Thursday, 22 July 2021

தியாகத் திருநாள் குறிப்புகள் 10

 தியாகத் திருநாள் குறிப்புகள் 10

எங்கள் ஹஜ் பயண அனுபவங்கள் -1/3
பதினைந்து ஆண்டுகளுக்குமேல் கடந்து விட்டன நானும் என் துணைவியும் ஹஜ் பயணம் மேற்கொண்டு ( 2005-2006)
இந்தப்பயணம் பற்றிய பதிவை 23062016 அன்று வெளியிட்டேன்
மிக நீளமான அதை மூன்றாகப் பிரித்து முதல் பகுதி இன்று வெளியிடுகிறேன்
ஹஜ் என்றவுடன் ஒரு சிறிய நினைவுப் பின்னோட்டம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஹஜ் பயணம் பற்றி ஒரு திரைப்படம் பார்த்தேன். அதில் மக்க மாநகரின் வீதியில் உள்ள ஒரு வழிகாட்டுப் பலகை(sign board ) இன்னும் என் நினைவில் நிற்கிறது . ஆங்கிலத்தில் இருந்த அந்தப் பலகையில் இருந்த சொற்கள் சற்று வித்தியாசமாக எனக்குத் தோன்றின .அந்த சொற்களை இந்தப் பகுதியின் இறுதியில் சொல்கிறேன்
ஹஜ் பயணம் பற்றி .எப்போது எண்ணம் தோன்றியது என்பது நினைவிலில்லை.. ஆனால் பணியிலிருந்து ஒய்வு பெறுமுன் இருவருமாய் ஹஜ் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக மனதில் வேருன்றியிருந்தது. எண்ணம் மட்டும்தான் இருந்தது ; வேறு எந்த ஆயத்தமும் செய்யவில்லை .அதற்காக பணமும் சேர்க்கவில்லை.
கடலூரில் பணியாற்றும்போது சென்னைக்குப் போயிருந்தேன். அங்கு மைத்துனர் சிராஜுதீன் வீட்டில் முஸ்லிம் முரசு இதழில் பல ஹஜ் பயண விளம்பரங்களைப் பார்த்தேன். அதில் சிலவற்றைக் குறித்துக் கொண்டு கடலூர் திரும்பியவுடன் மூன்ற பேரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். நான் எதிபார்க்கவே இல்லை. மூவருமே கடலூருக்குப் புறப்பட்டு வந்து விட்டார்கள்..
அதில் புதுக்கோட்டை அல் சபா வில் போக எண்ணினேன். புதுக்கோட்டையில் அல்சபா பற்றி விசாரித்ததில் நல்ல விதமாகவே சொன்னார்கள். குறிப்பாக சாப்பாடு நம் ஊர் சுவையில் நன்றாக இருக்கும் என்றும் பயணிகளை நல்ல விதமாகக் கவனித்துக் கொள்வார்கள் என்றும் சொன்னார்கள்.
முதலில் ஒரு ஆளுக்கு ஒரு லட்சத்து முப்பதாயிரம் கேட்டார்கள்.பேரம் பேசிப் படிப்படியாகக் குறைத்து தொண்ணூராயிரத்தில் முடிந்து, முன்தொகை ஆளுக்குப் பத்தாயிரம் கொடுத்து பதிவு செய்து கொண்டோம்.பிறகு விமானக்கட்டண உயர்வுக்காக ஆளுக்குப் பத்தாயிரம் வாங்கினார்கள்
இனி கடவுச் சீட்டுக்கும் பணத்துக்கும் ஏற்பாடு செய்யவேண்டும்,.. எனக்கு வங்கி வட்ட அலுவலகத்தில் கேட்டு தடையில்லாச் சான்றிதழ் வங்கி விட்டேன். அதனால் கடவுச்சீட்டு வாங்குவது எளிதாக இருக்கும் என்று எண்ணினேன். துணைவிக்கு படிப்புச் சான்றிதழ் பிறப்புச்சான்றிதழ் எதுவுமே கையில் இல்லை. திருப்பத்தூரில் பள்ளியில் ,ஊராட்சி அலுவலகத்தில் முயற்சித்து ஒன்றும் கிடைக்கவில்லை.
