Saturday, 27 May 2023

புதுப் பொலிவில் ஜலந்தர் 2

 


 

 

 

 

புதுப் பொலிவில்

 

ஜலந்தர் 2

 

28052023

 

 

 


ஜலந்தரில் ஆய்வுப் பிரிவு (இன்ஸ்பெக்சன்) மேலாளராகப் பணி நிமித்தம் பஞ்சாப்
, ஹரியானா,ராஜஸ்தான்,ஜம்மு கஷ்மீர் மாநிலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

 

.ஒவ்வொரு பயணமும் ஒரு புதிய உணர்வு , புரிதலைத் தரும்

 

. சில நிகழ்வுகளையும் உணர்வுகளையும்  இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 

 

ஜம்மு (ஜம்மு காஷ்மீர்)

 

உறைபனி ,,பனிப்பொழிவு , ங்குமப்பூ –

 

காஷ்மீர் என்ற சொல் உண்டாக்கும் கற்பனைகள்

 

.ஆனால் ஜம்மு வேறு காஷ்மீர் வேறு . இரண்டு பகுதிகளையும் சேர்த்து ஜம்மு & காஷ்மீர் என்ற மானிலம் உருவானது..

ஜம்மு நகருக்கும்  காஷ்மீர் ஸ்ரீநகருக்கும் இடையில்  500 கி மி இடைவெளி. ஜம்மு பகுதியில் அதிகக்குளிர் இருக்காது.

 

ஜம்முவுக்குப்போனவுடன் மாநில அரசு நடத்தும் விடுதியில் தங்கினோம். அறைகள் விசாலாமாக ஒரு வீடுஅளவுக்கு கூடம்,படுக்கை அறை,மாடம் என்று இருக்கும்.. ஆனால் பராமரிப்பு, அறை சேவை(ரூம் சர்வீஸ்) இதெல்லாம் நன்றாக இல்லாததால் வேறு விடுதிக்கு மாறினோம்..

 

துணைக்கு யாரும் வராததால் ஸ்ரீநகர் செல்லும் எண்ணம் நிறைவேறவில்லை.

 

மிகச்சுவையான பேரிக்காய் மிக மலிவாகக் கிடைத்தது. பதினைந்து ரூபாய்க்கு ஒரு மரப்பெட்டி நிறைய பேரிக்காய் வீட்டுக்கு வாங்கி வந்தேன்.

 

ஜம்மு பகுதியில் அடிக்கடி மின் தடை உண்டாகும். எனவே மெழுகு வர்த்திகள் விற்பனை நன்றாக இருக்கும். ஒரு மெழுகு வர்த்தி உற்பத்தி சாலையில் பெரிய குத்து விளக்கு அளவுக்கு ஒரு மெழுகு வர்த்தி வாங்கினேன்.

 

மிக விலை உயர்ந்த கம்பளி உற்பத்தி செய்யும் ஆலையில் அந்தக் காலத்திலேயே மனித எந்திரங்களை (ரோபோ) பார்த்து வியந்தோம்.

 

ஜம்மு நகர் பாகிசுத்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. எனவே பாதுகாப்புப் படைகள் எப்போதும் ஆயத்த நிலையிலேயே இருக்கும்.

 

இந்தியாவில் கிடைக்காத அமெரிக்க மருந்துகள் பாகிச்சுதானில் கிடைக்கும். உரிய விலையும் கூலியும் கொடுத்தால் எல்லை கடந்து ஓடிப்போய் வாங்கி வரும் ஆட்கள் நிறைய உண்டு,

 

தரமான பசுமதி அரிசி மிக மலிவாகக் கிடைக்கும்.

 

     விண்வெளிப்பயணம்

 

ஒரு விடுமுறை நாளில் தனியாக இருந்த நான் ஜம்மு தெருக்களில் காலார நடந்து கொண்டிருந்தேன்.ஒரு இடத்தில் நிறையக் கூட்டம் நின்று கொண்டிருந்தது. என்னவென்று பார்த்தால் பீடா விற்பனை.நானும் சிறிது நேரம் காத்திருந்து மதிய உணவிற்குப் பிறகு சாப்பிட ஒரு பீடா வாங்கிக் கொண்டு என் அறைக்கு வந்தேன்.

