Wednesday, 1 August 2018

நம் கடலூரை மீட்போமா !! 7 நிறைவுப்பகுதி




நிறைவுப்பகுதி

கடந்த சில பகுதிகளில் கடலூரின் குறைபாடுகளை கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், மாசு என்ற தலைப்புகளில் எனக்குத் தெரிந்தவற்றை பதிவு செய்தேன் .

இவை மட்டும்தான் குறையா மற்றவையெல்லாம் சரியாக இருக்கிறதா என்றால் நிச்சயமாக இல்லை இல்லை இல்லை.

இப்படி எல்லாவற்றிலும் குறை என்றால் அதற்கு யார் பொறுப்பு .? நம்மிடையே விழிப்புணர்வு இல்லையா- அரசு மெத்தனமாக இருக்கிறதா இல்லை இரண்டும் சேர்ந்துதானா ?

அரசு அதிகாரிகள் பொதுவாக நல்லவர்கள்தான் . ஆனால் மக்களிடம் நேரடித் தொடர்பில் உள்ள ஊழியர்களிடம் ஒரு மக்களை மதிக்காத மனப்பான்மை இருக்கிறது என்பது ஒரு மறுக்க முடியாத உண்மை.
இதை நான் பொத்தாம்பொதுவாகச் சொல்லாமல் சில எடுதுக்காட்டுகளை முன் வைக்கிறேன்

ஓன்று என் வங்கி அலுவல் தொடர்புடையது
கனரா வங்கி முது நிலை மேலாளராகப் பணிஆற்றியபோது தாட்கோ அலுவலகத்திஇல் ஒரு நேர்முகம் நடத்த என்னை அழைத்தார்கள் 

.மானியத்துடன் கூடிய கடனுக்கு விண்ணப்பித்தவர்களை நேர்முகம் கண்டு முடிவு செய்ய வேண்டும் .அவர்கள் சொன்ன அலுவலகத்துக்கு அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே நான்  போய்விட்டேன்.ஒரு ஒண்ணரை மணி நேரக் காத்திருப்புக்குப்பின் ஒரு அறையில் நேர்முகம் துவங்க ஏற்பாடு செய்து என்னை அழைத்தார்கள்

அந்த  அறையில் ஒரு மேசையும் எனக்கு ஒரு இருக்கையும் தாட்கோ அலுவலருக்கு ஒரு இருக்கையும் போட்டிருந்தார்கள்
விண்ணப்பித்தவர்கள் உட்கார இருக்கை எதுவும் இல்லை . நான் கேட்டதற்கு
கடன், அதுவும் மானிய கடன் வாங்கத்தானே வருகிறார்கள் அவர்களுக்கெல்லாம் இருக்கை தேவையில்லை . நிற்க வைத்தே பேசி அனுப்பி விடலாம்
என்ற அலட்சியமான பதில்

நான் மிகவும் வலியுறுத்தி , மாவட்ட ஆட்சியரிடம் இது பற்றிப்பேச வேண்டியிருக்கும் அல்லது நான் நேர்முகம் காண மறுக்க வேண்டிஇருக்கும் என்று எச்சரிக்கை செய்தபிறகே இருக்கை கொண்டு வந்து போட்டார்கள் .இதிலேயே மேலும் அரைமணிநேரம் கழிந்து விட்டது

அடுத்த எடுத்துக்காட்டு என் சொந்த வாழ்வில் நிகழ்வு
பணி ஒய்வு பெற்று கடலூர் வந்தவுடன் முன்பிருந்த ஊரில் குடும்ப அட்டையை ஒப்படைத்ததற்கான சான்றிதழுடன் புது குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து அதை உரிய அலுவலரிடம் நேரில் கொடுத்து அதற்கான ஒப்புகைச் சீட்டும் வாங்கி வந்தேன்
நாட்கள் கடந்து வாரங்கள் நகர்ந்து மாதங்கள் கழிந்து ஆண்டுகளும் உருண்டோடி விட்டன
குடும்ப அட்டையும் கிடைக்கவில்லை . சரியான தகவலும் கிடைக்கவில்லை  
.அதற்கெல்லாம் மேல் சற்றும் மனிதத் தன்மை இல்லாத ஒரு நடத்தை.உட்கார இருக்கை கிடையாது . குடும்ப அட்டை வந்திருக்கும் எண்களை கையால் எழுதி சுவரில் ஒட்டியிருப்பார்கள் . அதில் பாதி தேய்ந்து பாதி கிழிந்து போயிருக்கும்

நானும் பல ஆண்டுகள் காத்திருந்து, நடையாய் நடந்து பொறுமை இழந்து சட்டபஞ்சாயத்து இயக்கத்துக்கு புகார் செய்தேன். அதன் பிறகு என்னிடம் புதிதாக ஒரு விண்ணப்பம் வாங்கி ஒரு மாதத்திற்குள் புதிய அட்டை கொடுத்தார்கள்

மூன்றாவது எடுத்துக்காட்டு
அண்மையில் கடலூரில்  ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை  அரசு அதிகாரிகள் கையாண்ட முறை
“தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் நடந்துகொள்கிறார் ஆணையர் “
என்பது கடலூர் சிறகுகளில் வந்த செய்தி

கடலூர் ஒரு அழகிய நகரம் என்பார்கள் .ஒரு பக்கம் மலை, ஒரு பக்கம் கடல் இரண்டு பக்கம் ஆறு – என்ற இயற்கை அமைப்பு

அழகிய வெள்ளிக்கடற்கரை, பழைய கோட்டை, வெள்ளையர் குடியிருந்த பழைய இல்லம் ,பழமையான கோயில்கள் இப்படி பல சுற்றுலா இடங்கள்
ஓரளவு நல்ல தண்ணீர் வளம் இப்படி எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாதது போல் ஒரு பொலிவில்லாத தோற்றம்

தெரிந்தவற்றைச் சொல்லி விட்டேன்

குறைகளைக் களைந்து நகரை சிறப்பாக்கி கடலூரின் பெருமையை மீட்டெடுக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு

சிந்திப்போம் செயல் படுவோம்

இத்துடன் இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன்

தொடர்ந்து எழுத அனுமதித்த குழு நிர்வாகத்துக்கும் கருத்தும் விருப்பமும் தெரிவித்த குழு உறுப்பினர்களுக்கும் நன்றி

Blog address
sherfuddinp.blogspot.com
01082018




No comments:

Post a Comment