சுல்தான் மாமா
அடுத்த அறையில் எங்கள் அத்தா யாருடனோ பேசிக்கொண்டிருப்பது போல் இருக்கும்
ஆனால் தொடர்ந்து அத்தாவின் பேச்சுக்குரல் மட்டுமே காதில் விழும்
அப்படி ஒன்றும் மிகவும் அமைதியானவர் இல்லை மாமா
பொதுவாக அதிகம் பேச மாட்டார்
அதற்கு மேல் மைத்துனர் , அதுவும் படித்துப் பட்டம் பெற்று உயர் பதவியில் இருக்கும் மைத்துனர் என்று அவ்வளவு மரியாதை, அடக்கம்
எங்கள் அம்மாவுக்கு நேர் இளையவர் மாமா .
நல்ல சிவப்பு நிறம் சற்று குட்டையான உருவம்
இதையெல்லாம் தாண்டி நினைவில் நிற்பது அவரின் அன்பு, பாசம் ,உபசரிப்பு
மாமா மட்டுமல்ல மாமாவின் துணைவி சையது பாத்து அக்கா ,மகன், மகள் எல்லோரும் அதே போல்
நான் அப்போது கோவையில் எழோ ,எட்டோ வகுப்பில் இருந்தேன்
ஒரு திருமணப் பேச்சுக்காக பீ யன்னா மூனாமாமாவும் சுல்தான் மாமாவும் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார்கள்
அப்போது கோடை விடுமுறை என்பதால் நானும் அவர்கள் கூடப் போனேன்
வழியில் மதுரை இனா( எஸ் இப்ராகிம் & கோ ) கடையில் ஒரு நாள் தங்கி விட்டு பீ யன்னா மூனாமாமா திருப்பத்தூருக்கும் சுல்தான் மாமாவும் நானும் திருநெல்வேலிக்கும் போனோம்
(மீண்டும் நெல்லை நினைவுகள் )
மாமா வீட்டில் எனக்கு அப்படி ஒரு வரவேற்பு , உபசரிப்பு அன்பு மழை
ராயல் திரை அரங்கின் அருகில் உள்ள நைனார் குளம் முடுக்கில் வீடு . எதிரே பள்ளிவாசல் நடக்கும் தூரத்தில் வடக்கு ரத வீதியில் மாமா மேலாளராகப் பணியாற்றிய இனா கடையின் நெல்லைக் கிளை
அப்போது நகர்ப்பகுதியில் இருந்த நான்கு ரத வீதிகள், அதனை ஒட்டியுள்ள தெருக்கள் முக்கிய வணிக மையமாக இருந்தன
நகைக்கடை, துணிக்கடைகள், மால் எனப்படும் மொத்த வணிகக் கடைகள் எல்லாம் அங்குதான் இருந்தன
. முன்பு தமிழ் வினா விடையில் குறிப்பிட்ட ஆயத்த அணிகலன்அங்காடி என்ற நகைக்கடை
அந்த வட்டாரத்தின் பெரிய துணிக்கடை
மேட்டூரில் நாங்கள் இருந்தபோது எங்களுக்குப் பழக்கமான சேலம் இந்தியன் சில்க் ஹவுசின் நெல்லைக்கிளை எல்லாம் மாமா கடை இருந்த அதே வடக்கு ரத வீதியில்தான் இருந்தன
காலையில் வீட்டில் உள்ள அடி பைப்பில் குளியல்
கொஞ்ச நேரம் பள்ளிவாசலில் போய் அரபு/குரான் பாடம் படித்தல் காலைச் சிற்றுண்டி
பிறகு மாமாவோடு இனா கடைக்கு நடை
நகரின் மையப்பகுதியில் உள்ள அங்கு போய் உட்கார்ந்தால் வேடிக்கை பார்த்தே பொழுது போய்விடும்
இடையில் காப்பி , குளிர்பானம் , கரும்புச்சாறு என ஏதாவது மாமா வாங்கிக்கொடுக்கும்
கடையில் நிறைய ரப்பர் முத்திரைகள் இருக்கும் . அதை எல்லாம் ஒரு தாளில் குத்திப்பார்ப்பேன்
கடையில் உள்ள பல் பொருள்கள் அழகாகவும் புதுமையாகவும் இருக்கும்
குறிப்பாக வெற்றிலைபெட்டி ஓன்று- உலோகத்தால் ஆனது
அன்னப்பறவை வடிவில் இருக்கும் . அதன் கழுத்தைத் திருப்பினால் இரண்டு இறக்கைகளும் விரியும்
உள்ளே வெற்றிலை , பாக்கு ,சுண்ணாம்பு வைக்க தனித்தனி டப்பாக்கள் இருக்கும்
குமுதம், விகடன் எல்லாம் மாமா எனக்காக வாங்கி விடும்
கடையில் இருந்த மஸ்தான், சுந்தரம் சார்வாள், இஸ்மாயில் எல்லோரும்நன்றாகப் பழகுவார்கள்
வீட்டிலோ அக்கா, மைதீன் ,ரஷீதா எல்லோரும் நல்ல துணை
நெல்லையின் சிறப்பு நிறைய திரை அரங்குகள் . எல்லாப் படங்களும் பார்த்து விடுவேன்
மாமா வீட்டில் இருக்கும்போது பார்த்ததில் நினைவில் நிற்பது கலை அரசி – லக்ஷ்மி திரை அரங்கு
நிலவுப் பயணம் பற்றிய சற்று மறுபட்ட கதை என்பதைத் தவிர ஒரு சலிப்பூட்டும் படம்தான்
ஞாயிறு என்றால் குறுக்குத் துறை தாமிர பரணி ஆற்றில் குளியல்
நடந்துதான் போய் வருவோம்
யாரும் வண்டி வாகனம் தேடியதில்லை
நடபபதை ஒரு சிரமமாக எண்ணியதே இல்லை
ஏ சி எனும் குளிர்பெட்டி , மின் விசிறி , படுக்க மெத்தை கட்டில் தனியறை எதுவும் யாருக்கும் தேவைப்படவில்லை
மாமா ஒரு பெரிய துணி மூட்டையை சுமந்து வரும்.
