Thursday, 6 April 2023

திரு மறை சில குறிப்புகள் 15 பகுதி (ஜூசு )15

 









 திரு மறை சில குறிப்புகள் 15

பகுதி (ஜூசு )15


 

பெயர் ஸுபாநல்லாஜி  15     Subhanallazi       

  துவக்கம்  17:1  17. Al-Isra (or Bani Isra'il) Verse 1        

நிறைவு  18:74  18. Al-Kahf Verse 74


0704 2023

1.(17:1) மிராஜ் .என்றும் இஸ்ரா என்றும் சொல்லப்படும் நபிகள் நாயகம் அவர்களின் மேலுலகப் பயணம் பற்றி சொல்கிறது இந்த வசனம்

 

சூராவின் பெயர் அல் இஸ்ரா என்றாலும் இந்தப்பயணம் பற்றி வருவது

தன் அடியானை புனிதப்பள்ளியில் இருந்து தொலைவில் உள்ள புனிதப் பள்ளிக்கு ஒரு இரவில் அழைத்துச் சென்ற இறைவன் புனிதமானவன் .நம் சான்றுகளை அடியானுக்குக் காண்பிக்கவே நம் அருள் பெற்ற அந்தப்

பள்ளிக்கு நாம் அழைத்து சென்றோம்என்பது மட்டுமே.

 

வலுவான நபி மொழிகள் . நம்பத் தகுந்தவர்கள் வாயிலாக கிடைத்த செய்திகள் சொல்வது சுருக்கமாக :

 

 நபி அவர்கள் புனித காபாவிலிருந்து எருசலேத்தில் உள்ள புனித ஆலயத்துக்கு ஒரு இரவில் இறைவனால் அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேல் உலகத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள் . வழியில் பல நபி மார்களை சந்தித்து ,பின்னர் இறைவனையும் சந்திக்கிறார்கள் . அங்கு ஐ வேளை தொழுகை போன்ற பல செய்திகள் அருளப்பெருகின்றன .பிறகு நபி அவர்கள் கபாவுக்குத் திரும்ப அழைத்துச் செல்லப்படுகிறார்கள்  

 

2. (17:12) இரவும் பகலும் இறைவனின் சான்றுகள் .இரவு இருட்டாகவும் பகல் நல்ல வெளிச்சமாகவும் இருக்கிறது .பகல் வெளிச்சம் இறைவனின் அருட்கொடையைத் தேடவும் ஆண்டுக்கணக்கை அறியவும் உதவுகிறது

 

3.(17:29) உங்கள் கைகளை கழுத்தோடு இறுகக் கட்டிக்கொள்ளதீர்கள் .அதேபோல் கைகளை மிகவும் அகலமாக விரித்து பொருட்களை முழுதும் தருமம் செய்து பிறர் ஏளனத்துக்கு ஆளாகி விடதீர்கள

 

4.(17:31, -37) வறுமைக்குப் பயந்து குழந்தைகளை கொல்லாதீர்ர்கள்.உணவளிப்பது இறைவன் மட்டுமே

 

ஒழுக்கக்கேடின் பக்கம் நெருங்காதீர்கள்

 

எந்த உயிரையும் அனுமதியின்றிக் கொல்லாதீர்கள்

 

ஆதரவற்றவரின் சொத்துக்களை அடைய எண்ணாதீர்கள்

 

அளவையிலும் நிறுவையிலும் குறையில்லாமல் நிறைவாகக் கொடுங்கள்

 

நீங்கள் அறியாதவற்றை பின் பற்றாதீர்கள்

 

பூமியில் செருக்காக நடக்காதீர்கள்

 

இவை அனைத்தும் தனி மனிதனுக்கும் ஒரு நல்ல சமுதாயத்துக்கும் இறைவன் வகுத்த நன்னெறிகள்

 

5.(17:49,50) எலும்பும் தூசியும் ஆனபின் நாங்கள் உயிர்கொடுத்து எழுப்பபடுவோமா என்று கேட்கிறார்கள் .இரும்பாகவும் கல்லாகவும் மாறி விட்டாலும் அவர்கள் திரும்ப எழுப்பப்படுவார்கள்

 

6. (17:53) இறைவனின் நல்லடியார்கள் எப்போதும் இனிய நல்ல சொற்களையே பேச வேண்டும்

 

