Saturday, 29 April 2023

புதுப்பொலிவில் வா பயணத்தில் வங்கி அனுபவங்கள் – கோவை





 புதுப்பொலிவில்

வாழ்க்கைப் பயணத்தில் வங்கி அனுபவங்கள் –
கோவை
30042023
.நீண்ட இடைவெளிக்குப்பின் (முப்பது ஆண்டுகளுக்கு மேல்) நான் கோவை வங்கியில் பணியாற்றிய காலம் பற்றியது இது.
ஈரோடுவங்கியில்ஆய்வுப்பணியில் (Field inspection) மேலாளராகப் பணியாற்றிய எனக்கு கோவைக்கு மாறுதல் வந்தபோது அதே பணிதான் என்று எண்ணியிருந்தேன்.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு கவுண்டம்பாளையம் கிளையில் இரண்டாம் நிலை மேலாளராக மாறுதல் ஆணை வந்தது..உடனே கோவை உதவிப் பொது மேலாளரை சந்தித்து எனக்கு இரண்டாம் இடத்தில பணி புரிய விருப்பம் இல்லை எனத் தெரிவித்தேன்.
வழமை போல மிகக் கனிவாக என்னோடு உரையாடிய மேலதிகாரி “பொறுப்புகளை ஏற்க விரும்பும் உங்கள் எண்ணம் பாராட்டுக்குரியது,. ஆனால் இந்த ஆண்டு மாறுதல்கள் எல்லாம் முடிவுற்றுவிட்டன அடுத்த ஆண்டு பார்த்து செய்கிறேன் “ என்றார்.
இதுதான் எங்கள் வங்கியின் சிறப்பு .எனக்குத் தெரிந்து மூன்று பேர் என் இடத்துக்கு வர விருப்பம் தெரிவித்தனர்.நிர்வாகம் மனது வைத்திருந்தால் என் விருப்பத்தையும் அவர்கள் விருப்பத்தையும் நிறைவு செய்திருக்கலாம் ..நிர்வாகத்துக்கு மிக நெருக்கமாக இருக்கவேண்டும் அல்லது அலுவலர் சங்கத்தில் பதவியில் இருக்க வேண்டும் அப்போதுதான் நம் விருப்பப்படி மாறுதல் கிடைக்கும்.
கோவை வந்து கவுண்டம்பாளையம் கிளையில் சேர்ந்தாயிற்று.. வீடு பார்கக வேண்டும் மகளுக்கு கல்லூரியில் இடம் வாங்க வேண்டும் மகன் C A பயிற்சி பெற ஒரு கணக்காயரை ஏற்பாடு செய்ய வேண்டும்.
வீடு உடனே கிடைக்கததால் சுமார் ஒரு மாத காலம் ஈரோடில் இருந்து கோவைக்கு தினமும் வந்து சென்றேன் (போக வர 200 கி மீ)
வங்கிக்கு தொடர்புடைய கணக்காயர் ஒருவரை முது நிலை மேலாளர் அறிமுகப்படுத்தி வைத்ததில் பையன் பிரச்சனை முடிந்தது (?)
வீடு தேடுவதில் வங்கியில் எழுத்தராக இருந்த சசிகலா ,அவர் துணைவர் ,,தின வசூல் முகவர் அந்தோணி மூவரும். மிகவும் உதவியாக இருந்தனர்.
ஒரு வழியாக ரத்தினபுரி பகுதியில் ஒரு வீடு பார்த்துக் குடியேறினோம்..மேல் தளத்தில் உரிமையாளர் குடும்பம்.
மிகவும் நல்லவர்கள். நகராட்சி நீர் குழாய்க்கு பூட்டு போட்ட விந்தையை அங்குதான் கண்டேன் செல்லமாக ஞமலி என்று பெயர் வைத்திருந்தோம்.
உரிமையாளரைப் பார்க்க வந்த அவர்கள் உறவுப்பெண் எங்களைப்பார்த்து “ நான் ஒவ்வொரு முறை இங்கு வரும்போதும் வேறு வேறு குடித்தனக்காரர்களைப் பார்க்கிறேனே அது ஏன்” என்றார்..
