Thursday, 22 July 2021

தியாகத் திருநாள் குறிப்புகள் -11

 தியாகத் திருநாள் குறிப்புகள் 11

எங்கள் ஹஜ் பயண அனுபவங்கள் -2/3
மாலைப்பொழுதில் முதல் தவாபுக்காக காபதுல்லாவுக்கு அழைத்துச் சென்றார்கள் அப்போது ஒன்றும் தெரியவில்லை. காபா வளாகத்துக்குள் நுழையும் போது எதோ ஒரு பெரிய பள்ளிவாசலுக்குள் நுழைவது போல்தான் தோன்றியது.. பாபுல்சலாம் என்னும் வாசல் வழியாக கண்களை மூடிய நிலையில் அழைத்துச் சென்றார்கள்
கண்களைத்திறந்தால !
காணக் கண் கோடி வேண்டும் என்று நாகூர் ஹனீபா பாடியது சற்றும் மிகையில்லை என்ற எண்ணம்.
சொற்களால் விவரிக்க முடியாத உணர்ச்சி வெள்ளம். கண்களில்கண்ணீர் பெருக்கு. .எதற்காக அழுகிறோம் என்று தெரியவில்லை.ஆனந்தமா, துக்கமா, இறையச்சமா எதுவம் புரியாவில்லை .ஆனால் அடக்க முடியாமல் அழுகிறோம் . அழுது ஓய்ந்த பின்தான் காபாவின் அழகும் பிரமாண்டமும் புலப்படுகிறது.
அடுத்தடுத்த முறைகளில் பார்க்கும்போது அந்த அழுகை வருவதில்லை. ஆனால் காபாவைப் பார்க்கும் ஆசையும் ஆனந்தமும் குறைவதில்லை..
உலக அதிசயங்களாக சொல்லப்படும் தாஜ் மஹால், பிரமிட் இவை காபா, ஜம்ஜம் கிணறு இவற்றின் அற்புதத்துக்கு முன் ஒன்றுமேயில்லை என்று எண்ணம் தோன்றியது..மேலும் எதவாது ஒரு சிறிய வேலை கிடைத்தால் கூட இங்கேயே தங்கி காபாவைப் பார்த்துக் கொண்டே காலத்தைக் கழித்து விடலாமே என்ற எண்ணமும் தலைதூக்கியது.
உம்ரா செய்வதற்கு முன் அருகிலுளள ஆயிஷா பள்ளிக்கு சென்று வருவது மரபு.அங்கு எங்கள் குழுவில் வந்த பெண் வெள்ளந்தியாக “ஏத்தா இங்கே ஆயிஷா நாச்சியார் தர்கா எங்கத்தா இருக்கிறது ?” என்று கேட்டார்.
ஹஜ்ஜைப் பற்றி நமக்குத் தெரிந்தது மிகக் குறைவு என்ற மனப்பான்மையுடன் செல்லும் எனக்கு, சிலரைப் பார்க்கும்போது நாம் இந்த அளவுக்காவது தெரிந்து வைத்திருக்கிறோமே என்று இறைவனுக்கு நன்றி செலுத்தத் தோன்றுகிறது.
உண்மையிலேயே எங்கள் குழுவில் ஒருவருக்கு அல்கம்து சூரா,முதல் கலிமா கூடத் தெரியவில்லை. ஊரைச்சுற்றிப் பார்க்கப் போன அவர் காணாமல் போய்விட்டார். கையில் அடையாள அட்டையும் கொண்டு செல்லவில்லை. படிப்பறிவும் கிடையாது. எப்படியோ சில நாட்கள் கழித்து கை நிறைய சவுதிப் பணத்துடன் வந்து சேர்ந்து விட்டார்.
இது மாதிரி நிறையப்பேர் தொலைந்து விடுவார்களாம். அவர்களையெல்லாம் அரபாத் தினத்தன்று அரசு வண்டிகளில் ஏற்றி அரபாத் மைதனத்தில் இறக்கி விட்டு விடுவார்கள் . இதனால் அவர்கள் ஹஜ் பயணம் நிறைவு பெற்று விடும்.
மினாவில் கூடாரங்களில் தங்க வேண்டும். கூடாரம் அவ்வளவு அழகாகவும் வசதியாகவும் வடிவகைக்கப்பட்டு குளிர் பதனம் செய்யப்பட்டிருக்கும் .புத்தம் புது மெத்தைகள் ,தலையணைகள் இருக்கும். ; கழிவறையில் வரிசையில் நிற்பது ஒன்றுதான் அங்கே சிரமமாக இருக்கும். அதற்கு ஒரே வழி உணவின் அளவை குறைத்து அதிகாலையில் –மூன்று நான்கு மணிக்குள் கடன்களை முடித்து விடுவதுதான். இஹ்ராம் உடையில் இருப்பதால் குளிக்கவும் முடியாது.
