Sunday, 23 April 2023

உடலும் உள்ளமும்

 




உடலும் உள்ளமும்

 

 “என் படை வீரர்கள் முஸ்லிம்களாய் இருந்திருந்தால் இன்னும் பல வெற்றிகளைக் குவித்திருப்பேன்

அவர்களால்  எளிதாக நாள் முழுதும் உணவு, நீர் இல்லாமல் இருக்க முடிகிறது “

இது உலக அளவில் வெற்றி வாகை சூடிய ஒரு மாவீரனின் வாக்கு

 

“உங்கள் தொழுகைமுறையால் உங்களால் எளிதாக தரையில் உட்கார முடிகிறது

என்னால் அதெல்லாம் நினைத்துப் பார்க்கக் கூட முடியாது

சாப்பிட நாற்காலி , மேற்கத்திய ஓய்வரை இவை எல்லாம் மிக மிக அவசியத் தேவைகள் ஆகி விட்டன “

பல லட்சங்கள் செலவு செய்து மூட்டு மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் சொன்னது

பின் எதற்காக இந்த சிகிச்சை ? வலி இல்லாமல் இருக்குமாம்

 

சின்னச் சின்னக் குழந்தைகளில் இருந்ந்து பழுத்த முதியவர் வரை இறைவனருளால் ஒரு மாதம் நோன்பு நோற்கிறார்கள்

இந்தக் கடும் கோடையில் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உணவையும் நீரையும் முழுமையாகத்  தவிர்க்கிறார்கள்

அதற்காக காட்டுக்குள் போய் தனிமை தவம் எல்லாம் கிடையாது

 

வீட்டுக்குள் இருக்கும் உணவுகள் , தண்ணீர் , இல்லாள் இவற்றில்  எல்லாம்  மனதை செலுதத்தாத புலனடக்கம்

 

வழக்கமான படிப்பு, பணிகள், வணிகங்கள் தொடரும்

பொய், சினம் , புறம் பேசுதல் – முழுமையாகத் தவிர்க்க வேண்டும்

வம்புச் சண்டைக்கு யாரும் வந்தால் கூட அமைதியாக விலகிப் போய்விட வேண்டும்

 

நான், எனது,  நான் உழைத்து சம்பாதித்தது எனக்கு மட்டுமே உரியது என்ற எண்ணத்தை மாற்றி , உலகில் உள்ள அனைத்துமே இறைவனுக்கு உரியது

அதில் அவன் உனக்குக் கொடுத்ததில் நீயும் உன் குடும்பமும் வசதியாக வாழ எவ்வளவு தேவையோ அதை எடுத்துக்கொள் மிஞ்சி இருப்பதை பிறருக்குக் கொடுத்து உதவு

என்ற மன நிலையை ஏற்படுத்தும் சக்காத் எனும் கட்டாய தர்மமும் , அதற்கும் மேலாக கணக்கில்லாமல் கொடுக்கும் சதக்கா எனும் தர்மமும் செல்வத்தையும் உள்ளத்தையும் தூய்மைப் படுத்துகின்றன

 

“நீ கொடு,நான் உன் தேவைகளை பார்த்துக் கொள்கிறேன் “

இது இறைவன் கொடுக்கும் வாக்குறுதி

உடலுக்கும் மனதுக்கும் வலிமை தரும் தொழுகை ஒரு முழுமையான யோகாசனப் பயிற்சியாகிறது

புனித மாதத்தில் மற்ற நாட்களை விட இரவில் கூடுதலாக 20 ரக்கத்( ஒரு ஒன்னரை மணி நேரம் ) தொழுவது சிறப்பு

ஒரு ரக்கத் என்பது நிற்கும் நிலையில் துவங்கி , இடுப்பை வளைத்து குனித்து, நிமிர்ந்து பின் நெற்றி தரையில் படும்படி இரண்டு முறை செய்வது

தொழுகையில் கண் எங்கே பார்க்கவேண்டும், கைகள் எப்படி இருக்க வேண்டும், உடலின் எந்த எந்தப் பகுதிகள் தரையில் பட வேண்டும் என எல்லாம் வரையறுக்கப்பட்டிருக்கின்றன   

 

இவற்றை ஒழுங்காகக் கடைப் பிடித்தால் ,கண் பார்வை சீராகும்

பல நோய்கள் தவிர்க்கப்படும்

 

குனிவது நிமிர்வது போன்ற உடல் நிலை மாற்றங்கள், அதோடு சேர்ந்து வரும் சுவாச மாற்றங்கள், ஓதப்படும் மறை வரிகள் எல்லாம் சேர்ந்து உடல், மன ஆன்ம பலம் கொடுக்கும் ஒரு தியானமாக அமைகின்றன

ஒரு நிலையில் இருந்து செய்யாமல் உடல் அசைவுகளோடு செய்யும் ஒரு dynamic meditation ஆக அமைகிறது

 

இரவுத் தொழுகைக்குப்பின் ஒரு சிறிய உரை. பிறகு ஒருவரோடு ஒருவர்  கை குலுக்கிக் கொண்டு விடை பெறுவது ஒருசமூக நலப் பயிற்சியாகி விடுகிறது

உலக சுகாதார நிறுவனம் WHO நலவாழ்வு பற்றி சொன்னபடி

உடல் நலம், மன நலம், சமூக எல்லாம் வாரி வழங்கும் புனித மாதத்தின் சிறப்புகளை சொல்லி மாளாது

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

24042023 திங்கள்

சர்புதீன் பீ

 

 

 

 

No comments:

Post a Comment