அந்தப் மரபைப் பின்பற்றி நாங்களும் விரைவில் வேறு வீட்டுக்குக் குடி போய் விட்டோம்.
அது சிறிய அழகான வீடு.,தோட்டம் பெரிய gate மகிழுந்து நிறுத்த இடம் பின்னால் துணி துவைக்க , பாத்திரம் கழுவ என்று தனித்தனியாக இடம்.
எல்லாவற்றிற்கும் மேலாக வீடு தனி வீடு உரிமையாளர் அருகில் இல்லை..கோவைக்கே உரிய தண்ணீர் பற்றாக்குறை அங்கும் இருந்தது.. மற்றபடி வீடு மிகவும் பிடித்துப் போயிற்று.
அந்த வீட்டில் முன்பு குடியிருந்தவர் கம்பிவட (கேபிள்) இணைப்பு வைத்திருந்தார். சில நாட்கள் அதை இலவசமாகப் பார்த்தோம்.அப்போது இரவில் தமிழ் தொலைக்காட்சியில் வந்த காட்சியைப் பார்த்து விட்டு, வீட்டில் பிள்ளைகள் இருக்கும் வரை கம்பி வடம் வேண்டாம் என்று தீர்மானித்து அதை நிறைவேற்றவும் செய்தேன்.
மகள் பாப்டிக்கு கல்லூரியில் இடம் கிடைக்காததால் ஒரு ஆண்டு படிப்பில் இடைவெளி. அந்த ஒரு ஆண்டும் பாப்டி வீட்டு வேலைகளில் மிக முனைப்பாக பங்கெடுத்தது வியப்பாக இருந்தது. அந்த இடை வெளி இன்னும் அப்படியே இருப்பது எனக்கு ஒரு மனக்குறை.ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப்படிப்பு இரண்டாம் ஆண்டோடு திருமணம் ஆகி விட அதற்கப்புறம் படிக்கவே இல்லை.
கோவையில் இருக்கும்போது சோலாப்பூரில் இருந்த மைத்துனி சர்மதா வீட்டுக்குப் போய் சில நாட்கள் தங்கி வந்தோம் சர்மதாவும் துணைவர் அயுப் கானும் அன்போடு உபசரித்தார்கள்.
சோலாப்பூரின் சிறப்பு அம்சமான படுக்கை விரிப்புகள் நிறைய வாங்கி வந்தோம்.
கோவையிலும் அருகாமையிலும் சில பல உறவினர்கள் இருந்தார்கள்.
முதலில் இருந்த வீட்டுக்கு மிக அருகில் கரீம் அண்ணனின் மைத்துனரும் சம்பந்தியுமான வணிகவரி அதிகாரி ஜனாப் சாகுல் அமீது வீடு
.புது வீட்டுக்கு அருகில் ஜமால் அண்ணன் மகன் வீடு.
விமானப்படை அதிகாரிகள் குடியிருப்பில் பெரியத்தா மகன் அஜ்மல்,
சுண்டக்கா முத்தூரில் சுல்தான் மாமா மகள் ரசீதா(இசுமாயில்)
அதற்கு சற்று அருகில் பெரியத்தா மகன் தல்லத்,
சரிவு மாமா மகன் பீர் முகமது
சிட்கோவில் பெரிய முத்தக்கா மகள் பர்சானா(பசீர்).
அடிக்கடி இல்லாவிட்டாலும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். .
நான் முன்பே குறிப்பிட்டபோல் இரண்டாம் நிலை மேலாளராக பணி புரிவதில் எனக்கு விருப்பம் இல்லை. அதோடு சேர்ந்து எனக்கும் முதுநிலை மேலாளருக்கும் அடிக்கடி கருத்து ஓவ்வாமை ,ஏற்பட்டது..
ஒரே ஒரு எடுத்துக்காட்டு – ஒரு நாள் அவருடைய காரில் வட்டார அலுவலகத்திற்கு அலுவலக வேலையாகச் சென்றோம்..