உறுதி ஆவணம் ஓன்று கொடுத்து அதில் சான்று உறுதி அலுவலரிடம் கையெழுத்து வாங்கி அதை வைத்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தோம்.. வங்கி வழக்கறிஞர் திரு இராமநாதனும் அவரது நண்பர் திரு சம்பத்தும் கடவுச்சீட்டு வாங்க பெரிதும் உதவினர்.. திரு ராமநாதனாவது வங்கி வழக்கறிஞர் என்ற முறையில் பழக்கமானவர்.. அறிமுகமில்லாத திரு சம்பத் செய்த உதவிகளை மறக்க முடியாது. அவருடைய மகிழுந்தில் ஒரு முறை இருவரையும் சென்னை கடவுச்சீட்டு அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் இருவருக்கும் என் நன்றி
ஒரு வழியாக கடவுச் சீட்டுக்கள வீடு வந்து சேர்ந்தன.. என்னுடைய சீட்டில் குடியேற்றச சான்று தேவை (immigration clearance required) என்று தவறுதலாகக் குறித்து விட்டார்கள், பட்டப்படிப்பு படித்தவர்கள், அலுவலகத் தடையில்லா சான்று பெற்றவர்கள், ஐம்பது வயதைத் தாண்டியவர்கள் இவர்களுக்கு குடிஎற்றசசான்றிதழ் தேவையில்லை என்பது விதி. தேவை என்று தவறாகக் குறித்தது என் விதி போலும்.
சென்னையில்(வங்கி) பயிற்சிக்காக மூன்று நாள் போயிருந்தேன், உணவு இடைவேளையில் கடவுச்சீட்டு அலுவலரைப் பார்த்து இது பற்றிச் சொன்னேன். அதெல்லாம் மாற்ற முடியாது என்று அடம் பிடித்த அந்தப் பெண் அலுவலர், நான் சற்று குரலை உயர்த்தி அவர்கள் தவறைச் சுட்டிக் காட்டியதும் உடனே தவறைத் திருத்தி, கையெழுத்தும் முத்திரையும் போட்டுக் கொடுத்தார்.
அடுத்து பணத்துக்கு என்ன செய்வது என்ற சிந்தனையில் இருக்கும்போது சுனாமியும் வெள்ளமும் அடுத்து அடுத்த ஆண்டுகளில் முன்பு வந்ததற்காக நிவாரணக் கடன் வங்கியில் அறிவித்தார்கள இப்படி தீமையிலும் ஒரு நன்மை விளைந்தது இறைவன் நாட்டம். பைசல் தன் பங்களிப்பாக ஒரு நல்ல தொகையை நான் மறுத்தும் வற்புறுத்திக் கொடுத்ததால் வாங்கிக் கொண்டேன்,
கடவுசீட்டு, பணம் இரண்டும் கிடைத்து விட்டது இனி ஒன்றும் தடங்கல் இருக்காது என்று எண்ணினேன்
ஆனால் அடுத்து வந்தது நான் சற்றும் எண்ணிப் பார்க்காத ஓன்று- துணைவியின் உடல் நலக்குறைவு. ஹஜ் பயணத்திற்கான மருத்துவ சோதனையில் கண்டறியப்பட்ட இருதய சுகவீனம்.
பயணமே தடைப்படுமோ என்று எண்ணிக் கொண்டுஇருக்கும்போது ஆறுதல் சொன்னவர் மருத்துவர் நாராயணசாமி. மாவட்ட அரசு மருத்துவ மனையில் உயர் பதவியில் இருந்த அவர் மனைவி, மகன் எல்லோரும் மருத்துவர்கள். “ பெரிய இடத்துக்குப் பயணம் போகிறீர்கள் எந்த வித தடங்கலும் வராது “ என்று நம்பிக்கை ஊட்டினார். மேலும் அறுவை சிகிச்சை தேவை இல்லை, மருந்து மாத்திரையிலேயே சரி பண்ணிவிடலாம் என்றார்.
அந்த மருந்து மாத்திரையே ஒரு பூதாகரமான பிரச்சனையாக தலைவலியாக உருவெடுத்தது. ஆம்- மாத்திரை சாப்பிட்டால் பொறுக்க முடியாத தலைவலி வரும். மாத்திரையைப் பார்த்தாலே குழந்தை போல அழுகை வந்து விடும்.
மருத்துவரிடம் சொல்லி மாற்று மாத்திரை கொடுத்து தேவைப்படும்போது மட்டும் சாப்பிட்டால் போதும் என்று சொன்னார். எந்த விதத் தயக்கமும் இல்லாமல் பயணத்தை மேற்கொள்ளலாம் என்று நம்பிக்கை ஊட்டினார்.