ஒரு பெரிய பரப்பில் பல்லாயிரக்கணக்கான கூடாரங்கள் தூய வெண்மை நிறத்தில் ஒரே மாதிரித் தோற்றமளிக்கும். சிறிது வழி தவறிப் போய்விட்டால் மிகவும் சிரமம். .இவ்வளவுக்கும் கூடார உச்சியில் அந்த அந்த நாட்டுக்கொடி பறக்கும், கூடார எண் நமது அடையாள அட்டையில் இருக்கும்.
கூடாரத்தில் தங்கி இருக்கும்போது நானும் இன்னும் இருவரும் அருகிலுள்ள ஒரு பள்ளியைப் பார்த்து வரலாம் என்று புறப்பட்டோம்.கூட்டத்தில் நாங்கள் பிரிந்து விட்டோம். அவர்களைத்தேடிப் பார்த்து, கிடைக்காமல், பள்ளியில் லொகர் தொழுக அமர்ந்திருந்தேன்.. அருகில் இருந்தவர்(எந்த நாட்டுக்காரர் என்று தெரியவில்லை) நான் மிகவும் களைப்பாக இருந்ததைப்பார்த்து விட்டு அவரிடமிருந்த ஜம் ஜம் நீரைப் பருகக் கொடுத்தார்..நாடு,மொழியைக் கடந்த இசுலாமிய சகோதரத்துவத்தை அங்கே உணர்ந்தேன்.
தொழுது விட்டு வெளியே வந்து அருகில் உள்ள வழிகாட்டு மையத்தை அணுகினேன். அங்கு குளிர்பானமும் குளிர் நீரும் சிற்றுண்டியும் கொடுத்தார்கள் என் அடையாள அட்டையைக் காண்பித்ததும் காவலர் போலிருந்த ஒருவர் இருசக்கர வண்டியில் என்னைக் கூடாரத்தில் இறக்கி விட்டார்..
ஹஜ் பயணம் பற்றி நான் கேள்விப்படவற்றையும் நேரில் கண்டவாற்றையும்(சிலவற்றைக் கீழே சொல்கிறேன்)
முதலாவது உடை பற்றியது.
ஹஜ்ஜூக்குப்போகும் ஆண்கள் வெள்ளை உடை அதுவும் முழுக்கை சட்டைதான் அணிய வேண்டும் என்று சொன்னார்கள். இதற்காவே நான்கைந்து வெள்ளை முழுக்கைச் சட்டை வாங்கினேன்.
ஆனால் அங்கு ஆண், பெண் இருவருக்கும் எந்த உடை அணிய வேண்டும் என்று கட்டுப்பாடு கிடையாது. மறைக்க வேண்டிய உடல் உறுப்புக்களை மறைக்கும் எந்த உடையும் அணியலாம். அது அடக்கமான உடையாக இருக்க வேண்டும்.
இந்தோனேசிய இளம் பெண்கள் கூட்டம் கூட்டமாக் ஹஜ்ஜுக்கு வருவார்கள் .(அங்கு ஹஜ் முடித்தால்தான் திருமணம் என்று கேள்விப்பட்டேன்) அவர்கள் அனைவரும் ஒரே மாதிரி கால் சராய் (pants ) சட்டை அணிந்து தலையில் அணியும் துணி (மக்கானா)உடல் மேல்பாகம் முழுதும் மூடும்படி அணிந்திருப்பார்கள்.
. பொதுவாக எட்டு முழ வேட்டி மெல்லியதாக இருப்பதால் உள்ளாடை பளிச்சென்று தெரியும் எனவே நம் ஊர் எட்டு முழ வேட்டிக்கு அங்கே அனுமதி இல்லை
இரண்டாவது காபாவை சுற்றி வரும் தவாப் பற்றியது. .மிக அதிகமான கூட்டம் வருவதால் தவாப் மிகவும் சிரமாக இருக்கும், கீழே விழுந்த பொருளைக் குனிந்து எடுத்தால் கூட்டத்தில் மிதித்து நசுக்கப்படுவிடுவோம் என்று சொல்வார்கள்.
கூட்டம் மிக அதிகம்தான் . அவ்வளவு கூட்டத்திலும் கால்கள் முடமாகிப்போன ஒருவர் ஒரு சிறிய பலகை வண்டியில் அமர்ந்து கைகளால் தள்ளித்தள்ளி தவாப் செய்தார். இறையருளால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை.
மூன்றாவது அரபாத் மைதானம் பற்றி மிகவும் அச்சம் கொள்ளும்படி சொல்வார்கள். கூட்ட நெரிசலில் சிக்காமலிருக்க உடல் நலமில்லாதவர்கள், முதிவர்களை எல்லாம் நடக்க விடாமல் தூககிகொண்டு போவது பாதுகாப்பானது என்று சொல்லப்படும்.
ஹஜ் செய்யும் எல்லோரும் ஒரு நாளில் ஒரே இடத்தில் கூடும் இடம் அரபாத் மைதானம். எனவே எங்கு பார்த்தாலும் உலகமே சுருங்கி மனிதர்கள் அதிகமானது போல் தோன்றி பார் சிறுத்தலின் என்ற புறனாநூற்றுப் பாடல் நினைவில் வந்தது