காரை விட்டு இறங்கியவுடன் அவருடைய brief case ஐ என்னிடம் நீட்டினார். நான் மௌனமாக என் மறுப்பையும் வெறுப்பையும் வெளிக்காட்டினேன் (அவரைச் சொல்லிக் குற்றம் இல்லை எனக்கு முன் இருந்த இ.நி. மேலாளர் இது போல் ஊழியம் பல செய்வாராம்)
என்னை வேறு இடத்துக்கு அதுவும் மலைப்பகுதிக்கு மாற்ற மிகவும் விரும்பினார். ஆனால் அவருக்குத்தான் கடல் பகுதிக்கு அருகில் மாற்றல் வந்தது.
அதற்கு அடுத்து வந்த மு.நி.மே.திரு இராசாராம். அவருக்கும் எனக்கும் எண்ணங்கள் ஒரே அலை வரிசையில் இருந்தன. குறிப்பாக நேர்மை ,சபலங்கள் இல்லாமை.
மிகக்கடுமையாக உழைக்கும் அவரோடு ஒத்துப்போவது எல்லோரும் பயமுறுத்திய அளவுக்கு எனக்கு சிரமாக இல்லை.
அலுவலகப் பணியில் ஏற்பட்ட சில இடுக்கண்களைக் களைய அவருக்கு நான் உறு துணையாக நின்றேன்.
அவருடன் பணி புரிந்த காலத்தில் எனக்கு முது நிலை மேலாளராகப் பதவி உயர்வு கிடைத்தது. நெல்லை மாவட்டம் ஏருவாடிக்கு மாற்றலும் வந்தது.
கோவைக்கு முத்தலிப் அண்ணனும் ஜென்னத் அக்காவும் வந்து ஓரிரு நாட்கள் தங்கிச் சென்றார்கள்.
தானி(ஆட்டோ)யை கிட்டத்தட்ட வீட்டுக்குள்ளேயே வந்து நிறுத்தி அக்காவை இறக்கி விட்டதும் காரில் கடைத்தெருவில் எல்லோரும் போய்க்கொண்டிருக்கையில் காரில் மின் கோளாறினால் சிறிய தீப்பொறியும் புகையும் வந்தவுடன் மிகப்பதற்றமாக அக்காவை இறக்கி விட்டதும் அண்ணன் அக்காவின் மேல் கொண்ட அதீத அக்கறையையும் பாதுகாப்பு உணர்வையும் வெளிப்படுத்தின..
காந்திபுரத்தில் உள்ள ஒரு மிகக் கறாரான வணிக நிறுவனத்தில் பேரம் பேசி விலை குறைத்து வாங்கியதில் அண்ணனின் நாவன்மையைக் கண்டு வியந்தேன்.
அக்கா ,அண்ணன் தங்கிய தினங்கள் இனிமையாகக் கழிந்தன. சென்னைக்குப் புறப்படும் நேரத்தில் தொடர் வண்டி பயணச்சீட்டு தொலைந்து போனது ஒரு பதற்றத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது.
ஆணை மலையில் ஜமால் அண்ணன் மகன் பாஷாவின் திருமணத்தில் கலந்த்கு கொள்ள பைசலும் நானும் அழைப்பில் குறிப்பிட்டிருந்த காலை 7 மணிக்கே போய் மணமகன் குடும்ப வருகைக்காக வெகு நேரம் காத்திருந்தது ஒரு அனுபவம்
முஸ்தபா அண்ணனிடமிருந்து எதிர்பாராத ஒரு மடல் வந்தது, முத்தக்காவின் சார்பில் எங்கள் வீட்டில் பெண் கேட்பதாக அதில் எழுதியிருந்தது. எனக்கு உண்மையிலேயே ஒன்றும் புரியவில்லை. பாப்டியின் திருமணம் பற்றி நாங்கள் சிந்தித்ததே கிடையாது.. இது வரை ஒரு சேலை கூட வாங்கியது கிடையாது. பட்டப்படிப்பு முடிந்து விரும்பினால் மேல் படிப்பில் சேர்ப்பது அப்படி இல்லாவிட்டாலும் பட்டம் வாங்கி ஒரு ஆண்டு கழிந்துதான் திருமணம் கூடிய மட்டும் சொந்தம் அல்லாத இடத்தில் பார்ப்பது என்று எண்ணியுருந்தோம். அதற்கேற்றாற்போல் பணத்திற்கும் ஓரளவு திட்டமிட்டிருந்தேன்.
