·
ஓய்வின் பலன்கள்
மரு கண்ணன் முருகேசன்
29052023
பணியில் சேர்ந்தவர் ஒய்வு பெறுவது என்பது
முன்னரே காலம் உறுதி செய்யப்பட்ட ஒரு நிகழ்வு
How
to retire gracefully என்பது ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஓன்று
குறிப்பாக வங்கி
ஓய்வூதியர்களுக்கு ஒரு பெரிய குறை –மிகக் குறைவான
ஓய்வூதியம் என்று
எனக்கென்னவோ அப்படித்
தெரியவில்லை
NLC போன்ற மிகப் பெரிய
பொதுத் துறை நிறுவனங்களில் ஓய்வூதியம் கிடையாது
ஓய்வின் பலன்கள் என்ற தலைப்பில்
மரு. கண்ணன் முருகேசன்
முகநூல் ஒன்னரைப்பக்க நாளேடு குழுவில் எழுதிய
பதிவை
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்
மருத்துவர் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் என
பல பெரிய பொறுப்புகள் வகித்து ஓய்வு பெற்றவர்
பணி ஓய்வுக்குப்பின் மருத்துவர்கள் கூட
பணியாற்றுவது தேவையற்றது என்பது அவர் கருத்து
படித்த படிப்பு , அனுபவம் வீணாகக் கூடாது என்று நினைத்தால் கட்டணமில்லா
மருத்துவ சேவை செய்யலாமே என்கிறார்
தான் படித்தது பல இடங்களில் பல பொறுப்புகளில் பணியாற்றியது , ஓய்வுக்குப்பின்
மேற்கொண்ட பயணங்கள் எல்லாம் [பற்றி எளிய இனிய தமிழில் எழுதி வருகிறார்
இவர் துணைவியும் மருத்துவர்
ஓய்வின் பலன்கள்
ஐம்பத்தைந்து வயதைத்
தாண்டியவர்கள் சந்திக்கும்போது,
பேசிக் கொள்ளும் ஒரு சங்கதி என்னவென்றால், அது
பெரும்பாலும் அவர்களது பணி ஓய்வுக்குப் பின் கிடைக்கும் பணவரவு எந்த முறையில்
கிடைக்கும் என்பதைப் பற்றித்தான்.
ஓய்வு ஊதியம் (pension), கருணைத் தொகை (gratuity), வருங்கால வைப்பு நிதி (provident fund), பங்குச்
சந்தை நிலவரம் (Share market), பரஸ்பர நிதி (mutual
fund), வங்கி வைப்பு நிதி (Fixed deposit), ஆயுள்
காப்பீடு (Life insurance) மருத்துவக் காப்பீடு (medical
insurance), என்று இவற்றைப் பற்றி அதிகம் பேசிக் கவலைப்படவே அதிக
வாய்ப்புள்ளது.
ஓய்வு நாள் நெருங்க நெருங்க, நாள் தோறும் ஓடி ஓடி உழைத்த
வாழ்க்கை, இனிமேல் எப்படி நகரும் என்ற ஒருவித அச்சம் மனதில்
தோன்றுவது இயற்கை.
கண்ணதாசன் அவர்கள்
சொன்ன ஒரு விளக்கம் எனக்கு நினைவுக்கு வருகிறது. ‘Retired’ என்றால் என்ன அர்த்தம் என்ற வினாவுக்கு,
‘மனிதன் தனது இள வயதில் உழைப்புக்காக ஓடத் தொடங்குகிறான். நாற்பது
வயதானதும் ‘tired’ ஆகிறான். இருப்பினும் இன்னும் பல
பொறுப்புகள் உள்ளதே, என்ற கவலையில் மீண்டும் ஓடத்
தொடங்குகிறான். பின்னர் அறுபது வயதில் ‘re tired’ ஆகிறான்’
என்று நகைச்சுவையான விளக்கம் தந்தார். ஒருவிதத்தில் அது உண்மைதான்.
