கதை சொல்லும் குரான் (சுசு 30)
கதை 1
எழுத்தும் படிப்பும்
கதைக்குள் போகும் முன்
எதையும் துவக்கு முன் குரானின் முதல் சூராஹ் அல் பாத்திஹா ஓதுவது வழக்கம்
‘எல்லாப்புகழும் அனைத்துலகிற்கும் உரிமையாளன் ஆகிய ஏக இறைவனுக்கே உரியதாகும் . அவன் மாபெருங் கருணையாளன் .இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி
உன்னையே நான் வணங்குகிறேன் உன்னிடமே உதவி கோருகிறேன்
எங்களுக்கு நீ நேர் வழி காண்பிப்பாயாக
எவர்களுக்கு நீ நேர்வழி காண்பித்தாயோ அந்த வழி
உன்கோபத்துக்கு ஆனவர்கள் நேர்வழி தவறியவர்கள் வழியல்ல”
(சுராஹ் 1:1 --7 )
இனி கதை
“ மிக நல்லவரான உங்களுக்கு இறைவன் ஒருநாளும் தீங்கிழைக்க மாட்டான்
உறவுகளைப் பேணுகின்றீர்கள் , உண்மையே பேசுகிறீர்கள் , வறியவருக்கு உதவுகிறீர்கள் , விருந்தோம்புகிறீர்கள் .
எனவே இறைவன் உங்களுக்கு நல்லதே செய்வான் அச்சம் தவிர்த்து அமைதியாக இருங்கள் “
அன்னை கதீஜா அவர்கள் , நபி பெருமானுக்கு சொன்ன ஆறுதல் மொழி இது
இப்படி ஆறுதல் சொல்லித் தேற்றும் அளவுக்கு என்ன நடந்தது ?
அன்னை கதீஜா அவர்களே இது பற்றி சொல்கிறார்கள் :
“நபி அவர்களுக்கு இறைஅருள் இறங்கப்போவதன் அறிகுறியாக அவர்கள் மிகவும் தனிமையை நாடத் துவங்கினார்கள்
ஹீரா மலைக் குகையில் நாள்கணக்கில் இறைவணக்கத்தில் ஈடுபடுவது, இடையில் வந்து உணவு தண்ணீர் எடுத்துக்கொண்டு போய் மீண்டும் இறைவணக்கத்தை தொடர்வது என்று இருந்தார்
இப்படி இறைவணக்கத்தில் இருக்கும்போது ஒருநாள்அவர் சிறிதும் எதிர்பார்க்காமல் திருமறை வசனம் – முதல் வசனம் இறங்கியது.
வானவர் தலைவர் நபியிடம்
“ஓதுவீராக “ என்றார்
இதற்கப்புறம் நபி அவர்களின் கூற்று
“எனக்கு ஓதத் தெரியாதே “நபி
உடனே வானவர் நபியை இறுக்கமாகக் கட்டிப்பிடித்து விட்டு மீண்டும்
“ஒதுவீராக “ என்கிறார் மீண்டும் தனக்கு ஓதத் தெரியாது என நபி சொல்ல் மீண்டும் கட்டிப்பிடித்து ஓதுவீராக “என வானவர் சொல்ல அடுத்து வானவர்
“உம்மைப் படைத்த இறைவனின் திருப்பெயரை ஓதுவீராக “ என்றார்
அச்சத்தில் நடுங்கிப்போய் நபி அவர்கள் அன்னை கதீஜாவிடம் சென்று அவர் சொன்னபடி அன்னை நபியை போர்வையால் போர்த்தி விட, ஓரளவு அச்சம் நீங்கி நபி தனக்கு ஏற்பட்ட நிகழ்வுகளை சொல்லி தன் உயிருக்கு ஏதேனும் தீங்கு நேருமோ என அஞ்சுவதாய்ச் சொல்கிரார
பைபிளை அரபு மொழியிலும் ஹீப்ரு மொழியிலும் எழுதிய மார்க்க அறிஞர் வாராக்கா என்பவர் அன்னை கதீஜாவின் உறவினர் . வயது முதிர்ந்த நிலையில் கண்பார்வை இழந்து இருக்கிறார் . அவரிடம் நபி பெருமானை அன்னை அழைத்துச் செல்ல , நபி தன் அனுபவங்களை அவரிடம் சொல்கிறார்
“இப்போது உங்களிடம் வந்தது இறைவனிடமிருந்து நபி மூஸாவிடம் வந்த அதே வானவர்தான்
இப்படி உங்களுக்கு நபித்துவம் அருளப்படும்போது நான் இளைஞகனாக இருந்திருந்தால் உங்களுக்குப் பக்க பலமாக இருந்திருபேன் .
