இலக்கிய இன்பம்
இலக்கியமா அதெல்லாம் நமக்கு ஒத்து வராது .எதோ பள்ளியில் கல்லூரியில் வேறு வழியில்லாமல் அதெல்லாம் படித்தோம் .படித்து தேர்ச்சி பெற்று வந்து விட்டோம் .இனி எதற்கு அதெல்லாம்---
இதுதான் பலரின் எண்ணமும் சொல்லும் –இலக்கியம் என்று யாராவது சொன்னாலே
நானும் அப்படித்தான் இருந்தேன் . இவ்வளவுக்கும் அத்தா இலக்கியத்தின் சுவையில் திளைத்தவர்கள் .பல உரைகள் நிகழ்த்தி கட்டுரைகளும் எழுதியவரகள்
அதனால்தான் எனக்கு தமிழில் ஓரளவு பிழை இல்லாமல் எழுத வருகிறது .கூடிய மட்டும் பிறமொழிக் கலப்பில்லாமல் எழுதுகிறேன்
அத்தாவின் கம்ப இராமாயணக் கட்டுரைகள் என்ற நூலை ஒவ்வொரு பகுதியாக சமூக ஊடகங்களில் வெளியிட்டேன்
அப்போது பாடல்களை சரி பார்க்க இணையத்தில் மேய்ந்த போது இராமாயணம் மட்டுமல்லாது இன்னும் பல இலக்கியப் பாடல்களும் கண்ணில் பட்டன
அவற்றின் சுவை மனதில் பட்டபோது மாணவனாக படித்த பாடல்கள் அவற்றிற்கு ஆசிரியர்கள் கொடுத்த அழகிய விளக்கங்கள் எல்லாம் ஓரளவுக்கு புரியத் துவங்கியது .போல இருந்தது
எட்டிக்காயாகத் தெரிந்த இலக்கணமும் சிறிதளவு புரிந்தது
இலக்கியங்கள் யாருக்கோ அல்ல .அவை ஒவ்வொருவரின் வாழ்விலும் கலந்து நிற்கும் ஒரு இனிமையான பகுதி என்பதும் விளங்கியது
செடிகொடிகள், விலங்குகள் , பறவைகள் எல்லாம் உணவு உட்கொள்கின்றன உறங்கி விழிக்கின்றன. இனப்பெருக்கம் செய்கின்றன, இசையை உணர்கின்றான
ஆனால் இலக்கிய ரசனை என்பது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு
அந்த அந்த கால கட்ட வாழ்வை நம் கண்முன்னே நிறுத்தும் காலக்கண்ணாடியாக இலக்கியங்கள் திகழ்கின்றன
“வண்மை இல்லையோர் வறுமை இன்மையால்” என்னும்போது அந்தக் கால கட்டத்தில் நாட்டின் செல்வச் செழிப்பு கண்முன்னே தெரிகிறது
“கையது கொண்டு மெய்யது பொத்தி -----
ஏழையாளனைக் கண்டனம் எனுமே “
எனும் நாரை விடு தூதில் புலமையோடு சேர்ந்தே இருக்கும் வறுமை தெரிகிறது
அந்த வறுமை, பசி குளிரிலும் நாரையின் பவளக் கூர்வாயை இரண்டாகப்பிளந்த பனங்கிழங்கோடு ஒப்பிடும் புலமை மிளிர்கிறது
எங்கே உன் மகன் என்று கேட்டதற்கு “ஈன்ற வயிறோ இது தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே “ என்ற விடையில் சங்க காலத் தாயின் வீரம் தெரிகிறது
மொழி இனம் நிறம் நாடு என்ற எல்லைகளைக் கடந்து நிற்கும் உலக ஒற்றுமை , சமத்துவம் , சகோதரத்துவத்தை உணர்த்தும் அறைகூவல் “யாதும் ஊரே யாவரும் கேளிர்”
ஒன்னரை வரியில் ஒரு அழகான காதல் காட்சி , காவியம் :
“யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும் “
இப்படி காதல் வீரம் அழகு தத்துவம் இறைவன் என பலவற்றையும் பற்றி விளக்கும் இலக்கியத்தின் பயன்கள் பற்றி
அடுத்த பகுதியில்
இறைவன் நாடினால் நாளை சிந்திப்போம்
27072021tue
Sherfuddin P
No comments:
Post a Comment