சுருட்டை பற்ற வைத்து வாயில் வைத்துக்கொண்டு துவைக்கும்
மிக வேகமான நடையும் கடும் உடல் உழைப்பும் எங்கள் மாமாக்களின் சிறப்புகள். அதில் சுல்தான் மாமாவும் விலக்கல்ல
இப்படியே ஒரு மாதத்திற்கு மேலாக மிக இனிமை ,மகிழ்ச்சியாகக் கடந்து சென்றது
இதற்கிடையில் மெஹராஜ் அக்கா பீர் அண்ணன் (SIP) திருமணம் திருப்பத்தூரில் நடக்க உறுதி செய்யபட்டது
எனவே மாமா குடும்பத்துடன் நானும் திருப்பத்தூர் போய் விட்டேன்
நினைக்கவே இல்லை
மாமா குடும்பம் நெல்லை, குறுக்குதுறை எல்லாம் என் வாழ்வில் பின்னிப்பிணைந்து தொடரும் என்று
ஆம் கொஞ்ச நாளில் அத்தாவுக்கு இட மாற்றம் – நெல்லை நகராட்சி ஆணையராக
முதலில் மாமா வீட்டில்தான் போய் இறங்கினோம்
உயர் பதவியில் இருக்கும் மைத்துனர் வருகிறார் என்ற பூரிப்பில் அத்தாவுக்காக காலுறை, கழுத்துக்கு டை எல்லாம் வாங்கி வைத்து விட்டது மாமா
சில நாட்களில் நகராட்சி பயணியர் விடுதிக்குப் போய்விட்டோம்
அங்கிருந்து கூலக்கடை தெரு வீடு, இடையில் கொஞ்ச நாள் அந்த வீட்டில் சில பணிகளுக்காக பேட்டை த மு வீட்டில் தங்கல் மீண்டும் கூலக்கடை
பின் குறுக்குத்துறை
பொள்ளாச்சி ,வேலூர் இட மாறுதலுக்குப்பின் மீண்டும் நெல்லை குறுக்குத்துறை , அத்தா பணி ஓய்வுக்குப்பின் பேட்டையில் பல வீடுகள் , அம்மா மறைவு என நீண்ட நெடுங்கதை ஆகி விட்டது நெல்லை வாழ்க்கை
அதெல்லாம் பற்றி பல பகுதிகள் விரிவாக எழுதி விட்டேன்
முன்பே சொன்னது போல் நெல்லை என்பது எங்கள் வாழ்வில் குறிப்பாக என் வாழ்வில் ஒரு மந்திரச் சொல் ஆகி விட்டது
அதற்குள் நுழைந்து விட்டால் மீண்டு வருவது சிரமம்
இங்கு நான் சொல்ல விரும்புவது ஒவ்வொரு நிலையிலும் , ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு தருணத்திலும் மாமா குடும்பம் அளித்த அன்பும் ஆதரவும்தான்
ஆரவாரம் இல்லாத அன்பு ஆதரவு
நூரக்கவும் ஜென்னத் அக்காவும் தூத்துக்குடியில் படிக்கும்போது மாமா அடிக்கடி அங்கே போய் அவர்களை வீட்டுக்குக் கூட்டி வந்து தங்க வைத்து துணி எல்லாம் துவைத்துக் கொடுத்து மீண்டும் கல்லூரியில் விட்டு வரும்
அத்தா அம்மா ஊருக்குப் போய் நான் தனியாக இருந்தால் அக்கா சாப்பாடு சமைத்துக் கொடுத்து விடும்
எங்கள் இல்லத் திருமணங்களில் எல்லாம் மாமா நல்ல உதவி செய்தது
மாமா எங்கள் வீட்டுக்கு வரும்போது சமையலுக்கு வேண்டிய காய் கரி கறி எல்லாம் வாங்கி வந்து விடும் என்பது சகோ ஜோதி சொன்னது
“ரஷீதா சின்னப் பெண்ணாக குப்பி அக்கா என்று சுற்றிச் சுற்றி வரும் “இதுவும் சகோ ஜோதி சொன்னது
என் துணைவி ஜோதி சொன்னது :
“எங்கள் குடும்பத்துக்கு பல விதங்களிலும் சுல்தான் சச்சா அளித்த ஆதரவு மறக்க முடியாதது , மறக்கக் கூடாதது
நம் திருமணம் நல்லமுறையில் நடக்க அவர்கள் செய்த உதவி மிகப் பெரிது