புதுக்கோட்டையில் ஒன்றும், சென்னையில் ஒன்றுமாக ஹஜ் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டோம்.
சென்னையில் உள்ள ஆதம் என்ற வணிக நிறுவனத்தில் ஹஜ் புயணத்திற்கு தேவையான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும். டிசம்பர் ஜனவரியில் பயணம் என்பதால் குளிர் கால ஆடைகளும் வாங்கினோம். இறையருளால் அவற்றைப் பயன் படுத்தும் வாய்ப்பு ஏற்படவில்லை.
சவுதியில் பணி புரியும் எங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒரு கைப்பேசி (சவூதி சிம்முடன்) யும் சவூதி ரியால்களும் கொண்டு வந்தார். விலை கொடுத்து அவற்றை வாங்கிக்கொண்டேன்.
இன்னொரு வாடிக்கையாளர் சவுதியில் உள்ள அல் பேக் உணவு விடுதி பற்றி மின்னஞ்சல் அனுப்பி புகழ் பெற்ற அந்த விடுதிக்குப் போய் உண்ணாமல் சவுதி பயணம் நிறைவேறாது என்றும் குறிப்பிட்டு இருந்தார்.
அறுபது நாள் விடுமுறை கேட்டு வட்ட அலுவலகத்துக்கு விண்ணப்பம் அனுப்பினேன். சில நாள் கழித்து பொது மேலாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வங்கிக் கிளை மேலாளர் அறுபது நாள் விடுப்பில் போனால் கிளையை யார் பார்த்துக் கொள்வார்கள் , கேரளாவில் இரு வாரத்தில் ஹஜ் முடிப்பது பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறேன் அது போல் நீங்களும் போகலாமே என்று கருத்துத் தெரிவித்தார். நான் போவது நாற்பது நாள் பயணம் அதற்கு முன் பின் பத்து நாட்கள் விடுப்பு அவசியம் என்று சொன்னவுடன் சம்மதம் தெரிவித்து பயணம் சிறக்க வாழ்த்தினார்
கடவுச்சீட்டு கிடைத்து விட்டது, பணம் செலுத்தியாகி விட்டது. மருத்துவரும் பயணிக்கலாம் என்று பச்சைக்கொடி காண்பித்து விட்டார்..வங்கியில் விடுமுறை கிடைத்து விட்டது. ஆனாலும் சில பிரச்சனைகள் .
, மைத்துனர் பீர் நோய் முற்றிய நிலையில் மருத்துவ மனையில் இருந்தார். குப்பியின் முதுமை ,சுகவீனம் என்று விமானத்தில் ஏறும் வரை ஒவ்வொரு வினாடியும் ஒரு திகில்தான்.
ஒரு வழியாகப் பயண நாளும் நெருங்கி விட்டது.. பைசலோடு நாங்களும் மகிழுந்தில் சென்னை பயணித்தோம். பாப்டி வீட்டில் இறங்கினோம்.
எதற்காக ஹஜ்ஜுக்குப் போகிறீர்கள் என்று என் ஐந்து வயது பேத்தி கேட்ட்தற்கு என் துணைவி அல்லாவைப் பார்க்கப் போகிறோம் என்று சொல்ல உடனே அடுத்த வினா – அல்லா எல்லா இடத்திலும்தானே இருக்கிறான் என்று .
உங்கள் பேரன் பேத்திக்கு உங்களை விட முப்பது வயது அதிகம் என்று வீரமணி எழுதியிருந்தது நினைவில் வந்தது
உடன் பிறப்புகள் அனைவரும் வழியனுப்ப வந்தார்கள்.அனைவருக்கும் பாப்டி வீட்டில் உணவுக்கு ஷேக் ஏற்பாடு செய்திருந்தது.
வடபழனி பேஷ் இமாம் வந்து . இஹ்ராம் கட்டி விட்டு தொழுகை நடத்தினார்.
இஹ்ராம் உடை அணிந்ததும் ஒரு இனம் புரியாத உணர்வுத் தாக்கம்.
.கர்வம், பெருமை அழுக்காறு சினம் எல்லாம் விலகி ஒரு துறவு நிலைக்கு வந்து இறைவனிடம் கையேந்தி நிற்கும் யாசகன் போன்ற மன நிலை.
அதையும் தாண்டி இறப்பை எதிர் நோக்கும் ஒரு மனப்பாங்கு..
ஆள் பாதி ஆடை பாதி என்பதன் முழுப் பொருளையும் உணர வைத்து மனதைப் பண்படுத்தியது இஹ்ராம் உடை.