 

அறையிலேயே கொண்டு வந்து கொடுத்த  காஷ்மீர் காய்கறிப்புலவும் கோழி வறுவலும் மிகச் சுவையாக இருக்க , நன்றாகச் சாப்பிட்டு விட்டு பீடாவை வாயில் வைத்தேன்.

 

அவ்வளவுதான் ஒரு அடக்க முடியாத குமட்டல் உணர்வு. கைக்கெட்டும் தொலைவில் இருக்கும் குளியலறைக் கதவை திறக்க முடியாத அளவுக்கு ஒரு மயக்கம், தடுமாற்றம் .உண்டது முழுதும் வெளியே வந்து விட மயங்கி படுக்கையில் சாய்ந்து விட்டேன். .

 

சரி இன்றோடு நம் கதை முடிந்தது என்ற எண்ணம் மேலோங்கியது. அந்த மயக்கத்திலும் அழைப்பு மணியை அழுத்தி பணியாளை வரவழைத்து அறையைச் சுத்தம் செய்யச் சொல்லி விட்டு தூங்க ஆரம்பித்தேன். கண் விழித்துப் பார்த்தால் நன்கு இருட்டியிருந்தது .ஏழு மணி நேரம் தூக்கமா மயக்கமா என்று தெரியாத நிலை.

 

ஒரு நீண்ட குளியல் குளித்து ஒரு கோப்பை கருப்புத் தேனீர் அருந்திய பின்தான் மயக்கம் தெளிந்தது  பீடாவில் ஜர்தா பீடா என்ற ஒன்றுதான் புதிதாய் உட்கொள்பவர்களுக்கு இது போல் மயக்கம் உண்டாக்கும் என்று பின்னால் அறிந்தேன். மொழியினால் வந்த குழப்பமா என்று தெரியவில்லை.

 

எப்படியோ அன்றே முடிந்தது என்று எண்ணிய என்னை  முப்பது ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்வைப் பகிர்ந்து கொள்ள வைத்த இறைவனுக்கு நன்றி.

 

.ஜோத்பூர்(ராஜஸ்தான்)

 

ராஜஸ்தான் என்றால் பெரிய மணல் பரப்பு. ஆங்காங்கே ஒட்டகங்கள் பெரிய பெரிய வளையல் அணிந்த பெண்கள் என்ற கற்பனை ஓட்டத்தை எல்லாம் தவிடு பொடிஆக்கியது ஜோத்பூர்.

 

மிக அழகான ,வளர்ச்சி பெற்ற ,வசதியான நகர். தண்ணீர் தங்கு தடையின்றிக் கொட்டும் வசதியான விடுதி அறைகள். சாலைகளில் ஆங்கா.ங்கே பெரிய பெரிய அலுமினியத தொட்டிகளில் குளிர் நீர்,, கால் நடைகளுக்கு தனி தண்ணீர் தொட்டிகள் .சுருக்கமாகச் சொன்னால் நம்மூரை நினைத்து ஒரு பெருமூச்சு அவ்வளவுதான்.

 

மிகப்பிரமாண்டமாய் கலை நயத்துடன் கூடிய ஜோத்பூர் அரண்மனை மிகப்பெரிய தாங்கும் விடுதியாக உரு மாறியிருக்கிறது.- கலை நயம், அழகு, பழமை சற்றும் சிதையாமல் .அறைகளின் அளவு 500 முதல் 5000 சதுர அடி வரை !!–மீண்டும் ஒரு நீண்ட பெருமூச்சு.

 

உயரமான மலைமேல் கம்பீரமாய் நிற்கும் ஜோத்பூர் கோட்டை வாசலில் பெரிய தலைப்பாகயுடன் கலைஞர்கள்  நீண்ட இசைக்கருவிகள் வாசிப்பது

.உள்ளே உள்ள பழங்காலத்துப் பல்லக்குகள் இருக்கைகள் படுக்கைகள் உடைகள் எல்லாம் நம்மை மெய் மறக்கச் செய்து ஒரு கற்பனை உலகுக்கு அழைத்துச் செல்லும்.

 

அங்கு நாம்தான்(முடி சூடிய) மன்னர் .,

 

மிர்ச்சி போண்டா (மிளகாய் போண்டா) ராஜஸ்தானின் சிறப்பு உணவுகளில் ஓன்று. நம்மூர் மிளகாய் பச்சி போல் இருக்கும் என்று எண்ணி உணவு விடுதிக்காரர் விடுத்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது வாயில் போட்ட பிறகுதான் தெரிந்தது அது மிளகாயையே  அரைத்து அதில் சிறிதளவு மாவு சேர்த்து செய்யப்பட்ட ஒரு உருண்டை என்ற உண்மை. கண்ணில் தண்ணீர் நாக்கு வெளியே தள்ளி வேர்த்து விறு விறுத்து விட்டோம்..