ஒவ்வொரு முறை நாங்கள் நெல்லை செல்லும்போதும் மறக்காமல் நெல்லை அல்வா வாங்கி எங்கள் பையில் வைத்து விடும் “
உதவி, ஆதரவு என்றால் பணம் காசு அல்ல . வேலைகளை எடுத்துச் செய்ய நான் இருக்கிறேன் என்று வாயால் சொல்லாமல் செயலில் செய்து காட்டும் மனம்
வாடகை வீட்டில் இருந்து மாதா நடுத்தெருவில் வீடு வாங்கி அங்கே குடி போனது மாமா குடும்பம்
வாடகை வீடு முடுக்கில் என்றால் இது முடுக்கின் கிளை முடுக்கில்
ஆண்டு தோறும் மாமா தன நண்பர்களோடு குற்றாலம் சுற்றுலா போவது வழக்கம்
அன்றும் அப்படிதான் போனது
தேய்த்துக் குளித்த தைலம் ஒத்துக்கொள்ளவில்லை என்றார்கள்
உடல் நலம், கண் பார்வை குன்றி மிகவும் முடியாமல் இருந்தது
பல வைத்தியங்கள் பார்த்தும் சரியாகாமல் உயிர் பிரிந்தது
மாமா மகன் மைதீன் சின்னப்பையன் . குடுன்ப பாரம் தன தலையில் விழுந்ததில் நிலை குலைந்து போய் விட்டான்
எவ்வளவு நாள் அப்படியே இருக்க முடியும்
இரு பெண்கள் ரஷீதா, மெகரா
மைதீன், பாருக் ,பீர் ,அலி என நான்கு ஆண்கள்
யாருக்கும் திருமணமாகவில்லை ,
வாழ்க்கையில் நிலை நிற்கவில்லை
எப்படியோ சமாளித்து , எல்லாம் நல்ல முறையில் இறைவனருளால் நிறைவேறியது
மறைந்தது மாமா மட்டும்தான் அந்தக் குடும்பத்தின் அன்பு பாசம் அக்கா மைதீன் வழியே தொடர்ந்தது
பல ஆண்டுகள் முன்பு செங்கோட்டை போனபோது மெகரா குடும்பத்தின் உபசரிப்பு
மைதீன் மகன் திருமனத்துக்கு நெல்லை போனபோது மைதீன் இல்லாவிட்டாலும் அவர்கள் குடும்பத்தின் உபசரிப்பு
நெல்லை போகும்போதெல்லாம் மாமாவை நினைவூட்டும் பீரின் உபசரிப்பு
கோவையில் சாகுல் மகன் திருமணத்துக்குப் போயிருக்கிம்போது
உடல்நிலை சரியில்லாத ரஷீதாவைப் பார்க்கப்போனபோது
ரஷீதா , இஸ்மாயில் இருவரும் உடல் நலிவுற்ற அந்த சூழ்நிலயிலும் காட்டிய அன்பு உபசரிப்பு
எதையும் மறக்க முடியவில்லை
12092022 – கோவையில் ரஷீதாவின் உயிர் பிரிந்தது
இப்போது இருப்பது பீர், மெகரா இருவர் மட்டுமே
அவரளுக்கும் அவர்கள் குடுமபதினருக்கும் இறைவன் நீண்ட வாழ்நாளையும் நல்ல உடல், மன நலம் நிறை செல்வமும் கொடுத்து நல்மாக வாழ அருள்புரிவானாக
மறைந்த ரஷீதாவுக்கும் மற்றவர்களுக்கும் இறைவன் பாவ மன்னிப்பு வழங்கி சிறப்பான சுவன வாழ்வை அருளுவனாக
ரஷீதா, இஸ்மாயிலுக்கு ஒரே ஒரு பெண்
Very brilliant girl
சிறப்பான வேளாண் துறையில் முது நிலைப்பட்டம் பெற்றது
அதே துறையில் தேறிய பாஷா அவரது துணைவர்
ஐவரி கோஸ்ட் எனும் ஆப்ரிக்க நாட்டில் வளமான சம்பாத்தியம் ,வசதியான வீடு , பணியாட்கள் எல்லாம்
ரஹ்மத்துக்கு இரண்டு பெண் பிள்ளைகள்
என்ன , நம் நாட்டுக்கு வருவதென்றால் இரண்டு மூன்று நாளாகி விடும்
மாமா குடும்பம் பற்றி நினைவில் நிற்பதை பதிவு செய்து விட்டேன்
இறைவன் நாடியால் மீண்டும் நாளை சிந்திப்போம்
17092022 சனிக்கிழமை
சர்புதீன் பீ
Like
Comment
Share
No comments:
Post a Comment