புதுப் பொலிவில்
.கடலூர்
07052023
வெள்ளப்பெருக்கின் தாக்கத்தை ,
தானே புயலின் கோர தாண்டவத்தை
மழை வெள்ளத்தின் கொடுமையை
பலரும் தனித்தனியே உணர்ந்திருப்பார்கள் .
ஆனால் இவை அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து சந்தித்தும் தளாராமல் ஆற்றங்கரை நாணல் போல் நிமிர்ந்து நிற்கும் பெருமை கடலூருக்கு உண்டு.
இது மட்டும் அல்ல .வரலாறு படித்தவர்களுக்குத் தெரியும்.- இந்தியாவின் தலை நகராய் முதலில் கல்கத்தா இருந்தது. பின்புதான் (புது) தில்லி தலை நகராய் உருவாக்கப்பட்டது.
அதே போல் வெள்ளையர் ஆட்சியில் தமிழ் நாட்டின் தலை நகராய் இருந்த பெருமை கடலூருக்கு உண்டு.
இன்றும் மாவட்ட ஆட்சியர் இல்லம் அமைந்திருப்பது ராபர்ட் கிளைவ் வாழ்ந்த, ஆண்ட இடம்தான்.
ஒரு பக்கம் கடல், ஒரு பக்கம் சிறிய மலை மற்ற இரு பக்கங்களிலும் நதிகள் என்று அழகிய இயற்கை அமைப்பில் அமைந்திருந்த ஊர் .
கடலூரின் வெள்ளிக்கடற்கரை சென்னை மெரீனா கடற்கரைக்கு அடுத்து அழாகான கடற்கரை..
ஆனால் இன்று எல்லாம் பழங்கதை ஆகி விட்டது. நதிகள் சாககடைகளாகி விட்டன .காற்று முழுக்க வேதிப்பொருள் கழிவுகளால் மாசு படிந்து விட்டது,
எங்கு பார்த்தாலும் குப்பை கூளங்கள், தெருவில் ஓடும் சாக்கடை நீர் மேடு பள்ளமான சாலைகள் ஒரு அமைப்பே இல்லாத பேருந்து நிலையம், தொடர் வண்டி நிலையம்.
பல நூறு கோடி ருபாய்களையும் பல உயிர்களையும் விழுங்கி பல ஆண்டுகள் தோண்டப்பட்ட பாதாள சாக்கடை எங்கே போயிற்று என்று தெரியவில்லை.
வாடிய பயிரைக்கண்டு வாடிய வள்ளலார் பெருமான் வன்முறைக்கும்பலால் தாக்கப்பட்டதும் இதே ஊரில்தான் .
என்ன இப்படி ஊரைப்பற்றி வர்ணனை நீண்டு கொண்டே போகிறது என்று எனக்கே தோன்றுகிறது. காரணம் இதுதான் –
இப்போது நான் இருப்பது கடலூரில்தான், வங்கிப்பணியில் மூன்று ஆண்டுகள் ,பிறகு நான்கு ஆண்டு இடைவெளிக்குப்பின் பணி மூப்பு பெற்று ஐந்து ஆண்டுகள் என எட்டு ஆண்டு வாழ்க்கையின் தாக்கம்.
சென்னையில் பணி புரிந்தபோது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட , கிட்டத்தட்ட கிடைத்தது போலவே உயர் அதிகாரிகளால் சொல்லப்பட்ட பதவி உயர்வு கிடைக்கவில்லை
(அதிகாரிகள் நல சங்கத்தின் முதன்மைபொறுப்பில் இருந்த ஒருவர் என் உயர்வைத் தடுத்தார் என சமீபத்தில் கேள்விப்பட்டது எனக்கு ஒரு அதிர்ச்சித் தகவல். அவர் பரிந்துரை செய்த சில கடன்களை நான் கொடுக்க மறுத்தது ஒரு காரணமாக இருக்கலாம்.)
மகன் பைசலுக்கு திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டது..அவர் இருப்பது கடலூரில்தான்.எனக்கும் சென்னை பரபரப்பு ஒத்து வரவில்லை. பதவி உயர்வு கிடைக்காத ஒரு சலிப்பு வேறு..