 இதை எதிர் பார்த்த விடுதிக்காரர் எங்கள் மேசையில் நிறைய இனிப்புகள், பால் தண்ணீர் எல்லாம் வைத்திருந்தார்.

 

ராஜஸ்தான் சாப்பாடு(மீல்ஸ்) ஒரு நாள் சாப்பிட்டுப் பார்த்தோம். அதில் மண் உருண்டை போன்ற நிறம்,, திடம் எல்லாம் கொண்ட ஓன்று இருந்தது.. ஏற்கனவே மிளகாய் போண்டாவை சுவைத்தது நினைவுக்கு வர , அந்த உருண்டையை தொடாமலே விட்டு விட்டோம்.

 

ஜோத்பூரின் சிறப்புக்களில் ஓன்று சபாரி உடை. துணி நூறு ரூபாய், தையல் கட்டணம் நூறு ரூபாய் என்று மிக உயர்ந்த வகைத் துணிகளில் மிக நேர்த்தியாக தைக்கப்பட்ட சபாரி உடைகள் வெறும் இரு நூறு ரூபாய்க்கு.. மூன்று துண்டுகளாய் இருக்கும் அந்தத் துணியை அங்குள்ளவர்கள் மட்டும்தான் தைக்க முடியும். இன்று அளவு கொடுத்தால் நாளை சபாரி .

 

ஜோத்பூரின் நகரப் பேருந்துகள், சிற்றுந்துகள் இயக்குனர்கள் மிக மிக மனித நேயம் மிக்கவர்கள். நாம் எவ்வளவு தொலைவில் இருந்து கை காண்பித்தாலும் நம்மைப் பார்த்து விட்டால், வண்டி நிறைய கூட்டம் இருந்தாலும் காத்திருந்து நம்மை ஏற்றாமல் வண்டி நகராது.   

 

பாலைவனப் பகுதியான ஜல்சமேர் என்ற இடத்துக்கு தொடரி (தொடர் வண்டி) செல்கிறது. கடுமையான கோடைக் காலம் என்பதால் அங்கு போக முடியவில்லை.ஜெய்ப்பூர்,,உதய்பூர் சென்று வந்தோம். உதய்பூர் அரண்மனையைச சுற்றி இருக்கும் ஏரி. கோடையால் வரண்டு கிடந்தது.

 

தில்லி

ஹரியானா மாநிலத்தில்  ஹைலி மண்டி என்ற சிற்றூர் கிளையை ஆய்வு செய்ய வேண்டும்..அருகில் எங்கும் தங்குவதற்கு வசதியான நகரங்கள் இல்லை . எனவே தில்லியில் தங்கினோம்.

 

 காலை ஏழு மணிக்கு தில்லியில் தொடர் வண்டியைப் பிடித்தால் ஒன்பதரை மணியளவில் பட்டோடி சாலை  என்ற நிலையத்தை அடைவோம். பட்டோடி என்பது கிரிக்கெட் வீரர் பட்டோடி நவாபின்(ஷர்மிளா தாகூர்) சொந்த ஊர்.. அவருடைய பெரிய மாளிகை அங்கே இருக்கிறது.

 

பட்டோடிசாலையில் இருந்து மூன்று கி மி தூரத்தில் ஹைலி மண்டி கிளை ,நான் சென்ற வட மானில ஊர்களில்  சரியான உணவு கிடைக்காதது இந்த ஊரில்தான் .வங்கிக்கு அருகில் ஒரு உணவு விடுதி இருந்தது . அங்கு பாத்திரங்கள் தண்ணீர் எல்லாம் பாசி படர்ந்து பசுமையாக இருக்கும்.

 

எனவே தில்லியில் உள்ள ஒரு தமிழ் நாடு உணவு விடுதியில் காலைச் சிற்றுண்டியை முடித்து விட்டு அங்கேயே மதிய உணவுக்கும் இட்லி , தோசை வாங்கிச் செல்வோம்.