7.(17:70) ஆதமுடைய சந்ததி ஆன மனித குலத்தை மிகவும் உயர்ந்த நிலையில் வைத்திருக்கிறோம் . கடலிலும் நிலத்திலும் அவர்களுக்கு வேண்டிய நல்ல வாழ்வாதாரங்களை வழங்கியிருக்கிறோம்

 

8. (17:76) அவர்கள் உங்களை இந்த மண்ணில் இருந்து முழுமையாக வெளியேற்றத் திட்டமிட்டார்கள். ஆனால் இன்னும் கொஞ்ச காலமே அவர்கள் இந்த மண்ணில் வாழ முடியும்

 

9. (17:78) மதியம்,(லுகர்) மாலை(அசர்), அந்தி(மக்ரிப்) ,இரவு (இஷா) , காலை(பஜ்ர்)தொழுகைகளை நிலை நிறுத்துங்கள்.

 

காலைத் தொழுகைக்கு வானவர்கள் சான்று கூறுகிறார்கள்

 

10.(17:79) இரவில் தூக்கத்தில் எழுந்து (தஹஜ்ஜத் தொழுகை) தொழுங்கள் .இந்தக் கூடுதல் தொழுகையால்உங்களுக்கு உயர்வான இடம் கிடைக்கலாம்

 

11.(17:81) உண்மை வந்து விட்டது, பொய் அழிந்து மறைந்து விட்டது

 

12.(17:89) மக்களுக்கு எளிதில் விளங்க வேண்டும் என்பதற்காக இறைவன் பல வழிகளில் மறைநூலை தெளிவாக்குகிறான் .இருந்தாலும் பலர் பிடிவாதமாக புரிந்துகொள்ள , நம்பிக்கை வைக்க மறுக்கிறார்கள்

 

13. (17:103) கொடுங்கோல் மன்னன் பிர் அவுன் மூஸா நபியையும், அவரின் வழி நடப்பவர்களையும் நாட்டை விட்டு முழுமையாக விரட்டி அடிக்க முடிவு செய்தான் . ஆனால் இறைவன் பிர் அவுனையும் அவன் கூட்டத்தாரையும் கடலில் மூழ்கடித்து விட்டான்

 

14.(17:106) எளிதில் மக்களை சென்று சேரும் வகையில் புனித மறை சிறு சிறு பகுதிகளாக இறக்கி வைக்கப்பட்டது

 

15. (18:7, நல்லவர்களை இனம் கண்டுகொள்வதற்காக இந்த பூமியையும் அதில் உள்ள அனைத்தையும் அலங்காரமாகப் படைத்திருக்கிறான் இறைவன்

 

இறுதியில் பூமியில் உள்ள அனைத்தும் அழிக்கப்பட்டு பூமி ஒரு வெறுமையான சமவெளி ஆக்கப்படும்

 

16.(18: 12-22)இளைஞர்கள்சிலர் ஏக இறைவன் அருளையும் பாதுகாப்பையும் வேண்டி ஒரு குகைக்குள் அடைக்கலம் புகுகின்றனர்

 

அங்கு அவர்களை உறங்க வைத்த இறைவன் பல (நூறு) ஆண்டுகள் கழித்து விழிக்க வைத்தான்

 

இறப்புக்குப்பின் வாழ்க்கை உண்டு என்பதை தெளிவாக்க இறைவன் செய்த இந்த அற்புத்ததை மக்கள் புரிந்து கொள்ளவில்லை . மாறாக அவர்கள் எத்தனை பேர் என்ற வீண் விவாதத்தில் ஈடு படுகின்றனர்

 

17. (18:23-24.), “இறைவன் நாடினால்” என்று சொல்லாமல் எந்த வாக்குறுதியும் கொடுக்கக் கூடாது

 

18. (18:32-44)நன்கு செழித்து வளர்ந்த தன் தோட்டத்தைப் பார்த்து பெருமை கொண்டவன் :இந்த செல்வம் நிலையானது .இதை யாரும் என்னிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாது .மறுமையிலும் இதே போன்ற செழிப்பில் நான் இருப்பேன் : என்று எண்ணினான் . இறைவன் ஒரு நொடியில் அவன் தோட்டத்தை ஒன்றுமில்லாமல் ஆக்கி அவனை நிலை குலைய வைத்தான்

 