கடலூருக்கு மாறுதல் கிடைக்குமா என்று உயர் அதிகாரிகளிடம் கேட்டேன்.உலக மகா அதிசயமாக உடனே சரி என்று சொல்லிவிட்டார்கள் .பதவி உயர்வுக்குப் பதிலாக ஒரு ஆறுதல் பரிசு போல.
என்னில் உண்மையான அக்கறை கொண்ட உயர் அதிகாரிகளும் தோழர்களும் சென்னையை விட்டுப் போக வேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள், ஆனால் எனக்கு என்னமோ சென்னை வங்கி வாழ்க்கை வேண்டாம் என்று தோன்றி விட்டது .
பைசலின் திருமணம் சென்னையில் நான் பணிபுரிந்தபோது நிச்சயிக்கப்பட்டது. ஆனால் திருமணம்நடைபெறுவதற்குள் நான் கடலூர் சென்று விட்டேன் கடலூர் கிளை சில மாதங்களாக மேலாளர் இன்றி இயங்கி வருகிறது எனவே நீங்கள் உடனே அங்கு சென்று பொறுப்பேற்க வேண்டும் என மேலிட ஆணை.
ஏற்கனவே பைசல் கடலூரில் இருந்த அறையில் நானும் தங்கிக்கொண்டேன். பேருந்து நிலையம்,வங்கி உணவு விடுதிகள் எல்லாம் அருகிலேயே இருந்தன,
திருமண வேலைகளுக்காக விடுப்பு எடுத்துக்கொண்டு பைசலும் நானும் பேருந்தில் சென்னை பயணித்து கோயம்பேட்டிலிருந்து தானியில் வீட்டுக்குப்போய் இறங்கினோம். சிறிது நேரம் கழித்து என் பெட்டியை தானியிலேயே விட்டது அறிந்து அதிர்ச்சி .
பெட்டியில் முதற்கட்ட வேலைகளுக்காக ஓரளவு பணம் (40,000 என நினைவு) இருந்தது. என்ன செய்வேதென்று புரியாமல் காவல் துறை அதிகாரியான என் மைத்துனர் சிராசுதீனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். வண்டி எண் தெரியாமல் கண்டு பிடிப்பது சிரமம், நான் முடிந்த வரை முயற்சி செய்கிறேன் என்றார்.. வண்டியில் போய் சுற்றும் முற்றும் பார்த்து வந்தேன். எங்கும் காணவில்லை.
மனம் சற்று சலிப்படைந்து இருக்கையில் வீட்டு வாசலில் தானிச்சத்தம் .போய்ப்பார்த்த எங்களுக்கு வியப்பும் மகிழ்ச்சியும்
தானி ஓட்டுனர் என் பெட்டியுடன் இறங்கி வந்தார். இறைவனின் கருணைக்கு மனம் நிறைந்த நன்றி பாராட்டிவிட்டு அந்த ஓட்டுனருக்கு நன்றி தெரிவித்தேன்,
பரிசாகக்கொடுத்த பணத்தை மறுத்து விட்டு தானி வாடகை மட்டும் பெற்றுக்கொண்டார்.
மனிதநேயம் இன்னும் மறைந்து போகவில்லை என்று எண்ணி மகிழ்ந்தோம்
மீண்டும் இறைவனுக்கு நன்றி தெரிவித்து விட்டு திருமண வேலைகளைத துவங்கினோம்..
திருமண அழைப்பிதல் மிகச் சிறப்பாக இருப்பதாய் பலரும் பாராட்டினர்
திருவாரூர் மல்லிகை மகாலில் திருமணம். தனிப் பேருந்து அமர்த்தி உறவினர்களுடன் பயணித்தோம். மதிய உணவு வசந்த பவனில் அழகாக தட்டுக்களில் வைத்து கட்டிக்கொடுத்தார்கள். சுவையும் சிறப்பாக இருந்தது .
பேருந்துக்கும் உணவுக்கும் சிறப்பாக ஏற்பாடு செய்தார் மைத்துனர் சிராசுதீன்(பணம் நான் கொடுத்து விட்டேன்)
நாங்கள் தங்க திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள செல்வி விடுதியில் ஏற்பாடு செய்திருந்தார்கள். இரவு உணவை திருமண மண்டபத்தில் முடித்து விட்டு விடுதிக்கு வந்தோம். நல்ல வசதியான விடுதி. காலை சிற்றுண்டியும் அங்கேயே சிறப்பாக அமைந்தது.