 

இந்த சிரமத்தையும் மீறி தில்லியில் தங்கிய ஒரு மாத காலமும் இனிமையாகவே இருந்தது.. மாலையில் ஒரு தொடர் வண்டியைப் பிடித்து அறைக்கு வந்து விடுவோம். சற்று நேர ஓய்வுக்குப்பின் நகரைச் சுற்றிப்பார்க்க கிளம்பி விடுவோம்.

 

இரவு அங்காடி தில்லின் சிறப்புக்களில் ஓன்று..தெருவின் ஓரத்தில் நடை மேடையில் விரிக்கப்படும் இந்த அங்காடியைச் சுற்றி வந்தால் நேரம் போவதே தெரியாது. வீட்டுத் தேவைக்கான அனைத்துப் பொருட்களும் மிக மலிவாகக் கிடைக்கும் . ஆனால் பேரம் பேச வேண்டும் .நாம் கேட்ட விலைக்கு கொடுத்து விட்டால் இன்னும் குறைத்துக் கேட்டிருக்கலாமே என்ற எண்ணம் தோன்றும்.

 

தில்லி செங்கோட்டை மைதானத்தில் ஞாயிறு தோறும் பழைய பொருட்கள் விற்பனை நடக்கும். . விலை உயர்ந்த சோபாக்கள் , பெரிய பூச்சாடிகள் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஆண் பெண் ஆடைகள் எல்லாம் மிக மலிவாகக் கிடைக்கும்.

 

ஒரு விடுமுறை நாளில் தாஜ் மகாலைப் பார்க்க ஆக்ரா போனோம். மிகவும் எதிர்பார்ப்புடன் போனதாலோ என்னவோ எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்தது தாஜ்மகால். அதை விட ஆக்ரா போகும் வழியில் பார்த்த அகபர் சமாதி அழகாக வடிவமைக்கப்பட்டது போல் தோன்றியது.

 

தில்லி குத்துப் மினார் ,பாலிகா பஜார் போன்ற இடங்களையும் சென்று பார்த்தோம்

 

லூதியானா பஞ்சாபின் முதன்மையான தொழில் நகரங்களில் ஓன்று. அங்குகூட தரமான உணவுப் பண்டங்கள் மலிவான விலையில் கிடைக்கும். தரைத்தளத்துக்கு கீழ் உள்ள ஒரு உணவு விடுதியில் நுழையும்போதே சுத்தமான நெய் வாசம் கமகமக்கும் . அங்கும் விலை மலிவாகவே இருக்கும்.

.

பாட்டா காலணி நிறுவனத்திற்கு டி ஷர்ட் தயாரித்துக் கொடுக்கும் ஆலைக்குப் போனோம். சந்தை விலையில் பாதி விலைக்கு டி.ஷர்ட் கொடுத்தார்கள்.

 

ஹரியானா மாநிலத்தில் உள்ள சிர்சா என்ற கிளையை ஆய்வு செய்யப்போனோம். அதன் அருகில் உள்ள ஒரு ஊரில் இரண்டு சிறப்புக்கள ஓன்று –மிகப்பெரிய பறவைகள் சரணாலயம். இரண்டு அந்த ஊரில் எவ்வளவு பெரிய சுமயுந்தையும் (லாரி) ஒரு மணி நேரத்துக்குள் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து அடையாளம் தெரியாத அளவுக்கு ஆக்கி விடுவார்கள்.

சில நிகழ்வுகள்,காட்சிகள் மனதில் பதிந்துள்ளன. ஆனால் ஊர் பெயர் நினைவிலில்லை :

 

வெந்நீர் ஊற்று ஒரு இடத்தில் இருந்தது. சிறிய குளம் போல் கட்டியிருந்ததில் பலபேர் குளித்துக் கொண்டிருந்தார்கள்...ஒரு மாதிரி சேறும் சகதியுமாக இருந்தது போல் தோன்றியது..

 

 தயக்கத்தை விட்டு உள்ளே இறங்கினால் அப்படி ஒரு சுகம்.. வெளியே  வர எண்ணமே வரவில்லை .

 

.இன்னொரு இடத்தில் மிக அழகாக வெள்ளை நிறத்தில் பூத்திருந்த சிறிய மலர்கள் கண் கொள்ளக் காட்சியாக இருந்தது .

