கதை சொல்லும் குரான்
கதை 2(ஜூசு 29)
உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே
வானத்துப் பறவைகள் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தருபவை ,
சிறகை விரித்து சில பறவைகள் பறக்கும் . இன்னும் சில பறவைகள் பறப்பதைப் பார்த்தால் எதோ வானூர்தி பறப்பது போல் சிறகுகளை ஆட்டாமல் அசைக்காமல் பறக்கும்
அப்படி நமக்கும் வட்டமடித்துப் பறக்க முடிந்தால் ?
எல்லோர் மனதிலும் இயல்பாய் எழும் ஆசை
அந்த ஆசையின் தூண்டுதலில் செய்த முயற்சியின் விளைவுதான் வானூர்திகள்
கோடிக்கணக்கில் விலை , ஓட்டுனர் பயிற்சிக்கு லட்சக் கணக்கில் செலவு . விமான நிலையம் , ஓடு தளம் கட்டுப்பாட்டு அறை, பாதுகாப்பு பணிகள் என எல்லாம் கோடிக் கணக்கில் செலவு
பறவைகளை சற்று கவனித்துப் பாருங்கள் . எத்தனை விதமாய்ப் பறக்கின்றன .
வட்டமடித்துப் பறக்கும் சிறு பறவைகள்
கூட்டமாய் ஒரு விமானப் படையின் ஒழுங்கோடு அணி வகுத்துப் பறந்து நாம் பார்க்கும்போதே சிறு புள்ளிகளாகி மறைந்து விடும் பறவைக்கூட்டம் ; அவ்வளவு வேகம்
இன்னும் வெகு உயரத்தில் இருந்து இரையைக் குறி வைத்து வேகமாகக் கீழிறங்கி கொத்திக்கொண்டு அதே வேகத்தில் மேலே போய்விடும் பறவைகள்
ஆயிரக் கணக்கான லட்சக் கணக்கான மைல்கள் பறந்து போய் முட்டை இட்டு பொறித்த குஞ்சுகள் வழி தெரிந்து தாய் நாடு திரும்பும் அற்புதம்
அவற்றை எல்லாம் கட்டுப்படுத்தும் கட்டுப்பாட்டு அறை எங்கிருக்கிறது ? கட்டுப்படுத்துபவர் யார் ?
வழி காட்டுவது யார்
அவை கீழே விழுந்து விடாமல் காப்பாற்றும் சக்தி எது ?
நீரின்றி அமையாது உலகு .
ஆறு , குளம் குட்டை, ஊற்று கிணறு என எல்லா நீர் நிலைகளுக்கும் தண்ணீர் எங்கிருந்து வருகிறது ?
இப்படி உலகெங்கும் பரவி நிற்கும் நீர் ஆதாரத்தை பூமி தனக்குள் இழுத்துக் கொண்டு விட்டால் நாம் எங்கு போவோம் , என்ன ஆவோம் ?
எண்ணற்ற வளங்களை அள்ளித்தரும் பூமியின் மேல் நாம் எல்லா சுகங்களுடன் வாழ்கிறோம்
இந்த பூமி சற்று நிலை பிறழ்ந்து உள் வாங்கி ஆவேசமாக் குலுங்கி நம்மை நிலை குலையச் செய்தால் நம்மைக் காப்பாற்றுவது யார் ?
இப்படி எண்ணற்ற வினாக்கள்
விடை ஒன்றுதான்
உயர்வும் கண்ணியமும் மிக்க ஏக இறைவன்
இந்தப் பேரண்டதின் ஆட்சி அதிகாரம் முழுதும் அவனிடமே இருக்கிறது
அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றல் பெற்றவன் அவன்
அவனே மரணம் என்னும் விடையை முன்னமே அறிவித்து வாழ்க்கை என்னும் தேர்வுக்கு நம்மை உள்ளாக்குபவன்
ஒரே சூராவில் அதன் 30 வசனங்களில் சொல்லப்படும் செய்திகள் ஏராளம்
இஸ்லாத்தின் சிந்தனைகள் , செய்திகள் அனைத்தயும் சுருக்கமாயச் சொல்கிறது
மிகச் சரியான முறையில் அறியாமையில் உறங்கும் மக்களை, அவர்கள் மனங்களை , மன சாட்சியை தட்டி எழுப்புகிறது எச்சரிக்கிறது
சுராஹ் 67 முல்க் ஆட்சி அதிகாரம் –
சில வசனங்களின் பொருளை பார்ப்போம்
உயர்வும் கண்ணியமும் மிக்க ஏக இறைவன்
இந்தப் பேரண்டதின் ஆட்சி அதிகாரம் முழுதும் அவனிடமே இருக்கிறது
அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றல் பெற்றவன் அவன்
அவனே மரணம் என்னும் விடையை முன்னமே அறிவித்து வாழ்க்கை என்னும் தேர்வுக்கு நம்மை உள்ளாக்குபவன் (67:1,2)
அவனே பூமியை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான் ----அவன் படைத்த உணவுகளையும் வளங்களையும் பயன்படுத்துங்கள். நீங்கள் மீண்டும் உயிர் பெற்று அவனிடமே போக வேண்டி இருக்கிறது (67:15)
வானத்தில் உள்ளவன் உங்களை பூமியில் ஆழ்த்தி விடுவதையும் அப்போது பூமி அதிரத் தொடங்குவதையும் குறித்து நீங்கள் அச்சமின்றி இருகிறீர்களா ?
(67:16)
சிறகுகளை விரித்தும் மடக்கியும் தங்கள் மேல் பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா என்ன ?
அவைகளை கீழே விழுந்து விடாமல் பாதுகாப்பது கருணை உள்ள இறைவனே அன்றி வேறு யார் ? (67:19)
சொல்லுங்கள் “ உங்களைப்படைத்து , கேட்கும், பார்க்கும் திறனைக் கொடுத்து சிந்தித்துணரும் உள்ளங்களையும் கொடுத்தது அவன்தான் .
ஆனால் நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள் (67:23)
அவர்களிடம் கேளுங்கள் :” உங்கள் கிணறுகளின் நீர் பூமிக்குள் போய்விட்டால் தண்ணீர் ஊற்றுக்களை உங்களுக்கு வெளிக் கொணர்பவர் யார் என்பதையும் நீங்கள் எப்போதாவது சிந்தித்ததுண்டா?”
(67:30)
பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் சில வசனங்களை இங்கே எடுத்துக் காட்டியிருக்கிறேன்
குரானின் ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வசனமும் படித்துப் பொருள் உணர்ந்து உள்ளத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டியவை
இறைவன் நாடினால் நாளை கதை சொல்லும் குர்ஆனில் சிந்திப்போம்
பிறை 2 ரமலான் 1443 திங்கள்
04042022
சர்புதீன் பீ
No comments:
Post a Comment