சில பல சிறிய குறைகளைத் தவிர்த்து திருமணம் இறைவனருளால் சிறப்பாக நடந்தேறியது..
கடலூர் வங்கிக்கிளையின் ஊழியர்கள் சிலரும் வாடிக்கையாளர் ஒருவரும் திருமணத்தில் கலந்து கொண்டனர். அவர்களிடம் சாப்பாடு சுவையாக இருந்ததா எனக் கேட்டேன். மணமகன் சார்பில் வந்திக்கிறோம் என்று சொன்னவுடன் விழுந்து விழுந்து உபசரித்தார்கள் அதிலேயே மனம் வயிறெல்லாம் நிரம்பி விட்டது என்றார்கள்.,
மாலை நலுங்கு, விளையாட்டுக்கள் எல்லாம் முடிந்து பைசலை மணமகள் இல்லத்தில் விட்டு விட்டு சென்னை புறப்பட்டோம். இரவு உணவும் மணமகள் வீட்டிலேயே ஏற்பாடு செய்திருந்தார்கள்.
சென்னையில் இருந்து புறப்படும் முன் ,ஒரு சிறிய குழப்பம் .ஜெமிலா குப்பியின் முதுமையினாலும் உடல் நலக்குறைவாலும் திருவாரூர் அழைத்துச்செல்வதில் ஒரு தயக்கம் இருந்தது.
குப்பிக்கு பேரன் திருமணத்தில் கலந்து கொள்வதில் மிக மிக ஆர்வம். நீண்ட தூரப் பயணம்.
அவர் மகளுக்கோ அழைத்துச்செல்ல விருப்பம் ஒரு பக்கம் அச்சம் ஒரு பக்கம். இறுதியாக அழைத்துச்செல்வது என முடிவு செய்தோம்.
திருவாரூரில் சற்று உடல் நிலை நலிவடைந்து மருத்துவ மனையில் சேர்த்து அதனால் பல மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டோம். .
அந்த வார இறுதியில் திருமண வரவேற்பு பெரம்பூர் குவீன் மகாலில் மிகச்சிறப்பாக
நிறைவேறியது,.சமையலில் வல்லவரான ஹயாத் பாய் செய்த பிரியாணியும் மற்ற உணவுகளும் மிகவும் சுவையாக இருந்ததாக பலரும் பாராட்டினர். வரவேற்பு நிகழ்ச்சிக்கு பெரம்பூர் வங்கிக்கிளையின் அணைத்து ஊழியர்களும் வந்ததார்கள்.
வங்கிப் பொது மேலாளர் திரு ஜார்ஜ் ஜோசப், துணைப் பொது மேலாளர் திரு சாய் நாத் இருவரும் வந்து சிறப்பித்தார்கள்.
சைவ அசைவ உணவு எல்லாமே மிகவும் சுவையாக இருந்ததோடு நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்திருந்ததாக எல்லோரும் பாராட்டினார்கள்..
ஒரு சிலர் மட்டும் தங்களை சரியாக கவனித்து உபசரிக்கவில்லை என்று குறைபட்டுக்கொண்டது மிகவும் வருத்தமளிப்பதாக இருந்தது.. ஒரு வேளை அவர்கள் மிகவும் தாமதமாக வந்து, அந்த நேரத்தில் நாங்கள் மிகவும் களைப்படைந்ததனால் இருக்கலாம்..எப்படியும் தவறு எங்களுடையதுதான்..
வரவேற்பு நிகழ்ச்சிக்கு சில நாட்கள் கழித்து கடலூருக்கு இடம் பெயர்ந்தோம்..
கடலூரில் மிக அழகான விசாலமான வசதியான வீடு.(மருமகன் சேக் சொல்லித்தான் வீட்டின் சிறப்பை நான் உணர்ந்தேன்.) வங்கிக் கிளையும் அருகிலேயே இருந்தது.