 

ஆரஞ்சுத் தோட்டம் ஒன்றுக்குப் போயிருந்தோம்..மிகப் பெரிய பரப்பளவில் ஆரஞ்சுப் பழம் கொத்துக் கொத்தாய் தொங்கியது இது வரை நான் கண்டிராத அழகிய காட்சி.

 

மரங்களுக்கிடையில் பரண் போல் அமைத்து மிருதுவான மெத்தை தலையணைகள் திண்டுகளுடன் ஒரு பழுத்த முதியவர் அவ்வளவு சுகமாக அமர்ந்திருந்தார். வெளியே இருக்கும் குளிர் சிறிது கூட உள்ளே வராமல் ஒரு கதகதப்பு.

 

 வாழ்க்கையை ஆழ்ந்து உணர்வது , ஞான நிலை எல்லாம் இதுதானோ என்று எண்ணத் தோன்றியது. முதியவர் கையில் மதுக்கோப்பை வேறு. மது அருந்தும்படி என்னை மிக அன்பாக வற்புறுத்தினார்.. நான் இசுலாமியன் என்று சொன்னவுடன்தான் வற்புறுத்துவதை நிறுத்தினார். வற்புறுத்தியதற்கு வருத்தமும் தெரிவித்தார்.

 

ஒரு சிற்றூரில் மயில்கள் கூட்டம் கூட்டமாகத் திரிந்ததும் அவற்றில் பல தோகை விரித்து ஆடிய காட்சியும் இன்றும  கண்ணில் நிறைந்து நிற்கிறது..

 

ஜலந்தர் வாழ்க்கையில் விட்டுப்போன ஒரு சில செய்திகளைப் பார்ப்போம். முதலாவது நிக்குப் பூங்கா –மிக அழகான மிக நன்றாக பராமரிக்கபட்ட ஒரு பூங்கா . அவ்வப்போது குடும்பத்துடன் அங்கு செல்வோம்.. அங்கு சுடச்சுட கிடைக்கும் உருளைக்கிழங்கு டிக்கியும் , பிரட் பச்சியும் மிகச்சுவையாக இருக்கும். விலை மலிவாகத்தான் இருக்கும். நம்ம்மூர் போல் பூங்காவுக்குள் அதிக விலை என்பதெல்லாம் கிடையாது.

 

இரண்டாவது ஜலந்தர் வருமானவரித் துறையில் பெரிய பதவியில் இருந்த தமிழர் (பெயர் மறந்து விட்டது) கரீம் அண்ணனின் நண்பர். பதவிகேற்ற எந்த பந்தாவும் இல்லாத இனிய எளிய மனிதர்.

 

மூன்றாவது ஜலந்தர் மாடுகள்-மாடுகளுக்கு மின் விசிறி, குளிர் காற்று விசிறி ,குளிர் பதன அறைகள் என்று ராசஉபச்சாரம்

 

குளிர் காலத்தில் அழுத்தமான சாக்கு உடைகள் மாடுகள் குனியாமல் உணவு நீர் அருந்த ஏற்ற வசதிகள்

 

சென்ற பகுதி(ஜலந்தர் 1) பற்றிக் கருத்து ,பாராட்டுக்கள் தெரிவித்த அஜ்மல்,(நூர்)கான்,) அயுப்சாகுல் ,சகோதரிகள் மெஹராஜ் ஜோதி,சுராஜுக்கு நன்றி,

 

இ(க)டைச்செறுகல்

பஞ்சாப், ஹரியான என்ற இரண்டு மாநிலங்களுக்கு ஒரே தலை நகர் சண்டிகர் .

ஜம்மு காஷ்மீர் என்ற ஒரு மாநிலத்துக்கு இரண்டு தலை நகரங்கள்

ஸ்ரீநகர் , ஜம்மு. கோடை காலத்தில் ஸ்ரீநகர் குளிர் காலத்தில் ஜம்மு என்று வெள்ளையர் ஆட்சியில் தொடங்கிய நடை முறை இன்றும் தொடர்கிறது.

இறையருளால் பயணம் தொடரும்

வலை நூல் முகவரி

கூகிள் தேடுதலில் (Google search)          sherfuddinp.blogspot.com

 

வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 14.ஜலந்தர் (பஞ்சாப்) 2 ! !! !!! !!!!

என்ற தலைப்பில் 1006 2016 அன்று வெளியானது

 

இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்

 

28052023 ஞாயிறு

சர்புதீன் பீ

 

          

 

No comments:

Post a Comment