Thursday, 2 August 2018

தமிழ் மொழியறிவோம் 7 கரையும் நினைவுகள்




கரையும் நினைவுகள்


“என் அப்பாவின் அப்பாவுக்கு உங்கள் பெற்றோர் எந்த வகையில் உறவு?”
என்று ஒரு வினா வந்ததும் நான் சற்று திகைத்துப் போய்விட்டேன்.
அந்த உறவினர் குறிப்பிட்ட அப்பாவின் அப்பா என் அம்மாவின் உடன் பிறந்த தம்பி .

சிறிது நேரம்தான் திகைப்பு .பின் ஒரு தெளிவு . இனி இப்படித்தான் இருக்கும் .எனக்கே என் அப்பாவின் அப்பா வரைதான் பெயர் தெரியும் .
எனவே இதைபற்றியெல்லாம் விளக்கி எழுதுவது என்பது இயலாத ஓன்று காலப்போக்கில் உறவு முறைகளை அறிய ஒரு மென்பொருள், ஒரு செயலி உருவாகலாம் 
.
இந்தப்பகுதியில் நான் சொல்ல வருவது நான் பார்க்க எங்கள் வீட்டிலும் எங்கள் உறவினர் வீடுகளிலும் புழக்கத்தில் இருந்து இப்போது காணாமல் போன சில வீட்டுப்பொருட்கள். அதோடு மறந்து போன சில சுவைகள் பற்றிப் பார்ப்போம்.

சுவைக்குத்தான் எப்போதும் முதல் இடம்

பர்கர் பீசா மயக்கத்தில் மறந்து போயிருந்த கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய் ,அதிரசம் ,முறுக்கு, தட்டை போன்றவை புத்துயிர் பெற்று இப்போது எல்லா கடைகளிலும் கிடைகிறது .

எளியவர் பயன்படுத்திய கருப்பட்டி இப்போது சீனியை விட பலமடங்கு விலை உயர்ந்து விட்டது .(கருப்பட்டி – பனை வெல்லம்- Palm jaggery )
சாலை ஓர உணவுகளாக இருந்த பணியாரம் போன்றவை இப்போது நட்சத்திர தரம்  அடைந்து பெரிய உணவகங்களில்  காட்சிப்பொருளாக மாறி விட்டன. .இந்த மாற்றங்களையும் தாண்டி சில சுவைகள் மறக்கப்பட்டு விட்டன

அவிஅரிசி- இந்தப் பெயரே இளைய தலைமுறைக்குப் புதிதாகத் தெரியும்
நெல்லை உரலில்( உரல்- விளக்கம் பின்பு - போட்டு இடித்துப் புடைத்து (வி. பி) அரிசியாக்கி அதில் வெல்லம் தேங்காய் நெய் சேர்த்து அவிப்பது (Boiling) அவிஅரிசி – ஒரு சுவையான மாலை நேரத்தீனி –சமையல் குறிப்பு- துணைவி- நன்றி )

(டயட், சுகர், பிரசர், கொலஸ்ட்ரால் இதெல்லாம் நாங்கள் இளவயதில் அறியாத சொற்கள்) )

அந்த அரிசியை அவிக்காமல் பொறித்து எடுத்தால் அது பொறி அரிசி என நினைக்கிறேன் . இதுவும் நல்ல சுவையான ஒரு நொறுக்குத்தீனி
பொரியரிசியை இடித்து மாவாக்கி, அதில் வெல்லம் நெய் சேர்த்து உருண்டை பிடிப்பது சத்து மாவு உருண்டை என நினைவு
முழு பச்சைப் பயிரை (Green Gram ) வேக வைத்து அதில் வெல்லம் தேங்காய் சேர்த்தால் சுவையான புரதச்சத்து, (Protein) ,  இரும்புச்சத்து (Iron ) நிறைந்த ஒரு இனிப்பு

இன்னொரு நாக்கை சப்புக்கொட்ட வைக்கும் சுவை அட (அடை?) மாங்காய் .
பெரிய மாங்காய்களை இரு பக்க அலகுகளையும் முழுதாக நறுக்காமல் முக்கால் பங்கு நறுக்கி அந்த இடைவெளியில் (கல்) உப்பை வைத்து ஊறுகாய் சாடியில் போட்டு விடவேண்டும் .எண்ணெய், தாளிப்பு எதுவும் தேவையில்லை . மாங்காயின் புளிப்பு உப்பில் சேர்ந்து ஒரு நல்ல சுவையாக இருக்கும்

இப்போதே வயிறு நிறைந்தது போல் இருக்கிறது

தடுக்கு, திருகை, துடுப்பு போன்ற சில சொற்கள் பற்றி அடுத்த வாரம்

Blog address
sherfuddinp.blogspot.com






No comments:

Post a Comment