தியாகத் திருநாள் குறிப்புகள் 12
எங்கள் ஹஜ் பயண அனுபவங்கள் -3/3
அரபாத் மைதானத்தில் இருந்து ஒரே நாளில் லட்சக்கணக்கான(இருபத்திஐந்து லட்சம் ) மக்கள் திரும்பி வருவது மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஓன்று
ஒரு தடவை ஊடகங்கள் சவுதி அரசு இந்தக்கூட்டத்தை சரியாகக் கையாளவில்லை என்று கருத்துத் தெரிவித்தன.. உடனே சவுதி அரசு அவர்களை வானூர்தியில் ஏற்றி மேலே அழைத்துச்சென்று அங்கிருந்து எவ்வளவு வாகனங்கள், எவ்வளவு மக்கள் எப்படி அவர்களை வானிலிருந்து கண்காணித்து கட்டுப்படுத்துகிறோம் என்று விளக்கினார்கள். இதைவிட சிறப்பாக இவ்வளவு கூட்டத்தை யாரும் கையாள முடியாது என்று ஒத்துக்கொண்டனர் ஊடகத்தினர்.
காபாவின் சுத்தமும் பராமரிப்பும் என்னை வியக்க வைத்தது. அவ்வளவு கூட்டத்தில் மக்களுக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் சுத்தகரிப்புப் பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு பேரிச்சம்பழ விதை கீழே விழுந்தால் கூட உடனே அதை அப்புறப்படுத்தி விடுவார்கள். கழிப்பறைகளின் சுத்தம் பார்த்தால்தான் விளங்கும், நம்ப முடியும்.
இன்னொரு வியப்பு ஜம் ஜம் தண்ணீர் விநியோகம். ஆங்கங்கே குழாய்களில் வருவது போக பெரிய பெரிய சாடிகளில் வெந்நீரும் தண்ணீரும் தனித்தனியாக இருக்கும். ஹஜ் பயண நாற்பது நாட்களில் எந்த ஒரு சாடியும் காலியாக இருந்ததைக் காணமுடியவில்லை,
காபாவில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தே தவாப் செய்யலாம் தொழுகலாம். தொழுபவர் முன்னால் குறுக்கே செல்லக்கூடாது என்ற விதி காபாவில் கிடையாது. மிதிக்காமல் போனால் சரி ..நாள்தோறும் ஜனாஸாத் தொழுகை நடைபெறும் .காபாவிலும் மதீனாவிலும் தஹஜத் தொழுகைக்கு பாங்கு சொல்வார்கள்.
காபா வளாகத்தில் காக்கை குருவி புறா போன்ற பறவைகள் எதையும் காண முடியாது, அங்கு பறந்து திரியும் ஒரே பறவையினம் எச்சம் இடாதாம்..இந்தப்பறவைதான் திருக்குர்ஆன் அல் பில் சூராவிலசொல்லப்படும் யானைப்படையை கற்களை வீசி அழித்த பறவை என்கிறார்கள்
ஹஜ்ஜை முடித்ததும் மனதில் உள்ள இறுக்கம் பாரம் நீங்கி அமைதியடைந்து விடும்
காபாவுக்கு மிக அருகில் தவாப் செய்ய எண்ணி துணைவி கூட்ட நெரிசலுக்குள் சிக்கிக்கொண்டது .பெரும்பாடு பட்டு மீட்கவேண்டியதாய்ப்போயிற்று
ஒரு இரவு தவாபுக்குப் புறப்படுகையில் கான் ராவத்தர்பெரியத்தா மகள் மும்தாஜ் அக்கா எங்களுடன் வந்தது. மருமகனுக்கு உடல் நிலை சரியில்லை என்று மிகவும் வருத்தமாய் இருந்த அது ஆறுதல் தேடி தவாப் செய்ய வந்தது. எங்காவது பிரிந்து விட்டால் ஏழாம் எண் வாயிலுக்கு வந்து காத்திருங்கள் என்று சொல்லி விட்டு தவாப் செய்ய ஆரம்பித்தோம்.இடையிலேயே பிரிந்து விட்ட அந்த அக்காவுக்காக வெகு நேரம் ஏழாம் எண் வாயிலில் காத்திருந்தோம் காணோம். நேரமோ நள்ளிரவைத்தாண்டி விட்டது. இதற்கிடையில் தவாப் செய்கையில் மயக்கமுற்ற நிலையில் ஒருவரை தூக்கிக்கொண்டு வந்து படுக்க வைத்தார்கள் . அது மும்தாஜ் அக்காவோ என்று பயந்து துணைவி வாய் விட்டு அழத தொடங்கியது,.மயங்கி விழுந்தவர் ஆண் என்று அறிந்து சற்று மனம் அமைதி அடைந்தது .யஹ்யாவை தொலைபேசியில் அழைத்து, அவரும் வந்து தேடி விட்டு காணோம் என்று சொல்லிவிட்டார்.
