு செய்கிறேன்

 படுக்கையில் படுத்தபடியே வானத்தைப் பார்க்கும்படியான ஒரு அமைப்பு – திறந்து மூடும்படியான ஓன்று படுக்கை அறையின் மேற்கூரையில் இருக்க வேண்டும்

இ(க)டைச்செருகல்
 சுவர் கட்டும்போது செங்கலை குறுக்கும் நெடுக்குமாக எலிப்பொறி பிணைப்பில் (Rat Trap Bond) அடுக்கினால் செங்கல் செலவு 25% குறைவதோடு  வீட்டுக்குள் எப்போதும் ஒரு இதமான தட்ப வெப்பம் இருக்கும் .இதுவும் லாரி பேக்கர் சொன்னது

மூளைக்கு வேலை

மிக எளிய வினா ஓன்று சென்ற முறை கேட்டிருந்தேன் .புனித ஆலயமான காபாவை உருவாக்கியது யார் என்று .
பலரைப்போல் நானும் இப்ராகிம் நபி *அலை) அவர்களும் அவர் மகனும் சேர்ந்து கட்டியதுதான் காபா என எண்ணியிருந்தேன்.
அண்மையில் பள்ளிவாசலில்  வெள்ளிக்கிழமை சொற்பொழிவு ஒன்றில் காபவைப் புதுப்பித்துகட்டியது நபி இப்ராகிம் அலை அவர்கள் என்று தெரிந்துகொண்டேன்
மேலும் அந்த சொற்பொழிவாளர் சொன்னது
, முதல் நபியான ஆதம் அலை உட்பட எல்லா நபிமார்களும் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டு காபாவை வலம் வந்திருக்கிறார்கள்.
ஏக இறைவன் கட்டளைப்படி காபாவை உருவாக்கியவர்கள் வானவர்கள்
இந்த விடையை சரியாகச் சொன்ன
 பேரன் பர்வேஸ் அகமதுக்குப் பாராட்டுகள்

இந்த வார வினா

உலகில் அதிக அளவில் ஆங்கிலம் பேசும் மக்கள் கொண்ட நாடு எது ?

இறைவன் நாடினால்
 மீண்டும்
சந்திப்போம்


வலைநூல் முகவரி
sherfudddinp.blogspot.com 





No comments:

Post a Comment