மாறாக எல்லாம் இறைவன் செயல், அவன் கொடுத்த்து என்று நம்பியவனின் தோட்டத்தை இறைவன் பாதுகாத்துக் கொடுத்தான்

 

19. (18:46) பொருட்செல்வமும் மக்கட்செல்வமும் இம்மை வாழ்வின் அலங்காரங்கள் . ஆனால் இறைவன் பார்வையில் நீங்கள் தொடர்ந்து செய்யும் நற்செயல்களே மிகச் சிறந்தவை

 

20.(18:47) மலைகள் நகர்த்தப்படும் அந்த நாளில் பூமி வெறுமையாகிவிடும், அந்த நாளில் உலக மக்கள் அனைவரும் ஓன்று திரட்டபடுவார்கள்.இதில் யாரும் தப்பிக்க முடியாது

 

21.(18:53)இ.றைவனை நம்பாமல் வழி தவறிச் சென்றவர்கள் நரக நெருப்பில் இருந்து தப்பிக்க முடியாது

.

22.(18:58) கருணை மிக்க இறைவன் மிகவும் மன்னிப்பவனாக இருக்கிறான் ஒரு சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்ட கால வரையறை முடியுமுன் அவர்களை அவன் தண்டிப்பதில்லை

 

23.(18:60-70)மூசா நபி இறைவனின் அடியார் ஒருவரைத்தேடி நீண்ட பயணம் மேற்கொண்டு,,அவரை அடைந்து தான் அவரிடம் கல்வி கற்க விரும்புவதாய்க் கூற அவர் என்னோடு ஒத்துப்போக உன்னால் முடியுமா என்கிறார் . அதற்கு மூசா நான் நிச்சயமாக பொறுமை காப்பேன் எங்க அவர் சரி என்னுடன் வா ஆனால் நான் செய்யும் எந்த செயல் பற்றியும் கேள்வி கேட்கக் கூடாது என்கிறார்

 

இது குரான் ஜூசு

15ன் சுருக்கமோ, தொகுப்போ, விளக்கமோ இல்லை .சில குறிப்புகள் மட்டுமே

குரான் வசனங்களின் கருத்து மட்டுமே சொல்லியிருக்கிறேன் .முழு மொழிபெயர்ப்பு இல்லை

 

குரானின் இந்தப்பகுதியில்

 

 நபி ஸல் அவர்களின் மேலுலகப் பயணம்,

 

 குகை மனிதர்கள் ,

 

 நபி ஸல் அவர்கள் இறைவன் நாடினால் என்று சொல்ல மறந்து இறைவனின் எச்சரிக்கைக்கு உள்ளானது ,.

 

மூசா நபி அவர்கள் ஆசிரியரைத் தேடிச் சென்றது போன்ற பல நிகழ்வுகள் சொல்லப்ப்படுகின்றன

 

இறைவன் நாடினால் அவை பற்றிய விளக்கங்கள் பின்பு எப்போதாவது பார்ப்போம்

 

நேற்.றைய வினா

 

யாருடைய வழியைப் பின்பற்றுமாறு இறைவன் நபி ஸல் அவர்களுக்கு கட்டளை இட்டான் ?

 

விடை

இப்ராகிம் நபி வழி

(16:123)

இறைவன் மேல் முழு பக்தி வைத்து இப்ராகிமின் வழியைப் பின் பற்றுங்கள் . அவர் இறைவனுக்கும் அவனது புனிதத் தன்மைக்கும் எதையும் ஒப்பாகக் கருதியதில்லை

 

சரியான விடை அனுப்பிய சகோ

 

ஷர்மதாவுக்கு

 

வாழ்த்துகள் பாராட்டுகள்

 

 

இன்றைய வினா

பிடித்து வைத்திருந்த மீன் ஒரு மாறு பட்ட வழியில் கடலுக்குள் போனது பற்றி சொல்லும் வசனம் எதூ?

 

 

15 ஆவது சகரை நிறைவேற்றிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி

 

இந்தப் புனித மாதத்தின் நன்மைகள் அனைத்தும் நம் அனைவருக்கும் நிறைவாகக் கிடைக்க எல்லாம் வல்ல ஏக இறைவன் அருள் புரிவானாக

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

15 ரம்ஜான் (9)1444

07042023 வெள்ளிக் கிழமை

சர்புதீன் பீ

























J


114. An-Nas Verse 6

No comments:

Post a Comment