பதற்றத்துடன் விடுதிக்கு வந்தால் எங்களுக்கு முன்பே அங்கு வந்து சேர்ந்திருந்தது .
கடலூர் வங்கி வாடிககையாளார் ஜனாப் அன்வர் சவுதி ரியாத்தில் வானூர்தி பொறியராகப் பணி புரிந்தார், அவரது துணைவி பல் மருத்துவர். மக்கா வந்து நாங்கள் .மறுத்தும் வற்புறுத்தி அவர்கள் இல்லத்துக்கு அழைத்துச்சென்று, சில நாட்களாவது தங்கிச் செல்லச் சொன்னார்கள்..ரியாதில் ..மிகப்பெரிய வணிக வளாகத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். மகிழுந்தை நிறுத்தவே வெகு தூரம் வளைந்து வளைந்து சென்றார் . நிறைய தொழுகை விரிப்புகள், தொப்பிகள நறுமணப் பொருட்கள் எல்லாம் வாங்கினோம். அவற்றையெல்லாம் அன்வரே சுமந்து வந்தார்..
இரவு அவர்கள் வீட்டில் தங்கினோம்.. வீடு, குறிப்பாக குளியலறை, மிகச் சுத்தமாக இருந்தது.
அன்று அதிகாலை மைத்துனர் பீர் முகமது காலமாகி விட்டதாக் தொலைபேசிச் செய்தி பைசலிடமிருந்து வந்தது..உடனே அன்வரிடம் சொல்லி மக்கா சென்று விட்டோம்.
திருப்பத்தூரைச் சேர்ந்த அன்வர் பத்தி என்ற குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக மக்காவில் வணிகம் செய்து வருகின்றனர். .எங்கள் குழுவில் திருப்பத்தூர் மக்களை புகழ் பெற்ற உணவு விடுதியான அல் பேக்குக்கு அழைத்துச் சென்றார்.. அந்த விடுதியின் சிறப்பு அம்சம் கோழி, கோழி கோழி மட்டுமே.. கோழிக்கறியில் மிகச்சுவையான பலதரப்பட்ட உணவு வகைகள். தொட்டுக்கொள்ள சின்ன சின்ன ரொட்டிகள் கொடுப்பர்கள். திரையரங்கு போல் நுழைவுச்சீட்டு வாங்கிகொண்டு அவர்கள் நம்மை அழைக்கும் வரை காத்திருக்க வேண்டும். அப்படியொரு கூட்டம்..