. அங்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் –எந்தக் காரணத்தைககொண்டும் நம் கூடாரத்தை விட்டு விலகிப்போய்விடக்கூடது. தொழுகை, துவா எல்லாவற்றயும் அதற்குள்ளே முடித்துக்கொள்ள வண்டும்.
இறையருளால் நாங்கள் போன காலத்தில் மழை, வெயில் , குளிர் எதுவும் இல்லாமல் மிக சுகமான அருமையான தட்ப வெப்ப நிலை நிலவியது.
உடல் நிலை சரியில்லாமல் வந்த துணைவிக்கு இந்த தட்ப வெப்ப நிலை பேருதவியாக, இறையருளாக அமைந்தது. உடல் நிலை சரியில்லை என்று எந்த அமலையும் விட்டு விடவில்லை . தவாப் , சயீ செய்ய வண்டியும் பயன்படுத்தவில்லை. மிக வேகமாக வண்டியைத் தள்ளுவதைப் பார்க்க , நடப்பதே மேல் என்று தோன்றும்.. பெரும்பாலும் உணவு உண்ணாமலேயே நாட்களைக் கழித்தது. மதீனா போனபின்புதான் ஓரளவு சாப்பிட ஆரம்பித்தது.
ஷைத்தான் மேல் கல்லெறியும் இடத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுப் பலர் இறந்த செய்தி, தமிழ் நாட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்த்து தொலைபேசியில் தொடர்பு கொண்டபின்தான் எங்களுக்கே தெரியும் .முதல் நாள் கூட்டம் அதிகமாயிருக்கும் அதனால் நாளை போகலாம் என்று எங்களைக் கூடாரத்திலேயே தங்க வைத்து விட்டார்கள் .
அரபாத்தில் தங்கி குர்பானி கொடுத்து விட்டால் ஹஜ் நிறைவேறியதாகக் கொள்ளலாம். அதன் பின் ஆண்கள் தலைமயிரைக் களைந்து இஹ்ராம் உடையில் இருந்து நீங்கி மாற்று உடை அணிந்துகொள்ளலாம்.
பயணத்துக்கு முன்பு படிக்கும் வழிகாட்டி நூல்களும்,பயிற்சி வகுப்பில் கேட்கும் செய்திகளும் ,பார்க்கும் குறுந்தகடுகளும் நம்மால் இதையல்லாம் ஒழுங்காகச் செய்து ஹஜ்ஜை நிறைவேற்ற முடியுமா என்ற ஒரு தயக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் புனித பூமியில் காலெடுத்து வைத்தவுடன் மனதில் தெளிவு பிறந்து விடும்.
கூடிய மட்டும் விரைந்து ஹஜ்ஜை முடிப்பது நல்லது .ஆண்டுகள் போகப்போக உடலும் மனமும் தளர்ந்து விடும். எவ்வளவுதான் வசதிகள் பெருகி பயணம் எளிதானாலும் ஹஜ் என்பது உடல்,மனம் ஆன்மாவுக்கு ஒரு கடுமையான பயிற்சி
ஹஜ்ஜில் என்னை வியப்பில் ஆழ்த்தியவற்றில் முதன்மையானது கூட்ட் மேலாண்மை, அடுத்து சுத்தம் . லட்சக்கணக்கில் மக்கள் கூடும் இடத்தில் ஒரு சிறிய பிரச்சனை வந்தால் உடனே ஏதோ மாய மந்திரம் போல் நூற்றுக்கணக்கான பெண் காவலர்கள் –உடல் முகம் எல்லாம் மூடியிருக்கும் –அவர்களிடம என்ன ஆயுதம் இருக்கிறது என்றும் நமக்குத் தெரியாது.-ஏதும் பேசவும் மாட்டார்கள் விரட்டவும் மாட்டார்கள். வரிசையாக நின்று மனிதச்சங்கிலி உருவாக்கி மிக நேர்த்தியாக பிரச்சனையை நொடியில் சரி செய்து விடுவார்கள்.
உலகெங்கும் இருந்து லட்சக்கணக்கில் கூடும் மக்களை அரபு மட்டுமே தெரிந்த அலுவலர்கள், காவலர்கள் மிக அழகாக சமாளிக்கிறார்கள்
.
அரபாத் மைதானத்தில் இருந்து ஒரே நாளில் லட்சக்கணக்கான(இருபத்திஐந்து லட்சம் ) மக்கள் திரும்பி வருவது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஓன்று.
இது பற்றி ஒரு செய்தியுடன்
இறைவன் நாடினால் மீண்டும் நாளை சிந்திப்போம்
22072021thu
Sherfuddin P

No comments:

Post a Comment