ஆனால் இறைவன் நாட்டம் வேறாக இருந்தது எல்லாத்திக்குகளிலும் பல விதமாக உடனே திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள அழுத்தங்கள் வந்தன.
.வங்கி முது நிலை மேலாளரும் பத்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளுக்கு இப்படி ஒரு நல்ல பையன் வந்தால் உடன் சம்மதம் தெரிவித்திருப்பேன் என்று சொன்னார்.. இதற்கிடையில் திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டாதாக பரவலாக ஒரு செய்தி பரவ ஆரம்பித்தது. (கட்செவி, முகநூல் இல்லாத அந்தக் காலத்திலேயே it went viral)
பல குழப்பங்கள் நெருக்கடிகள் எல்லாவற்றையும் தாண்டி திருமணம் இறையருளால் நான் ஏருவடியில் பணியாற்றியபோது சென்னையில் சிறப்பாக நிறைவேறியது.
சையது சச்சா கோவை வந்திருந்தபோது ஒரு சாப்பாட்டு பேசன் நிறைய இருந்த பஜ்ஜியை தனியாகத் தின்று முடித்தது அவருடைய பல சாதனைகளில ஒன்று.(அடுத்த நாள் முழுப்பட்டினி)
வீடு தேடும் போது வங்கி ஊழியர் ஒருவர் தமக்குத் தெரிந்த ஒரு தமிழ் அறிஞர் வீடுகள் கட்டிஇருக்கிறார் பார்க்கலாம் என அழைத்துச் சென்றார் .
அவர் தொலைகாட்சியிலும் பட்டி மன்றங்களிலும் மனித நேயம், மனிதம் பற்றி சிறப்பாகப் பேசுபவர். (அவர் தந்தை வானொலி வாயிலாக எல்லோருக்கும் தெரிந்தவர் )
அந்த மனித நேயர் உட்காரக்கூடச் சொல்லவில்லை மிகக்கண்டிப்பான குரலில் இரண்டாயிராம் ரூபாய் வாடகை இருபதாயிரம் ரூபாய் அட்வான்ஸ் அல்லது மொத்தமாக ஒரு லட்சம் .இதைத்விர வேறு பேச்சு இல்லை என்று கிளி மொழியில் சொன்னார்.
மேடைப்பேச்சு வேறு நடைமுறை வேறு என்பதை முதன் முறையாக உணர்ந்தேன்.
வேதாத்ரி மகரிஷியின் வாழ்க வளமுடன் இயக்கத்தில் எளிய உடற்பயிற்சி, ,எளிய குண்டலினி யோகா. காயகல்ப பயிற்சி படித்தேன்.’
சாயி பாபா குடியிருப்பில் அமைந்துள்ள அறிவுத் திருக்கோயிலுக்கு வாரம் மும்முறை பயிற்சிக்காகப போவேன்.
பயிற்சி முடிந்து திரும்புகையில் உடலும் மனமும புத்துணர்வு பெற்று பறப்பது போன்ற ஒரு பரவசம் ஏற்படும்..இருந்தும் தொடர்ந்து பயிற்சிக்குப் போகாமல் நிறுத்தி விட்டேன்.
காரணம் அடுத்தடுத்த உயர் நிலைப் பயிற்சிகளுக்குப் போகும்போது மனதில் ஒரு ஆணவம் ஏற்படுவதை என்னால் நன்கு உணர முடிந்தது. குடும்பத்தை விட்டு சற்று விலகிப்போவது போல் துணைவி உணர்ந்தார் .
மேலும் ஒரு நிலையில் சில நாட்களுக்கு தொழுகையை நிறுத்தச் சொன்னார்கள். சரி கற்ற வரை நம் உடல் நலத்தைப்பேண போதும் என்று நிறுத்தி விட்டேன்.
ஈஷா இயக்கத்தின் நிறுவனர் எங்கள் வங்கிக்கு அவ்வப்போது வருவார். நல்ல உயரம். நீளமான உடை அணிந்திருப்பார் இளைஞராக இருந்த அவர் தம் இயக்கம் பற்றி தகவல் தாள்களைக் கொடுத்துச் செல்வார்.
