Tuesday, 27 July 2021

இலக்கிய இன்பம்- 2

 இலக்கிய இன்பம் -2

காதல் வீரம் அழகு தத்துவம் இறைவன் என பலவற்றையும் பற்றி விளக்கும் இலக்கியத்தின் சில பயன்கள் பற்றி இப்போது பார்ப்போம்
இலக்கிய ரசனை என்பது ஆறறிவு படைத்த மனிதனுக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு என்று பார்த்தோம்
இலக்கியங்களைப் படித்து உணர்ந்து சுவைப்பது மனித மனதை அமைதிப் படுத்தும் , பண்படுத்தும்
வாழ்வில் பொருள் வளம் பெருக 'இரவு பகலாய் உழைக்கிறோம் . மேலே கீழே என பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து ,அங்கும் இங்கும் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலையில் மனதுள் ஒரு அலுப்பு , சலிப்பு வெறுப்பு ஏற்படுவது இயல்பு
இந்த சூழ் நிலையில் என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றாமல் மனதுக்கு உற்சாகம் ஊட்டும் ஊக்க மருந்தாக இலக்கியங்கள் அமைகின்றன
அந்த அளவுக்கு நம் முன்னோர்கள் தங்கள் வாழ்கையில் கண்டு ,கேட்டு பட்டு அறிந்த உண்மைகளை இலக்கியங்களில் சொல்லி வைத்திருக்கிறார்கள்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்
என்ற அறிவியல் உண்மையை மிக எளிதாய்ச் சொன்ன வள்ளுவர் எவ்வளவு ஆழமாக இது பற்றிப் படித்து சிந்தித்திருக்க வேண்டும்
அழகு என்றாலே மனதுக்கு இதம்தானே !
அது பெண்ணின் அழகாக இருக்கலாம், குழந்தையின் மழலைப் பேச்சாக இருக்கலாம் ,இயற்கை அழகாக இருக்கலாம் , நல்ல மனதின் அழகாக இருக்கலாம் .
இவற்றைக் கண்டு களித்துப் பழகி விட்டால் வாழ்வில் சலிப்புக்கு இடம் ஏது ?
குழலினிது யாழினிது என்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்
கம்பன் காட்டும் இயற்கை அழகு :
சேலுண்டவொண்கனாரில் திரிகின்ற செங்கால் அன்னம்
மாலுண்ட நளினப்பள்ளி வளர்த்திய மழலைப் பிள்ளை
காலுண்ட சேற்றுமேதி கன்றுள்ளிக் களைப்பச் சோர்ந்த
பாலுண்டு துயிலப் பச்சைத் தேரைதா லாட்டும் பண்ணை
(மீன் போன்ற கண்கள் உடைய பெண்கள் நடக்க வேண்டும் என்பதற்காக அன்னைப்பறவைகள் தண்ணீருக்கு அருகில் நடக்கின்றன . அன்னக் குஞ்சுகள் தாமரை இலையில் படுத்து ஓய்வெடுக்கின்றன
தண்ணீரில் மூழ்கிக் குளிக்கும் எருமைகள கன்றுகளை நினைக்கும்போது பெருகி வரும் பால் தாமரரை இலை தெறிக்கிறது . பாலை உண்ட் அன்னக்குஞ்சுகள் தவளை தாலாட்ட உறங்குகின்றன )
தவளைச் சத்தத்தை தாலாட்டாகப் பார்ப்பது கம்பனின் கற்பனை வளம்
பெண்களின் அழகைப்பாடுவதில் புலவர்களுக்குள் கடும்போட்டி
கம்பனாகட்டும் , வள்ளுவனாகட்டும் , இளங்கோவாகட்டும் ஒருவோருவோருக்கொருவர் சளைத்தவர் அல்ல
இது பற்றி எழுதினால் அது தனி நூலாகும் . எடுத்துக்கட்டாக ஒன்றே ஓன்று – மீண்டும் வள்ளுவன்தான்
அணங்கு கொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு
தன் நெஞ்சம் கவர்ந்த பெண்ணின் அழகைப் பார்த்து ஆணின் மனதில் ஒரு மயக்கம் – வானத்திலிருந்து இறங்கிய தேவதையா இல்லை இறைவன் தேர்வு செய்து படைத்த அழகிய மயிலா இல்லை பெரிய காதணி அணிந்த மனித குலப் பெண்ணா!!
வாழ்க்கை நெறிகள் பலவும் இலக்கியங்களில் நிறைய காணலாம்
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது சிலப்பதிகாரம்
நாடோ வீடோ வரவுக்குள் செலவு செய்யவேண்டும் என்பது பொருளாதார நெறி .இதை மிக அழகாக சொல்கிறது குறள்
“ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை
போகாறு அகலாக்கடை “
இந்த விதியை மறந்து நாடும் வீடும் கடனில் சிக்கித் தவிக்கின்றன
லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறேன் ஆனல் போதவில்லை என்று பெருமை பேசுகிறார்கள்
பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை (deficit budget ) என்பது மிக இயல்பான ஒன்றாகி விட்டது
விளைவு – கடுமயான விலை வாசி உயர்வு , பொருளாதார ஏற்றத் தாழ்வு
இன்னும் நகைச்சுவை, அவலச் சுவை , இல்வாழ்வு நெறி ,பிரிவுச் சுவை
என எல்லாவற்றையும் கரைத்து சாறு பிழிந்து இனிய இலக்கியமாகப் படைத்திருக்கிறார்கள் நம் முன்னோர் .
எழுதினால் எழுதிக் கொண்டே போகலாம் .
படிப்பவர்கள் வேண்டுமே
எனவே ஒரு சங்கப்பாடல் .ஒரு குறள் மட்டும் சொல்லி இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன்
“உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே ; முனிவிலர் ;துஞ்சலும் இலர்;
பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிருங் கொடுக்குவர்
பழிஎனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் ;அயர்விலர்
அன்னமாட்சி அனையராகித் தமக்கென முயலா நோன்தாள்
பிறர்க்கென முயலும் உண்மையானே “
ஒரு சில வரிகள் , மிக எளிமையான சொற்களில் உலகம் இயங்குவதற்காண நெறியை, வழிமுறைகளை தெளிவாக்குகிறது இந்தப் புற நானூற்றுப் பாடல்
நிறைவாக நல்ல இல்வாழ்க்கை பற்றி ஒரு குறள்:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாககடை
இலக்கியம் என்பது பல கடல்களின் சங்கமம் . அதில் நான் படித்து சுவைத்தது ஒரு சிறிய துளி . அந்தத்துளியில் ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
28072021wed
Sherfuddin P
May be an image of text that says "தமிழ்"
Like
Comment
Share

No comments:

Post a Comment