நாற்பது வயதில் ஒருவருக்கு, பள்ளி அல்லது கல்லூரி படிக்கும்
மகனோ, மகளோ இருக்க வாய்ப்புண்டு. அவர்களது கல்வி, வேலை, பின்னர் திருமணம் என்று ஏற்பாடு செய்ய
உழைத்தாக வேண்டும். அது அறுபது வயதுக்குள் நிறைவேறிய பின் ஏற்படும் சோர்வு (tiredness)
சொல்லி மாளாது.
நம்ம ஊரில்தான் இந்தப்
பிரச்னை. பல அயல் நாடுகளில்,
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பள்ளிப் படிப்பு வரைதான் உதவுகிறார்கள்.
அவர்களுக்குப் பதினேழு வயதானதும், தானாகவே பெற்றோரை விட்டு
வெளியேறி விடுகிறார்கள். அதற்குப் பின் அவர்கள் பெற்றோருடன் இருப்பது அங்கு
கேவலமாகப் பார்க்கப்படுகிறது. கல்லூரிப் படிப்பு, அங்கு பல
பேருக்கு நிறைவேறாத ஆசை. வங்கி உதவித் தொகையாலோ அல்லது வேலை செய்தோதான்
மேற்படிப்புக்குப் பலர் செல்கின்றனர். எல்லாவற்றிலும் மேலை நாடுகளைக்
காப்பியடிக்கும் நம் இளைய தலைமுறை, இதில் மட்டும் பெற்றோரைச்
சார்ந்திருப்பது பலருக்கு வேதனைதான்.
இன்றைக்கும், இந்தியாவில் ஒரு நடுத்தர வர்க்க
மனிதரின் சராசரி வாழ்வில், ‘ஒரு வாகனம், ஒரு வீடு, வீட்டு வசதிப் பொருட்கள், ஓரளவு நகை மற்றும் சேமிப்பு தேவை’ என்ற பல்லவிதான் அதிகம் கேட்கும். கணவன்
மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால்தான் அறுபது வயதுக்குள் இந்த ஆசைகள் நிறைவேற
வாய்ப்பு. (நான் கூறுவது ஒழுங்காக ஊதியம் மட்டுமே பெற்று வாழ்வு நடத்தும் மக்களைப்
பற்றி). ஆனால் நமது மக்கள் ஓய்வுக்குப்பின் சும்மா இருப்பார்கள் என்று
நினைக்கிறீர்களா? பெரும்பாலானவர்கள் அவ்வாறு இல்லையென்பது
எனது ஆய்வில் நான் கண்ட உண்மை. ‘கைகால்கள் நன்றாகத்தானே உள்ளது. ஏன் வீட்டில்
முடங்க வேண்டும்? வேலை செய்தா, அல்லது
ஏதேனும் சிறிய தொழில் தொடங்கினால் வருமானம் வரும். அதை வைத்து பேரன் பேத்திகளுக்கு
ஏதாவது செய்யலாமே’ என்று ஆசைப்படுபவர்கள் பலர்.
ஏராளமான மருத்துவர்கள்
தங்கள் இறுதிக் காலம் வரை மருத்துவம் பார்ப்பதைக் கண்டிருக்கிறேன். கேட்டால், என் அறிவும், திறமையும் வீணாகப் போவதில் விருப்பமில்லை என்ற பதில் வரும். எனது
பேராசிரியர்கள் பலர் தொண்ணூறு வயதிலும் மருத்துவம் பார்த்து சம்பாதித்தனர்.
இலவசமாக மருத்துவம் பார்க்க ஒருவருக்கும் விருப்பமில்லை. இதில் எனக்கு உடன்பாடில்லை.
பழைய மனிதர்கள் ஒதுங்கிக்கொண்டு புதியவர்களுக்கு வழி விட்டால்தான், அவர்களுக்கும் அனுபவமும், பொருளும் கிடைக்கும்.