வங்கி மிகவும் வசதி குறைந்த ஒரு முதல் மாடியில் அமைந்திருந்தது .வெய்யில்வர வர கழிவு நீர் நாற்றம் மூக்கைத்துளைக்கும். கிளையை . வேறு இடத்திற்கு மாற்ற எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.
கடலூரில் இருக்கும்போதுதான் பேரன் (பர்வேஸ் அஹமத் ) திருவாரூரில் பிறந்தான். தொலைபேசியில் செய்தி கிடைத்த உடனே என் துணைவியும் நானும் திருவாரூர் புறப்பட்டுச் சென்றோம்.பேரன் சர்ரென்று சிறுநீர் கழித்தது இன்னும் நினைவில் நிற்கிறது.
பேரனைக் கொஞ்சுவதிலும் சீராட்டுவதிலும் கடலூர் வாழ்க்கை மிக இனிமையாகக் கடந்து சென்றது. அவனும் எங்களிடம் மிகவும் பாசமாக ஒட்டிக்கொள்வான்,
என் துணைவியும் நானும் ஹஜ் புனிதப் பயணம் சென்றதும் கடலூரிலிருந்துதான்.. (ஹஜ் பயணம் பற்றி இறைவன் நாடினால் தனியே எழுதுவேன் )
அலுவலகப் பணியில் மாவட்டக் காவல் அலுவலகம் சென்றபோது அங்கே சகோதரர் ஜனாப் ஜாபர் அலி இ.கா.ப. அவர்கள் கடலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியதன் நினைவாக அவருடைய ஒரு பெரிய புகைப்படம் சுவரில் மாட்டியிருந்தது கண்டு மிகவும் பெருமையாக இருந்தது.. ரஹ்மத் அலி அண்ணனும் கடலூரில் விவசாய அதிகாரியாகப் பணியாற்றியிருக்கிறது. அத்தா விழுப்புரத்தில் பணியாற்றியபோது மாவட்ட ஆட்சியர் மற்ற அதிகாரிகளைச சந்திக்க கடலூர் வருவதுண்டு.
அதற்குப் பல ஆண்டுகள் கழித்து விழுப்புரம் தனி மாவட்டமாக உருவாகி மாவட்டத் தலை நகர் நல்ல வளர்ச்சி அடைந்து விட்டது. கடலூர் அப்படியே இருக்கிறதா அல்லது தேய்ந்து வருகிறதா என்பது கேள்விக்குறி .
ஒரே ஒரு எடுத்துக்காட்டு..சென்னையிலிருந்து எலா மாவட்டத் தலை நகரங்களுக்கும் குளிர்பதன சொகுசுப் பேருந்து இயக்க அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால் அதில் சரியான சாலை வசதி இல்லையென்று கடலூர் தனித்து விடப்பட்டது
தங்கை சுராஜ் மகன் நௌஷாத் புது மனை புகு விழாவுக்காக சென்னை பூந்தமல்லி சென்றிருந்தேன், அப்போது சகோதரர் ஜனாப் ஜாபர் அலி என்னிடம் என்னப்பா கடலூரில் ஏதோ பெரிய பிரச்சனை என்று செய்தி வந்திருக்கிறது. என்னவென்று தெளிவாகத் தெரியவில்லை என்றார். உடனே வீட்டுக்குத் தொலைபேசியில் பேச முயற்சித்தேன்.எந்த அழைப்பும் போகவில்லை.
அன்றுதான் பல கடல்கரை நகரங்கப் புரட்டிப்போட்டு பல்லாயிரக்காண உயிர்களைகாவு வாங்கிய ஆழிப்பேரலை என்ற சுனாமி தாக்கிய தினம்.
சென்னையிலிருந்து திரும்பி வந்து குடும்பத்தினர் எந்த பாதிப்பும் இல்லாமல் இறையருளால் நலமாக இருப்பதைப்பார்த்த பின்தான் மனம் சாந்தியடைந்தது.
அலுவலர் ஒருவரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு கடற்கரைப்பகுதியான தாழங்குடா போன்ற சிற்றூர்களைப் போய்ப் பார்த்தேன். பனைமரங்கள் உச்சியில் கருகி நின்றன, ஆழிப்பேரலை அவ்வளவு உயரத்திற்கு பனை மரம் கருகும் அளவுக்கு வெப்பத்துடன் தாக்கியிருக்கிறது.