பூந்தமல்லியில் உள்ள என் வீட்டில் குடியிருந்தவர் என் மேல் வழக்குத் தொடந்ததும் நான் கோவையில் பணி புரிந்த போதுதான்.. சொந்த வீடு என்ற தலைப்பில் நான் இது பற்றி விவரித்துள்ளேன் (sherfuddinp.blogspot.com)
நிறைவாக வங்கி பற்றி
ஒரு வழியாக வீடு பார்த்து அதை வங்கிக் குடிஇருப்பாக பதிவு செய்வதற்கான படிவத்தை மேலிடத்துக்கு அனுப்பினேன்
அவர்கள் அனுப்பிய அனுமதியில் கௌன்டம் பாளையம் புற நகர்ப்பகுதி என்பதால் அதற்குள்ள வடகைதான் அனுமதிக்க முடியும் . கோவை நகர்துக்குள்ள தொகை கிடைக்காது என்று சொல்லியிருந்தார்கள்
அந்தக்கிளையில் எல்லோருக்கும் கோவைக்குரிய நகர ஈட்டுப்படி, வடகைப்படி கொடுக்கப்படுகிறது
முது நிலை மேலாளருக்குள்ள குடியிருப்புக்கு கோவை நகர வாடகை கொடுக்கப்படுகிறது
ஒரு வங்கிக்கிளையில் 20 பேர் நகர வாசிகள் , ஒருவர் மட்டும் புறநகர் வாசி என்பது எந்த வகையில் சரி என்று புரியவில்லை
ஒரு நீண்ட கடிதப் போக்கு வரத்துக்குப்பின் கோவைக்க்குரிய வாடகை அனுமதித்தார்கள்
.கடந்த பகுதி பற்றி கருத்துக்கள் ,பாராட்டுக்கள் தெரிவித்த உடன் பிறப்புக்களுக்கும் ஐயத்திற்கு விடை அளித்த இதயத்திற்கும் நன்றி. ஜோதி அக்கா அம்மாவைப்பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை என்று கருத்து (தொலைபேசியில்) தெரிவித்தது.
ஒரே வரியில் சொல்வதென்றால் குன்றில் இட்ட விளக்காய் ஒளி வீசிய அத்தாவுக்கு திரியாய் நெய்யாய் இருந்து சக்தி கொடுத்தது அம்மாதான். அம்மாவின் எண்ணத்திற்கேற்பவே அத்தாவின் முடிவு அமையும்.. அப்படி இல்லாவிட்டால் அது தவறான முடிவென்று காலப்போக்கில் தெரியும். அம்மா அத்தா பற்றி விரிவாகத் தனியாக எழுத எண்ணியுள்ளேன் (இன்ஷா அல்லா()
போந்தாகோழியும் வெள்ளைக் கோழியும் வேறு வேறு இனம் என எண்ணுகிறேன்
.இந்தத்தொடரில் காரைக்குடி பற்றி இனிமேல்தான் எழுதுவேன்..
நினைவுச் சாலையில் நிதானமாகப் பயணித்து பழைய இனிய நினைவுகளை அசை போடுவதுதான் (a stroll down memory lane) இத்தொடரின் முதன்மை நோக்கம். சுராஜின் கருத்தில் இருந்து அது ஓரளவு நிறைவேறியதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.
மரம் செடி கொடி பற்றி என் ஐயம் இன்னும் தீரவில்லை. 78% Nitrogen, 21% oxygen இதெல்லாம் தெரிந்த கணக்குத்தான்) . தொலைபேசியில் இதயத்துடன் பேசிய பின் இதன் கருத்துப் பரிமாற்றம் தொடரும்.
இ(க)டைச்செருகல்
:எல்லோருக்கும் தெரிந்த குறள்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ..............தாய்.
ஈன்ற பொழுதில் வலிபற்றி அறிவோம். அது என்ன உவப்பு?
அறிந்ததைப் பகிரலாம். இதற்கான அறிவியல் விளக்கம் அடுத்த பகுதியில்
பயணம் தொடரும்
02032016 அன்று வெளியிட்டதின் மறு பதிப்பு சில மாறுதல்களுடன்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
30042023 ஞாயிறு
சர்புதீன் பீ

No comments:

Post a Comment