அரபு மக்களுக்கு வெள்ளிகிழமை வார விடுமுறை. வியாழன் இரவு முழுதும் விடிய விடிய உணவு விடுதிகளிலும் வணிக வளாகங்களிலும் கழித்து விட்டு காபாவில் சுபுஹு தொழுகையை முடித்து விட்டு வீட்டுக்குப் போய் உறங்கி ஓய்வெடுத்து, ஜும்மாவுக்கு காபா வந்து விடுவார்கள்
எங்கள் குழுவில் வந்த ஒரு தம்பதியில் கணவர் தன உறவினரைப் பார்க்க மக்காவில் செய்ய வேண்டிய அமல்களை எல்லாம் முடித்து விட்டு எங்களுக்கு சில நாட்கள் முன்பு மதீனா போய்விட்டார். அங்கு உள்ள அமல்களையும் விரைந்து முடித்த அவர், நாங்கள் மதீனா போன அன்று காலமாகி விட்டார். அதை எதிர்பார்த்தது போல் கடவுச்சீட்டு போன்ற எல்லா ஆவணங்களுக்கும் பிரதி எடுத்து வைத்திருந்தார். முகத்தை மூடிய படி அவர் மனைவி அழுது புலம்பியது மனதைப் பிசைந்தது..
ஹஜ் முடிந்தபின் உள்ளூர் இடங்களுக்கு சிற்றுலா அழைத்துச் சென்றார்கள்.. அசம்பாவிதம் நடந்த கல்லெறியும் இடம் முற்றிலுமாய் இடிக்கப்பட்டிருந்தது . நம் ஊர் போல் ஒப்பந்தபுள்ளி (டெண்டர்) கோரும் நடைமுறைஎல்லாம் இல்லை..
திரளாக மக்கள் கூடியிருந்த அரபாத் பெருவெளி அமைதியாக தனிமையில் இருந்தது,. ஆதாம் (அலை) அவர்களும் ஹவ்வாவும் (Adam and Eve)நீண்ட பிரிவுக்குப்பின் சந்தித்த இடம் ஒரு சிறிய குன்றுபோல் அமைந்துள்ளது..அதன் மேல் ஏற படிகள் உண்டு. குன்றின் பல இடங்களில் அங்கு வந்து பார்த்தவர்கள் தங்கள் பெயர்களை செதுக்கியிருந்தது எனக்கு பிரான் மலையை நினைவூட்டியது .
ஒரு இடத்தில் மரத்தில் புதிதாகப் பறித்த பேரிச்சம் பழம் கொத்துக்கொத்தாக விற்றது. மிகவும் சுவையாக இருந்தது.பதப்படுத்தப்படாத அது ஒரு நாளில் அழுகி விடும்.
திரு குர்ஆனில் இறைவனால் பெயர் சொல்லி சபிக்கப்பட்ட ஒரே நபரான அபு லஹப் அடங்கிய இடம் இன்றும் ஒரு துர் நாற்றத்துடன் இருக்கிறது
ஒரு மாத மக்கா வாழ்கையை விடைபெறும் தவாபோடு முடித்துக்கொண்டோம். எதோ நெருங்கிய உறவினரையம் , நீண்ட நாள் வாழ்ந்த இடத்தையும் விட்டுப் பிரிவது போல் மனதில் ஒரு கலக்கம் .. காபாவை இனி ஒருமுறை பார்ப்போமா என்ற ஏக்கம்.
ஏன் மக்கள் திரும்ப திரும்ப ஹஜ்ஜும் உம்ராவும் செய்ய எண்ணுகிறார்கள் எனபது அப்போதுதான் புலப்பட்டது.
மதீனப்பயணம் ஹஜ்ஜின் ஒரு பகுதி அல்ல..ஆனால் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் வாழ்வின் இறுதிப்பகுதியில் வாழ்ந்து மறைந்த இடம் மதீனா. இசுலாத்தை நிலை நிறுத்தி ஒரு பேரரசாக உருவாக்கியதில் மதினாவின் பங்கு மிக மிக அதிகம்.
மக்கா மதீனாவுக்கு இடையே நானூறு கி மீ தொலைவு. பேருந்துகள் விரைந்து செல்வதால் பயணம் ஐந்து மணி நேரத்தில் முடிந்து விடும். வழியெங்கும் பரந்து விரிந்து நிற்கும் பாலைவன மணல் வெளி. ஆங்காங்கே கொஞ்சம் புல்பூண்டுகள் , ஒட்டகங்கள்,
மக்காவில் நுழையும்போதும் முதல் தவாப் செய்யும்போதும் இஹ்ராம் உடையில் சற்று அழுக்காக இருப்போம். அதற்கு மாறாக மதீனத்தில் மணமக்கள் போல் உடுத்திக் கொள்ள வேண்டும் என்பார்கள் .
மதீனாவில் ஒன்பது நாள் தங்கி நாற்பது வேளை தொழுவது சிறப்பு. நபிகள் (ஸல்) அவர்கள அடக்கம் செய்யப்பட்ட ரவ்ளா,,நபிகளின் சொந்தப் பள்ளியான மஸ்ஜிதுன் நபவி , பல புனிதர்கள் அடக்கம் செய்யப்பட்ட ஜன்னத்துல் பக்கி –இவை மதீனத்தின் சிறப்புக்கள்.
இங்கேயும் தங்கு தடையின்றி ஜம் ஜம் நீர் கிடைக்கிறது..நபவி பள்ளியில் மேல்கூரை திறந்து மூடும்படி அமைக்கப் பட்டிருக்கிறது. மிகப்பிரமாண்டமாக அமைக்கப்ப்ட்டிருக்கிருக்கும் இது கட்டிடக்கலையில் ஒரு பொறியியல் அற்புதம்.
பூமிக்குக் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய பல அடுக்கு ஊர்தி நிறுத்துமிடம் மற்றுமோர் அற்புதம்.
பள்ளியின் குளிர்பதன அமைப்பில் வெளியாகும் வெப்பக்காற்று, மக்களுக்கு இடையூறு செய்யாமல் பல கிலோ மீட்டர் தொலைவு தள்ளி வெளியேறும்படி அமைக்கப் பட்டிருக்கிறது..
என்றும் மாறாத நம்பமுடியாத வியப்பு சுத்தம் குறிப்பாக கழிவறைகள்
ஜன்னத்துல் பக்கியில் இன்னார் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது
மதீனாவில் தவாப் சயி போன்ற அமல்கள் கிடையாது. எனவே கடைகளுக்குப்போகவும் பொருட்கள் வாங்கவும் நிறைய நேரம் கிடைக்கும்
மதீனாவில் ஆண் பெண் தனியாத்தான் தொழவேண்டும் . அதில் ஒருமுறை துணைவி காணாமல் போய் விட்டது. தொலைபேசி, காசு எதுவும் வைதுக்கொள்ளாது.. எப்படியோ வேறு ஒரு தமிழ்நாட்டுக் குழுவொடு சேர்ந்து தங்குமிடத்துக்கு வந்து சேர்ந்து விட்டது.
பத்து நாள் போனதே தெரியவில்லை .நாடு திரும்பும் தினம் நெருங்கி விட்டது. மறுபடி மனதில் ஒரு ஏக்கம்.
மதீனாவில் இருந்து சென்னைக்கு விமானம். சென்னையிலிருந்து ஜித்தா வரும்போது எவ்வளவு அமைதியாக பயணம் இருந்ததோ அதற்கு நேர் மாறாக எதோ கூட்டம் நிறைந்த நகரப் பேருந்தில் பயணம் செய்வது போல் இருந்தது..
சென்னை விமான நிலையம் வந்து இறங்கினோம். இப்போதுதான் ஜித்தா விமான நிலையத்தின் பிரமாண்டம் உரைத்தது. ஏறுவதற்கு எளிதான படிகள் கொண்ட பேருந்துகள் , கழிவறை சுத்தம் எல்லாம் ஒப்பிட்டுப்பார்க்கையில் சென்னை விமான நிலையம் ஒரு பேருந்து நிலையம் போல் தோன்றியது
விமான நிலையத்திலிருந்து வெளியே வரும்போது சரிபார்க்கும் இடத்தில் கடவுச்சீட்டில் உள்ள என் படத்தையும் என்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்போது புதிதாகத் தாடி வைத்ருக்கிறேன் என்று சொன்னவுடன்தான் அரை மனதோடு வெளியே விட்டார்..
சுற்றத்தார் அனைவரும் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.பாப்டி வீட்டில் போய் இறங்கினோம். அங்கு அனைவருக்கும் உணவு சேக் ஏற்பாடு செயதிருந்தது.
மெஹராஜ் அக்கா நாங்கள் போன அதே சமயத்தில் கட்டணம் கூடுதலான ஒரு குழுவில் ஹஜ் செய்தது.
மினாவில் தங்கியிருக்கும்போது என் கல்லூரி நண்பரும் சக வங்கி ஊழியருமான அப்துல் காதர் என்பவரைச் சந்தித்தேன்.
ஹஜ்ஜை முடித்த கையோடு தாடி வளர்ப்பதையும் தொப்பி அணிவதையும் வழக்கமாககினேன்.மீசைக்கு வண்ணம் பூசுவதை நிறுத்தி விட்டேன்,. இந்தப் புதிய கோலத்தில் பலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. எனக்கே சில நேரங்களில் கண்ணாடியில் பார்க்கும்போது என்னை அடையாளம் தெரியாது..
சில பல நாட்கள்,, மாதங்கள், ஆண்டுகள் ஏன் இப்போது கூட நானெல்லாம் ஹஜ்ஜை நிறைவேற்றியது உண்மையா இல்லை கனவா என்ற ஐயம் தோன்றும்
காபா போன்ற ஒரு பிரமாண்டமான மககள் திரளும் அமைப்பு நம் நாட்டில் இருந்திருந்தால் ?
நினைக்கவே மனம் கூசுகிறது
என்னதான் இருந்தாலும் கடையிசியில் நம் ஊருக்கு வந்துதானே தீரவேண்டும் “To every journey there is a return journey “ இதற்குப் புனிதப்பயணமும் விலக்கல்ல
ஹஜ் முடித்து வந்ததும் வகாப் “மாமா ஹஜ்ஜில் அற்புதங்கள் ஏதும் நிகழ்ந்ததா” என்று கேட்டார், என்னைப் பொறுத்தவரை ஹஜ்ஜே மிகப் பெரிய அற்புதம்தான் அதோடு வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு அற்புதம்தான்
இ(க)டைச்செருகல்
.இந்தபகுதியின் துவக்கத்தில் நான் குறிப்பிட்ட பலகையில் இருந்த சொற்கள்
.
TO
DOCTOR
&
BUTCHER
(மக்காவில் இந்தப் பலகையை நேரில் பார்க்க முடியவில்லை )
நிறைவு செய்யுமுன் ஒரு வினா:
கொய்னாபு என்றால் என்ன? ஹஜ்ஜுக்குப் போனவர்கள் இந்த சொல்லைக் கேட்டிருக்கலாம் .தெரிந்தால் சொல்லுங்கள்
.விடை
கொய்னாபு என்பது ஒரு இந்தோனேசிய நாட்டு சிற்றுண்டி . நம் ஊர் இட்லி போல் காலை உணவாகப் பயன் படும் . மக்காவில் காலைத் தொழுகை நிறைவு செய்து விட்டு வரும்போது இந்தோனேசியப் பெண்கள் கொய்னாபு என்று கூவி விற்பார்கள்
எங்கள் ஹஜ் பயணம் பற்றிய பதிவு இத்தடன் நிறைவு பெறுகிறது
இறைவன் நாடினால் நாளை மீண்டும் தியாகத்திருநாள் குறிப்புகள்
நிறைவுப்ப்குதியில் சிந்திப்போம்
23072021`fri
Sherfuddin P
sherfuddinp.
25062016 முதல் பதிவு ஒரே பகுதியாக
No comments:
Post a Comment