எங்கு பார்த்தாலும் வீடு வாசல் சுற்றங்களை இழந்தவார்களின் சோகக்கதறல்கள். உள்ளத்தைப் பிசைந்தான.
அரசு மருத்துவ மனைப்பக்கம் சென்றால் லாரி லாரியாக நூற்றுக்கணக்கில் சவங்கள் வந்து குவியும் கோரம்.
துப்புரவு ஊழியர் ஒருவர் மதுவின் மயக்கத்தில் வங்கிக்கு வந்தார். ஏன் இப்படிக்குடித்து உடம்பைக் கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில் ஏன் கேட்டோம் என்று ஆகி விட்டது. முழுதும் அழுகிய 15 உடல்களைப் புதைத்து விட்டு வருகிறேன். மதுவின் உதவி இல்லாவிட்டால் வாந்தியெடுத்து நான் சவமாயிருப்பேன் என்றார்.
வங்கியின் சார்பில் 1000 உணவுப்பொட்டலங்கள் தயாரித்து பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்க எடுத்துச் சென்றோம்.. ஒரு முரண்தொகையாக வீடு வாசல் இல்லாமல் மண்டபங்களில் தங்கியிருந்தவர்கள் கையில் விலை உயர்ந்த ஆடைகள், படுக்கை விரிப்புக்கள், பால் பொடி போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள். எங்கள் பொட்டலங்களை வாங்க ஆள் இல்லை.
ஊரை விட்டு வெகு தொலைவு சென்று உணவு கிடைக்காத இடங்களைத் தேடிப்பிடித்துக் கொடுத்து விட்டு மிச்சம் இருந்தவற்றை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்து வந்தோம்.
இதற்கு எதிர் மாறான நிகழ்வு அடுத்த ஆண்டு பெருக்கெடுத்த வெள்ளத்தில் .1000 உணவுப் பொட்டலங்களுடன் அரசு அதிகாரிகள் சொன்ன ஒரு மண்டபத்திற்குப் போனோம், அங்கு இருந்த சமூக ஆர்வலர்கள் பசியுடன் காத்திருந்தவர்ளுககு மிகத்துரித கதியில் உணைவை பகிர்ந்தளிக்க ஒரு 15 நிமிடங்களுக்குள் அனைவரும் சாப்பிட்டு முடித்து நன்றியுடன் பார்த்தனர். ஈத்துவக்கும் இன்பத்தை அன்றுதான் உணர்வு பூர்வமாகம அறிந்தேன்.
எதிர் பாராமல் ஒரு நாள் லியாகத் அலி அண்ணன் எங்கள் வீட்டுக்கு வந்தது.ஓரிரு நாள் தங்கி விட்டு பின் சென்னை திரும்பியது.(அக்கா ஜோதிக்கு தகவல் தெரிவித்ததால் கோபம்).
நாங்கள் கடலூரில் இருக்கும்போதே ஒரு நல்ல மழைக்காலத்தில் புனித ரம்சான் நோன்பு மாதத்தில் சென்னையில் லியாகத் அண்ணனின் உயிர் பிரிந்தது.
லியாகத் அண்ணனும் நானும் ஒரு வயது தோழர்கள் போல் பழகுவோம்.சில பல குறைகள் இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவர்களில் அவரும் ஒருவர். புறம் பேசாதது அவருடைய சிறப்பு குணங்களில் ஒன்று.நல்ல அறிவு, தலைமைப்பண்பு பேச்சுத்திறன் எல்லாம் ஒருங்கினைந்து மிகவும் எளிமையாகப் பழகும் குணம் உடையவர்,
கும்பகோணத்தில் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டு சென்னை திரும்பும் வழியில் முத்தலிப் அண்ணன் ஜென்னத் அக்கா வகாப் மூவரும் கடலூர் வந்து மதிய உணவு அருந்தி விட்டு மாலை புறப்பட்டுச் சென்றனர். கோடை வெப்பத்தில் மிகவும் சிரமப்பட்டனர். வஹாப் அவர்கள் காரில் குளிர் சாதனத்தை ஓட விட்டு காருக்குள் உட்கார்ந்து கொண்டார்.
