கதை சொல்லும் குரான்
கதை 3 ஜூசு 28
இன்னல் பட்டவரின் குரலைக் கேட்கின்றவன்
“உங்கள் இருவர் உரையாடலை நான் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறேன் "“
இருவர் எனபதில் ஒருவர் நபி பெருமான்.
மற்றவர்,?
நபியிடம் முறையிட வந்த ஒரு பெண்
“எனக்கும் என் குழந்தைகளுக்கும் வாழ வழி சொல்லுங்கள். “ என்று நபியிடம் அழுது மன்றாடி கேட்கிறார்
உரையாடலைக் கேட்டுக்கொண்டிருப்பது ?
அகில உலகங்களின் ஆட்சி அதிகாரத்தை தன் கையில் வைத்துக்கொண்டிருக்கும் ஏக இறைவன்
“கேட்டேன் “ என்று சொல்லவில்லை கேட்கிறேன் – கேட்டுக்கொடிருக்கிறேன் – நேரடி ஒளி/ ஒலி பரப்பு .
கேட்டது மட்டுமல்ல உடனே குறையை நிவர்த்தி செய்து சட்டம் இயற்றி நபிக்கு இறக்கி வைக்கிறான் . Instant grievance redressal and judgement
இன்னொரு நிகழ்வு
“ அந்த மூதாட்டி இரவு வரை என்னை நிற்க வைத்துப் பேசியிருந்தாலும் நான் பொறுமையாக கேட்டுக் கொண்டுதான் இருந்திருப்பேன் “
சொல்வது இவரோ அவரோ அல்ல . இஸ்லாத்தின் தூணாக , நபி பெருமானுக்கு உறுதுணையாக இருந்து பின்னாளில் ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்து மிகச் சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவரான கலிபா உமர் அவர்கள்
இரண்டு நிகழ்வுகளுக்கும் என்ன தொடர்பு ?
உமர் ரலி அவர்கள் சில குறைஷி குலத் தலைவர்களை சந்திக்க தன் உடன் பணியாளர்களோடு போய்க் கொண்டிருக்கிறார் – நடந்துதான்
வழியில் ஒரு பெண்ணைப் பார்த்து இவர் முகமன் கூற அந்தபெண் முகமனுக்கு பதில் சொல்லி விட்டு பேசத் துவங்குகிறார் :
“உமரே உன்னை ஒருகாலத்தில் ஒரு திருவிழாவில் பார்த்தேன் , அப்போது உன்னை உமைர் என்று சொல்வார்கள் . நீ ஆடு மேய்த்துக்கொண்டு திரிந்தாய்
இப்போதோ நீ மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவன் ஆகி விட்டாய்”
என்று துவங்கி பேசிக்கொண்டே போகிறார் .
இறை நம்பிக்கை , மரணம் பற்றிய அச்சத்துடன் நல்லாட்சி நடத்த வேண்டும் என்று அறிவுரை சொல்கிறார்
( சுருக்கமாகச் சொல்வதென்றால் பழங்கதை பேசி கடுப்படிக்கிறார் )
உமரின் கூட வந்தவர் பொறுமையிழந்து மூதாட்டியை அடக்க முயன்றபோது உமர் அவரிடம் “ அவர் பேசி முடிக்கட்டும் , அந்தபெண் யார் தெரியுமா ? அவரின் மேன்மை தெரியுமா ? அவரின் குரல் இறைவனை எட்டி , இறைவன் உடனடியாக விடை அளித்த சிறப்பு , மேன்மை பெற்றவர்
அவர் இன்று முழுதும் பேசினாலும் நான் கேட்கக் கடமைப்பட்டவன் “ என்கிறார்
இப்படிப்பட்ட சிறப்பும் மேன்மையும் பெற்ற அந்தபெண்ணின் பெயர் ஸஅலபா
இந்த நிகழ்வின் பின் புலத்தை சுருக்கமாகப் பார்ப்போம்
அரபுநாட்டில் உலவிய பல மூட நம்பிக்கைகள், பழக்க வழக்கங்களை இஸ்லாம் ஒழித்துக்கட்டியது .
அதில் ஒன்றுதான் ளிஹார் எனும் மண விலக்கு முறை .
இந்த முறையில் துணைவியைப் பிடிக்காத ஒருவன், “ உன் பின்(முதுகுப்) புறம் என் அம்மாவின் பின்புறம் போல் இருக்கிறது “ என்று சொல்லிவிடுவான்
உடனே துணைவி அவனுக்கு அம்மாவாகி விடுவதால் மண விலக்கு பெறுவது எளிதாகி விடுகிறது
இது சமுதாயம் ஒப்புக்கொண்ட ஒரு நடை முறையாக இருந்தது .
இதை ஒழிக்கத்தான் இறை வசனம் 33:4 இறங்கியது ஆனால் அது பற்றிய விதி முறைகள், சட்டங்கள் தெளிவாக்கபடாத நிலையில் ளிஹார் நடை முறை தொடர்ந்து கொண்டிருந்தது
இந்த லிஹ்கார் மணவிலக்கால் பாதிப்புக்குள்ளான ஒரு பெண்மணி (ஸஅலபா ) நபி (ஸல்) அவர்களிடம் முறையிடுகிறார்
சட்டதிட்டங்கள் எதுவும் தெளிவில்லாத நிலையில் அந்தப் பெண்ணுக்கு உதவ வழி எதுவும் இல்லை என்கிறார் நபி .
.
இப்படி இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் இறைவன் குறுக்கிடுகிறான் – வஹி மூலம் வசனம் இறங்குகிறது
“தன் கணவர் பற்றி உங்களுடன் விவாதித்துக் கொண்டும் , இறைவனிடத்தில் முறைஇட்டுக் கொண்டும் இருக்கும் பெண்ணின் சொல்லை திண்ணமாக கேட்டுக் கொண்டான்
.
நீங்கள் இருவரும் பேசிக்கொள்வதை இறைவன் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறான்
உறுதியாக இறைவன் அனைத்தையும் கேட்பவனும் பார்ப்பவனும் ஆவான் (58:1)
இதைத் தொடர்ந்து வரும் சில வசனங்களில்
ளிஹார் செய்பவர் வெறுப்புக்குரிய பொய்யைச் சொல்கிறார் என்று சொல்லி அது பற்றிய சட்ட நடை முறைகள் சொல்லப்படுகின்றன (58:2-6)
ஒரு பெண்ணின் குறை (குரல்) இறைவனுக்கு எட்டி அந்தக் குறையை உடனே தீர்த்து வைக்க இறை வசனம் இறங்கிய நிகழ்வால் அந்தப் பெண்ணின் மதிப்பும் மேன்மையும் நபித் தோழர்களிடம் மிகவும் அதிகமாகி விடுகிறது
இந்த மேன்மை. உயர்வால்தான் அந்தப் பெண்ணின் பேச்சை தட்ட முடியாமல் தனக்குள்ள பல அரசு அலுவல்களை விட்டு விட்டு அப்படியே நின்று விடுகிறார் உமர்
அல் முஜாதலா (விவாதிக்கும் பெண் )என்ற இந்த 58 ஆவது சூராவில் 22 வசனங்கள்
இதில் நயவஞ்சகர்கள் பற்றிய எச்சரிக்கை
அவை ஒழுக்க நெறிகள்
தூய நம்பிக்கை உடையோர் , நயவஞ்சகர்கள் , இதிலும் இல்லாமல் அதிலும் இல்லாமல் ஊசலாடிகொண்டிருப்போர்
போன்ற செய்திகள சொல்லப்படுகின்றன
எங்கோ இருப்பதாய் பலரும் நினைக்கும் இறைவன்
நமக்கு மிக அருகிலேயே நம்மைப் பார்த்துக்கொண்டும் நாம் பேசுவதைக் கேட்டுக் கொண்டும் நம்மை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டும் இருக்கிறான்
--------“ நிச்சயமாக நான் அருகிலேயே இருக்கிறேன் . என்னைப் பிரார்த்திப்பவ்ர்களுக்கு விடை அளிகஈறேன் . அவர்கள் என்னிடமே கேட்கட்டும் .என்னையே நம்பட்டும் .அப்பொழுது அவர்கள் நேர்வழி அடைவார்கள் “ (2:186. )
-----------“ மனித மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்
அன்றியும் அவன் பிடரி நரம்பை விட நாம் அவனுக்கு நெருக்கத்தில் இருக்கிறோம் (50:16)
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குரானில் சிந்திப்போம்
பிறை 3 ரமலான் 1443
05042022 செவ்வாய்
சர்புதீன் பீ
No comments:
Post a Comment