புதியவர்களின் திறமையும் அறிவும் உலகுக்குத் தெரிய வரும். ஒருவர் நன்றாக
விளையாடுகிறார் என்பதற்காக, அவரை வாழ்நாள் முழுதும் விளையாட
விடாமல், புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் விளையாட்டுத் துறை
போல் எல்லோரும் இருப்பது நல்லது. எனவேதான் நான் என் பணியிலிருந்து முற்றிலுமாக
ஓய்வு பெற்றேன்.
வரும் தலைமுறைகளுக்கும்
சேர்த்து, சொத்துகள்
சேர்க்கும் மக்கள், ‘உழைத்துதான் அதை ஈட்ட வேண்டும்’ என்ற
நல்ல தாரக மந்திரத்தை, இளைய தலைமுறையினருக்கு சொல்லித் தர
மறுக்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உழைக்காமல் கிடைக்கும் எதன்
மீதும் மக்களுக்கு மதிப்பிருக்காது. இது போன்ற இலவச சொத்துக்கள், மனிதனை சோம்பேறியாக்கிப் பல வேண்டாத தீய வழிகளை நாடத் தூண்டும் என்பதை
மக்கள், குறிப்பாக அரசியல்வாதிகள் உணர்வதில்லை.
பின்னர் அறுபது
வயதுக்கு மேல் நேரத்தை எப்படித்தான் கழிப்பது என்ற கேள்விக்கு விடையை, அவரவர் வாழ்க்கை
முறையிலிருந்துதான் அவரவர் பெற வேண்டும். ஒன்று நிச்சயம். ஒரு மனிதன் வாழ்நாள்
முழுதும் குடும்பம், பிள்ளைகள், உடன்
பிறந்தோர் என்று பிறருக்காகவே வாழ்வது வழக்கமான நிகழ்வு. கடமைகள் முடிந்த, அறுபதுக்கு மேல்தான் ஒருவர் தனக்காக வாழும் வாழ்வு தொடங்குகிறது.
அப்போதாவது தனக்குப் பிடித்த வாழ்வை வாழ முயற்சிப்பதே சிறப்பு. நிறைவேற முடியாத
சில கனவுகளை நிறைவேற்ற முயற்சிக்கலாம். புது கலை ஏதேனும் கற்றுக் கொள்ளலாம். எனது
துணைவியார் அறுபது வயதுக்கு மேல் கற்றுக்கொண்ட க்ரோஷே (crochet) கலை இப்போது அவருக்குக் கை கொடுக்கிறது. எனது நெடுநாள் ஆசையில் ஒன்றான
எழுதும் எண்ணம் எனக்கு வந்ததும் அவ்வண்ணமே. செலவுகள் குறைவாக இருக்கும் இந்தப்
பருவத்தில் தேவைகளும் குறைந்து விடும். ‘உண்பது நாழி; உடுப்பது
இரண்டே’ என்ற தத்துவம் புரியும் நேரம்.
எனவே சேமிப்பிலோ அல்லது
ஓய்வூதியத்திலோ குடும்பம் நடத்துவது அவ்வளவு சிரமமாக இருக்காது. ஒரு அரை
விழுக்காடு வட்டி கூட வருகிறதென்று வங்கிகளுக்கு மாறி மாறி வீணே அலைவதோ, அல்லது அதிகவட்டி தருகிறோம்
என்னும் நிறுவனங்களை நம்பி வீட்டில் பூச்சி போல அவர்களிடம் சென்று ஏமாந்து
விட்டுப் பின் புலம்புவதோ ஆகாது. நிம்மதியாக, இந்த உலகை ஒரு
புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்கலாம். பிடித்தவற்றை பிடித்த முறையில்
செய்யலாம். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற அபத்தமான சிந்தனையை மறந்து
வாழலாம். நமக்குக்கிடைத்த வாழ்வு நிறைவானதே என்று திருப்திப்படலாம். போகும்போது
சிரித்த முகத்துடன் விடைபெறலாம்
இறைவன் நாடினால் மீண்டும் சிந்திப்போம்
290520 23 திங்கள்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment