Tuesday, 10 October 2023

புதுப் பொலிவில்----------- திருநெல்வேலி 2 வா வங்கி அனுபவங்களும் 27. 111023 புதன்

 



புதுப் பொலிவில்-----------

திருநெல்வேலி 2 வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும் 27.
111023 புதன்
( 10 09 2016 அன்ற பதிவு செய்யப்பட்டது )
திருநெல்வேலி 2 வாழ்க்கைப்பயணமும் வங்கி அனுபவங்களும்
கூலக்கடைத்தெரு வீடு எனக்குப்பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த முடுக்கு , நெருக்கமான வீடுகள் எல்லாம் ஏதோ மூச்சு முட்டுவது போல் உணர்வு. அது அங்கிருக்கும்போது தெரியவில்லை
.
குறுக்குதுறை வீட்டிற்கு போன பின்புதான் அந்த மாற்றம் தெளிவாகத் தெரிந்தது .குறுக்குதுறை வீடு எனக்கு மிகவும் பிடிக்கும்
வழியெங்கும் மருத மரங்கள். சாலையின் இரு பக்கமும் வயல் வெளி..
வீட்டின் பின்புறம் நெல் பயிர் செய்யும் அளவுக்கு பெரிய தோட்டம்
வீட்டின் ஒருபுறம் சிமெண்ட் தளம் அமைந்த பெரிய திறந்த வெளி..அதில் வலை போட்டு மூடப்பட்ட கிணறு, குளியல் கழிவறைகள் ,தண்ணீர்க்குழாய் .அந்தத் திறந்த வெளியில் நல்ல காற்றோட்டம்
.அதற்கெல்லாம் மேல் வீட்டை ஒட்டி மிகபெரிய நீர் நிலைகள் போல் தண்ணீர் தொட்டிகளுடன் நீர் சுத்தகரிப்பு நிலையம் அதில் அமைந்த அழகிய செடிகள் மரங்கள் .இயற்கையாக வளர்ந்த புல் வெளிகள்.ஒரு சிறிய காடு போல நீர்த்தேக்கங்கள் கரைகளில் மரங்களில் ,தூக்கணாங் குருவிக்கூடுகள் என்று இயற்கை எழில் கொஞ்சும்
இப்படி ஒரு கனவு இல்லத்தில் வசிக்கும் யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது இப்போது எண்ணி எண்ணிப் பெருமிதம் கொண்டு அந்த இறைவனுக்கு நன்றி சொல்ல வைக்கிறது.
முடியாதவற்றை முடித்துக் காண்பித்த பெருமை அத்தாவுக்கு
நடக்கும் தொலைவில் ஆற்றங்கரை .எப்போதாவது எட்டிப்பார்க்கும் எட்டாம் எண் நகரப்பேருந்து.
.போக்குவரத்து நெரிசல் கிடையாது.
மிதி வண்டி இருந்ததால் எனக்கு எங்கு போவதும் எளிதாக இருந்தது. மிக வேகமாக , சளைக்காமல் மிதி வண்டி ஓட்டுவேன்.
ஆனால் பள்ளிக்கு தினமும் நடைதான்
குறுக்குத்துறை வாழ்வும் இரண்டு பகுதியாய் அமைந்தது. கூலக்கடை வீட்டில் இருந்து குறுக்குத்துறை போனது ஓன்று.
அடுத்து நெல்லையிலிருந்து பொள்ளாச்சி ,வேலூர் போய் வேலூரிலிருந்து நெல்லை குறுக்குத்துறை வீட்டுக்குப் போனது.
இரண்டையும் கலந்தே எழுதுகின்றேன்.
இரண்டாம் முறை குறுக்குத்துறை அம்மா, பணி மூப்புப்பெறும் காலம் நெருங்கி விட்டதால் அந்த வீட்டுக்குப் போக வேண்டாம் .வாடகைக்கு வேறு வீடு பார்த்துப் போகலாம் என்று சொன்னது..(தீர்க்க தரிசனம் )
வீட்டுக்கு எதிரே ஒரு உழைக்கும் குடும்பம் .அந்த வீட்டு மூதாட்டி அம்மாவிடம் வந்து அடிக்கடி பேசிகொண்டிருக்கும். எளிய மனிதர்களிடம் இயல்பாக நட்புடன் பழகுவது அம்மாவின் சிறப்பு குணம்.
அரைக்கால் படி பருப்பு போட்டு என் மருமகள் சாம்பார் வைத்தது என்று பெருமை பேசும் அந்த மூதாட்டி ( அவர்கள் வீட்டில் பதினைந்து பேருக்குக் குறையாமல் இருப்பார்கள்)
நாகலிங்கப்பூ – பேருக்கேற்றாற்போல் ஒரு லிங்கத்தின் மேல் நாகம் படமெடுத்து நிற்பது போல் சிவப்பு நிறத்தில் ஒரு மயக்கம் தரும் மணத்துடன் அழகாக இருக்கும் .இந்தப்பூவை தினமும் ஒருவர் கொண்டு வந்து வீட்டில் வைத்து விட்டுப் போவார்
வீட்டில் மாடு, செம்மறி ஆடு, வெள்ளாடு,நிறைய கோழிகள் வளர்த்தோம்..முயல் கூட வாங்கிப் பார்த்து அது தரையெங்கும் பள்ளம் பறித்தால் விற்று விட்டதாய் ஒரூ ம(ய)ங்கிய நினவு .
கோழிக்கூடு ஒரு பெரிய படுக்கை அறை அளவுக்கு வலை அடித்து இருக்கும்.
வெள்ளாடு போட்ட குட்டிகளுக்கு கொடுக்கும் அளவுக்குப் தாய் ஆட்டிடம் பால் இல்லாததால் மாட்டுப்பாலை புகட்டும் புட்டியில் ஊற்றி ஒரு குட்டிக்குக் கொடுப்போம். ஒரே உறிஞ்சில் குடித்து விடும். .
செம்மறி ஆடு விலைக்கு விற்று அதன் கறியில் ஒரு பகுதியை வீட்டுக்கு வந்தது .கறி மிகப் பக்குவமாக இருந்தது. உடனே பிரியாணி செய்து சாப்பிட்டோம்.
பொள்ளாச்சிக்குப் பிறகு குறுக்குத்துறையில் இருக்கையில் சாகுல் எங்களுடன் இருந்தான். அங்கிருந்து ஆரம்பப் பள்ளி சென்று வந்தான். பள்ளியைச் சேர்ந்த நகராட்சி ஊழியர், தினமும் மிதி வண்டியில் பள்ளிக்கு அழைத்துச் சென்று, வீட்டில் கொண்டு வந்து விடுவார்.
ஷாகுல் நன்றாகப் படிப்பான்.
ராப்பாடச் சீட்டு என்ற வழக்கம் அப்போது நெல்லையில் நடை முறையில் இருந்தது. ஆரம்பப் பள்ளி மாணர்கள் தினமும் இரவில் பாடம் படித்ததாக வீட்டில் இருந்து எழுதி வாங்கி வர வேண்டும். இதுதான் ராப்பாடச் சீட்டு.
சக்ரவர்த்தியும் எங்களுடன் இருந்தார். சாப்டர் பள்ளியில் வேறு பிரிவு என நினவு.
கூட்டில் அடைக்கப்பட்ட பறவை போல் உணர்ந்தார்.
அத்தா நெல்லையில் பணியாற்றியபோது தூத்துக்குடியில் பொறியர் முஸ்தபா அண்ணன்(சகர்பான் அக்கா ) பணி புரிந்தார்.. அவ்வப்போது இரு குடும்பங்களும் சந்தித்துக்கொள்ளும்,..
ஜாபர் அலி அண்ணன் ( ஐ பீ எஸ்) ) அவர்கள் மூலம் ஒப்புதல் பெற்று தூத்துக்குடி துறைமுகம் சென்றோம். அங்கு நின்ற கிரேக்க நாட்டு சரக்குக்கப்பல் ஒன்றின் உள்ளே போய் சுற்றிப் பார்த்தோம். கப்பல் தலைவர் அத்தாவுடன் பாந்தமாக உரையாடினார். அவர் துணைவி சற்று சிடுசிடுப்புடன் இருந்தார்,( இது நெல்லை வாழ்வின் எந்தப்பகுதியில் என்பதில் சிறு குழப்பம்,)
ரஹீம் அண்ணனுடன் ஒரு முறை நெல்லை தினத்தந்தி அலுவலகத்துக்குச் சென்றோம்.
அப்போது அடுத்த நாள் தலைப்புச் செய்தியான கீழ வெண்மணி படுகொலை அச்சாகிக் கொண்டு இருந்தது. –
கீழ வெண்மணி என்ற சிற்றூரில் வன்முறையாளர்களின் துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க ஆண்கள், பெண்கள் குழந்தைகள் என்று ஐம்பதுக்கு மேற்பட்டோர் (விவசாயத் தொழிலாளர்கள் ) ஒரு குடிசைக்குள் ஒளிந்தார்கள்.. குடிசைக்கு வெளியே பூட்டி தீ மூட்டியதில் அனைவரும் உயிரோடு கருகி உயிரிழந்தனர்
.இது நடந்தது நம் தமிழ் நாட்டில்தான் தஞ்சை மாவட்டம் நாகை அருகே..
இந்தியத் தலைமை அமைச்சர் திரு நேரு மறைந்தும் நாங்கள் குறுக்குத்துறையில் இருக்கும்போதுதான்.இந்த செய்தி கேட்டு அம்மா அழுதது.. “மாமியுமா அழுகிறார்கள் !” என்று வியப்புத் தெரிவித்தது ரகீம் அண்ணன்.
முத்தலிப் அண்ணனுடன் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று அங்குள்ள சிற்பங்களைப் பார்த்து ரசித்தோம்
மூன்று திருமணங்கள் மிகச் சிறப்பாக நிறைவேறியது இங்குதான்.
திருமண மண்டபம் கிடையாது, விடுதி அறைகள் கிடையாது.
அத்தா உள்ளூர் மக்களை திருமணத்திற்கு அழைக்கும் பாணியே தனி. அழைப்பிதழை நேரில் கொடுத்து ‘நீங்கள் எல்லாம் எங்கள் வீட்டுத் திருமணத்திற்கு வரமாட்டீர்கள் “ என்று சொல்லும்.
அழைப்புக் கிடைத்த அனைவரும் தவறாமல் வந்து விடுவார்கள் ஓன்று ஆணையர் பதவி இரண்டு அத்தாவின் பேச்சு வல்லமை மூன்றாவது இலக்கிய ரசனை. அதற்கெல்லாம் மேல் பாய் வீட்டு பிரியாணி
.
மேலப்பாளையத்தைச் சேர்ந்த ஒரு சமையல்காரர் மிகச் சுவையாக பிரியாணி செய்வார் அவர்தான் எல்லா மண விழாக்களுக்கும் சமையல் அவர் பெயர் சற்று வித்தியாசமாக இருக்கும்.- கொற(ர) அப்பாஸ் .(பெயர்க் காரணம் தெரியவில்லை )
வெளியூரிலிருந்து வரும் உற்றார் உறவினர் உட்பட யாரும் எந்தக் குறையும் சொன்னதில்லை .
இங்கு மட்டுமல்ல எங்குமே திருமண மண்டபம் பிடித்தது கிடையாது (ஜென்னத் அக்கா திருமணம் தவிர)
திருமணத்துக்கு சில மணி நேரம் முன்பு நிச்சயதார்த்தம் நடக்கும்.. பெரிய அளவில் ஏழாம் நாள் விருந்து நடைபெற்ற நினைவும் இல்லை .
சுல்தான் மாமா வீட்டிற்கும் எங்களுக்கும் அடிக்கடி போக்குவரத்து இருக்கும். அதே போல் கருத்தக்கிளி அண்ணன் குடும்பமும் தொடர்பிலேயே இருப்பார்கள்..
பீ.மு. மாமாவிடமிருந்து வாரம் ஒரு மடலுக்குக் குறையாமல் வரும்.கோடு போட்ட இளஞ்சிவப்பு நிறத் தாளில் கூட்டு எழுத்தில் எழுதும் (இந்தியன் தாத்தா எழுதவது போல்)
.கோந்து கடிதத்தில் பட்டு விடாமல் இருக்க உறைக்கும் கடிதத்துக்கும் இடையே ஒரு சிறிய தாள் வைக்கப்பட்டிருக்கும்.
நகராட்சி பெண் மருத்துவர் வள்ளி மிக எளிமையாக இருப்பார். அவ்வப்போது வீட்டுக்கு வருவார். இன்னொரு நகராட்சி மருத்துவர் உஷா , நூர் அக்காவுக்கு சுகவீனம் ஏற்பட்டபோது பலநாள் வந்து பார்த்தார்
இரண்டு சுகாதார ஆய்வாளர்கள் வீட்டுக்கு வருவார்கள் இருவர் பெயரும் இப்ராஹீம் என நினவு. அதில் ஒருவர் பணி நிமித்தமாக தூத்துக்குடி போனவர் நல்ல புது மீன் எங்களுக்காக வாங்கினார். அதை அடுத்த நாள் எங்கள் வீட்டுக்கு கொண்டுவர, அதற்குள் கெட்டுப்போய் விட்டது. குளிர் பெட்டி எல்லாம் கேள்விப்படாத ஓன்று.
செல்லிடப்பேசியிலும் கட்டணமில்லாமல் கட்செவியிலும் உலகம் முழுதும் நொடியில் தொடர்பு கொள்ள முடிகிறது இன்று.
அன்று நெல்லையில் இருந்து அடுத்துள்ள பாளையங்கோட்டைக்கு தொடர்பு கொள்ள அரை மணி நேரம் ஆகும்.
நெல்லை போன்ற பெரிய நகரங்களில் கூட கையால் இயங்கும் தொலைபேசி இணைப்பகங்கள் (மானுவல் எக்சேஞ்) இயங்கின. . தொலைபேசியில் எண் வட்டு (டயல் ) இருக்காது. கைப்பிடியை எடுத்துக் காதில் வைத்து பொறுமை இழக்காமல் காத்திருந்தால் நம்பர் ப்ளீஸ் என்று ஒரு குரல் கேட்கும். பாளையங்கோட்டை என்று நாம் சொலவேண்டும்.. அந்த இணைப்பகத் தொடர்புக்கு மீஎண்டும் காத்திருக்க வேண்டும். இதற்குள் தொடர்பு துண்டிக்கப்படாமல் இருந்தால் பாளையங்கோட்டை இணையபகத்தில் இருந்து நம்பர் ப்ளீஸ் என்ற ஒலி கேட்கும். நாம் எண்ணைச் சொல்லிவிட்டு மீண்டும் காத்திருக்கவேண்டும்.
தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டால் மீண்டும் முதலில் இருந்து துவங்க வேண்டும்.
வெளியூருக்குப் பேச வேண்டும் என்றால் நம்பர் ப்ளீஸ் குரல் கேட்டவுடன் ட்ரங்க் புக்கிங் என்று சொலவேண்டும் . அந்தத் தொடர்பு கிடைத்ததும் நம் எண்ணைத் தெரிவிக்கவேண்டும். தொடர்பு துண்டிக்கப்பட்டு அங்கிருந்து திரும்ப அழைப்பு வரும். எந்த ஊருக்கு எந்த எண்ணில் பேச வேண்டும் என்று நாம் சொன்னவுடன் நமது வரிசை எண்ணைச் சொல்வார்கள். தொடர்பு கிடைத்ததும் திரும்ப அழைப்பார்கள்..பெரும்பாலும் ஒரு மணி நேரத்துக்குள் கிடைத்து விடும். சில நேரங்களில் கிடைக்காமலும் போகலாம்.
என்ன தலை சுற்றி மயக்கம் வருவது போல் இருக்கிறதா?
அதற்காக உலகம் இயங்குவது நின்றுவிடவில்லை .வணிகம் ,பொருளாதாரம், அரசு அமைப்பு எதுவும் முடங்கிப்போகவில்லை. எந்தத் தகவல் பரிமாற்றமும் நடக்காமல் இல்லை
வானொலியில் அத்தா ஈகைத்திருநாள் பற்றி உரையாற்றியதும் நெல்லையில்தான்.. அது போக நிறைய இலக்கியக் கூட்டங்கள் .
ஒருநாள் இரவு வீட்டில் தொலைபேசி ஒலிக்க , நான் எடுத்தேன். நகராட்சி ஊழியர் ஒருவர் தன் மகளுக்கு பேறுகாலத்திற்காக தனியார் மருத்துவ மனையில் சேர்க்க நகராட்சி ஆம்புலன்ஸ் வண்டி வேண்டும், தனியார் ஆம்புலன்ஸ் பிடிக்கும் அளவுக்கு தனக்கு வசதி இல்லை என்று கெஞ்சும் குரலில் பேசினார்,
அத்தாவிடம் இந்த செய்தியைத் தெரிவித்தேன். “ தனியார் மருத்துவ மனைக்குச் செல்லும் அளவுக்கு வசதி படைத்தவருக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றும் பெரிய செலவில்லை “ என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்து விட்டது . .
.குறுக்குத்துறை வீடு நெல்லை நகருக்கும் சந்திப்புக்கும் இடையில் தனிமையில் இருந்தது. எனவே இரவும் பகலும் நகராட்சி ஊழியர்கள் வீட்டில் இருப்பார்கள் .குப்புசாமி , முத்துசாமி, வீரபாகு , பிச்சாண்டி , சங்கர் ,ராமையா இவர்களில் யாரவது ஒருவர் மாறி மாறி இருப்பார்கள்
முத்துசாமி விவரமாகவும் வினயமாகவும் இருப்பார். சங்கர் திறமையாக செயல்படுவார்.
ஷஹா குறிப்பிட்டிருந்த குப்புசாமி ஒரு நகைச்சுவைப் பாத்திரம். அப்பாவி, அப்பிராணி.அவர் வாங்கி அவரும் காய்கறிகள் எல்லாம் முற்றல், பழையதாக இருக்கும். திருப்பி விட்டால் அதை அவர் தன் வீட்டில் கொண்டு போய் கொடுத்து விட்டு தன் சொந்தக்காசில் வேறு காய்கறி வாங்கி வருவார்.
. ஒரு முறை மாலை நேரத்தில் வரும் அத்தாவின் நண்பர்களுக்கு தேநீரோடு சமோசா வைக்க வாங்கி வரப்போன குப்புசாமி சமோசாவுக்குப் பதிலாக பிரியாணி வாங்கி வந்தார் (கறி சமோசா நெல்லையின் மற்றொரு சிறப்பு உணவு)
பல்ப் மாட்டுவதற்காக நாற்காலியில் ஏறி வெகு நேரம் நின்றவர் அத்தா ஒரு அதட்டுப் போட்டதும் “ எனக்கு இது பற்றித் தெரியாது” என்று சொல்லி இறங்கி விட்டார்.
இதன் உச்சகட்டம்தான் சஹா சொன்ன நிகழ்வு.
.நெல்லை அரைத்து பச்சை அரிசி புழுங்கல் அரிசி தனித்தனி மூட்டையாக வண்டியில் வந்து இறங்கியதை ஒரு நொடியில் கலந்து தரையில் பரப்பி விட்டார்
தவறு செய்து விட்டு திட்டினால் முகத்தைப் பரிதாமாக வைத்துக்கொண்டு முழிப்பார்.
சக்கரவர்த்தி வீட்டு ஊழியர்களிடம் மிக நெருக்கமாக இருப்பார்.
ஒரு முறை அஜ்மல் வந்திருந்தார். சில நாட்கள் தங்கி விட்டு கருத்தக்கிளி அண்ணன் வீட்டுக்குப் புறப்பட்டார். நானும் அவருடன் போனேன்.
பொங்கல் நேரம் என நினவு. கரும்பை எடுத்துகொண்டு ஆற்று மணல் வழியே நடந்தே பாளையங்கோட்டையில் கருத்தக்கிளி அண்ணன் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். பேசிக்கொண்டே போனதில் தூரம் தெரியவில்லை. ஆனால் கரும்பைக் கொண்டு போனது இருவருக்கும் கை வெகு நேரம் நடுங்கிக்கொண்டே இருந்தது
அக்காமார் வரும்போது அண்ணன் மார்களின் தேவைகளைக் கவனித்து சேவை செய்வது என் பொறுப்பு. பீரண்ணன் அதிகம் வந்த நினவு இல்லை.
முஸ்தபா அண்ணன், லியாகத் அலி அண்ணன் மிக நட்போடு பழகுவார்கள். கரீம் அண்ணன், முத்தலிப் அண்ணன் ரஹீம் அண்ணன்களிடம் கற்றுக்கொண்டவை பற்றி கோவை பகுதியில் எழுதியருக்கிறேன்
ரஹீம் அண்ணன்தான் எனக்குத் தொழுகக்கற்றுகொடுத்தது குறுக்குத்துறையில்.. அதனால் நெடுங்காலமாக ஷாபி முறையிலேயே தொழுது வந்தேன். .
குறுக்குதுறையில் இருக்கும்போதுதான் அத்தா பணி மூப்புப் பெற்றது. பேட்டையில் ஒரு வீடு வாடகைக்குப் பிடித்துப்போனோம். அழகான புதிய சிறிய வீடு.. ஆடு கோழிக்கெல்லாம் அங்கு இடம் இல்லை . மாட்டை மட்டும் கொண்டு போனோம்.
. முழுமையாக எழுதிய மன நிறைவு இல்லைஎன்றாலும் நெல்லை இரண்டாம் பகுதியை இத்துடன் நிறைவு செய்கிறேன்..
சென்ற பகுதி பற்றி கருத்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்த யுனிவர்சல ஷாஜஹான், ஷ்ஹா, நெய்வேலி ராஜா, பாப்டி, இதயத் சுராஜ் அனைவருக்கும் நன்றி.
முஸ்தபா அண்ணன் கனரா வங்கி வீ. கே .புரத்தில் வேலைக்குச் சேர்ந்தது, கல்லிடைக்குறிச்சி அல்ல என்று ஷாஜஹான் தெரிவித்திருந்தார்..
சஹாவின் நினைவில்
:அத்தாவின் படுககையில் பாம்பு படமெடுத்து நின்றது,, அக்காமார்கள் திருமணத்தில் கைவலிக்க மாப்பிள்ளைகளுக்க்கு விசிறியால் வீசியது, வயல்வெளியில் ரஹீம் அண்ணன் அல்ஹம்து சூரா சொல்லிக்கொடுத்தது, குற்றாலத்தில் சுல்தான் மாமாவுக்கு முடியாமல் வர, அத்தா மிக வேகமாக் கார் ஒட்டி தென்காசியில் மருத்துவரிடம் போனது. குப்புசாமியின் சர்தார்ஜி ஜோக்ஸ் போன்ற செயல்கள் .அத்தா பள்ளிப்பெட்டி செய்து கொடுத்தது
நெய்வேலி ராஜா –
பேட்டையில் அகலமான அம்மா வந்ததை ஷஹா நக்கலாக கதவு நிலையை நகட்டி வையுங்கள் என்று சொன்னது கழிவறை குழியைப்பார்த்து அஞ்சியது
இதயத் : நெல்லை நகர அமைப்பை நேரில் பார்த்தது போல் இருந்தது
சுராஜ் – குறுக்குதுறையில் எங்கோ ஒலிக்கும் விவசாயி, விவசாயி பாடலை அம்மா ரசித்துக் கேட்கும்.
மெஹராஜ்.அக்கா – நீண்ட ஒரு கருத்து வெளியிட்டுள்ளது. அது நெல்லை வாழ்வின் எல்லாப் பகுதிகளையும் அடக்கியதாக இருக்கிறது . எனவே அடுத்த பகுதியில் வெளியிடுகிறேன்,
இ(க)டைச்செருகல்
குறுக்குத்துறையில் நிறைய தூக்கணாங்குருவிக் கூடுகளைக் கண்டு வியந்து ரசித்ததுண்டு.
இந்தக்கூடுகள் ஒரு கட்டிடப் பொறியியல் அற்புதம் என்று சொல்வார்கள். ஒரு கூடு கட்ட இருபது நாளாகும். ஆண் குருவிதான் கூடு கட்டும்.,பெண் துணை கிடைத்த பிறகுதான் கூடு கட்டும்.
பாதி கட்டிய நிலையில் பெண் குருவியை அழைத்துக் கூட்டைக் காண்பிக்கும். பெண்ணுக்குப் பிடிக்காவிட்டால் கூட்டை மாற்றி அமைக்கும்.
கூடுகளுக்குள்ளே வெளிச்சத்துக்கு மின்மினிப் பூச்சிகளைப் பிடித்து குருவிகள் வைக்கும் எனக் கேள்வி
குட்டாவில் நிறைய மின்மினிப்பூச்சிகள் ஒளியடன் பறக்கும். காட்டின் இருளில் அவை பளிச்சென்று தெரியும்
மின்மினிப்பூச்சிகள் பற்றி சில செய்திகள்
மின்மினிப்பூச்சிகள் ஒளி ஒரு இயற்கை அற்புதம்,
மனிதன் எவ்வளோவோ முயற்சி செய்தும் இன்று வரை அந்த வெப்பம் இல்லாத ஒளியை உருவாக்க முடியவில்லை .
அந்த ஒளியின் வெப்பம் இரவு நேர வெப்பநிலையை விடக் குறைவாக இருக்கிறது
இறைவன் அருளால்
நெல்லைப்பயணம்
தொடரும்
11102023 புதன்
சர்புதீன் பீ
( 10 09 2016 அன்ற பதிவு செய்யப்பட்டது )
வலை நூல் முகவரி
கூகிள் தேடலில்

No comments:

Post a Comment