கடலூர் புராணம் இதோடு போதும் என்று நினைக்கிறேன்.ஏதேனும் விட்டுப் போயிருந்தால் பின் ஒரு பகுதி எழுத எண்ணுகிறேன்/
பிரான் மலை பற்றி நிறையப்பேர் பாராட்டு தொலை பேசி, கட்செவி மூலமும் நேரிலும் தெரிவித்தார்கள். பாராட்டிய உடன் பிறப்புகள் மெஹராஜ் ஜோதி சுராஜ் சகா ,மற்றும் பாப்டி, ஷேக், ஷாகுல் ,,கிரசன்ட் ஷேக் ,ஹிதாயத் ,அஜ்மீர் அலி (கவிதை வடிவில் ) கலிபுல்லா , அஸ்மத்,, யுனிவர்சல் ஷாஜகான் அனைவருக்கும் நன்றி. பிரான் மலை எல்லோருக்கும் நன்கு தெரிந்த இடம் என்பதால் அது பற்றிய பகுதி அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது., ஷாகுல் மிக நீண்ட பயணம் என்று தெரிவித்தது இந்தத் தொடர் பற்றியா அல்லது பிரான் மலை பற்றியா என்பது தெளிவாக இல்லை.
கல்வி பற்றிய கருத்துக்கும் அனைவரும் வரவேற்பு தெரிவித்தனர். இறையருளால் விரைவில் கருத்து செயலாக உருவாகும். .
இ(க)டைச் செருகல்
பொதுவாக நான் ஆன்மீகம், மருத்துவம் பற்றி எழுதுவதில்லை .ஆனால் ஒரு சொற்பொழிவில் அத்தஹியாத் பற்றி என் காதில் விழுந்த விளக்கம் மிக அருமையாக இருந்ததாக எனக்குத்தோன்றியதால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
அத்தஹியாத் துவா மிராஜ் பயணத்தில் இறைவனுக்கும் இறை தூதருக்கும் இடையில் நடந்த ஒரு உரையாடல்
இறைவனை நோக்கி: இறைதூதர் :அத்தஹியாத்து , லில்லாஹி வஸ்ஸலவாத்து வத்தய்யிபாத்து
காணிக்கைகளும் வணக்கங்களும் வாழ்த்துக்களும் அல்லாஹு தஆலாவுக்கே உரியன.
இதற்கு இறைவன் கூறும் பதில் :அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹன் நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரகத்துஹு
நபியே தங்கள் மீது சலாம் என்னும் சாந்தியும் அல்லாவுடைய ரஹ்மத்தும் அவனுடைய புனிதமும் உண்டாவதாகுக
அதற்கு மனித குலத்தின் மாபெரும் வழிகாட்டி இறைவனை நோக்கி :அஸ்ஸலாமு அலய்னா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹின்
இன்னும் எங்கள் மீதும் உத்தமர்களான அல்லாவின் நல்லடியார்கள் மீதும் ஸலாம் எனும் சாந்தி உண்டாவதாக.
(அதாவது தனக்கு இறைவன் அளித்த சாந்தியை அல்லாவின் அடியார்கள் அனைவருக்கும் சொந்தமாக்கி விடுகிறார்கள் நபி(ஸல்) பெருமான் அவர்கள்)
இதைக்கண்டு வியப்பும் உவப்பும் அடைந்த வானவர்கள் ஒரே குரலில் :அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு வ அஷ்ஹதன் அப்துஹு வரஸுலுஹு
வணக்கத்துக்குரியவன் அல்லாவைத் தவிர வேறு யாரும் இல்லை.,மேலும் முகமது (நபி ஸல்) அவர்கள் அல்லாவுடைய நல்லடியாரும் திருத் தூதரும் ஆவார் என்று சான்று பகர்கிறார்கள்
பயணம் தொடரும்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்3
0705202ஞாயிறு
சர்புதீன் பீ
(22032016 அன்று வெளியிட்டதின் மறு பதிப்பு )
No comments:
Post a Comment