தமிழ் மொழி அறிவோம்
வேப்பங்கனி 14
இலக்கணக் குறிப்பு
நயன்தாரா நடித்த ஒரு திரைப்படம்
“ இமைக்கா நொடிகள் “
இந்தப் பெயருக்கு இலக்கணக் குறிப்பு என்ன?
இதுவே நேற்றை நிறைவு வினா
மிக எளிய வினா
விடை விளக்கத்துக்கு முன்
சரியான விடை எழுதி வாழ்த்து, பாராட்டுப் பெறுவோர்
சகோ
ஹசன் அலி – முதல் சரியான விடை
அஷ்ரப் ஹமீதா நெய்வேலி ராஜா செங்கை A சண்முகம்
வழிக்கரை வடிவேலன் தல்லத் சிராஜுதீன் ஹிதயத்
விடை எதோ பல் மருத்துவக் குறிப்பு போல் இருக்கும்
“ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்”
இது விடை
இதற்கு விளக்கமாக நான்கு ஆண்டுகள் முன்பு நான் எழுதியதை சிறிது கூட்டிக் குறைத்து கீழே தருகிறேன்
ஈறு கெட்ட எதிர் மறைப் பெயர் எச்சம் என்று ஒரு நீண்ட சொற்றொடர் வகுப்பில் காதில் விழும்போதெல்லாம் ஈறு கெட்டால் பல் மருத்துவரிடம் போய்த் தொலைய வேண்டியதுதானே நம் உயிரை ஏன் எடுக்கிறார்கள் என்று எண்ணுவேன்
ஆர்கிமிடிஸ் குளித்துக்கொண்டிருக்கையில் ஒரு தெளிவு பிறந்து யுரேக்கா என்று கூவிக்கொண்டு ஓடினார் என்று படித்திருக்கிறேன்,
.அதேபோல் இமைக்கா நொடிகள் படம் முடிந்து வீடு திரும்புகையில் என் பேத்தியிடம் (கல்லூரி மாணவி) ஈறு கெட்ட எதிர் மறைப் பெயர் எச்சம் என்றால் தெரியுமா என்று கேட்டேன்
.இது போல் புரியாத மொழியெல்லாம் பேசி என்னைக் குழப்பாதீர்கள் என்று பேத்தி சொல்ல அதற்காக விட்டு விட முடியுமா ? படிக்கும்போது புரியாமல் இருந்து இப்போது கிடைத்திருக்கும் இலக்கணத் தெளிவை பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது
இமைக்காத நொடிகள் என்பதில் இமைக்காத எனபது இமைக்கா என்று வருகிறது . இறுதி எழுத்தான து என்பது தொலைந்து போகிறது ,
ஈறு என்றால் இறுதி என்று பொருளாம் ..கெட்டு என்றால் விட்டுப்போனது , தொலைந்து போனது என்று பொருள்
இமைக்காத என்று எதிர் மறை (negative) பொருளில் வருகிறது .
மேலும் நொடிகள் என்ற பெயர்ச் சொல்லுக்கு விளக்கமாக வரும் செயல் முடியாத ஒரு சொல்லாக வருகிறது (செயல் நிறைவுற்றால் முற்று .முடியாவிட்டால் எச்சம் )
எனவே ஈறு கெட்ட எதிர் மறைப்பெயர் எச்சம்
எடுத்துக்காட்டுகள்
ஓடா மான் (ஓடாத மான் ) பாயா நதி (பாயாத நதி)
இந்த இலக்கணக்குறிப்புக்கு எங்கேயோ கேட்ட ஒரு குறுக்கு வழியும் நினைவில வருகிறது
எடுத்துகாட்டில் குறிப்பிட்டது போல் ஓடா மான், , பாயா நதி என் இரு சொற்கள் வந்து முதல் சொல்லின் இறுதி எழுத்து ஆ ஒலியில் டா, யா,என்று இருந்தால் தயங்காமல் ஈ.கெ.எ.ம.பெ.எ என்று இலக்கணக்குறிப்பு எழுதி விடுங்கள் ஒன்றோ இரண்டோ அத்ற்குள்ள மதிப்பெண் முழுதாய்க் கிடைத்து விடும்
உண்மையிலேயேஇந்தத்திடீர் புரிதலின் பின்னணி எனக்குப் புரியவில்லை . பதினாறு பதினேழு வயதில் படித்துப் புரியாமல் போனது ஐமபது ஆண்டுக்குப் பின் எப்படி புரிகிறது ?
ஒருவேளை என் பள்ளிப்பருவத்திலேயே இது போன்ற பெயர் உள்ள படங்கள் வந்திருந்தால் அப்போதே புரிந்து நல்ல மதிப்பெண் எடுத்திருக்கலாமோ!
உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்கள்
இலக்கணக் குறிப்பு – ஒரு சொல்லின் சரியான இலக்கண வகையை எடுதுச் சொல்வது
“ ராமு வந்தான் “
இதில் ராமு என்பது பெயர்ச்சொல்
வந்தான் என்பது வினைச் சொல்
இது இலக்கணக் குறிப்புக்கு மிக எளிய எடுத்துக்காட்டு
(இவ்வளவு எளிதாகவெல்லாம் வகுப்பில் , தேர்வில் கேட்க மாட்டார்கள் )
இன்றைய வினாவும் இலக்கணக் குறிப்பு பற்றித்தான்
அன்றாடம் உணவில் பயன்படும்
“ஊறுகாய் “
இதற்கு இலக்கணக் குறிப்பு என்ன ?
மிக எளிய வினா
.
இறைவன் நாடினால் விடை விளக்கத்துடன் 27092022 செவ்வாய் அன்று தமிழில் சிந்திப்போம்
௨௧௦௯௨௦௨௨புதன்
21092022
சர்புதீன் பீ
No comments:
Post a Comment