உங்கள் சமுதாயம் உங்களைத் துரத்தி வெளியேற்றும்போது நான் உயிர் வாழ்வேனா என்பது தெரியாது “” என்று தெளிவாக்குகிறார்
“என் சமுதாயம் என்னைத் துரத்துமா?” எனக் கலக்கத்துடன் கேட்ட நபிக்கு
“ ஆம் ஏகஇறைவனின் செய்தியை மக்களுக்குக் கொண்டு வரும் யாரையும் சமுதாயம் பகையாகக் கருதி கடும் எதிர்ப்புத் தெரிவிக்கும் .நான் உயிரோடு இருந்தால் எனக்குள்ள சக்தி , அதிகாரத்தைப் பயன்படுத்தி உங்களுக்கு உதவுவேன் “ என்று சொன்ன வராக்கா சிறிது காலமே உயிர் வாழ்ந்தார்
“ ஓதுவீராக (நபியே)படைத்த உமது இறைவனின் திருப்பெயரால் ஓதுவீராக
உறைந்த ரத்தக் கட்டுயிலிருந்து மனிதனை அவன் படைத்தான்
ஓதுவீராக உங்கள் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன்
அவனே எழுதுகோலால் கற்றுக்கொடுத்தான்
மனிதனுக்கு அவன் அறியாதிருந்தவற்றை எல்லாம் கற்றுக் கொடுத்தான் “
சுராஹ் அல் அலக் (96 : 1- 5)
இவைதான் முதன் முதலில் அருளப்பட்ட குரான் வசனங்கள் .
படிப்பது ,எழுதுவது இவைதான் மனிதனை முழுமையாக்கும் என்று சொல்லி
எவ்வளவு அழகாக கல்வியின் மேன்மையை வலியுறு த்துகிறது குரான் !
அதுவும் முதல் சிலவசனங்களிலேயே
நபி எப்படி ஏக இறைக் கொள்கையை எடுத்துரைத்தார் , அவர் சந்தித்த இன்னல்கள் எதிர்ப்புகள் எவ்வளவு , எப்படி உயிர் பிழைக்க தன் சொந்த ஊரை விட்டே ஓடினார் இவை எல்லாம் நீண்ட வரலாறு
முதல் வசனங்கள் அருளப்பட்ட வரலாறை சுருக்கமாக சொல்லியிருக்கிறேன்
இதில் உள்ள சில செய்திகள்
நபி அவர்கள் தம்மீது இவ்வளவு பெரிய பொறுப்பை சுமத்தி இறை தூதர் ஆக்குவான் என்பதை அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை . அதனால்தான் இவ்வளவு நடுக்கம், அச்சம், தயக்கம்
அறிஞர் வராக்கா தம் மெய் ஞானத்தால் உடன் நபியை அறிந்து கொண்டார்
அதற்கு முன்பே அன்னை கதீஜா அவர்கள் நபிக்கு வந்தது இறை மொழிதான் என்பதை முழுமையாக நம்பி ஏக இறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டார்
இஸ்லாத்தில் முதன் முதலில் இணைந்தவர் என்ற பெருமை ஒரு பெண்ணுக்கே
படிக்கும் பெருமக்கள் நிறை குறைகளை சுட்டிக்காட்டும்படி கேட்டுக்கொள்கிறேன்
இறைவன் நாடினால் நாளை மீண்டும் கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
பிறை 1 ரமலான் 1443
03042022 ஞாயிறு
சர்புதீன் பீ
No comments:
Post a Comment