இதே அரை குறை ஆடையுடன்தான் பன்னாட்டு சேவை விமானத்தில் பயணிக்கவேண்டும். விமான நிலையத்துக்கு வந்து அல்சபா குழுவோடு சேர்ந்து விட்டோம். ஹஜ் காலம் என்பதால் நிலையத்தில் கட்டுக்கடங்காத கூட்டம். ஹாஜிகள் விரைந்து விமானத்தில் ஏற ஒலி பெருக்கியில் வேண்டுகோள் வந்து கொண்டே இருந்தது. அதை யாரும் காதில் வாங்கிக் கொண்டதாய்த் தெரியவில்லை.
ஒரு வழியாக சுற்றங்களிடம் விடை பெற்று விமானத்தில் ஏறினோம். எதோ நடந்து கொண்டே இருக்கையில் திடீரென்று விமானத்தில் நுழைந்து விட்டது போல் இருந்தது. மிகப்பெரிய சவுதி விமானம்
எங்கள் இருவருக்கும் இதுதான் முதல் விமானப் பயணம் ,முதல் வெளி நாட்டுப் பயணம் . அதுவே புனிதப் பயணமாக அமைந்தது இறையருள்
இருக்கையில் அமர்ந்து விட்டோம். முழுக்க முழுக்க ஹஜ் பயணிகள் மட்டுமே இருந்ததால் பேச்சு ஓசை எல்லாம் குறைவாகவே இருந்தது.
பயண துவாவுடன் விமானம் புறப்பட்டது. நமக்குத் தெரிந்த அளவுக்கு நாம் பயணம் செய்யும்போது பயண துவாவை அரபியிலோ தமிழிலோ ஓதிக் கொள்வோம். அதே பயண துவாவை தூய அரபு மொழியில் பன்னாட்டு சேவை விமானத்தில் ஓதுவதைக் கேட்க மெய் சிலிர்த்துப் போனது. .இதுபோல் பேருந்துகளிலும் ஓதுவார்கள்
விமானம் மேலே எழும்போது எதிபார்த்த காது அடைப்பு, வயிற்றுக் கலக்கம் எதவுமே இல்லை
விமானக் கணினித் திரை விமானம் பறக்கும் உயரம் ,,வேகம், இன்னும் கடக்க வேண்டிய தூரம் ,காலம் எல்லாவற்றையும் மிகத்துல்லியமாகக் காண்பித்துக் கொண்டிருந்தது.
என் அருகில் இருந்த பயணி இருக்கையின் கைப்பிடியில் இருந்த iகாதுப்பொறியை விடாமல் காதில் மாட்டிகொண்டே பயணித்தார்- அதில் ஓசை எதவும் இல்லை
ஒரு சிலர் தாங்கள் இயல்பாக இருப்பதாகக் காண்பித்துக் கொள்வதற்காக பணிப்பெண்களிடம் அவ்வப்போது எதாவது கேட்டுக் கொண்டே இருந்தார்கள் ஆனால் எல்லோர் மனதிலும் ஒரு இனம் புரியாத ,வெளியே சொல்ல முடியாத இறையச்ச உணர்வு.
கடலூரிலிருந்து சென்னை செல்லும் பயணத்தை விட சென்னை ஜித்தா பயணம் எளிதாகவும் விரைவாகவும் முடிவுற்றது போல் தோன்றியது..நடு இரவில் சவூதியின வணிக நகரான ஜித்தா விமான நிலையத்தில் இறங்கினோம். வெகு நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தோம். அதிகாரி ஒருவர் சிகரட் ஒரு கையிலும் பயணிகள் பட்டியல் ஒரு கையிலுமாக வந்து எதோ சரிபார்த்தார்.
பிறகு பேருந்தில் தங்குமிடமாகிய அஜீசியாவுக்குப் போனோம்..
ஒரு அறையில் எட்டுப் பேர் தங்க வைத்தார்கள். கிட்டதட்ட எண்பது பேர் தங்கிய அந்தக் கட்டிடத்தில் மொத்தமே ஐந்தாறு குளியல் அறைகள்தான் இருந்தன .அல்சபா உரிமையாளரிடம் சற்றுக் கோபமாக இது பற்றிக்கேட்டேன். ஓரிரண்டு நாட்கள் இங்கே தங்க வேண்டியிருக்கும் பிறகு மக்கமா நகருக்குள் உள்ள விடுதிக்குப் போய்விடலாம். இது சவூதி அரசு செய்த ஏற்பாடு, எல்லாப் பயணிகளும் இதற்குக் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று சமாதானம் செய்தார்.
அல்சபா உரிமையாளர் ஜனாபா தங்கமணி(இசுலாமியார்தான் ) அவரது துணைவர் ஜனாப் சிராஜுதீன் இருவரும் நல்ல அனுபவமும் திறமையும் உடையவர்கள். சிராஜுதீன் பல ஆண்டுகள் சவுதியில் பணி செய்தவர். அரபு மொழி நன்றாகப் பேசுவார். உணவுக்கு வேண்டிய பொருட்களை அவரே சந்தைக்குச் சென்று வாங்கி வருவார்..
பயண வழிகாட்டியாக வந்தவர் திருப்பத்தூர் பெரிய பள்ளி பேஷ் இமாம் ஜனாப் பாருக் அசரத். அவருக்குத் துணையாக வந்த ஜனாப் யஹ்யா நன்கு தெரிந்த உறவினர். .
எங்கள் குழுவில் திருப்பதூரைச் சேர்ந்தவர்கள் நிறையப் பேர் இருந்தனர். அவர்கள் எல்லோருக்கும் எங்களைத் தெரிந்திருந்தது,.எங்களுக்கு சிலரைத் தெரிந்திருந்தது.
கொழும்பார் என அழைக்கப்படும் முதியவர் ஒருவர், ஒரு வழக்கறிஞரும் அவரது துணைவியாரும் , வழக்கறிஞரின் மைத்துனரும் அவரது துணைவியாரும் ரஹ்மத் என்ற மூதாட்டி , மும்தாஜ் (கான் ராவுத்தர் பெரியத்தா மகள்) இவர்கள் உறவினார்கள்
இது போக புதுக்கோட்டையிளிருந்து ஒய்வு பெற்ற பேராசிரியர்,துணைவி, ,மைத்துனர் சம்சுவின் துணைவி வழி உறவினர் (வழக்கறிஞர்) தொலைபேசித்துறையில் பெரிய பொறுப்பிலிருந்து ஒய்வு பெற்ற ஒரு தம்பதி, ஒரு வணிகர் துணையுடன்,ஜிகிர்தண்டா தயாரிப்பவர் தன் தாயுடன் ,மையத்துக் குழி வெட்டுபவர், மலேசியாக்காரர் ஒருவர் என்று பலதரப்பட்ட மக்கள் .
முனுசு அம்பலார் குடும்பம்,.கமிஷனர் குடும்பம் ஜமீலா குடும்பம், வங்கி மேலாளர், படித்தவர் என்று பலதரப்பட்ட சிறப்புத் தகுதிகளை வழங்கி பெரும்பாலோர் நல்ல அன்புடன் பழகினார்கள்.. பலர் கதை எழுதும் அளவுக்குத் தம் வாழ்க்கை பற்றிச் சொன்னார்கள் .பின்னர் சுருக்கமாக் அவற்றைச் சொல்கிறேன் இடமிருந்தால்.
அஜீஜியாவில் அழகிய பள்ளி ஓன்று இருக்கிறது. .நடந்தே ஐந்து வேளையும் போய் வருவோம். அதன் அருகில் நிறைய சிறிய சிறிய நடைமேடைகடைகள் இருக்கும் .
..அந்தக்கடைகளில் பலவிதமான பொருட்கள் கிடைக்கும்..சவூதி அரசு பொருட்களின் தரத்தில் மிகவும் கவனமாக இருப்பதால் பொருட்களை நம்பி வாங்கலாம் என்று சொல்வார்கள்.
மக்கா,சுற்றுப்புறமுள்ள பள்ளிகளில் ஒரு சிறிய ஒலிப்பெட்டி இருக்கும். காபதுல்லாவில் ஒலிக்கப்படும் பாங்கோசையை அந்த ஒலிப்பெட்டியில் கேட்டு, அதை ஒட்டி மற்ற பள்ளிகளில் பாங்கு சொல்வார்கள்.
மாலைப்பொழுதில் முதல் தவாபுக்காக காபதுல்லாவுக்கு அழைத்துச் சென்றார்கள்.
இறைவன் நாடினால் அந்த அற்புத அனுபவம் , அதிசய நிகழ்வு பற்றி நாளை பார்ப்போம்
21072021wed
Sherfuddin P
காதர்
1 share
Like
Comment
Share

No comments:

Post a Comment